Published:Updated:

மீண்டும் சந்திரனுக்குச் செல்லும் நாசா... புதிய விண்வெளிக் கொள்கை, அதிக பட்ஜெட்… ட்ரம்ப் அதிரடி!

மீண்டும் சந்திரனுக்குச் செல்லும் நாசா... புதிய விண்வெளிக் கொள்கை, அதிக பட்ஜெட்… ட்ரம்ப் அதிரடி!
மீண்டும் சந்திரனுக்குச் செல்லும் நாசா... புதிய விண்வெளிக் கொள்கை, அதிக பட்ஜெட்… ட்ரம்ப் அதிரடி!

மீண்டும் சந்திரனுக்குச் செல்லும் நாசா... புதிய விண்வெளிக் கொள்கை, அதிக பட்ஜெட்… ட்ரம்ப் அதிரடி!

ஜூலை 20, 1969. மனித இனம் உண்மையிலேயே அடுத்த கட்டத்திற்கு சென்ற நாள். இங்கேதான் வாழ வேண்டும் என்று பூமியினுள்ளே அடைக்கப்பட்ட மனித இனம் முதன்முதலாக விண்வெளியை அளந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் பஸ் ஆல்ட்ரின் சென்ற விண்கலமான அப்போலோ 11, தன்னுடைய ஈகிள் இறங்குகலத்தின் உதவியுடன் நிலவில் தரையிறங்கியது. இரண்டு வீரர்களும் சரியாக 21 மணிநேரங்கள் 31 நிமிடங்கள் நிலவில் செலவிட்டனர். அமெரிக்க நாசா நிறுவனத்தின் மகத்தான சாதனையாக இது கருதப்பட்டது. இதன்மூலம், அதுவரை விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த சோவியத் யூனியனின் கிரீடத்தை அமெரிக்கா பிடுங்கிக் கொண்டது. அதன் பிறகு, 1972ம் ஆண்டிற்குள் மேலும் ஐந்து முறை சந்திரனுக்குச் சென்று வந்தது அமெரிக்கா.

Photo Courtesy: NASA

இன்றுவரை, விண்வெளி ஆராய்ச்சி என்றவுடன் உலக மக்கள் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது நாசா என்னும் வார்த்தைதான். இந்த 45 வருடத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகள் நாசாவின் வசம் இருந்தாலும், 1972க்குப் பிறகு பூமியின் தாழ்ந்த கோளப்பாதைக்கு அப்பால் மனிதர்களை நாசா கொண்டு செல்லவே இல்லை. இதற்கு மிக முக்கியக் காரணமாக முன்வைக்கப்பட்ட விஷயம் நாசாவிற்கு என்று பெரிதாக நிதி ஒதுக்காததுதான். நிதி நிலை, பொருளாதார நெருக்கடி என்று பல விஷயங்களில் தத்தளித்தது நாசா. முன்னர் ஜார்ஜ் புஷ் ஆட்சியில் இருந்தபோது, நிலவில் ஒரு ஆராய்ச்சிக் கூடம் அமைக்க முனைப்புடன் இருந்தார். அதற்காக நிதியும் ஒதுக்கினார். ப்ளூ-ரிப்பன் என்று ஒரு குழு அமைக்கப்பட்டு அதை நிறைவேற்றுவதின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் அறிக்கை படி, மேலும் சில பில்லியன் டாலர்கள் நிதி தேவைப்பட்டது. அதனால், அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது ட்ரம்ப் தலைமையிலான அரசு, நாசாவிற்கு முழு ஆதரவு அளித்துள்ளது. அதை உறுதிசெய்யும் வகையில், புதிய விண்வெளிக் கொள்கையான “Space Policy Directive 1”ல் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடந்த திங்கட்கிழமையன்று கையெழுத்திட்டுள்ளார். அப்போது 45 ஆண்டுகளுக்கு முன் நிலவில் கால்பதித்த இருவரில் ஒருவரான அப்போலோ 17ல் பயணித்த ஹேரிசன் ஸ்கிமிட் என்ற மூத்த விண்வெளி வீரரும் உடனிருந்தார்.

“இந்தத் திட்டம் மூலம், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிகள் முன்னர்போல் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்துத் திரும்பப்போகிறது. 1972ம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான பணியில், இது முதற்படியாக இருக்கும். ஆனால், இந்த முறை வெறும் கொடியை நட்டுவிட்டு நாம் திரும்பப்போவது இல்லை. சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் நிரந்தர ஆராய்ச்சிக் கூடம் நிறுவ இதுவே சிறந்த நேரம். வெற்றி அடைந்தால் அதைத் தாண்டி பயணிக்கவும் முயற்சிகள் நடக்கும்” என்று உற்சாகம் பொங்க தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

இதுகுறித்து நாசா நிர்வாகி ராபர்ட் லைட்ஃபுட் பேசுகையில், “ஜனாதிபதியின் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் ஆராய்ச்சிகளைச் சற்று தடமாற்ற உள்ளோம். விரைவில் சந்திரனிலும், செவ்வாயிலும் தடம் பதிப்போம். அதைத் தாண்டி செல்லவும் ஆயத்தமாய் உள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், நிதி நெருக்கடியாலும், சமீப காலத்தில், விண்வெளி பயணம் குறித்து பெரிய அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படாததாலும், நாசா தனது விண்வெளி ஓடங்களை 2011ம் ஆண்டே விற்றுவிட்டது. தற்போது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று வரவே நாசா வீரர்கள், ரஷ்யாவின் கேப்ஸ்யூல்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு புறம், எலான் மஸ்க் அவர்களுக்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாயில் தடம்பதிக்க முழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. அதே நிறுவனம், 2018ம் ஆண்டு முதற்கட்டமாக நிலவிற்குச் சென்று வரவும் முடிவு எடுத்துள்ளது.

Photo Courtesy: NASA

ஸ்பேஸ் எக்ஸ் போன்று போயிங் என்ற நிறுவனமும் ஸ்பேஸ் டாக்ஸிகளைக் கொண்டு வரப் பணிகளைத் தொடங்கியுள்ளது. எனவே, நாசா தன்னுடைய ஆராய்ச்சிக்காக நிலவிற்கோ, செவ்வாய்க்கோ மனிதர்களை அனுப்ப வேண்டும் என்றால், இந்த நிறுவனங்களின் உதவியை நிச்சயம் நாட வேண்டியிருக்கும்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி சரித்திராசிரியராக இருக்கும் ஜான் வாஷிங்டன், ஜார்ஜ் லாக்ஸ்டான் இது குறித்து பேசுகையில், “ட்ரம்ப் அவர்களின் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். தனது தேர்தல் அறிக்கையில் மனிதர்களைத் திரும்பவும் நிலவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது பிரச்னையே இதற்கான நிதியை ஒதுக்குவதுதான். எப்படி நிதியைத் திரட்டுவார்கள் என்பது புரியவில்லை” என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து டிவிட்டர் தளத்தில் '#BackToTheMoon', '#OnToMars', '#AmericaLeadershipInSpaceAgain' போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. யோசிச்சுப் பண்ணுங்க ட்ரம்ப்!

அடுத்த கட்டுரைக்கு