##~##

''நான் பிறந்த இடத்துக்குப் பெயர் வேடங்குளம். அதை ஊர் என்று சொன்னால் நிஜமான ஊர்கள் மான நஷ்ட வழக்குப் போடக் கூடும்!'' - தன் 'ஊர்’ வேடங்குளம்பற்றிய நினைவுகளை ஒரு ஜோக்குடன் பகிர்ந்து கொள்கிறார் பாடலாசிரியர் விவேகா.

 ''ஒண்ணே முக்கால் தெரு. இரண்டு வாத நாராயணன் மரங்கள், ஒரு குளம், பொதுக்கிணறு... இதுதான் வேடங்குளத்தின் ஜியாகரபி. தீப்பெட்டி வாங்கக்கூட மூணு கி.மீ. தள்ளி சாத்தனூருக்குப் போகணும். வேடங்குளத்தில் இருந்து மேற்கே கொஞ்சம் போனால் அடர்ந்த காடும் குன்றுகளும் தென்பெண்ணை ஆற்றுக்குக் கொண்டுபோய் விடும். அங்கிருந்து பார்த்தால் அணைக்கட்டு அடுக்கடுக்கான சென்னவாடி மலையின் வால் மாதிரி நீண்டு இருக்கும். சாத்தனூர் நீர்த்தேக்கத்தில் பள்ளி விடுமுறை தினங்களில் தூண்டில் போட்டு மீன் பிடித்துச் சுட்டுத் தின்றுவிட்டு பல்லாங்குழியோ அஞ்சாங்கல்லோ ஆடுவோம். நரிக்கல் குகை தூங்குவதற்கு வசதியான இடம்.

ஊரின் தென்பகுதியில் எப்போதும் நெற்கதிர்கள், பூமி பார்க்கிற நஞ்சை வயல்கள். என் அப்பா விற்பதற்கு என்றே தாத்தா ஏராளமான சொத்துகளை வாங்கிப்போட்டு இருந்தார்.

என் ஊர்!

முதலில் எங்கள் கிராமத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் என்னைச் சேர்த்தார்கள். திண்ணைப் பள்ளிக்கூடம் என்றதும் என்னை ஏதோ அந்தகக் கவி வீரராகவரின் வகுப்புத் தோழன் என்றோ, சமயக் குரவர்களின் நேரடி வாரிசு என்றோ ஐயப்பட வேண்டாம். எல்லாம் 1980 வாக்கில் நடந்தவைதான். வெளியூரிலிருந்து ஒரு வாத்தியார் வந்து புளியங்கொட்டையை அடுக்கி 'அ’, 'ஆ’ கற்றுத் தந்தார்.

சாத்தனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு சேர்ந்ததில் இருந்து நான் அதிகம் புழங்கும் இடமாக சாத்தனூர் மாறியது. பத்தாம் வகுப்பு வரை சாத்தனூர்தான். அங்கு என் பெரியப்பா மகன் பெட்டிக்கடை வைத்திருந்தார். நான் போனால் கல்லாவுக்கு அருகே இருக்கும் ஒரே இருக்கையை எனக்குக் கொடுத்துவிட்டு எழுந்து நின்றுகொள்வார் பூங்காவனம் அண்ணி. நண்பர்களோடு ஊர்க் கதை அடித்துக்கொண்டு இருப்பேன்.

சாத்தனூர் வடப்பக்கத்தில் திரௌபதை அம்மன் கோயில். அதில் வருடத்துக்கு ஒரு முறை மகாபாரதச் சொற்பொழிவு நடக்கும். என் அம்மா நாள் தவறாமல் என்னை அழைத்துக்கொண்டு வந்துவிடுவார். அவரது மடியில் உட்கார்ந்து மகாபாரதத்தின் மொத்தக் கதைகளையும் கேட்டு உருகுவேன். பிரசங்கியின் குரலில் மயங்கி நாமும் ஒரு பிரசங்கியாகிவிட வேண்டும் என்று கொஞ்ச நாட்கள் கனவிலும் இருந்தேன்.

சாத்தனூரின் மவுன்ட் ரோடாகவும் ரங்கநாதன் தெருவாகவும் இருக்கும் பிரதான சாலையின் நடுவில், பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் கிளை நூலகம் இருக்கிறது. அதன் வழியாகத்தான் இந்த உலகை நான் பார்த்தேன்.  நான் சாத்தனூரில் அதிக நேரம் இருந்த இடம் நூலகமாகத்தான் இருக்கும்.

என் ஊர்!

பிள்ளையார் கோயில் அருகில் உள்ள சிறு மைதானத்தில் காணும் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடக்கும். அதற்கு முன்தினம் வரை வயலில் உழுதுவிட்டு வந்த காளையை இருபுறங்களிலும் தடித்த வடங்களால் கட்டி கவனமாகப் பிடித்துக்கொள்வார்கள். அதன் மூக்குக்கு நேராக கறுப்புத்துணியை ஆட்டி, காளை மிரளும்போது கை தட்டுவதுதான் எங்கள் ஊர் மஞ்சுவிரட்டு. இதற்கே என் அப்பா நான் நின்று பார்க்க வேண்டிய இடத்தை நிர்ணயித்து, குறைந்தது 10 சத்தியங்கள் வாங்கிக்கொண்டுதான் அனுப்புவார். நான் உடையார் வீட்டு மொட்டை மாடியில் நின்றுகொண்டு பார்ப்பேன். என்னைக் குத்த வேண்டும் என்றால் காளைக்கு றெக்கை முளைப்பதுதான் ஒரே வழி.

பூங்காவனத்தம்மன் திருவிழா பட்டிமன்றத்தில் எனக்கு எதிர் அணியில் பேசியவரை வழிமறித்து சட்டையைப் பிடித்த அப்பாவி நண்பர்கள், கல்லூரி நாட்களில் மாநில அளவில் நான் பரிசுகள் பெற்றபோது உள்ளூர்ப் பதிப்புகளில் வந்த என் புகைப்படத்தைச் சுமந்து திரிந்த நலம் விரும்பிகள், மனசுக்குள் முதல் காதல் முளைத்த தருணம் அதை நீர் வார்த்து நெடுமரமாக்கிய தோழர்கள் என்று சாத்தனூர் முழுக்க மகரந்த மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் ஊரைப் பார்க்கப் போனால் ஊர் மட்டும்தான் இருக்கிறது. நண்பர்கள் எல்லாம் நெல்லிக்காய் மூட்டையாக எங்கெங்கோ சிதறிக்கிடக்கிறார்கள்.

சென்னையின் பரபரப்பான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டாலும் சில இரவுகளில் திடீர் என ஊர் நினைவு வந்துவிடும். கூகுள் வரைபடத்தை அகழ்ந்துகொண்டே போய் என் அம்மாவைப் புதைத்த தென்பெண்ணைக் கரையில் நின்றுகொள்வேன். சிறுவயதில் நான் குடித்து வளர்ந்த அந்நதியின் நீர், விழியோரம் எட்டிப் பார்க்கும்!''

படங்கள்: பொன்.காசிராஜன், பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு