Published:Updated:

'ஈழத்தமிழர்களின் நண்பர்களா இந்துத்துவவாதிகள்?' - வெடிக்கும் இலக்கிய சர்ச்சை!

'ஈழத்தமிழர்களின் நண்பர்களா இந்துத்துவவாதிகள்?' - வெடிக்கும் இலக்கிய சர்ச்சை!
'ஈழத்தமிழர்களின் நண்பர்களா இந்துத்துவவாதிகள்?' - வெடிக்கும் இலக்கிய சர்ச்சை!

'ஈழத்தமிழர்களின் நண்பர்களா இந்துத்துவவாதிகள்?' - வெடிக்கும் இலக்கிய சர்ச்சை!

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராகத் தொடர்ந்து படைப்பிலக்கியத்தின் வழியாக பல எழுத்தாளர்களும் காத்திரமாக செயல்பட்டுவருகின்றனர். காலத்தின் தேவையாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்படுகிறவர்களின் குரலாக அது சார்ந்த படைப்புகள் வெளிவந்து பொதுவெளியில் விவாதங்களை ஏற்படுத்தும்.  சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்குப் பின்பு, எழுத்தாளர்கள் முகநூல்களில் தெரிவிக்கும் கருத்துகள் வாசகர்களிடையே விவாதங்களை ஏற்படுத்துகின்றன.  ஈழத் தமிழர்கள் அடைந்த துயரம், அவர்கள் வாழ்வு சார்ந்து எழுதிவரும் அகரமுதல்வனின் புத்தக வெளியீட்டுவிழாகுறித்த அறிவிப்பு இப்போது சமீபத்திய சர்ச்சை. அகரமுதல்வனின் புதிய சிறுகதைத் தொகுப்பான 'பான்-கி- மூனின் றுவாண்டா' வின் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்க அரவிந்தன் நீலகண்டன் அழைக்கப்பட்டதையொட்டித்தான் இத்தகைய சர்ச்சைகள் வெடித்துள்ளன.

யமுனா ராஜேந்திரன் அறியப்பட்ட மார்க்ஸிய எழுத்தாளர். அரசியல் குறித்தும் திரைப்படங்கள் குறித்தும் பல முக்கியமான நூல்களை எழுதியுள்ளவர். ஈழ ஆதரவாளரான யமுனா ராஜேந்திரன், உலக இலக்கியங்களை மொழிபெயர்த்துத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்புக்கு ஏற்கெனவே யமுனா ராஜேந்திரன் முன்னுரை எழுதியுள்ளார். இப்போது அதே அகரமுதல்வனின் சிறுகதைப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள அரவிந்தன் நீலகண்டனோ ஓர் இந்துத்துவவாதி.

"அகரமுதல்வன் என்னிடம் அவரது கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை தருமாறு விரும்பிக் கேட்டுக்கொண்டார். எனது முன்னுரையுடன் அந்தத் தொகுப்பு வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். ஈழ இளைய யுகப் படைப்பாளி எனும் நோக்கில் மிகுந்த தயக்கத்துடன் நீண்ட நாள் கழித்து, நான் அந்த முன்னுரையை எழுதினேன். அந்த முன்னுரையின் ஆன்மாவுக்கு அகர முதல்வன், அரவிந்தன் நீலகண்டனை அழைப்பதன் மூலம் செய்வது துரோகம்" என்று இதுகுறித்துக் கடுமையாக விமர்சித்துள்ள யமுனா ராஜேந்திரன், "அகரமுதல்வன் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை நான் வெறுக்கும் பாதை. அது மானுட விரோதப் பாதை. அகரமுதல்வனின் கவிதைத்தொகுப்பு இரண்டாவது பதிப்பு வருமானால் எனது முன்னுரை அதில் இடம்பெறக் கூடாது என்பதை எனது இந்தப் பதிவின் வழி அவருக்கு வெளிப்படையாக அறிவிக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகரமுதல்வனிடம் பேசினேன். "அரவிந்தன் நீலகண்டனை நான் அழைத்ததற்கு எதிராக தற்போது சமூக வலைதளங்களில்  பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை உரையாடலைத் தடை செய்வது , உரையாடலே கூடாதென்பதைத்தான் உலகின் மிகப்பெரிய பாசிச நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன். அம்பேத்கர் காங்கிரஸ் அமைச்சரவையில் இணைந்தபோது இதேபோன்றுதான் அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.``நான் களிமண் போல கிடையாது. ஆறுகளை மடைமாற்றிவிடுகின்ற கற்பாறை" என்றார் அம்பேத்கர். நான் ஈழத்தமிழினம் சார்ந்த படைப்புகளை எழுதும்போது பல்வேறு தரப்பட்ட கருத்துடையவர்களிடமும் உரையாட வேண்டிய அவசியம் உள்ளது. நாங்கள் ஈழத்தில் பாதிக்கப்பட்டபோது எல்லாத் தரப்பினரும்தான் வேடிக்கை பார்த்தார்கள்.   உரையாடக் கூடாதென்றால் நான் யாரிடமுமே உரையாடக் கூடாது என்கிறார்களா, என்பது புரியவில்லை.

நான் அரவிந்தன் நீலகண்டனை அழைத்து விழா நடத்துவதற்காக என்னை இந்துத்துவத் தத்துவத்தைச் சார்ந்தவனாக அடையாளப்படுத்துவது தவறான ஒன்று. நான் கம்யூனிஸ்ட் கட்சியினருடனும்தான் பழகுகிறேன். அதனால் என்னை கம்யூனிஸ அனுதாபி என அடையாளப்படுத்துவார்களா இவர்கள்? ஈழத்தமிழராக இருக்கிற நான், நாட்டில் நிகழும் அனைத்துப் படுகொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளேன். குஜராத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் ஈழத் தமிழர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். மற்றவர்களைவிட எனக்கு  இனப்படுகொலையின் வலி தெரியும்" என்கிறார் ஆவேசமாக.

'அகரமுதல்வன் மட்டுமில்லை, சமீபகாலமாகவே காசி ஆனந்தன், 'காந்தளகம்' சச்சிதானந்தன் என சில ஈழ ஆதரவாளர்கள் இந்துத்துவவாதிகளுடன் நெருக்கம் காட்டுகின்றனர். தொடக்ககாலத்திலிருந்தே ஈழ ஆதரவுக்கான அடித்தளத்தைத் தமிழகத்தில் அமைத்தவர்கள் திராவிட இயக்கத்தினரும் தமிழ்த்தேசியவாதிகளும்தான். ஈழ ஆதரவாளர்கள் என்பதற்காகவே பேரறிவாளன், கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்ற பெரியாரிஸ்ட்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்த இழப்புகள் ஏராளம். இந்துத்துவவாதிகள் எப்போதும் ஈழ விடுதலைக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். ஈழப்போராளிகளைப் பயங்கரவாதிகளாகவே சித்திரித்துள்ளனர். சிங்களப்பேரினவாதிகள் எப்படிப் பெரும்பான்மைவாதத்தை முன்வைத்து தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்களோ,  அதேபோல்தான் இந்துத்துவவாதிகளும் பெரும்பான்மைவாதத்தை முன்வைத்து சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிராக இருக்கின்றனர். ஒரு பாசிசத்தை எதிர்க்க, இன்னொரு பாசிசத்துடன் கைகுலுக்குவது எப்படிச் சரியாகும்?' என்பது அகரமுதல்வனை விமர்சிப்பவர்களின் கேள்வி.

உண்மையில் அகரமுதல்வன் போன்றவர்களின் நிலைப்பாடு அரசியல் உத்தியா, இல்லை, விடுதலைக் கருத்தியலுக்கு எதிரான துரோகமா? இதுகுறித்து யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றிய ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர் சோமிதரனிடம் பேசினேன். 

"இந்த விஷயத்தை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை அரசு ஒரு சிங்கள-பௌத்த அரசாகவே இருக்கிறது. அந்த அரசுக்கு எதிராக இங்குள்ள ஈழத் தமிழர்கள் தமிழ்-சைவர்களாக ஒன்றிணையும் போக்கு வெகுஜன மக்களிடையே உள்ளது. காரணம் தமிழகத்தைப் போல பெரியாரியச் சிந்தனைகள் பெரிய அளவில் ஈழத்தில் இல்லாத சூழலில், இந்த எதிர் நிலைப்பாடு என்பது இயல்பாகவே மதத்தின் அடிப்படையில் அமைவதைப் பார்க்கலாம். ஆனால், தற்போது இதை மையமாக வைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஈழப் பிரச்னையைக் கைப்பற்ற நினைப்பது முடியாத காரியம். அது இங்குள்ள மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகத்தான் முடியும். இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. முகப்புத்தகத்தில் தற்போது நடக்கும் விவாதத்தில் பிரபாகரன் பற்றி தவறான சில தகவல்கள் முன் வைக்கப்படுகின்றன. பிரபாகரன் மதச்சார்பற்ற ஒரு போக்கைத்தான் நிறுவியிருந்தார். அவரது அமைப்பில் 90-களில் இஸ்லாமியர்கள் தளபதிகளாக இருந்துள்ளனர். மதச்சார்பற்ற தமிழீழத்தைத்தான் பிரபாகரன் உருவாக்க விரும்பினார். ஆனால், தற்போது சில மதவாத அமைப்புகள் வெளிப்படையாகவே  ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் நுழையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஈழ மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது" என்றார் உறுதியாக.

'ஈழத்தமிழர்களுக்கு இந்துத்துவவாதிகள் நண்பர்களா?' என்ற விவாதம் இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு