Published:Updated:

செவ்வாய் ஓகே... பூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா? #KnowScience

செவ்வாய் ஓகே... பூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா? #KnowScience
News
செவ்வாய் ஓகே... பூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா? #KnowScience

செவ்வாய் ஓகே... பூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா? #KnowScience

“இன்னைக்கு இருக்கற பொருளாதார சூழல்ல செவ்வாய் கிரகத்துக்கு எல்லாம் ஒரு மனுஷன் போக முடியுமா?” என்று போதையில் நம் மயில்சாமி கேட்ட கேள்வியை இன்று அமெரிக்காவில் நாசாவைப் பார்த்து பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தூபம் போடும் விதமாக டொனால்ட் ட்ரம்ப்பும், “ஃபர்ஸ்ட் நிலா, அப்பறம் செவ்வாய்!” என்று நாசாவுக்கு புது ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார். “இதுக்கெல்லாம் எங்க பாஸ் நிதி? வழக்கம் போல எக்ஸ்ட்ரா டேக்ஸ் தானா?” என்று மக்களும் பீதியில் உள்ளனர்.

அருகிலிருக்கும் சந்திரனுக்கு இதுவரை ஆறு முறை மனிதர்களை அனுப்பிச் சாதித்திருக்கிறது அமெரிக்கா. இந்தியா உட்பட மேலும் சில நாடுகள் ஆளில்லா விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. இதன் அடுத்தகட்டமாக இதுவரை செவ்வாய்க் கிரகத்தை எட்டி மட்டும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், முதன் முறையாக மனிதர்களை அனுப்ப முடிவு எடுத்துள்ளனர். சந்திரன், செவ்வாய் என்று முயல்வது ஒரு புறம் இருக்கட்டும். பூமியின் சகோதரன் என்று அழைக்கப்படும் வெள்ளிக் கிரகத்தை இந்த விஞ்ஞானிகள் ஏன் சீண்டுவதேயில்லை? செவ்வாயில் தடம் பதிக்கத் துடிக்கும் நாம், வெள்ளியைக் குறித்து பெரிய அளவில் ஆராய்ச்சிகள் எதையும் நடத்தியதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நம் சூரியக் குடும்பத்தில், கிட்டத்தட்டப் பூமியின் சுற்றளவு, நிறை என எல்லாம் பொருந்திப்போகும் ஒரே கிரகம் வெள்ளி தான். பின்பு ஏன் இந்தப் பாகுபாடு?

இதற்கான விடையைக் காணும் முன், வெள்ளியையும், பூமியையும் ஒரு தராசில் நிறுத்திப் பார்த்துவிடுவோம். நம் சூரியக் குடும்பத்தை பொறுத்தவரை, Goldilocks Zone எனப்படும் வாழத் தகுந்த இடத்தில் இருக்கும் இரண்டு கோள்கள் என்றால் அது நம் பூமியும், வெள்ளியும் மட்டுமே. அதாவது அந்த இரண்டு கோள்களும், சூரியனில் இருந்து அமைந்திருக்கும் தொலைவு என்பது உயிர்கள் உருவாக, தொடர்ந்து வாழ ஏதுவான ஒரு சீதோஷ்ண நிலை. பூமியின் ஆரம் 6,371 கிலோமீட்டர், நிறை 5,972,370,000 குவாட்ரில்லியன் கிலோகிராம் (quadrillion kg) என்றால், வெள்ளியின் ஆரம் 6,052 கிலோமீட்டர், நிறை 4,867,500,000 குவாட்ரில்லியன் கிலோகிராம். பூமியின் கனஅளவு 1083.21 பில்லியன் கனமீட்டர் என்றால் வெள்ளியின் கனஅளவு 928.45 பில்லியன் கனமீட்டர். பூமியைப் போலவே வெள்ளிக்கும் வளிமண்டலம் உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரச்னை எங்கே தொடங்குகிறது என்றால், பூமி தன் அச்சில் இருந்து -23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது என்றால், வெள்ளியோ 177.4 டிகிரி (மற்றொரு புறத்தில் இருந்து 2.64 டிகிரி) சாய்ந்திருக்கிறது. நம் பூமியை விடச் சூரியனுக்கு 30 சதவிகிதம் அருகில் இருப்பதால், வெள்ளியின் தட்பவெப்பம் நம் பூமியை விடப் பல மடங்கு அதிகம். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரங்கள் எடுக்கிறது என்றால், வெள்ளி தன்னுடைய பிற்போக்கு சுழற்சி காரணமாக 243 நாள்கள் (பூமியின் கணக்கு) எடுத்துக்கொள்கிறது. நம் பூமியின் நீள்வட்டப் பாதையைவிட வெள்ளியின் பாதை சிறியது என்பதால் அங்கே ஒரு வருடம் என்பது 225 நாள்கள் (பூமியின் கணக்கு) மட்டுமே. ஆம், சுவாரஸ்யமாக வெள்ளியின் ஒரு வருடம் என்பது அதன் ஒரு நாளைவிட சிறியது. அதாவது ஒரே நாளில், நீங்கள் அங்கே இரண்டு பிறந்த நாள்கள் கொண்டாட முடியும். இதனால் அங்கே சூரியன் மேற்கில் தோன்றி, கிழக்கில் மறைவதோடு மட்டுமல்லாமல், 117 நாள்களுக்கு (பூமியின் கணக்கு) ஒருமுறைதான் அங்கே இரவு பகலே மாறுகிறது.

பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் உள்ள தூரம் 54.6 மில்லியன் கிலோமீட்டர். பூமிக்கும், வெள்ளிக்கும் இடையில் உள்ள தூரம் அதை விட அதிகம் (261 மில்லியன் கிலோமீட்டர்) என்றாலும், நம் தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் இந்தத் தூரத்தை வெறும் 100 நாள்களில் கடந்துவிட முடியும். சிக்கல் என்னவென்றால் வெள்ளியில் தரையிறங்குவதுதான். வெள்ளியைச் சுற்றிலும் போர்வை போர்த்தியபடி இருக்கும் மேகங்கள் நச்சுத்தன்மை கொண்ட சல்ஃபர் டையாக்ஸைடால் ஆனவை. அதில் பாதுகாப்புடன் நீங்கள் இறங்கத் துவங்கினால் 354 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். 50 கிலோமீட்டர் தாக்குப்பிடித்து இறங்கி விட்டால், 16 கிலோமீட்டர்களுக்கு கனமான, முன்பை விடக் கொடூரமான நச்சுத்தன்மையைச் சமாளிக்க வேண்டும். இதற்குக் காரணம், அங்கே மேகங்களில் இருந்து மழையாய் பெய்வது நீர் அல்ல, சல்ஃப்யூரிக் அமிலம். இதுவும் தரையைத் தொடும் முன்பு நச்சுக் காற்றாக, இரண்டாம் போர்வையாக மாறி விடுகிறது.

சரி, அதையும் நீங்கள் தாண்டிவிட்டீர்கள் என்றால், கீழே தட்பவெப்பம் 600 டிகிரி ஃபாரன்ஹீட். பூமியைவிட 10 மடங்கு அழுத்தம் வேறு இருக்கும். தரையைத் தொட்டவுடன் இந்த அழுத்தம் 95 மடங்காகியிருக்கும். இப்போது தட்பவெப்பம் 870 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டிருக்கும். இந்த வெப்பத்தில் நீங்கள் ஈயத்தைக்கூட உருக்கிவிடலாம். அதாவது நீங்கள் வந்த விண்கலத்தைக்கூட இது உருக்கி விடும். சரி, அங்கே இரவு வந்தவுடன் இறங்கலாமே என்று நினைத்தால், அங்கே பகல் மற்றும் இரவில் கிட்டத்தட்ட ஒரே வெப்பம்தான். ஏன் வருடம் முழுக்கவே பெரிய ஏற்ற இரக்கம் எதுவும் இருக்காது. ஒருவேளை, ஏதோ செய்து இறங்கிவிட்டாலும் இன்னொரு பிரச்னை தலைதூக்கும். வெள்ளியின் மேகங்கள் 90 சதவிகித சூரிய ஒளியை உள்வாங்காமல் பிரதிபலித்து விடுகிறது. இதனால், வெள்ளியில் நீங்கள் பெரும்பாலும் அரை இருட்டில் தான் இருப்பீர்கள்.

முன்னர், பூமியைப் போலவே வெள்ளிக்கும் வளிமண்டலம் உண்டு என்று ஒரு ஆறுதல் வார்த்தை கூறியிருந்தோமே அதற்கு வருவோம். வெள்ளியின் வளிமண்டலத்தில் இருப்பது 96 சதவிகிதம் கார்பன் டையாக்ஸைடு, 3.5 சதவிகிதம் நைட்ரஜன் மற்றும் 1 சதவிகிதம் மற்ற தேவையற்ற வாயுக்கள்தான். ஆக்சிஜன் எங்கடா என்று கேட்டால் அதை நீங்கள்தான் எடுத்து வர வேண்டும் என்று வெள்ளி ஏளனம் பேசும். இறங்கிய சில நிமிடத்தில் உங்களுக்குச் செல் பாதிப்பு மற்றும் கேன்சர் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. ஒரே நல்ல விஷயம் பூமியைவிட வெள்ளியில் நீங்கள் 10 சதவிகிதம் எடை குறைந்ததாக உணர்வீர்கள். 20-ம் நூற்றாண்டுக்கு முன் வரை, நமக்கு வெள்ளியின் அந்த மேகப் போர்வையைத் தாண்டி என்ன இருக்கும் என்றே தெரியாததால், அங்கே நாம் உயிர் வாழ முடியும் என்றே நினைத்திருந்தார்கள். அதன் பின்னர், 1970லிருந்து 1982க்குள், சோவியத் யூனியன் எட்டு முறை ஆளில்லா கலன்களை வெள்ளியில் இறக்கியுள்ளது. அவற்றில் ஒரு விண்கலம் அதிகபட்சமாக தாக்குப்பிடித்த நேரம் வெறும் 110 நிமிடங்கள் மட்டுமே.

இதனால்தான் வெள்ளிக் கிரகத்தை பெரிதும் யாரும் சீண்டாமல் இருக்கிறார்கள். இல்லையென்றால், இந்நேரம் அங்கேயும் பிளாட் போட்டு விற்கதான் மனிதர்கள் முயற்சி செய்துகொண்டிருப்பார்களே!