இன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி - 2

லுவலகத்துக்கு நேரமாகிவிட்டது. ‘காலியான தெருதானே...’ எனக் கொஞ்சம் வேகமாக வந்தார் சரவணன். திடீரென ஒரு நாய் குறுக்கே வர, நிலைகுலைந்து போனார். பைக்கோடு சேர்த்து கீழே விழ... நாய் தப்பியது. ஆனால், சரவணனுக்குத்  தலையில் காயம்.

ஹெல்மெட்டை பெட்ரோல் டேங்குக்கு மாட்டிச் சென்றதால் ஏற்பட்ட வினை. மயக்கமாகிவிட்டார். உடனே, ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர் அக்கம்பக்கத்தினர். அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு சரவணனை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேற்கொண்டு சிகிச்சை தொடர வேண்டும் என்றால், பணம் கட்ட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரது செல்போனை எடுத்து எண்களைத் தேடி, யாருக்கும் சரவணன் குடும்பத்தை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அப்பா, அம்மா, மனைவி என்று ஏதாவது நம்பர் ஸ்டோர் செய்திருக்கிறாரா எனப் பார்த்தால், அப்படி ஏதும் இல்லை. என்ன செய்வது என்று குழம்பிப்போயினர். அவரது பர்ஸில் அட்ரஸ் இருக்கிறதா எனப் பார்த்தபோது, மெடிக்ளெய்ம் அடையாள அட்டை கிடைத்தது. ‘சரி, இது போதும்... இதை அடிப்படையாக வைத்து சிகிச்சையைத் தொடங்குவோம்... வருவது வரட்டும்’ என டாக்டர் முடிவு செய்து, சிகிச்சையைத் தொடங்கினார். நல்ல வேளையாக மெடிக்ளெய்ம் அவரது உயிரைக் காப்பாற்றியது.

மெடிக்ளெய்ம் என்பது உடல்நலக் குறைவானவர்களுக்கு ஆனது என்ற தவறான எண்ணம் உள்ளது. சரவணன் போல மிகவும் ஆபத்தான மருத்துவச் சூழ்நிலையில் சிக்கிக்கொள்பவர்களுக்கு உதவுவது காப்பீடுதான். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அது தேவைப்படலாம். எந்த ஓர் உடல்நலக் குறைபாட்டுக்கும் மெடிக்ளெய்ம் தேவைப்படலாம். அதேபோல, கொஞ்ச காலம் போகட்டும். பிறகு, வாங்கலாம் எனப் பலர் நினைக்கின்றனர். இதுவும் தவறு, பிறந்த குழந்தைக்குக்கூட பாலிசி எடுக்க வேண்டும். உடல்நலக் குறைவு என்பது பாலினம், வயது, பொருளாதார சூழ்நிலை என எதைப் பார்த்தும் வருவது இல்லை. உடல்நலக் குறைவு யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அந்த நேரத்தில் பணத்துக்காக அலைவது மிகவும் சிரமம். காப்பீடு இருந்தால், அது உங்கள் தலை காக்கும்.

இன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி - 2

பாலிசி அலசல்

அப்போலோ ம்யூனிக் டெங்கு கேர்மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சலை வரவேற்கும் காலம். டெங்கு காய்ச்சலைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க என நிறையச் செலவாகும்.

இந்தச் செலவைக் குறைக்கும் வகையில் வந்திருக்கிறது ‘அப்போலோ ம்யூனிக் டெங்கு கேர் பாலிசி’. இந்த பாலிசி மூலம் ஒரு நாளைக்கு 1.2 ரூபாயில் டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். அதாவது ஆண்டுக்கு தோராயமாக 444 ரூபாயில் டெங்கு பாலிசி. பாலிசி ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என்ற இரண்டு அளவுகளில் கிடைக்கிறது.

வயது வரம்பை இரண்டாகப் பிரித்துள்ளனர். 9 முதல் 65 வயது வரைக்குள் உள்ள நபர் 50 ஆயிரம் ரூபாய்க்கு பாலிசி எடுத்தால், அவர் 444 ரூபாய் ப்ரீமியம் செலுத்தவேண்டி வரும். மற்ற வரிகளுடன் சேர்த்து அவர் 506 ரூபாய் கட்டினால் போதும். அதுவே, அவர் 1 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்தால், 659 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த பாலிசியை ஆன்லைனிலேயே பெறலாம். எந்த வயதினரும் இந்த பாலிசியை எடுக்கலாம். ஆயுள் முழுக்க பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

பாலிசி காலத்தில் டெங்கு காய்ச்சல் வந்தால், முழு கவரேஜ் கிடைக்கும். புறநோயாளியாக சிகிச்சை பெற்றால், 10 ஆயிரம் ரூபாய் வரை கவரேஜ் பெறலாம். புறநோயாளியாக சிகிச்சை பெறும்போது, மருந்து, பரிசோதனை, டாக்டர் ஆலோசனை, வீட்டிலேயே செவிலியர் வைத்துப் பராமரித்துக்கொள்வது ஆகியவை அடங்கும். பாலிசிதாரருக்கு ஒருவேளை காய்ச்சல் இருந்து,  டெங்கு பாசிட்டிவ் எனத் தெரிந்தால் எந்த ஒரு அப்போலோ ம்யூனிக் கவரேஜ் உள்ள மருத்துவ மனையிலும் பணம் இல்லாமல் சிகிச்சை பெறலாம் அல்லது மருத்துவமனை பில்லை செலுத்தி 10 நாட்களில் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

இதுபோன்ற பாலிசி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதுடன், நோயில் இருந்து மீண்டுவர பெரிதும் உதவியாக இருக்கும்.

எது பெஸ்ட்?

மருத்துவக் காப்பீடு பாலிசி எடுப்பதன் முக்கிய நோக்கமே, மருத்துவ சிகிச்சையின்போது ஆகும் செலவைத் தவிர்க்க வேண்டும், க்ளெய்ம் செய்யும்போது அதிகத் தொகை கிடைக்க வேண்டும் என்பதுதான். மருத்துவக் காப்பீட்டை, பொதுக் காப்பீடு நிறுவனங்களும் அளிக்கின்றன, பிரத்தியேகமாக மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் அளிக்கின்றன. அதனால், எதில் பாலிசி எடுப்பது என்ற குழப்பம் வரும்? பொதுக் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் மெடிக்ளெய்ம் பாலிசிகளுக்கு, நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டும்தான் கேஷ்லெஸ் வசதி இருக்கும். பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், சிகிச்சைச் செலவுக்கு உண்டான பில்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பித்த பிறகுதான் க்ளெய்ம் தொகையைப் பெற முடியும். இதில் க்ளெய்ம் தொகை குறைய வாய்ப்பு உள்ளது.

மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசியில், அதிக அளவில் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் போடுவதால், கேஷ்லெஸ் வசதி எளிதாகக் கிடைக்கிறது. மேலும், க்ளெய்ம் வழங்குவதற்குத் தனியாக டிபிஏ கிடையாது. இன்ஷூரன்ஸ் நிறுவனமே க்ளெய்ம்களை வழங்குவதால், க்ளெய்ம் வேகமாகக் கிடைக்கும். தவிர, பாலிசிதாரர் க்ளெய்ம் செய்யும்போது ஏதாவது சிக்கல் இருந்தால், அதை நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமே கேட்க முடியும். இதனால், பாலிசிதாரருக்கும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். தனிநபர் பாலிசிகள் பற்றி அடுத்த இதழில் அலசுவோம்.

- பா.பிரவீன் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism