Published:Updated:

பாயப் பதுங்குகிறதா சீன டிராகன்?!

மருதன்

'முழு பலத்துடன் இருக்கும்போது பலவீனமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்து; பலவீனமாக இருக்கும்போது முழு பலமும் இருப்பதைப்போல் காண்பித்துக்கொள்!’ 

கி.மு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சீன ராஜதந்திரி சன் சூ வகுத்து அளித்த இந்தத் தந்திரத்தை, இன்றைய தேதி வரை கடைப்பிடித்துவரும் ஒரே நாடு... சீனா!

கடந்த ஜூன் மாதம் சீனாவின் பங்குச்சந்தை 'குமிழ்’ திடீரென உடைந்தபோது, அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையில் ஒரு நடுக்கம் பரவியது. அமெரிக்காவில் ஏற்பட்டதைப் போன்ற நிதி நெருக்கடி சீனாவிலும் ஏற்படுமா? சீனாவுக்கு இது அழிவைத் தேடித்தருமா அல்லது பேரழிவையா? இந்த அழிவு எந்த அளவுக்கு நம் பொருளாதாரத்தைப் பாதிக்கும்? பங்குச்சந்தை நிபுணர்களும் பொருளாதார ஆய்வாளர்களும் சீனாவின் தடுமாற்றத்தை, ஆளுக்கு ஒரு பகுதியாகப் பிரித்துக்கொண்டு ஆராய்ந்துகொண்டிருந்தபோது சீனா இரண்டு மாத காலம் அமைதி காத்தது. பிறகு, சன் சூ பாணியில் ஓர் அதிரடியை நிகழ்த்திக்காட்டியபோது, அதுவரை அவல் மென்றுகொண்டிருந்த உலகம் அனிச்சை செயலாக வாய்பிளந்து நின்றது.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 70-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் பெய்ஜிங்கில் உள்ள தியானென்மென் சதுக்கத்தில் ஒரு மிரட்டலான ராணுவ அணிவகுப்பை ஆரம்பித்துவைத்தது சீனா. உலகம் முழுவதையும் மிரளவைத்த அந்த நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் என ஒரு பெரும் பிரபலக் கூட்டம் திரண்டுவந்தது. (அமெரிக்காவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் டி.வி-யில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்தார்கள்). பிரமாண்டமான அரங்கில், 12,000 சீன வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்றனர். தொடர்ந்து, சிறிதும் பெரிதுமாக 500 வகை ராணுவத் தளவாடங்களும் பளிச் ஆயுதங்களும் உலாவரத் தொடங்கின.

பாயப் பதுங்குகிறதா சீன டிராகன்?!

அவ்வளவுதான், பங்குச்சந்தை நிபுணர்கள் உடனடியாகப் பதவி இழக்க, ராணுவ ஆய்வாளர்களும் புவியரசியல் புலவர்களும் பூதக்கண்ணாடியைக் கொண்டுவந்தார்கள். உருண்டு செல்லும் ஒவ்வொரு ட்ரக்கையும் அதில் உள்ள ஒவ்வோர் ஆயுதத்தையும் உன்னிப்பாக ஆராயத் தொடங்கினார்கள். அது என்ன புதிய டாங்கி... இது என்ன புதிய மிஸைல்? வெளியில் வந்துள்ளதே இவ்வளவு என்றால், திரைக்குப் பின்னால் இன்னும் என்ன எல்லாம் இருக்கும்?

குறிப்பாக, சாம்பலும் ராணுவப் பச்சையும் கலந்த வண்ணத்தில் பிரமாண்டமாகக் காட்சி அளித்த ஓர் ஏவுகணை அமெரிக்கர்களை ஆச்சர்யப்படவைத்தது. அதைப் பற்றிய தகவல்களைத் தேடி எடுத்தபோது ஆச்சர்யம் அதிர்ச்சியாக மாறியது. 'டிஎஃப் - 21டி’ (DF-21D) என அழைக்கப்படும் இந்த டோங்ஃபெங் ஏவுகணையின் இன்னொரு பெயர், 'படுகொலை இயந்திரம்’. ஒலியைவிட 10 மடங்கு அதிக வேகத்துடன் பயணம் செய்யக்கூடியது. கண்டம்விட்டு கண்டம், 2,700 கி.மீ பாய்ந்து செல்லும் வல்லமைகொண்டது. ஒருமுறை முடுக்கிவிட்டால் சீறிச்சென்று அமெரிக்கக் கப்பல் படைகளை முழுமுற்றாக இது அழித்து ஒழித்துவிடும். மொத்தத்தில், சீனாவிடம் தற்போது இருப்பதிலேயே அதிசக்தி வாய்ந்த, அதிஆபத்தான ஆயுதம். ஒட்டுமொத்த வடகிழக்கு ஆசியாவையும் சுருட்டி, மடக்கி உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்ள ஒரு 'டிஎஃப்-21டி’ போதும் என்கிறது 'தி டிப்ளோமாட்’. 'இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்’ எனக் குறிப்பிட்டது 'நேஷனல் இன்ட்ரஸ்ட்’.

தற்செயலாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஓர் உண்மையைக் கண்டுபிடித்தது. 'டி.எஃப்-21டி’ ஏவுகணையால் 2,700 கி.மீ பாய முடியும் எனும் தகவலை முதல்முதலில் வெளியிட்டது 'சீனா டெய்லி’ என்னும் பத்திரிகைதான். இந்தத் தகவல் பிழையானது. அதிகபட்சமாக 1,500 கி.மீ மட்டுமே இந்த ஏவுகணையால் பாய முடியும். வழக்கம்போல் இப்போதும் சீனா அமைதியாகவே இருந்தது. எதிரிகளை எப்போதும் இருளிலும் அச்சத்திலும் குழப்பத்திலும் வைத்திருப்பதை ஒரு கலையாகவே பாவித்துக் கற்றிருக்கிறது சீனா.

பாயப் பதுங்குகிறதா சீன டிராகன்?!

ஒரு நாடாக அல்ல... ஒரு புதிராகவே தன்னை அது கட்டமைத்து வைத்துள்ளது. தன்னைப் பற்றி வரும் சாதகமான, பாதகமான, உண்மையான, பொய்யான, துல்லியமான, திரிக்கப்பட்ட செய்திகள் எதையும் சீனா ஏற்கவோ மறுக்கவோ செய்யாது. பாயும் என அனைவரும் எதிர்பார்த்திருக்கும் தருணங்களில் பதுங்கியே கிடக்கும்; 'இனி ஆபத்து இல்லை’ என வேறு வேலைபார்க்க ஆரம்பிக்கும்போது முழு வேகத்தில் சீறிப் பாயும்.

அதனால்தான், சீனா தன் பலத்தை எப்போது வெளிப்படுத்துகிறது என மட்டும் அல்ல, எப்போது எல்லாம் வெளிப்படுத்த மறுக்கிறது என்பதையும் ஆராயவேண்டியிருக்கிறது. அமெரிக்காவின் புருவங்களை உயர்த்த பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பை நிகழ்த்திய சீனா, தன்னுடைய அண்டை நாடான இந்தியாவைச் சமாளிக்க அதிகம் அலட்டிக்கொள்வது இல்லை. சமீபத்திய உதாரணம், நீர்மூழ்கிக் கப்பல் சம்பவம். இந்தியப் பெருங்கடலை இந்தியா சொந்தம் கொண்டாடுகிறது என்பது தெரிந்ததும், சீனா தன்னுடைய எதிர்ப்பை இந்தியாவுக்குப் பதிவுசெய்ய விரும்பியது. அதை எப்படிச் செய்தது தெரியுமா?

இலங்கையில் 'அம்பன்தோட்டா’ என்னும் இடத்தில் சீனா ஒரு துறைமுகத்தைக் கட்டிக்கொடுத்திருந்தது. சிவில் பயன்பாட்டுக்காக எனச் சொல்லப்பட்ட இந்தத் துறைமுகத்தில் இந்தியாவுக்கு செக்மேட்டாக இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுவந்து நிறுத்தியது சீனா. அந்தக் கப்பல்களில்தான் விஷயமே இருக்கிறது. சீனாவிடம் மூன்றுவிதமான நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. முதல் வகை டீசல் நீர்மூழ்கிக் கப்பல். ஒரு நாளைக்கு ஒரு முறை மேலே எழும்பி வந்து ஆக்சிஜன் சுவாசித்துவிட்டு, பாட்டரியையும் வெளியேற்றிவிட்டு, மீண்டும் கடலுக்கு அடியில் சென்றுவிடும். இரண்டாவது, அணுமின் நீர்மூழ்கி. மாதக்கணக்கில் கடலுக்கு அடியில் தங்கியிருந்து, தேவைப்படும் சமயத்தில் ஏவுகணையைச் செலுத்தி, தாக்குதல் தொடுக்கும் திறன்கொண்டது. மூன்றாவது, கண்டம்விட்டு கண்டம் பாயும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்.

மொத்தத்தில் 55 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்களும், 8 அணுமின் நீர்மூழ்கிக் கப்பல்களும், 5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் சீனாவிடம் இருக்கின்றன. ஆனால், இந்தியாவை அதட்ட சீனா அனுப்பியது இருப்பதிலேயே மிகவும் சாதாரணமான, மூச்சு வாங்கக்கூடிய டீசல் வகை நீர்மூழ்கிக் கப்பல்களைத்தான். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இந்தியாவின் பலம் சீனாவுக்குத் தெரியும். இந்தியாவிடம் 14 நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் 13 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளைக் கழித்து விட்டால் எஞ்சியிருப்பது, 'ஐ.என்.எஸ் சக்ரா’ மட்டுமே. அணு ஆற்றல்கொண்ட, தாக்கும் திறன் உள்ள ஒரே நீர்மூழ்கிக் கப்பல் அது மட்டும்தான். இதுவும்கூட ரஷ்யா 2012-ம் ஆண்டு, 10 ஆண்டுகள் குத்தகையில் கொடுத்தது. எனவே, இந்தியாவுக்கு சாதாரண நீர்மூழ்கியே போதும். இரண்டாவது, கடலுக்கு அடியிலேயே ரகசியமாகத் தங்கியிருப்பதில் பலன் இல்லை; அடிக்கடி மேலே மிதந்து வந்தால்தான் இந்தியா பார்த்து மிரளும். சாதாரண நீர்மூழ்கிதான் அதற்குச் சரிபட்டுவரும்.

சீன நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டதும் பதிலுக்கு இந்தியா செய்தது என்ன? 'இந்தியப் பெருங்கடல் இனி சீனப் பெருங்கடலாக மாறிவிடுமா?’ என அங்கலாய்த்து பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதிக் குவித்தது. இந்தியாவால் அதிகபட்சம் செய்ய முடிந்தது இதுதான் என்ற உண்மையை தன் பலத்தைப் பயன்படுத்தாமலேயே தெரிந்துகொண்டுவிட்டது சீனா.

பொதுவாக, தனது பிரதமர் அல்லது அதிபரை அண்டைநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு முன்னர் தன்னுடைய துருப்புகளை எல்லையில் குவித்து ஆழம்பார்க்கும் வழக்கத்தை சீனா கடைப்பிடித்து வருகிறது.  மே 2013-ம் ஆண்டில் சீனப் பிரதமர் இந்தியா வருவதற்கு முன்பு, மேற்கு லடாக் எல்லையில் சீனப் படைகள் ஒரு மாதம் தங்கியிருந்தன. இந்தியா ஒரு மிரட்டல் போட்ட பிறகுதான் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் அகமதாபாத், டெல்லி வந்திருந்தபோது, ஜம்மு காஷ்மீரில் தெற்கு லடாக் பகுதியில் உள்ள 'சுமர்’ என்னும் எல்லைப்பிரதேசத்தில் சீனா தனது படைகளை நிறுத்திவைத்தது. ஜி பாதுகாப்பாக இங்கு இருந்து விமானம் ஏறிவிட்டார் என்பதை உத்தரவாதப்படுத்திக்கொண்ட பிறகே படைகள் விலகிக்கொண்டன.

பாயப் பதுங்குகிறதா சீன டிராகன்?!

சீனாவுக்கு, தன் எதிரியின் பலமும் பலவீனமும் மட்டும் அல்ல, தன்னுடைய பலமும் பலவீனமும்கூடத் துல்லியமாகத் தெரியும். அமெரிக்காவுக்கு கிட்டத்தட்ட 60 நாடுகளுடன் ராணுவரீதியிலான நட்புறவு இருக்கிறது. உலகின் மொத்த ராணுவச் செலவுகளைக் கணக்கிட்டால், 80 சதவிகிதம் அமெரிக்காவின் இந்தக் கூட்டணிக்குத்தான் செல்லும். சீனாவுக்கோ தென்கொரியா, பாகிஸ்தான், இலங்கை, ரஷ்யா என கையடக்க நட்புகள் மட்டுமே இருக்கின்றன. அதே சமயம், அமெரிக்க ராணுவ பலத்தின் அடிப்படையில் இருப்பவை மூன்று அம்சங்கள். உயர்ரக உளவு ஆற்றல், உலகம் முழுவதிலும் தன் பலத்தை வெளிப்படுத்தும் திறன், நவீன தொழில்நுட்ப அறிவு. இந்த மூன்றிலும்தான் சீனா இன்று அமெரிக்காவுக்குச் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது.

சீனாவுக்கு அதன் இலக்குகள் மட்டுமே முக்கியம். அந்த இலக்குகளைப் போரிட்டு மட்டுமே அடைய முடியும் என அது நம்பவில்லை. எப்போது புன்னகைக்க வேண்டும்; எப்போது கையை முறுக்கவேண்டும் என்பது சீனாவுக்குத் தெரியும். திபெத், தைவான் போன்ற உள்பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்பதும், இந்தியப் பெருங்கடல், அமெரிக்கா போன்ற வெளி விவகாரங்களை எப்படிக் கையாளவேண்டும் என்பதும் அதற்கு அத்துபடி. இந்தியாவை குறைந்தபட்ச தளவாடங்களைக்கொண்டு அடக்கிவிட முடியும். அமெரிக்காவுக்கு அதிகபட்ச ராணுவ வலிமைகூடப் போதாது.

பாயப் பதுங்குகிறதா சீன டிராகன்?!

எனவேதான் தன் ராணுவ அணிவகுப்பில் ராணுவம், ராஜதந்திரம் இரண்டையும் ஒரே சமயத்தில் வெளிச்சமிட்டுக்காட்டியது சீனா. ஒரு பக்கம், 'டிஎஃப்-21டி’ ஏவுகணை மிதந்து வந்துகொண்டிருந்தது. மறுபக்கம், சீனா அதிபர் ஜி ஜின்பிங் அமைதி பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். (மொத்தம் 16 முறை 'அமைதி’ என்னும் வார்த்தையை தன் உரையில் அவர் பயன்படுத்தினார் எனக் கணக்கிட்டுள்ளது அமெரிக்கா). சீன ராணுவ வலிமையில் இருந்து ஒரு துளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. அதே சமயம், ராணுவத்தில் இருந்து மூன்று லட்சம் படை வீரர்களைக் குறைத்துக்கொள்ளப் போகிறோம் என உறுதிமொழி அளித்தார் ஜி ஜின்பிங். தனது மேலாதிக்கக் கனவை சீனா மறைத்துக்கொண்டதே இல்லை. ஆனாலும் அதிபர் தன் உரையில், 'சீனா இனி அமைதி வழி முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தும். மேலாதிக்க எண்ணமோ, விரிவாக்கக் கனவோ எங்களிடம் கிஞ்சித்தும் இல்லை’ என உருகினார். முடிவில், ஒன்று அல்ல, இரண்டு அல்ல 70,000 புறாக்களும் வண்ண பலூன்களும் வானத்தில் பறக்கவிடப்பட்டன.

ஒரு பக்கம் அதிபயங்கர ஏவுகணை; இன்னொரு பக்கம் அமைதி மீதான காதல். வானத்தில் ஆயிரக்கணக்கான வெண்புறாக்கள்; தரையில் பலவிதமான டாங்கிகள். மூன்று லட்சம் வீரர்கள் குறையப்போகிறார்கள் என மகிழ்வதா அல்லது ராணுவத்தின் தற்போதைய ஆள்பலம் 30 லட்சம் என்பதைக் கண்டு மிரள்வதா... எது நிஜம்? சீனாவின் உறுதிமொழிகளா அல்லது அதன் செயல்களா? எப்படி இரு முரண்பட்ட பிம்பங்களை ஒரே சமயத்தில் சீனாவால் வெளிப்படுத்த முடிகிறது?  

ஒரு நல்ல திறமைசாலியால் போரில் இறங்காமலேயே தன் எதிரியை வீழ்த்த முடியும். இதுவும் சன் சூ சொன்னதுதான்.  நாளையே ஒரு பெரிய கலர் பென்சிலையும் ரப்பரையும் ராணுவ ட்ரக்கில் நிறுத்திவைத்து தியானென்மென் சதுக்கத்தை ஒருமுறை சுற்றிவந்தால் போதும். இது நிச்சயம் அதிநவீன ராக்கெட்டாகத்தான் இருக்கும்; அது சரி, உடன் இருப்பது என்ன என மிரட்சியுடன் உலகம் விவாதிக்க ஆரம்பித்துவிடும். இதுவே சீனாவின் மிகப் பெரிய பலம். வேறு எந்த ஆயுதத்தையும்விட அது அதிகம் நம்பியிருப்பது இதைத்தான்!