Published:Updated:

கிரேஸி - கூகுள் இணைந்து கலாய்க்கும் ...

ப.சூரியராஜ், ஓவியம்: பாலமுருகன்

'கிரேஸி மோகன்’... என்னவெல்லாம் ஞாபகம் வருகிறது உங்களுக்கு? 'விடாது சிரிப்பு’, 'மார்க்கபந்து முதல் சந்து’, 'சாக்லேட் கிருஷ்ணா’... அந்த வரிசையில் இனி 'கூகுள் கடோத்கஜன்’ என்பதை சேர்த்துக்கொள்ளலாம். 'சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தின் இரண்டாம் பாகம் (சீக்வல்) இந்த 'கூகுள் கடோத்கஜன்’. இந்த ட்ரெண்டிங் யுகத்துக்கு ஏற்ப சீக்வல், கூகுள் என நாடக மேடையிலும் வைரல் முயற்சி மேற்கொள்கிறார் 'கிரேஸியார்’! 

'' 'கூகுள் கடோத்கஜன்’ கதை என்ன?''

''வழக்கம்போல செம கலாட்டா கதைதான். ராமானுஜம்-கௌசல்யா தம்பதியின் பேத்தி ஜானகி. தாத்தா திடீர்னு ஒரு ரயில் விபத்தில் இறந்துடுறார். அதுக்கு முன்னாடி 'ஜானகிக்கும் பார்த்திக்கும்தான் கல்யாணம் நடக்கணும்’னு வாக்குறுதி வாங்கிடுறார். ஆனா, ஜானகிக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஏன்னா, அவ மாதுவைக் காதலிக்கிறா. பார்த்திக்கும் ஜானகிக்கும் நடக்கிற கல்யாணத்தை நிறுத்தி, தன்னை ஜானகியோடு சேர்த்துவைக்க கடவுள் கிருஷ்ணர்கிட்ட உதவி கேட்கிறான் மாது. கிருஷ்ணரும் மாதுவுக்கு உதவ கடோத்கஜனை அனுப்பிவைக்கிறார். மாதுவும் ஜானகியும் ஒண்ணு சேர்ந்தாங்களா... அதான் க்ளைமாக்ஸ்'' - உற்சாகமாகச் சிரிக்கிறார் கிரேஸி மோகன்.

கிரேஸி - கூகுள் இணைந்து கலாய்க்கும் ...

டைமிங், ரைமிங் கலந்து கலகலப்பூட்டுவதுதான் கிரேஸியின் கைவண்ணம். இதோ 'கூகுள் கடோத்கஜன்’ சாம்பிள்கள்...

பாட்டி: நீ பொறந்த நட்சத்திரம் என்ன... ஜோசியர் கேக்கறார்.

பார்த்தி: நாளைய நம்பிக்கை நட்சத்திரம்!

மாது: முட்டாள். நீ பொறந்த நட்சத்திரம் என்ன?

பார்த்தி: யாருக்குத் தெரியும்... அதை எங்கப்பன் நடேச முதலியாரைத்தான் கேக்கணும். அவனும் பூட்டான். எத்தையாவது சொல்லிக்க!

பாட்டி: ஏன் இப்பிடி விந்தி விந்தி நடக்குற?

பார்த்தி: எனக்கு 'பைல்ஸ்’ இருக்குனு உனக்குத் தெரியாதா?

மாது: சரி... ஜோசியர் கேட்டா மூல நட்சத்திரம்னு சொல்லிக்க!

மாது: ஜானகியோட தாத்தாவை, பார்த்தியோட அப்பாதான் முழுக்க முழுக்கப் படிக்கவெச்சிருக்காரு!

கிரேஸி - கூகுள் இணைந்து கலாய்க்கும் ...

கிருஷ்ணா: எது... தாத்தாவை எதுக்குய்யா படிக்கவெக்கணும்?

மாது: முதியோர் கல்வி கிருஷ்ணா!

கிருஷ்ணா: ஓ... என்ன கிளாஸ் படிச்சார்?

மாது: மூணாம் கிளாஸ்!

கிருஷ்ணா: கூப்பிடு அந்தக் கிழவனை... சக்கரத்தை விட்டுக் கொல்றேன்.

மாது: அந்தக் கஷ்டம் உனக்கு வேண்டாம். ஏற்கெனவே அவர் சக்கரம் ஏறி செத்துப்போயிட்டார்!

கிருஷ்: சக்கரம் ஏறியா?

மாது: ஆமா... ட்ரெயின் சக்கரம் ஏறி...வழக்கம்போல தாத்தாவும் பாட்டியும் டிக்கெட் வாங்காம ட்ரெயின் ஏறியிருக்காங்க. நடு வழியில பாட்டி தண்ணி புடிக்க இறங்கியிருக்கா. அதுக்குள்ள ட்ரெயின் கிளம்பிடுச்சு. பாலக்காட்டுல ஆக்சிடென்ட்.

கிருஷ்: அய்யய்யோ... தாத்தா...

மாது: டிக்கெட் வாங்கிட்டாரு!

மாது: மகாபாரத பீமன் என்னா வாட்டசாட்டமா இருப்பாரு. நீ அவரோட பையன் தம்மாத்துண்டு இருக்க?

கடோத்கஜன்: நான், மகாபாரத பீமனோட பையன் இல்லப்பா; சோட்டா பீமோட பையன். ஸோ, நான் சோட்டா கடோத்கஜன்.

கடோத்கஜன்: மந்திரத்துல கில்லாடிங்க இவங்க ரெண்டு பேரும்... மந்திரம் போட்டா மாது... நீ மாதுவாயிடுவ!

மாது: ஆங்..!

கடோ: பொம்பளையாயிடுவ... இவன் மந்திரம்... அவன் தந்திரம்... இவன் மேஜிக்!

மாது: அவன் 'பிளாக் மேஜிக்கா’... கரியா இருக்கானே!

யசோதா: உன் புருஷனை பத்து மாசம் சுமந்து பெத்தவடி நானு!

ருக்மணி: அப்ப மத்தவங்கள்லாம் என்ன போர்ட்டர் வெச்சா சுமந்தாங்க?

கிருஷ்ணா: கிருதா மட்டும் இல்லப்பா டோட்டலாவே நரைதான். உங்கிட்ட சொல்றதுக்கு என்ன... டை அடிச்சிண்டிருக்கேன்.

மாது: கடவுள்லாம்கூட டை அடிச்சுப்பாங்களா?

கிருஷ்ணா: எல்லாம் உண்டுப்பா. சொல்லப்போனா, அந்த டையே எங்களுக்குக்காகத்தான பண்றாங்க!

மாது: எந்த டை?

கிருஷ்ணா: அதாம்பா... GODrej!

கம்ப்யூட்டர் வியாபாரி: எனக்கு மொத்தம் மூணு புள்ளைங்க. ஆல்ட்டு, கன்ட்ரோலு, டெலீட்டு. இதுல முத புள்ளை ஆல்ட்டு எங்கூட வியாபாரத்துக்கு வர்றான். ரெண்டாவது புள்ளை கன்ட்ரோலு வீட்ல குந்திகினு கன்ட்ரோல் பண்ணிக்கினுக்கிறான்.

மாது: அப்ப டெலீட்டு?

கம்ப்யூட்டர் வியாபாரி: டெலீட் ஆயிட்டாங்க. செத்துப்பூட்டான்!

மாது: காபி அண்ட் பேஸ்ட்டா... பேஸ்ட் அண்ட் காபிதான கரெக்ட்!

கம்ப்யூட்டர் வியாபாரி: எப்பிடியா?

மாது: ஆமா... பல் தேய்ச்ச பிறகுதானே காபி!