Published:Updated:

“இந்திய பாரம்பர்ய உணவுகள் பெஸ்ட்!’

அமெரிக்க நம்மாழ்வார்கார்க்கிபவா, படம்: தி.குமரகுருபரன்

மெரிக்க உணவு வணிக கார்ப்பரேட் ஜாம்பவான்களை 'தனி ஒருத்தி’யாக எதிர்ப்பவர் வாணி ஹரி. ’Foodbabe.com' என்ற இணையதளம் மூலம் உணவுப்பொருட்களில் கலந்து இருக்கும் கெமிக்கல், நச்சுப்பொருட்கள் பற்றி ஆதாரங்களுடன் தீவிரமாக எழுதிவருபவர். கே.எஃப்.சி., சப்வே போன்ற பல நிறுவனங்களை எதிர்த்துப் போராடி, அவர்களின் மூலப்பொருட்களையே மாற்றவைத்தவர். டைம்ஸ் இதழ் 'இணையத்தில் செல்வாக்குமிக்கவர்கள்’ பட்டியலில் 30 பேரை அடையாளம் காட்டியது.  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் அந்தப் பட்டியலில் இடம் பெற்ற வாணி ஹரியின் பெற்றோர், இந்திய வம்சாவளியினர்; பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பாரம்பர்ய விவசாய முறைகள் பற்றி அறிந்துகொள்ள, இந்தியா வந்திருந்த வாணியைச் சந்தித்தேன்...

'' ’Foodbabe.com'  எப்போது, எதற்காக ஆரம்பித்தீர்கள்?''

''சின்ன வயதில் எனக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தது. மருத்துவமனை சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் நிரந்தரத் தீர்வு அல்ல எனப் புரிந்தது. கெமிக்கல் சூழ்ந்த இந்த உலகில் எப்படி ஒருவர் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன். அப்போது நான் உட்கொள்ளும் உணவுகளைப் பற்றி தெரியவந்தபோது, அதிர்ச்சி அடைந்தேன்.

என் உணவு முறையை முற்றிலுமாக மாற்றினேன். சில நாட்களிலேயே 13 கிலோ எடை குறைந்தது; சருமம் மெருகேறியது. பல வருடங்களாகத் தொடர்ந்து சாப்பிட்ட மருந்துகளை நிறுத்தினேன். எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த அனுபவத்தை மற்றவர்களுக்குப் பகிரவே ’Foodbabe.com' தொடங்கினேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய வலைப்பூவை, இதுவரை ஐந்து கோடி பேர் வாசித்திருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பிக்க முக்கியக் காரணமே என் குடும்பம், நண்பர்கள் கெமிக்கல் கலக்காத உணவுப் பழக்கத்துக்குள் வர வேண்டும் என்பதற்காகத்தான். ஆனாலும் என் அண்ணன் நான் சொல்வதைக் கேட்டதே இல்லை. உலகில் எந்த அண்ணன்தான் தங்கையின் பேச்சைக் கேட்டிருக்கிறான்? ஆனால், அவனும் சமீபத்தில் மாறிவிட்டான். அதுதான் எனக்கு நிஜமான சந்தோஷம்.''

 “இந்திய பாரம்பர்ய உணவுகள் பெஸ்ட்!’

''உங்களைப் பொறுத்தவரை உடல்நலம் என்பது என்ன?''

''உடலுக்குள் நீங்கள் என்னவெல்லாம் சேர்க்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே உடல்நலம். நாம் எல்லோருமே நம் உடல்நலத்தை உணவு நிபுணர்களிடமும் உணவுசார் நிறுவனங்களிடமும் அவுட்சோர்ஸ் செய்திருக்கிறோம். அவர்களுக்கு நம் உடல்நலத்தைவிட வியாபாரமே முக்கியம். நமக்கு நம் உடல்நலன்தான் முக்கியம். எனவே, நம் உடலுக்குத் தேவையானவற்றை நம் நேரடி மேற்பார்வையில் நாமே தருவித்துக்கொள்வதுதான் உடல்நலன். இதுகுறித்த அக்கறை முன் எப்போதையும்விட இப்போது வேகமாகப் பரவி வருகிறது. 'திஷீஷீபீ தீணீதீமீ’போல எல்லா நாடுகளிலும் யாரோ ஒருவர் கெமிக்கல் கலந்த உணவுகளின் ஆபத்து பற்றி அக்கறையுடன் எழுதிவருகிறார். அது மக்களின் மனதில் கேள்விகளை எழுப்புகிறது. இந்த முயற்சிகளால் அடுத்த தலைமுறை, கெமிக்கல் கலக்காத நல்ல உணவைச் சாப்பிடுவார்கள் என நம்புகிறேன்.''

''நிறையப் பயணம் செய்கிறீர்கள். உலகில் சிறந்த உணவுப் பாரம்பர்யம் கொண்ட நாடு எது?''

''நிச்சயம் அமெரிக்கா இல்லை. உலகம் முழுக்க உணவுப்பழக்கம் சீர்குலைந்துதான் இருக்கிறது. ஆனால், 'பாரம்பர்யம்’ எனக் கேட்டால் நான் இந்தியாவைத்தான் சொல்வேன். இந்தியப் பாரம்பர்ய முறைப்படி செய்யப்படும் உணவுகள் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்வது இல்லை. இஞ்சி, மஞ்சள் போன்றவை உடலுக்குப் பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றன. நெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் சமைப்பது உடலுக்கு நல்லது. இந்தியர்களின் உடல்நலம் பாதிக்கப்பட முதன்மைக் காரணம், மாசு மற்றும் அசுத்தமான நீர்தான்; உணவுமுறை அல்ல.''

 “இந்திய பாரம்பர்ய உணவுகள் பெஸ்ட்!’

''கிரீன் டீ உடலுக்கு நல்லதா?''

''எந்தத் தேயிலையையும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் வளர்க்க முடியாது. தேயிலைகள் பறிக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு, கழுவாமல்தான் நம் கோப்பைக்கு வருகின்றன. எனவே, தேநீர் குடிக்கும் எல்லோருமே பூச்சிக்கொல்லி மருந்தையும் சேர்த்தே அருந்துகிறார்கள். ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படும் தேநீரை மட்டும்தான் நான் குடிக்கிறேன். மற்ற எல்லா வகை தேநீரும் பூச்சிக்கொல்லி மருந்தே.''

 “இந்திய பாரம்பர்ய உணவுகள் பெஸ்ட்!’

''நம் அன்றாட உணவில் அதிகம் கலந்து இருக்கும் கெமிக்கல்கள் எவை?''

''செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள், எண்ணெய் வகைகள். நூடுல்ஸில் MSG இருப்பதாகத் தடைசெய்தார்கள். ஆனால், பல பெயரில் அதே MSG  உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. பேக் செய்யப்பட்ட பொருட்களில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கின்றன என்ற லேபிளைக் கவனித்துப் பாருங்கள். நமக்குத் தெரிந்தே பல விஷங்கள் இருக்கும்; தெரியாமல் போலி பெயரில் அதைவிட அதிகம் இருக்கும்.''

வாணி ஹரியின் டயட் என்ன?

''காலையில் எலுமிச்சம்பழச்சாறுடன் சிவப்பு மிளகாய். இது, நம் கல்லீரல் இயக்கத்தைத் தூண்டும்; நாக்கின் சுவைத்திறனைக் கூட்டும்; உடலைப் புத்துணர்ச்சியுடன் செயல்படவைக்கும். காலை உணவாக பச்சைக் காய்கறிகளால் ஆன சாலட். ஆர்கானிக் காய்கறிகளை தண்ணீரில் நன்றாகக் கழுவினால் போதும். மதிய உணவுக்கு, குறைவான அரிசி சாதத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் இயற்கை மசாலா பொருட்கள் கலந்த கிரேவி. அதன் பின் இஞ்சி தேநீர். சுவைக்கு பனைவெல்லம் சேர்க்கலாம். பாக்கெட்டில் வரும் வெள்ளைச் சர்க்கரையைவிட பனை வெல்லம் நல்லது. இரவு உணவுக்கு கிரில்டு ஃபிஷ் மற்றும் உருளைக்கிழங்கு!''

எங்கே வாங்குகிறோம்?

'21 நாட்கள்... 21 பழக்கங்கள் மூலம் நச்சுப்பொருட்களே இல்லாத உணவுப் பழக்கத்துக்குத் திரும்பலாம்’ என்கிறது வாணி ஹரி எழுதி இருக்கும் ’Foodbabe way 'என்ற புத்தகம். அதில் இருந்து இரண்டு டிப்ஸ்:

1) உணவுக்கு என ஷாப்பிங் செய்யும் இடங்களை மாற்றுங்கள். விவசாயிகளிடம் காய்கறிகளை நேரிடையாக வாங்க முடியுமா எனப் பாருங்கள். காய்கறிகள் மிகக் குறைந்த நச்சுத்தன்மையுடன் அங்கு இருக்கும்!  

2) உங்கள் டயட்டில் இருந்து எதையெல்லாம் நீக்கலாம் என யோசிக்கும் முன், எதை அவசியம் சேர்க்க வேண்டும் எனக் கவனியுங்கள். கீரைகள் நிறைய சேருங்கள்.

உடனடியாகச் சோர்வு நீக்கி உற்சாகம் பெற...

''இஞ்சியை நறுக்கி வெந்நீரில் போட்டுக் குடிக்கலாம். விமானப் பயணத்தினால் ஏற்படும் ஜெட்லேக்கைப் போக்க, நான் எப்போதும் குடிப்பது அதுதான். நம் உடலில் உடனடி சக்தி உருவாகி வேலைகள் தடங்கல் இல்லாமல் நடக்கும்!''

இயற்கை அழகூட்டிகள்!

சரும, முடி ஆரோக்கியத்துக்குத் தேவையான நான்கு பொருட்கள்.

1) சுத்தமான நீர்

2) அவகடோ (வெண்ணெய் பழம்)

3) தேங்காய் எண்ணெய்

4) பச்சை இலை காய்கறிகள் (துளசி, கீரை போன்றவை)