Published:Updated:

“பார்வையில்லாததால இப்பவரைக்கும் ஏமாத்தப்பட்டுட்டு வர்றோம்... கண்டிப்பா ஜெயிப்போம்!” - தன்னம்பிக்கை தம்பதியின் நெகிழ்ச்சி கதை

“பார்வையில்லாததால இப்பவரைக்கும் ஏமாத்தப்பட்டுட்டு வர்றோம்... கண்டிப்பா ஜெயிப்போம்!” - தன்னம்பிக்கை தம்பதியின் நெகிழ்ச்சி கதை
“பார்வையில்லாததால இப்பவரைக்கும் ஏமாத்தப்பட்டுட்டு வர்றோம்... கண்டிப்பா ஜெயிப்போம்!” - தன்னம்பிக்கை தம்பதியின் நெகிழ்ச்சி கதை

“கடந்த நாலு வருஷத்துல நிறைய தொழில் தொடங்கினோம். அன்பா பேசுற எல்லோரையும் நண்பர்களாக, சொந்த பந்தங்களாக நம்பினோம். கண் பார்வையில்லாத காரணத்தால நாங்க நம்பிய பலராலும் ஏமாற்றப்பட்டோம். ஆனா, எச்சூழல்லயும் 'என்னடா வாழ்க்கை! வெற்றியடைய முடியாதா?'ங்கிற நெகடிவ் எண்ணம் மட்டும் எங்களுக்கு வரலை. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும், 'நிச்சயம் அடுத்த முயற்சியில வெற்றி கிடைக்கும்'னு நம்புறோம். அப்படித்தான் இப்போ புது தொழிலைத் தொடங்கியிருக்கிறோம்" - கணவர் குமாரின் கரம் பற்றியபடி பேசுகிறார் விஜி. 

கண்பார்வையில்லா மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்தாலும், தன்னம்பிக்கை மற்றும் அன்பு என்ற இரு குணங்களால் தம்பதியராக வாழ்வில் ஒன்றிணைந்தவர்கள். சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த இவர்கள், நம்பிய பலராலும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தளராமல் தொடர்ந்து புதுப் புது முயற்சிகளால் சிறப்பானதோர் எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். விஜிக்கு பூர்வீகம் சென்னையை அடுத்த கல்பாக்கம். அவங்க ப்ளஸ் டூ முடிச்ச நிலையில, பெற்றோர் யாருமில்லாத காரணத்தால் சொந்தக்காரங்களால் ஹாஸ்டல்ல சேர்க்கப்பட்டாங்க. 2012-ல் ஒரு சொந்தக்காரங்க மூலமா விஜியின் அறிமுகம் எனக்குக் கிடைச்சுது. நண்பர்களாகப் பழகினோம். எந்த வரதட்சணையும் வாங்காம ஒரு பொண்ணைக் கல்யாணம் செய்துக்கணும்' என்பது என்னோட கொள்கை. அது விஜிக்குப் பிடிச்சிருந்துச்சு. எல்லோர்கிட்டயும் அன்பு காட்டுறது, எல்லாத் தோல்விகளையும் வெற்றிக்கான அறிகுறியா பார்க்கிறதுங்கிற விஜியின் குணம் எனக்குப் பிடிச்சிருந்தது. அதனால ரெண்டு பேரும் காதலரானோம். 2013-ல் கல்யாணம் செய்துகிட்டோம். அப்புறமா யார் சப்போர்ட்டும் இல்லாம தன்னம்பிக்கையை மட்டும் ஆதாரமா வெச்சு தனியா வாழ ஆரம்பிச்சோம்.

ஒரு வருஷம் ரொம்பவே சிரமத்துலதான் வாழ்ந்தோம். 2015-ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் சமயத்துல எங்க வீட்டை வெள்ளம் சூழ்ந்திடுச்சு. அப்போ வீட்டுச் சுவர் இடிஞ்சு என் கால் மேல விழுந்ததால இன்னும் சிரமமாச்சு. வேற வீட்டுக்கு மாறின பிறகு சுயதொழில் செய்ய ஆரம்பிச்சோம். டீ விற்கிறது, மோர் விற்கிறது, பிளாட்பாரத்துல டிரஸ் விற்கிறது, எம்.எல்.எம், ரியல் எஸ்டேட்னு அடுத்தடுத்து நிறைய பிசினஸ் பண்ணினோம். ஆனா, கண்ணுத் தெரியாத குறைபாட்டைப் பயன்படுத்தி நிறைய பேர் எங்களை நம்பவெச்சு ஏமாத்திட்டாங்க. அப்புறம் ரயில்ல பர்ஃபி வித்தேன். ஒருமுறை தவறுதலா ரயில்வே ட்ராக்ல விழுந்து அதிர்ஷ்டவசமா உயிர் பிழைச்சேன். இப்படி, நாங்க நிறைய தொழில்களைச் செய்தாலும் எதிலுமே வெற்றி கிடைக்கலை. ஆனாலும் எங்களுக்கு வருத்தமில்லை.

ஏன்னா, எங்களால் நிச்சயம் சாதிக்க முடியுங்கிற நம்பிக்கை இருக்கு" என்னும் குமாரைத் தொடர்ந்து பேசுகிறார் விஜி.

"இவருக்கு சினிமா டைரக்டராகணும்ங்கிற ஆசை ரொம்பவே உண்டு. அதனால சில வருஷத்துக்கு முன்னாடி வடபழனியில இருந்த டைரக்டர் பாலுமகேந்திரா சார் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போனார். 'உன் எண்ணத்தை பிரதிபலிக்கிற ஒரு கேமராமேன் இருந்தா நிச்சயம் உன்னால டைரக்டர் ஆக முடியும்'னு அவர் சொல்லியிருக்கார். தொடர்ந்து அவர்கிட்ட டைரக்‌ஷன் பயிற்சி எடுத்துகிட்டார். பிறகு, 'ஒருபார்வையற்ற மாற்றுத்திறனாளியாலும் கனவு காண முடியும்'ங்கிறதை மையப்படுத்தி ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தார். படம் முடிஞ்ச சமயத்துல படமெடுத்த கேமராமேன் ஃபுட்டேஜை தூக்கிட்டுப்போயிட்டார். அதிலும் ஏமாற்றம்தான். 'ஒரு ஃபுட்டேஜ் போனா என்ன? உங்கத் திறமைக்கு உடனே இன்னொரு படம் எடுங்க'னு அவரை ஊக்கப்படுத்தினேன். இப்போ, 'ஒரு பெரிய அதிகாரி பிணமா நடிச்சு ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கிறார்'ங்கிற கதையை மையப்படுத்தி ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்திட்டிருக்கிறார். சீக்கிரமே அப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். படம் ரிலீஸாச்சுன்னா, தமிழ்நாட்டின் முதல் கண்பார்வையில்லா இயக்குநர் என்ற பெருமையைப் பெறுவார்" என்று கணவரின் சாதனைகளைச் சொல்லும்போது விஜியின் முகத்தில் புன்னகை மலர்கிறது.

“மிமிக்ரி ஆர்டிஸ்டான கணவர், 150 பிரபலங்களின் வாய்ஸ்ல சூப்பரா பேசுவார். 'எஃப்.எம் பிராட் காஸ்டிங் அண்டு வாய்ஸ் பேஸ்டு அட்வர்டைஸ்மென்ட் கோர்ஸ்' முடிச்சு, சென்ட்ரல் கவர்மென்ட் சர்டிஃபிகேட் வாங்கியிருக்கிறார். தொடர்ந்து ஒருத்தர்கூட சேர்ந்து மிமிக்ரி கிளாஸ் எடுத்து, அதிலும் ஏமாற்றப்பட்டார். இருந்தாலும் மனம் தளராம, இப்போ ஊதுவத்தி, பர்ஃபியூம், ரூம் ஸ்பிரே உள்ளிட்ட பொருள்களை வெளியிடங்களுக்குக் கொண்டுபோய் விற்பனைசெய்ய ஆரம்பிச்சிருக்கிறோம். பி.ஏ., படிச்ச கணவர், இப்போ என்னையும் கரஸ்ல பி.ஏ., படிக்க வைக்கிறார்."

"வாழ்க்கையில அடுத்தடுத்த தோல்விகளால கலங்கினப்போதெல்லாம், 'சவாலான வாழ்க்கையை வாழுற நம்மால், 'ஒரு பிசினஸ்ல தோல்வியைச் சந்திச்சா என்ன? நிச்சயமா வேற ஒரு தொழில்ல வெற்றிபெற முடியும்'ங்கிற தன்னம்பிக்கையைக் கொடுத்துட்டே இருப்பாங்க விஜி. அதனாலதான் உத்வேகத்தோடு இப்போ புது பிசினஸைத் தொடங்கியிருக்கிறோம்" என்று சிரித்தபடியே தொடர்கிறார், குமார். "புதுசா தொடங்கியிருக்கிற பிசினஸை கவனிச்சுக்கிற நேரத்தைப் போக, மத்த நேரங்கள்ல மனைவி டெய்லரிங் பண்றாங்க. கண் பார்வை இல்லாட்டியும் அவங்களால நல்லா துணி தைக்க முடியும். அதனால இப்போ அவங்களுக்கு கஸ்டமர்ஸ் அதிகமாகிட்டிருக்காங்க. குறிப்பா, எங்க சூழலைப் பயன்படுத்தி பலரும் ஏமாத்தினாலும், அதனால யார் மேலயும் எங்களுக்குக் கோபமில்லை. 'நமக்குத் திறமையிருக்கு. நம்மாள முடியும்!'ங்கிற தன்னம்பிக்கை மட்டும்தான் தொடர்ந்து எங்களை ஓடவெக்குது" என குமார் சொல்ல, ஆமோதித்துப் புன்னகைக்கிறார் விஜி.