Published:Updated:

உயிர் பிழை - 8

மருத்துவர் கு.சிவராமன்

யிர் பிழைகள் பெரும்பாலும் உருவாவது இல்லை; உருவாக்கப்படுகின்றன. சொற்பமான, ஆனால் அசுரத்தனமான சில பன்னாட்டு நிறுவனங்களின் வணிகப் பசியில் அவை விளைகின்றன என்றால், அதை மறுக்க இயலாது. அந்த அகோரப்பசி 'கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்’ என்ற அறம்சார் வணிகத்தில் உருவானது அல்ல. அது, 'இந்த உலகில் விளையும் பொருட்களின் விதைகள் அனைத்தும் என் சோதனைக் குழாயில் பிறந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்’ என நினைக்கும் பிரமாண்ட நிறுவனங்களின் பேய்ப் பசி. இவர்கள் நடத்தும் நியாயம் அல்லாத வணிகத்தால்  உடம்புக்கும் மரபுக்கும் பரிச்சயமே அல்லாத, ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் துளித்துளியாக உணவு வழியே நம் உடம்புக்குள் உட்செல்வதுதான் உயிர் பிழை ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம்.   

தோட்டத்தில் பயிராக்குவதில் இருந்து, தட்டில் பரிமாறுவது வரை எத்தனை ரசாயனங்கள்? கேசரியின் இளஞ்சிவப்பு மஞ்சள், கொன்றைப் பூவில் குளித்து வந்தது அல்ல; குங்குமப்பூவைப் பொடித்துக் கொடுத்தும் வந்தது அல்ல. அலூரா ரெட்டும், டார்ட்ராஸைனும் சேர்ந்து பிறந்தது அந்த நிறம். வெள்ளை கலரில் கேசரி தந்தால், அது இனிக்காதா? அதில் உள்ள ஏலக்காய் மணக்காதா? மேற்படி ரசாயனக் கலவை சேர்ந்து இளஞ்சிவப்பாகும் கேசரி, வாயில் வேண்டுமானால் இனிப்பைத் தரலாம்; வாழ்வில் நிச்சயம் எப்போதும் இனிப்பைத் தராது என்கிறது இன்றைய அறிவியல்.

இந்த இளஞ்சிவப்பு மஞ்சள் நிறங்கள், உலகின் மிக விலை உயர்ந்த மணமூட்டியான குங்குமப்பூவில் இருந்து ஒருகாலத்தில் பெறப்பட்டன. இப்போது ஒரிஜினல் குங்குமப்பூ வேண்டும் என்றால், ஈரானில் இருந்தோ துருக்கியில் இருந்தோதான் வாங்கி, கேசரி கிண்ட வேண்டும். அப்படி ஒரு கேசரியை வாங்கிச் சாப்பிட பர்ஸோடு பேன்ட் சட்டையையும் கழட்டி கல்லாவில் கொடுத்தாலும் கட்டாது. இந்த நிறமி ரசாயனங்கள், தைராய்டு புற்றைத் தோற்றுவிக்கக்கூடுமோ எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உயிர் பிழை - 8

கலர்கலரான மாத்திரைகள், டானிக்குகள்,  தின்பண்டங்கள், ஐஸ்க்ரீம்களில் உள்ள ஊதா (Brilliant Blue, Indigo carmine) பச்சை(Fast Green) சிவப்பு   (Erythrosine, Allura Red) மஞ்சள் (Tartrazine, Sunset Yellow) என நிறங்களுக்குப் பின்னால் உள்ள ரசாயனங்கள், மனித மரபணுக்களை உராய்கின்றனவா (Genotoxicity) என ஆய்வாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கூடவே, இந்த உணவு நிறமிகள் குழந்தைகளிடம் Hyperactivity - ஐ உண்டாக்குவதும் அறியப்பட்டதால், இங்கிலாந்து முதலான பல ஐரோப்பிய நாடுகள் குழந்தை உணவுகளில் இருந்து நிறமிகளை அறவே வெளியேற்றிவருகின்றன. ஆனால் இங்கு, கலர் கலர் மிட்டாய்கள் போதாது என கலர் பரோட்டா, கலர் சப்பாத்தி என முன்னேறி வருகிறோம்.

நீண்டகாலமாக நமக்கு ரொட்டித்துண்டு  என்றால் அது காய்ச்சலுக்குச் சாப்பிடும் உணவு.மருத்துவமனை வாசலில் உள்ள பேக்கரியில் மட்டுமே ரொட்டி கிடைக்கும். 'ஏல... ரொம்ப ஆடிட்டுத் திரியாதே! அப்புறம் ரொட்டிதான் திங்க வேண்டி இருக்கும்’ எனத் தெருக் கிழவிகள் திட்டிய குரல் இன்றும் எனக்குக் கேட்கிறது. அந்தக் கால ரொட்டிகள், தெலுங்குப் படத்தில் வரும் பல் தேய்க்காத வில்லன் மாதிரி அவ்வளவு கடினமாக இருக்கும். ஆனால், இப்போது வரும் ரொட்டிகள் அலியா பட் மாதிரி பளபளவென மென்மையாகிவிட்டன. இந்த உருமாற்றத்துக்கு அமெரிக்க ரொட்டி கம்பெனிகள் பயன்படுத்துவது Azodicarbonamide  எனும் ரசாயனம். பிளாஸ்டிக் லெதர் கார் ஸீட் தயாரிக்க உதவும் கெமிக்கல் அது. இந்த ரசாயனத்தை, தன் வாசலுக்கே வரக் கூடாது எனத் தடை விதித்துள்ளது ஐரோப்பா. காரணம், இந்த ரசாயனம் ரொட்டியில் சேர்ந்து வேகும்போது Semicarbazide  எனும் பொருளாக உடையுமாம்.

அந்த ரசாயனத்தில் நடத்திய ஆய்வில், இது, வெறும் பெண் எலிக்கு மட்டும்தான் புற்றைத் தருகிறது. ஆண் எலிக்கும் சேர்த்து வரவில்லை. அதனால் தடைசெய்ய முடியாது என அமெரிக்கா அடம்பிடிக்கிறதாம். எனக்கு ஒரே சந்தேகம்... அந்த ரொட்டியில் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் எள்ளை ஒட்டி இருக்காங்களே... ஒருவேளை எதுவும் சிம்பாலிக்கா சொல்ல வர்றோங்களோ?

கோகோ சேர்த்த மில்க் சாக்லேட்டுகள் மீது குழந்தைகளுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டு. 'கோகோ பவுடர் உடலுக்கு நல்லதாமே, கேன்சரைக்கூட பிளாக் சாக்லேட் தடுக்குமாமே!’ என அவ்வபோது வரும் இணையவழிச் செய்திகளைப் படித்து சாக்லேட் வாங்கிக்கொடுக்கும் புத்திசாலி அப்பாக்கள் நிறைந்த நகரம் இது. உண்மையில் ஒரு சாக்லேட்டில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் கோகோ பவுடரோ அதன் குழம்போ இருக்கும். மீதி இருக்கும் 95 சதவிகிதம் இருப்பது... பால் புரதம், கெட்டக் கொழுப்பு, விதவிதமான சர்க்கரை, சாக்லேட்டை மென்மையாக்கும் பல்வேறு ரசாயனங்கள் ஆகியவைதான்.

சிங்கப்பூர் சித்தியும், அமெரிக்க அத்தையும் வாங்கித் தந்த மூட்டை மூட்டையான சாக்லேட்டுகளை அலமாரியில் வைத்தால் உருகி ஓடிவிடும் என பிளாஸ்டிக் மூட்டையோடு ஃபிரிட்ஜின் ஃபிரீஸரில் திணித்துவைத்திருக்கும் வீடுகள் இங்கே ஏராளம். அதை தினம் தினம் தின்றுதீர்க்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றல், குழந்தை மருத்துவமனையில் அடகுவைக்கப்படுகிறது என்பது மட்டும்தான் இப்போதைக்குத் தெரியும். கூடவே, இதில் வகை அறியாமல் உள்நுழையும் பல்வேறு சர்க்கரைகளும் இன்னபிற ரசாயனங்களும் வருங்கால உயிர் பிழைக்கு கர்சீஃப் போட்டுவைக்கும் என்பது இன்னும் நிறையப் பேருக்குத் தெரியாது.

இந்தத் தொடரைப் படிக்கும் வாசகர் ஒருவர் சமீபத்தில் என்னைச் சந்தித்தார். ஒரு லட்சம் பேர் பணியாற்றும் பெரும் நிறுவனம் ஒன்றின் ஊழியர் அவர்.

உயிர் பிழை - 8

'எங்கள் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேப்பர் கப் செலவாகிறது. வெளிப்பக்கம் பேப்பராக இருந்தாலும், உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் கோட்டிங்கைப் பார்க்கும்போது, உயிர் பிழையை உறிஞ்சிக் குடிக்கிறோமோ எனப் பயமாக இருக்கிறது. அதை மாற்ற முயன்றுவருகிறேன்’ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. மாறியே ஆகவேண்டிய தருணம் இது. 'மறுசுழற்சி செய்யக்கூடிய பேப்பர் கப்’ எனப் பெருமையாகப் பேசப்பட்டாலும், அதைத் தயாரிக்கும் பேப்பர், காபியை நமக்கு முன்னால் உறிஞ்சாமல் இருக்க, அதன் உட்சுவரில் ஒரு வஸ்துவைத் தடவுகின்றனர். Polystyrene  எனும் அந்தப் பொருள், சூட்டினாலும் நெடுநாள் வைத்திருப்பதாலும் உணவில் துளித் துளியாகக் கலக்கும் என்கின்றன ஆய்வுகள். நன்கு கழுவிய எவர்சில்வர் கப், கண்ணாடிக் குவளையில் இந்தத் தொல்லை இல்லவே இல்லை. சாப்பாட்டில் உள்ள நேரடிப் புற்றுக்காரணிகள் ஒரு பக்கம் என்றால், அதைப் பரிமாறும் பொருட்களில் உள்ளவை இன்னொரு பக்கம். இரண்டிலுமே கவனமாக இருக்கவேண்டிய காலம் இது.  

'இரண்டு சிட்டிகை டார்ட்ராஸைன், ஒரு சிட்டிகை அலூரா ரெட், கூடவே மறந்துராம எல்லாருக்கும் சளி பிடிக்காம இருக்கிறதுக்கு மூன்று சிட்டிகை அமாக்சிஸிலின், உசத்தியா வர மெத்தியோனைனின், போஷாக்குத் தர இரண்டு துளி ஹார்மோன் போட்டு, சட்டியை இறக்கும்போது மறக்காமல், கொஞ்சம் சோடியம் குளோரைடு, மோனோ சோடியம் குளூட்டமேட், சோடியம் பென்சோவேட், சோடியம்

நைட்ரேட்டும் போட்டு, உங்கள் வீட்டில் வற்றல் குழம்பு வைப்பீர்களா?’ இன்னும் கொஞ்ச நாட்களில் இப்படி நடந்தாலும் நடக்கலாம். கத்திரிக்காய், வெங்காயத்தைவிட இந்த ரசாயன வகையாறாக்கள் குழம்பில் கொதிக்கும் காலத்தை நோக்கி மெதுவாக நகர்கிறோம். அதே நேரம் இப்போதே இதில் நிறைய ரசாயனங்கள், சந்தையில் விற்கப்படும் தயார் நிலை உணவுகளில் செருகப்பட்டு இருக்கின்றன. பே(ய்)கமிஷன் பேச்செல்லாம் தெரியாத, காங்கிரீட் காடுகளில் சிக்கிய நகர்ப்புறப் பேச்சுலர்கள் பலருக்கு இதுமாதிரி கடையில் விற்கப்படும் தயார்நிலை உணவுகள்தாம் பசியாற்றும் அன்னபூரணி ஆயாக்கள். அதில் கொட்டிக்கிடக்கும் ரசாயனக்கூறுகள் மூளையும் மனசும் நாவும் அறியாமல் மரபணுவில் போய் சேட்டை செய்யும்.

ஆரோக்கியமாக விளையாடும் உங்கள் குழந்தைக்கு, இந்த மாதம் சளிப் பிடிக்காமல் இருக்க பருப்பு சாதத்தில் தினம் கொஞ்சம் ஆக்மமென்டின் ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரையை நுணுக்கிக் கலந்துகொடுப்பீர்களா? ஆனால், கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் ஆரோக்கியமான நாட்டுக்கோழிக்கு மட்டும் ஆன்ட்டிபயாடிக் கலந்த தீவனம் தர நாம் தயார். மாட்டுப்பாலை மடியில் மருந்தும் இயந்திரமும் போட்டு உறிஞ்ச Oxytocin bovine growth hormone போடும் தர்மம் இங்கே தாராளமாக உண்டு. ஏனென்றால், இந்தப் புவியை ஆளும் படித்த, இரக்கம் இல்லா முட்டாள் சர்வாதிகாரக் கூட்டம் நாம். லாப வெறி, வணிக வெறி, சுயநல வெறியில் நம் சக பயணிகளுக்கு எல்லாம் ரசாயனங்களைத் திணித்ததில் அவை உமிழும் எச்சங்கள், இப்போது நம்மை விழுங்கத் தொடங்கியுள்ளன. விழிப்பாக இருப்போம். விழிப்பாக இருப்பதற்குப் பெயர் பயம் அல்ல... பாதுகாப்பு!

- உயிர்ப்போம்...

சுதேசியே சுகம்!

ஸ்கூல் பையன் முதல் அலுவலகம் செல்வோர் வரை அனைவரும் தண்ணீர் எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டைத் தவிர்ப்போம். அதில் புற்றுக்காரணி ஒட்டிக்கொண்டிருக்கலாம். அழகழகான எவர்சில்வர் அல்லது அலுமினியத் தண்ணீர்ப் புட்டிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவோம்.

எந்தச் செயற்கை வண்ணத்தையும் உணவில் சேர்க்க வேண்டாம். மாதுளை, மஞ்சள், பீட்ரூட், கீரைகள் என ஒவ்வோர் உணவுப்பொருளையும் அழகான நிறங்களுடன் ஆரோக்கியம் தரவே இயற்கை படைத்திருக்கிறது.

'முந்தா நாள் சமைத்த கறி, அமுது எனினும் அருந்தோம்’ என்கிறது தமிழ் மருத்துவம். புதுப்புது ரசாயனங்களால் பதப்படுத்தப்படும் துரித உணவுகளைக் கூடியவரை தவிர்ப்போம்

உள்ளூர் உணவே உசத்தி. அமுதமே என்றாலும் அது அயர்லாந்துப் பக்கம் இருந்து வருவதாக இருந்தால், நிச்சயம் ரசாயனம் தெளித்து, பொய் வேஷம் போட்டுத்தான் வந்தாக வேண்டும். பக்கத்துக் காட்டுப் பப்பாளி, கொய்யா, நெல்லியைவிட தூரத்துக் கண்டத்தில் இருந்து வரும் எந்த பெர்ரியும் பெருசு அல்ல; பாதுகாப்பும் அல்ல. சுதேசியே சுகம்!

ஐந்து கேள்விகள்!

சாப்பிடும் எந்தப் பொருளையும் பார்த்து, இந்த ஐந்து கேள்விகளைக் கேளுங்கள். ஐந்துக்கும் 'ஆமாம்’ என பதில் வந்தால் மட்டுமே அதை உண்ணுங்கள்.

1. பசியாற்றுவதோடு, பலப்படுத்தி குணப்படுத்தும் உணவா இது?

2. என் மரபுக்குப் பழக்கமானதா... பாதுகாப்பானதா?

3.இதைச் சாப்பிடுவதால், என்னில் இருந்து பிறக்கும் எல்லா கழிவுகளையும் இந்த மண் சீரணிக்குமா?

4. இந்த உணவுக்கான என் எல்லா செலவும்,   என் நாட்டு மக்கள், என் தேசம், என் வேளாண் மக்களின் நலத்தைக் காக்குமா?

5. நான் அருந்தும் இந்த உணவு, என் அடுத்த தலைமுறைகளுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காததா?