Published:Updated:

இந்திய வானம் - 8

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

தலைமுறையின் தூரம்  

மாலை 4 மணி இருக்கும். பரபரப்பான வாகனப் போக்குவரத்துக்கு இடையில் மதுரை சிம்மக்கல் சிக்னலில் ஒரு காட்சியைக் கண்டேன். பைக்கில் வந்து இறங்கிய அந்த இளைஞனுக்கு 20 வயது இருக்கும். காலர் இல்லாத சிவப்பு நிற பனியன் அணிந்திருந்தான்.

போக்குவரத்துக் காவலர் வாகனங்களை நிறுத்திவைத்திருந்ததை மீறி அந்த பைக் உள்ளே நுழைந்தது. பைக்கில் இருந்து குதித்த இளைஞன், அத்தனை பேர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே போக்குவரத்துக் காவலரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு 'இப்போ சந்தோஷமா?’ எனக் கேட்டான்.

அந்தப் போக்குவரத்துக் காவலர்  குழப்பத்துடன் 'என்னடா குடிச்சிருக்கியா, இங்க வந்து ஏன் பிரச்னை பண்ணுற?’ எனக் கேட்டார். 'யாருப்பா பிரச்னை பண்றது? பெத்த பிள்ளையை நீதான் நம்ப மாட்டேங்கிற. அதான் பப்ளிக்ல வெச்சு உன் கால்ல விழுந்திருக்கேன். இப்பவாச்சும் என்னை நம்புறியா?’ என்றான்.

சிக்னலுக்காகக் காத்திருந்த வாகன ஓட்டிகள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்கள். காரில் இருந்த ஒருவரை நோக்கி வந்த அந்த இளைஞன் கேட்டான்,'வீட்டுக்குள்ளே விட மாட்டேங்கிறார் சார். நாலு நாள் ஆச்சு... ரோட்டுலயே சுத்திட்டிருக்கேன். நான் எங்க போறது? என்னை நம்ப மாட்டேங்கிறார் சார். நீங்களாச்சும் சொல்லுங்க!’

வாகனங்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன. அந்த இளைஞன் சாலையோரமாக நின்றபடி, 'அதான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டேன்ல... இதுக்கு மேல என்ன செய்யச் சொல்ற?’ எனச் சத்தமாகக் கத்தினான்.

இந்திய வானம் - 8

எனது ஆட்டோ அவர்களைக் கடந்து போனது. அந்தப் போக்குவரத்துக் காவலர் கர்சீஃப்பால் முகத்தைத் துடைத்தபடியே அவனிடம் கண்டிப்பான குரலில் எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்.  அப்பாவும் பையனும் பொது இடத்தில் சண்டையிடுவதை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படி ஒருவன் பொது இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்டதை இன்றுதான் பார்க்கிறேன். அந்தக் காவலர் சொன்னதுபோல ஒருவேளை குடித்திருப்பானோ... எதற்காக மன்னிப்பு கேட்கிறான், என்ன பிரச்னை, ஏன் அந்த இளைஞன் நான்கு நாட்களாக வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை... 20 வயதில் வீடு ஏன் பிடிக்காமல் போய்விடுகிறது?

யோசித்துப்பார்த்தால், இது தனிநபரின் பிரச்னையாக எனக்குத் தோன்றவில்லை.  எல்லா இளைஞர்களும், 20 வயதுகளில் வீட்டின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடவே விரும்புகிறார்கள்; தனக்கென ஓர் உலகை உருவாக்கி அதற்குள் வாழவே ஆசைப்படுகிறார்கள். நேற்றும் அப்படித்தான் இருந்தது; இன்றும் அப்படித்தான் இருக்கிறது; நாளையும் அப்படித்தான் இருக்கும். ஆனால், ஒவ்வொரு தலைமுறையும் தனது கோபத்தை வெளிப்படுத்துவதில் மாற்றம் உருவாகி இருக்கிறது.

சென்ற தலைமுறையில் வீட்டில் கோபம்கொண்டால், சாப்பிட மாட்டார்கள். நண்பர்கள் வீட்டில் போய் தங்கிக்கொள்வார்கள். அழுக்கான உடையை அணிந்து கையில் காசு இல்லாமல் சோக முகத்துடன் சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தத் தலைமுறை அப்படி இல்லை. கோபம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாருடனும் பேசுவது இல்லை.

10 கேள்விகளுக்கு ஒரு பதில் தந்தாலே பெரிய விஷயம். பொதுவாகவே வீட்டில் சாப்பிட விரும்புவது இல்லை; உறங்குவதும் குறைவு. இன்றைய இளைஞர்களுக்கு வீட்டின் மீது கோபம் வந்தால் செய்கிற முதல் வேலை, செல்போனை ஸ்விட்ச்-ஆஃப் செய்வதுதான். பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கு இருக்கும் தொடர்பு போன் ஒன்றுதானே!

அந்த இணைப்பைத் துண்டிப்பதுதான் அவர்களுக்குத் தரும் தண்டனை. அடுத்த விஷயம் அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே கிடப்பது. ஒரு கல்லூரி மாணவி தன் அப்பாவோடு சண்டை போட்டுக்கொண்டு

ஒரு நாள் முழுக்க, குளியல் அறையிலேயே இருந்திருக்கிறாள். அவரால் சமாதானப்படுத்த முடியவே இல்லை. முடிவில் உடன் படிக்கும் ஒரு பெண்ணை அழைத்துவந்து சமாதானப்படுத்தினாராம். யோசித்துப்பார்த்தால் பெற்றோர்களும் வயதுவந்த பிள்ளைகளும் ஒரே வீட்டில் வசித்தாலும், அவர்களுக்கு இடையிலான தூரம் மிக அதிகமாகி இருக்கிறது. மகன் அல்லது மகளின் மன உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் இன்றைய பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். அப்படி முயற்சிப்பதே,  பிள்ளைகளுக்குத் தவறான செயலாகத் தெரிகிறது. 'என் தனிமையை உன்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. என் மனதைப் புரிந்துகொள்ள, என் வயது நண்பர்களால் மட்டுமே முடியும்’ என உறுதியாக நம்புகிறார்கள். அப்படி நினைப்பது இயல்புதானே! 'பின் எப்படித்தான் பிள்ளைகளைப் புரிந்துகொள்வது?’ என ஒவ்வொரு பெற்றோரும் இதற்கான விடை தேடி அல்லாடுகிறார்கள்.

வீட்டுக்கு வீடு நடக்கும் விஷயம்தான் என்றாலும், ஒவ்வொரு முறை இப்படி ஒரு காட்சியைக் காணும்போதும் மனம் வலிக்கவே செய்கிறது. இந்த இடைவெளியைப் பேசித் தீர்த்துவிட முடியாது. காலம்தான் இதற்கான தீர்வு. சாலையில் போக்குவரத்துக் காவலர் காலில் விழுந்த இளைஞன் கேட்டான் இல்லையா, 'என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?’ என. அதுதான் இன்றைய இளைஞர்களின் குரல்.

அந்தக் குரல், 'எங்களை நம்புங்கள். உங்களுடையது வீண் பயம். எனக்கு என தனியான ஆசைகள், விருப்பங்கள், கனவுகள் இருக்கின்றன. அதை அடைய கடுமையாகப் போராடவும் செய்கிறோம். நீங்கள் படித்த காலத்தைப் போல் அல்லாமல், இன்றைய உலகம் மிகுந்த போட்டியும் பொறாமையும் கொண்டது. அதை வெல்லும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், நீங்கள் உருவாக்கிக்கொண்ட அளவுகோல்களை, கட்டுப்பாடுகளை வைத்து எங்களை அளக்க வேண்டாம். தோள் மீது கை போட்டுக்கொள்வதால் மட்டும் எங்கள் உணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. இந்த இடைவெளியை அனுமதியுங்கள்’ என்பதாகவே தோன்றுகிறது

இந்திய வானம் - 8

இதைப் பற்றி பேராசிரியர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்... 'போன வாரம் ஞாயிற்றுக்கிழமை வீட்ல என் பையனைக் கவனிச்சேன். முழுநாள் அவன் ஒரு வார்த்தைகூட யார்கிட்டயும் பேசவே இல்லை. எந்தக் குடும்ப நிகழ்வுக்கும் அவன் வருவது இல்லை. போனில் உள்ள பெரும்பான்மை நம்பர்கள் பெண்கள். காதில் கடுக்கன் போட்டிருக்கிறான்; கையில் பச்சை குத்தியிருக்கிறான்; தலை மயிரை நிறம் மாற்றிக்கொண்டுவிட்டான். போனில் பேசும் சத்தம் மற்றவருக்குக் கேட்காது. வெறும் தலையசைப்பு, முனகல், ஒன்று இரண்டு ஆங்கிலச் சொற்கள் அவ்வளவுதான். எதற்காக போனில் ஆங்கிலத்திலே பேசிக்கொள்கிறார்கள், ரகசியம் பேச தமிழ் ஏற்ற மொழி கிடையாதா? இப்படி அவனைப் பற்றி புகார் சொல்ல, என்னிடம் 100 விஷயங்கள் இருக்கின்றன. 17 வயது வரை அவனைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். இப்போது அவனைப் பற்றி கேள்விப்படும் ஒவ்வொன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. சிலவேளைகளில் பயமாகவும் இருக்கிறது’ என்றார்.

'நீங்கள் இப்படி நடந்துகொள்வதைத்தான் அவர்கள் விரும்புவது இல்லை. இதுவும் ஒருவிதமான கண்காணிப்புதான். நமது அக்கறைகள் தவறானவை அல்ல. அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் பிரச்னை’ என்றேன். அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிறைய நேரம் விவாதித்தார். பிரச்னை, அப்பா அம்மாவோடு பிள்ளைகளுக்கு ஏற்படும் விஷயம் அல்ல; நாம் தயங்கிய, அனுமதிக்காத, விரும்பாத, அறியாத ஓர் உலகம், நம் பிள்ளைகள் வழியாக நம் வீட்டுக்குள் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் புதிய வாழ்வியலை மேற்கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த வாழ்க்கை நமக்கு அந்நியமானது. பழக்கம், காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது.

'ரைடிங் அலோன் ஃபார் தௌசண்ட்ஸ் ஆஃப் மைல்ஸ்’ (Riding Alone for Thousands of Miles)  என்கிற ஒரு சீனப் படம் நினைவுக்கு வந்தது.  டோக்கியோவில் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகனைக் காண்பதற்காகச் செல்கிறார் வயதான கௌஷி தஹதா. அப்பா மீது உள்ள கோபத்தால் மரணப்படுக்கையிலும் அவரைச் சந்திக்க மறுக்கிறான் மகன். செய்வது அறியாத நிலையில் மருமகளிடம் தனது வேதனைகளைப் பகிர்ந்துகொள்கிறார். சில நாட்களில் மகன் இறந்துவிடுகிறான். மகனைப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவரை ஆட்டுவிக்கிறது. அப்போது மருமகள் ஒரு வீடியோ டேப்பை அவரிடம் தந்து, 'இதைக் காண்பதன் வழியே மகனைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்’ என்கிறாள். அதன் மூலம் மகன் நாட்டுப்புற இசை குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டுவந்ததையும், யுனான் பிரதேசத்தில் வசித்துவரும் நாட்டுப்புறப் பாடகன் ஒருவனைப் பற்றி டாக்குமென்ட்ரி எடுக்க விரும்பியதையும் தெரிந்துகொள்கிறார். இத்தனை நாட்களாகப் புரிந்துகொள்ளாமல்போன மகனுக்காக, தான் ஏதாவது செய்ய வேண்டும் என சீனாவுக்குப் புறப்படுகிறார். நாட்டுப்புறக் கலைஞனைத் தேடி ஒரு தந்தை மேற்கொள்ளும் பல்லாயிரம் மைல் பயணம்தான் படம்.

இந்திய வானம் - 8

தேடுதல் முடிவில் நாட்டுப்புறக் கலைஞன் சிறையில் இருப்பதை அறிந்துகொள்கிறார். அவனும் மகன் பிரிவால் வாடுகிறான். ஆகவே, தன்னால் பாட முடியாது என மறுக்கிறான். நாட்டுப்புறக் கலைஞனின் மகனைத் தேடிக் கண்டுபிடித்து சிறை வளாகத்துக்கு அழைத்து வருகிறார் கௌஷி தஹதா. அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். நாட்டுப்புறப் பாடகன் தன்னை மறந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடுகிறான். அதை கௌஷி வீடியோவில் பதிவுசெய்து தன் மகனின் கனவை நிறைவேற்றுகிறார். தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் அற்புதமான படம் அது. சொற்களால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்று வெகுவாகக் குறைந்துவிட்டது. அன்பை வெளிப்படுத்த பணமும் பரிசுப்பொருட்களும் மட்டுமே உதவுகின்றன. இல்லாதவர்களின் அன்பு ஏளனப்படுத்தப்படவே செய்கிறது.

ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் விழாவில் ஸ்டீவ் ஜாப்ஸ் பேசிய உரை இளைஞர்களை உத்வேகப்படுத்தக்கூடியது. உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், கல்லூரிப் படிப்பை முடிக்காதவர். அந்த உரையில் தனது வாழ்க்கை அனுபவத்தை உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

'என் அம்மா கல்லூரி மாணவியாக இருந்தபோது, திருமணம் செய்துகொள்ளாமலேயே என்னைப் பெற்றெடுத்தார். ஆகவே, யாராவது படித்த குடும்பத்திடம் என்னைத் தத்துக்கொடுக்க விரும்பினார். ஆனால், என்னைத் தத்தெடுக்க முன்வந்த தொழிலாளர் குடும்பத்தில், தந்தையும் தாயும் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். அவர்கள் நிச்சயம் என்னை 'கல்லூரியில் படிக்கவைக்கிறோம்’ என உறுதிமொழி தந்தார்கள். அந்த உத்தரவாதத்தில்தான் அம்மா என்னைத் தத்துக்கொடுக்கச் சம்மதித்தார்.

அவர்களும் 17 வயதில் என்னை கல்லூரிக்கு அனுப்பினார்கள். அதற்கான கட்டணத்துக்காக அவர்களின் மொத்த சேமிப்பும் காலியானது. வேலைக்குச் செல்லும் எளிய குடும்பத்தால் எப்படி படிப்புச் சுமையைத் தாங்க முடியும்? ஆகவே, நான் கல்லூரியில் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை எனப் பாதியில் படிப்பைவிட்டு விலகிவிட்டேன். காலி கோக் பாட்டில்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு உணவு உண்டேன்.  'ஹரே கிருஷ்ணா’ கோயிலில் இலவசச் சாப்பாடு போடுகிறார்கள் என்பதற்காக, ஒவ்வொரு ஞாயிறு இரவும் ஏழு மைல்கள் நடந்து போய் சாப்பிட்டு வருவேன். அப்படியான கஷ்டங்கள்தான் எனது உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையையும் வளர்த்தன. நான் படித்த கல்லூரி, சித்திர எழுத்துக் கலைக்குப் பெயர் பெற்றது. கல்லூரிச் சுவர்களில் உள்ள போஸ்டர்களில் விதவிதமான அழகிய கையெழுத்துக்கள் காணப்படும்.  ஆகவே, நானும் சித்திர எழுத்துக் கலையைப் பழக விரும்பி அதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

10 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் மெகின்டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்தபோது சித்திர எழுத்துக் கலை எனக்கு உதவியது. 'உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், லட்சியம் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்’ என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒவ்வொரு நாள் காலையிலும் கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு, 'இதுதான் என் வாழ்வின் கடைசி நாள் என்றால், எப்படி நடந்துகொள்வேன்?’ என என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

இந்திய வானம் - 8

வாழ்க்கை என்பது மிகக் குறுகியது. மற்றவர்களுக்காக போலியான வாழ்க்கையை வாழாதீர்கள். உங்கள் உள்ளுணர்வின் குரலுக்குச் செவிசாயுங்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எதையாவது நீங்கள் உறுதியாக நம்புங்கள். அது உங்கள் கர்மா, விதி, தைரியம் என எதுவாகவும் இருக்கலாம். நிச்சயம் அது உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். சில வேளை உங்கள் நம்பிக்கைகள் தகர்க்கப்படலாம். ஆனால், மனம் தளர்ந்துவிடாதீர்கள். தேடிக்கொண்டே இருங்கள். எவ்வளவு உச்சத்தைத் தொட முடியுமோ, அதை நோக்கி நகர்ந்துகொண்டே இருங்கள். உங்கள் நம்பிக்கையும் அயராத உழைப்பும் நேசித்து அதைச் செய்வதும் நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்’ என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

'குட்டி இளவரசன்’ நாவலில் 'பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வது இல்லை. எப்போதும் ஓயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது’ என குட்டி இளவரசன் சலித்துக்கொள்கிறான். அது குட்டி இளவரசனின் குரல் மட்டும் அல்ல... இன்றைய இளைஞர்கள் அனைவரின் குரலே!

- சிறகடிக்கலாம்...