Published:Updated:

நல்லமுத்து ஒருவர் உளரேல்...

ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

'சின்னச்சின்னக் கல்லடுக்கி, சிங்காரக்கோட்டை கட்டி... கோட்டை மேல ஏறிக்கிட்டு, கோமாளி வேஷம் போட்டுக்கிட்டு...'' - ஆசிரியர் நல்லமுத்து ஆடி, பாடி, நடித்துச் சுற்றி வர... 'கோமாளி வேஷம்னா என்னங்கய்யா?' எனக் கேட்கிறார் ஒரு மாணவி. சற்று யோசித்தவர், 'நாளைக்குச் சொல்றேன்’ என்கிறார். அடுத்த நாள் பள்ளிக்குள் நுழையும்போதே, கோமாளி வேஷத்துடன் நுழைகிறார்.   

அரசுப் பள்ளிகள் குறித்த அவநம்பிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்படும் நிலையில், நம்பிக்கை அளிக்கும் அரசுப் பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன. தனிப்பட்ட ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பு அதைச் சாத்தியமாக்குகிறது. கோத்தகிரியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அவ்வூர் என்கிற மலைக்கிராமத்தில் இருக்கும் அப்படிப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளி. மாநிலத்தின் முன்மாதிரிப் பள்ளிகளில் ஒன்று இது. கேரம்போர்டு விளையாட்டில் மாவட்ட அளவில் இவர்கள்தான் நம்பர் 1. இந்தப் பள்ளிக் குழந்தைகளின் அசத்தலான பேச்சு ஒளிபரப்பாகாத தொலைக்காட்சி சேனலே இல்லை. அரசுப் பள்ளியின் முக்கியத்துவம், மதுவிலக்கின் அவசியம் குறித்து இந்த மாணவர்கள் பேசும் வீடியோக்கள், வாட்ஸ்அப்பில் வைரல் வலம்வருகின்றன. பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து டி.சி வாங்கி, இந்தப் பள்ளியில் சேர்க்கின்றனர். அனைத்துக்கும் காரணம், ஆசிரியர் நல்லமுத்து. அடிப்படையில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழரான நல்லமுத்து, சில ஆண்டுகால ஆசிரியர் பணியிலேயே மகத்தான பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

நல்லமுத்து ஒருவர் உளரேல்...

“1984-ம் வருஷம் மேல்குந்தா மலைக்கிராமத்துக்கு வந்தேன். அங்க இருந்த அரசுப் பள்ளியில்தான் படிச்சேன்; ஆசிரியர் பயிற்சியும் முடிச்சேன். 21 வயசுல வேலை கிடைச்சது. என் முதல் வேலை நியமனம், புதுக்கோட்டை மாவட்டம் முத்தானப்பட்டி தொடக்கப் பள்ளியில். அப்புறம் வான்டான் விடுதி தொடக்கப் பள்ளியில் வேலை. அந்தப் பள்ளிதான் எனக்கு நிறையச் சொல்லிக்கொடுத்தது. 'மாணவர்கள் உயராமல் ஆசிரியர்கள் உயர முடியாது'ங்கிற உண்மை எனக்கு அங்கேதான் புரிஞ்சது.

2005-ம் வருஷம் அவ்வூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு என்னை மாத்தினாங்க. அப்ப இங்கே மாணவர் எண்ணிக்கை ரொம்பக் குறைவு. பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கச் சொல்லி பிரசாரம் செய்யப் போனால், 'பிரைவேட் ஸ்கூல் பசங்க யூனிஃபார்ம், ஐ.டி கார்டு, டை எல்லாம் போட்டுக்கிட்டுச் சுத்தமா போறாங்க’னு பல பெற்றோர்கள் சொன்னாங்க. அதுல இருந்த நியாயம் புரிஞ்சது. உடனே எங்க பள்ளியில் அதை அமல்படுத்தினோம். ஆசிரியர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ஐ.டி கார்டு, டை, ஷூ எல்லாம் வாங்கிக் கொடுத்தோம். மாணவர்களின் கையெழுத்தைச் சரிசெய்ய நானே பயிற்சி எடுத்துக்கிட்டேன். இப்போ இந்தப் பள்ளியில் படிக்கிற ஒவ்வொரு பசங்க கையெழுத்தும் அவ்வளவு அழகா இருக்கும்'' என்றவர் மாணவர்களின் நோட்டை எடுத்துக் காட்டினார். குண்டு குண்டுக் கையெழுத்தில் குட்டிக்குட்டி ஓவியங்களாக மின்னுகின்றன.

நல்லமுத்து ஒருவர் உளரேல்...

“எங்க ஸ்கூல்ல ரெண்டாவது, மூணாவது படிக்கிற பசங்ககூட கேரம் போட்டிகளில் மாநில அளவில் இடம்பிடிக்கிறாங்க. நீலகிரி மாவட்டத்துல பல பிரபல தனியார் பள்ளி மாணவர்களை, எங்க பசங்க ஜெயிச்சிருக்காங்க. பேச்சுப்போட்டிகளில் சுமார் 300 விருதுகளாவது வாங்கியிருப்போம். பரிசைவிட முக்கியம், பேசுற பேச்சு அவங்க மனசுல பதியணும். அதுல கவனமா இருப்பேன். ஏன்னா, படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஒழுக்கமும் முக்கியம்.

விகடனில் வந்த ஏராளமான நல்ல நல்ல சமூகநல வாசகங்களை எங்க வகுப்புல ஒட்டிவெச்சிருக்கோம். 'இரண்டாவதாக வருபவனை உலகம் ஒருபோதும் நினைவில் வைத்துக்கொள்வது இல்லை', 'தோல்வி அடைந்துவிடுவேனோ என அச்சப்படுபவன் எளிதில் வெற்றிபெற மாட்டான்' - இப்படி நூற்றுக்கணக்கான வாசகங்கள். இதை எல்லாம் படிக்கும்போது மாணவர்களின் மனம் எப்பவும் நேர்மறையில் சிந்திக்கப் பழகுது. எங்க ஸ்கூல்ல ஒண்ணாம் வகுப்பு மாணவனுக்கு மூக்கு ஒழுகினா, அஞ்சாம் வகுப்பு மாணவன் துடைச்சுவிடுவான். கடையில ஒரு பொருள் வாங்கினா, நன்றி சொல்வான். முடியாத முதியவர்கள்கிட்ட அனுசரணையா நடந்துக்குவான். இதுக்கெல்லாம் காரணம் இந்த வாசகங்கள்தான்.

தினமும் நாம பள்ளிக்கு வர்றோம்; பாடம் நடத்துறோம். ஆனால், மாணவர்கள் முகத்தில் சிரிப்பே இல்லையேனு உறுத்தலா இருந்துச்சு. அதனால அப்பப்போ முகத்துல வண்ணத்தைப் பூசி, விக் வெச்சுக்கிட்டு நடிச்சுக்கிட்டே பாடம் நடத்துவேன். மாணவர்கள் மனசுவிட்டு சிரிப்பாங்க; பாடமும் சுலபமா மனசுல பதியும். தனியார் பள்ளிகளில் இருந்து இங்கே வந்து படிக்கிற பசங்க, 'நாங்க எங்க ஸ்கூல்ல சிரிச்சதே இல்லை'னு சொல்வாங்க. எங்க பள்ளியின் வகுப்பறை மகிழ்ச்சி நிறைஞ்சதா இருக்கணும். அதுக்காகத்தான் இந்த வேஷம். சில வருஷங்களுக்கு முன்னாடி இங்கே 30 மாணவர்கள் படிச்சாங்க. இப்போ 80 பேர் படிக்கிறாங்க. அடுத்த வருஷம் எப்படியும் 100 பேரைச் சேர்த்துடுவோம். இங்கே வேலைசெய்யுற எல்லா ஆசிரியர்களின் கூட்டு உழைப்புதான் இதற்குக் காரணம்'' என்கிறார்!

அரசுப் பள்ளிகளை எப்படி முன்னேற்றுவது என்பதற்கு, ஆசிரியர் நல்லமுத்து மலை மீது ஒளிரும் வெளிச்சமாகச் சுடர்விடுகிறார்.