மாந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சென்னையில் மட்டும் அல்ல... ஒவ்வொருவர் உடம்புக்குள்ளும் இருக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவது இல்லை. 24x7 நம்மை பூச்சிக்கடியில் இருந்து பூச்சிக்கொல்லிக் கடி வரை காத்திட அத்தனை துறை வல்லுநர்களும் நம் உடம்புக்குள்ளேயே ஆங்காங்கே குத்தவைத்துக் காத்திருக்கின்றனர். அப்படி உடம்புக்குள் காத்திருக்கும் மருத்துவர்களை எல்லாம் உசுப்பிவிட்டு அலெர்ட்டாக வைத்திருக்கத்தான், 'நாள் ஒழுக்கம், கால ஒழுக்கம்’ எனப் பல விஷயங்களைப் பாரம்பர்ய அறிவியலும், 'நட, ஓடு, நீச்சலடி; அதைத் தின்னாதே... இதைச் சாப்பிடு’ என இன்றைய விஞ்ஞானமும் நிறையப் பிரசங்கம் நடத்துகின்றன. 

'வைகறை யாமம் துயில் எழுந்து’ வாழ்வைத் தொடங்கச் சொல்கிறது நம் பாரம்பர்யம். ஆனால், 'எட்டு மணிக்கு முன்னாடி எந்திரிச்சு  என்ன பண்ணப்போறேன்?’ எனப் போர்வைக்குள் பதுங்கிக்கொண்டு, காலைக்கடன்களை கிரெடிட் கார்டு பாக்கிபோல அவ்வப்போது கழித்துக்கொண்டு, சட்டை - பேன்ட் அணியும் முன்னே கழுத்துக்கும் காதுக்கும் இடையே அலைபேசியைச் செருகி, கோணக் கழுத்தான்களாக ஓடத் தொடங்குகிறோம்.

அதிகாலை 5 மணிக்கு எழ வேண்டும் என்றால், இரவு 9:30-10:00 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டும். ஆனால், நம்மில் பலர் நள்ளிரவு வரை காத்திருந்து, மூன்றாவது கணவனின் இரண்டாவது காதலியின் விசும்பலுக்கு மூக்கை உறிஞ்சிக்கொண்டோ, 87-வது தடவையாக ஒளிபரப்பப்படும் 'அவதார்’ படத்தை பார்த்துக்கொண்டோ இருக்கிறோம் அல்லது 'படியளக்கும் அமெரிக்க பகவான் எழுந்து வேலை செய்யும்போது, பணியாற்றும் நான் எப்படித் தூங்க முடியும்?’ என நடுச்சாமத்தில் அயல்நாட்டவனுக்கு சினிமா டிக்கெட் அல்லது சிலிக்கன் சிக்கலைத் தீர்க்க, கணினியில் தட்டிக்கொண்டோ இருக்கிறோம். ஆழ்ந்த இரவு உறக்கம் மட்டுமே நம் உடலின் மிக முக்கியமான 'மெலடோனின்’ மருத்துவரை சமர்த்தாகச் சுரக்கச்செய்யும். கசியும் பல பிழைகளை அடித்துக் கழுவி நம்மைக் காக்கும். இது புரியாமல், புரிந்தாலும் அது முடியாமல், 'அதுதான் காலையில 7 மணியில இருந்து மத்தியானம் 3 மணி வரை தூங்குறேனே... பத்தாதா?’ எனக் கேட்கும் படித்த கூட்டத்துக்குத் தெரியாது... மெலடோனின் இரவு உறக்கத்தில் மட்டுமே நன்கு சீராகச் சுரக்கும் என!

உயிர் பிழை - 9

ஆம்... மெலடோனின் சுரப்பு பகலில் நடக்காது. சூரிய வெளிச்சம் வந்தவுடன் மெலடோனினைச் சுரக்கும் மூளையின் பினியல் கோளம் அந்தச் சுரப்பை நிறுத்திவிடும். மெலடோனின் சுரப்பு சீராக இருக்கவேண்டும் என்றால், கும்மிருட்டில், காற்றோட்டமான அறையில், சத்தம் இல்லாமல், யுத்தம் பார்க்காமல், ஆறேழு மணி நேர உறக்கம் அவசியம் என்கிறது நவீன அறிவியல். அப்படியான உறக்கத்துக்குப் பின் துயில் எழும் நபருக்கு அறிவுக்கூர்மை, உடல் ஆரோக்கியம் ஆகியவை நலமும் பலமும் பெறும் என்கிறார்கள். இதையே சித்த மருத்துவம் சொன்ன தமிழ்ச் சித்தர்கள், 'புத்தி அதற்குப் பொருந்தும்; தெளிவளிக்கும். சுத்த நரம்பினில் தூய்மையுறும். பித்தமொழியும்... காலை விழிப்பின் குணம்காண்’ எனப் பாடிச் சென்றுள்ளனர்.

சாப்பிட்ட பின்னர் மதியத் தூக்கம் அவசியம் எனப் பாரம்பர்யம் ஒருபோதும் சொன்னது இல்லை. 'பகலுறக்கஞ் செய்யோம்’ என நம் தமிழ்ச் சித்தன் தேரன் நோயணூகா விதியாகச் சொல்லியுள்ளார். 20 நிமிட குட்டித் தூக்கம் (NAP)  நல்லதுதான் எனச் சொல்லிவந்த மேற்கத்தியம்கூட சமீபத்தில் அதில் இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளது. 'கறுப்பு ரிப்பன்’ குறியீட்டுடன் பகல் தூக்கம் வேண்டாம் என கூட்டம் கூட்டமாக அங்கே இப்போது பேசத் தொடங்கியுள்ளனர். பகல் தூக்கத்துக்கு வேறு ஒரு நோய்ப் பின்னணிகூட உண்டு. 'காலையில் நன்றாக இருக்கிறது. 11:30 மணிக்கு அப்படியே அசத்துகிறது. கொட்டாவி கும்மியடிப்பதும், இரு சக்கர வாகனத்தில்கூட தூங்கிக்கொண்டே போவதுமாக இருந்தால், ஒருவேளை உங்களுக்கு ‘Sleep apnea’ எனும் பிரச்னை இருக்கக்கூடும். பெரும்பாலும் சத்தமான குறட்டையுடன் தூங்கும் தொப்பைக்காரருக்கு இந்தச் சங்கடங்கள் அதிகம் இருக்கும்.  

நல்ல உறக்கம் எப்படி இருக்கும்? முதல் 10 நிமிடங்கள் உங்கள் கனவு நாயகன்/நாயகியுடன் நடனமோ, 'அட... நான் அத்தனை பேப்பரிலும் சென்டமா?!’ போன்ற ஆசை, எதிர்பார்ப்புகள் கனவாகத் தோன்றும். அதன் பிறகே மூளை நம் நாராசத்தை எல்லாம் புரிந்துகொண்டு, தன் அல்ப எண்ண அலைகளை பார்க்கிங் செய்துவிட்டு ஆழ் உறக்கத்துக்குத் தயாராகும். அந்தச் சமயம்தான் 30 முதல்

40 நிமிடங்களுக்கு நம் கட்டுப்பாட்டில் இல்லாத கனவுகள் வரும். நம்மைத் துவைத்துக் காயப்போடுவது, அலறி அடித்து எழவைப்பது, டைனோசரோடு வாக்கிங் செல்வது என சம்பந்தம் இல்லாத நினைவோட்டங்கள் அப்போதுதான் வரும். அதன் பின்னர் ஆறேழு மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும். அப்படி இல்லாமல் சேப்டர் சேப்டராக காலை வரை கனவு தொடர்வதும், அதில் நீங்களும் உரையாடுவதுபோல் காலையில் உணர்வதும் ஏற்பட்டால் ஆரோக்கியமான உறக்கம் இல்லை என அர்த்தம். இதைவிட இன்னோர் அறிகுறியை எளிமையாக உணரலாம். நீங்கள் நன்றாகத் தூங்கி, காலை எழுந்தவுடன் அருகில் படுத்திருப்பவர் பரிதாபமாகப் போர்வை போத்தி அமர்ந்திருந்து, 'டேய்... இது உனக்கே நியாயமாடா? மெட்ரோ ட்ரெயின் மாதிரி ராத்திரி முழுக்க சத்தம் விட்டுட்டு இருந்தே. திடீர்னு நடுவுல அமைதியாகிடுற. அப்புறம் திரும்ப வண்டி ஓட்ட ஆரம்பிச்சுடுறே’ எனப் புலம்பினால், பல வியாதிகள் உங்களுக்குள் கர்ச்சீஃப் போடத் தொடங்கியுள்ளன எனப் பொருள் அல்லது உடம்புக்குள்ளேயே இருக்கும் உங்கள் உறைவிட மருத்துவர்கள் கட்டாய ஓய்வு வாங்கிவிட்டார்கள் என அர்த்தம். உடனடியாக குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. 'ஸ்லீப் அப்னீயா’ என மருத்துவ உலகம் சொல்லும் தூக்கப் பிரச்னை, ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு மட்டும் அல்லாமல், உயிர் பிழைகள் உருவாகவும் களம் அமைக்கும். தூக்கம் தொலைப்பது துக்கம் வாங்குவதற்கு முந்தைய அத்தியாயம் மக்களே!

ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆரோக்கிய உணவும் சீரான உடற்பயிற்சியும் சரியான மூச்சுப் பயிற்சியும் அவசியம்... அத்தியாவசியம். முடிந்த வரை கையேந்திச் சாப்பிடும் பஃபே விருந்துகளைத் தவிருங்கள்.  'கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்; சிறந்து மிக உண்ணார்; கட்டில் மேல் உண்ணார்...’ என சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது.  இவை அத்தனையையும் இன்று நாம் பஃபே பிச்சைப் பரிமாறலில் நடத்துகிறோம். '45 நிமிட வேக நடை, முடித்தபின் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஒரு குவளை நெல்லிச் சாறு அருந்தி, அதன் பின் மூச்சுப் பயிற்சியும் செய்வோருக்கு, நல்ல தூக்கம், வைகறை விழிப்பு எல்லாம் சகஜமாக வரும்’ என்கிறது பாரம்பர்ய அனுபவமும் நவீன அறிவியலும்!

உயிர் பிழை - 9

'காலை எழுந்ததும் கண்டிப்பாக ஏன் குளிக்கணும்? ஏ.சி அலுவலகத்தில் இருந்து, ஏ.சி அறையிலேயே படுத்ததால் அதிகம் வியர்ப்பது இல்லை’ என அறிவார்ந்த சமூகமாக பலர் வினவத் தொடங்கியுள்ளனர். குளிப்பது என்பது உடலின் அழுக்கைப் போக்க, அவசரமாக நடத்தும் வாட்டர் சர்வீஸ் கிடையாது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆனால், நம் மூத்தோருக்குத் தெரிந்திருக்கிறது.

'காலைக் குளியல் கடும்பசி நோயும் போம்; மாலைக் குளிக்க இவை மத்தியமே’ என பதார்த்த குண சிந்தாமணி பாடுகிறது. இன்றைக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் உள்ளிட்ட எல்லா தொற்றா வாழ்வியல் நோய்க்கும் அன்றாடம் போடும் காப்பு, காலையும் மாலையும் குளிப்பதுதான். நம் ஊருக்கு வந்த மார்க்கோபோலாவின் குறிப்பில், 'இந்தியாவில் இரண்டு வேளை குளிக்கிறார்கள். அதனாலேயே ஆரோக்கியமாக இருக்கிறார்கள்’ என்று உள்ளதாம். அந்தி-சந்தியில் இப்படி நாம் போடும் நோய்த்தடுப்பில் பித்தம் சீர்படும். 'உடம்பில் எந்த அளவில் பித்தம் சீராக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உடல் நோய்க் காப்புடன் இருக்கிறது’ எனக் கொள்ளலாம். 'பித்தமடங்கிப் போகில் பேசாதே போய் விடு’ என நாடி பார்க்கும் வைத்தியனிடம் சித்தர் அறிவுறுத்தும் வரிகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு. இளவெதுவெதுப்பான நீரில் குளிப்பது உத்தமம். அதீதக் குளிரில் வெடவெடவெனக் குளிப்பது, 'சுடுநீரில் குளித்தால் மேல் வலி எல்லாம் போகும்’ என ஆவி பறக்கக் குளிப்பது எல்லாம் தவறு. அதேபோல ஓடும் ஆற்றுத் தண்ணீர், பொங்கிவிழும் அருவித் தண்ணீரில் குளிப்பது சாலச் சிறந்தது என்கிறது தமிழ் அறிவியல். தோலையும் அதைத் தாண்டி, உள்ளுறுப்புகளையும் உறிஞ்சிக் குலைக்கும் சோப்புத் தண்ணீரில் ஐந்து அறிவு மிருகங்கள்போல ஊறிக் குளிக்கும் பாத்டப் பழக்கம் நம் மரபிலேயே கிடையாது.

குளியலின்போது அக்கிலஸுக்கு கணுக்காலில் நீர் படாததால், அவர் உயிர் நீக்கப்பட்டது எனும் கிரேக்க வரலாறு அறிந்திருப்போம். 'முடி உதிர்ந்திடும் சார். அதனால நான் கழுத்துக்குக் கீழே குளிக்கிறேன்’ எனச் சில அழகர்கள் நாகரிகமாக அறிவியல் பேசுவது உண்டு. அவர்களுக்குத் தெரியாது, 'தலைக்குத் தண்ணீர் காட்டவில்லை என்றால், உயிர்கூட உதிரும் வாய்ப்பு உண்டு’ என. ஜுரமும், தீவிர நோய் நிலையிலும் தவிர, ஏனைய நாட்களில் தினமும் தலைக்குக் குளியுங்கள். குளிக்கும்போது நாம் பல பொருட்களை அழகுக்கும் மணத்துக்கும் அதனூடாக ஆரோக்கியத்துக்கும் செய்கிறோம். மஞ்சக் குளிச்சு, அள்ளி முடிச்சு ஓடிவந்த கூட்டம் நாம். அதோடு தலைக்கு பஞ்சகற்பம் எனும் ஷாம்புவையும் அப்போது நாம் தொடர்ந்து தேய்த்திருக்கிறோம். அதன் அத்தனை பொருளும் உயிர் பிழையை ஓட்டும் என்பது அற்புதமான செய்தி. (பஞ்சகற்பம் இன்னும் பன்னாட்டு நிறுவனங்களின்  தயாரிப்புப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனால், பெட்டிச் செய்தியைப் படித்தால், நீங்களே வீட்டில் செய்யலாம்!)

உயிர் பிழை - 9

வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல்  இப்போது பெரும்பாலும் தமிழ்ப் பட கிராமத்து வில்லனுக்கான காட்சியாக மட்டுமே மாறிவிட்டது. எண்ணெய்க் குளியலில் உடலின் பல்வேறு நல்ல சங்கதிகள் சுரப்பதை ஆய்ந்து அறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள், அதை அங்கே கெடுபிடியாகக் கடைப்பிடிக்க, இங்கே நாம் அப்பத்தா எத்தனை முறை சொன்னாலும், எண்ணெயை பூரிக்கு மட்டும் குளிப்பாட்டித் தின்று திரிகிறோம். 'எள்ளினெய்யும் முக்கூட்டுனெய்யும் மானென்னெய்யும் விள்ளுதயிலாதியென வீறு நெய்யும்’ என நாலு வகை எண்ணெய்களை எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தச் சொல்லியது சித்த மருத்துவம். நல்லெண்ணெய், முக்கூட்டு எண்ணெய் (பார்க்க பெட்டிச் செய்தி), பசு நெய், மருத்துவக் குணம் உள்ள தலை மூழ்குத் தைலங்களில் ஏதேனும் ஒன்று என்பனவாம் அவை. எண்ணெய்க் குளியல் மீட்டெடுக்கவேண்டிய மரபுசார் நோய்க்காப்பு.

'வருமுன் காப்போம்’ என்பது பழைய செய்தி. 'காப்பு மட்டும்தான் உயிர் பிழைக்க ஒரே வழி’ என்பதுதான் புதிய செய்தி. அப்படி நம்மைக் காத்துவந்த மரபுப் பழக்கங்கள் ஏராளம். துயில் எழுதல், குளியல் எனத் தொடங்கி, நம் சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மரபுப் பழக்கங்களில் பல உயிர் பிழையின் முதல் தொடக்கப் புள்ளியான நீடித்த நோய் அழற்சிக்கு (Chronic inflammation) முற்றுப்புள்ளி வைப்பவை. தாய் தரும் உரை மருந்தைத் அவளின் தாய்ப்பாலுடன் உரசித் தின்று, தாய்மாமன் தந்த சேய்நெய் சுவைத்து, வசம்பு வளவியையும், மரப்பாச்சி போர்மாந்தக் கட்டையையும் வளரும் பல்லூறலுக்குக் கடித்து, விளையாடிய கூட்டத்துக்கு உயிர் பிழைகள் குறைவாகத்தான் இருந்திருக்கின்றன தோழர்களே! அப்படி விசாலமாக விழி தூக்கி, தீர்க்கமாக உற்றுப்பார்க்கவேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன. பார்ப்போம்!

- உயிர்ப்போம்...

முக்கூட்டு எண்ணெய்

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் இந்த மூன்றையும் சமபங்கு எடுத்து, கலந்துவைத்துக் கொள்வதுதான் முக்கூட்டு எண்ணெய். வாரம் ஒரு முறை இதை தலைக்குத் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து, சீயக்காய்த் தூள் தேய்த்துக் குளிப்பது, உடல் ஆரோக்கியத்துக்காக மரபு சொல்லும் ரகசியம்.

நாம் குளிப்பதற்குப் பயன்படுத்தும் மூலிகை ஷாம்புகளில், 100 சதவிகிதம் மூலிகை கிடையாது. அதிலும் ரசாயனம் இருக்கும். அதே நிலைதான் ஹெர்பல் டை சமாசாரமும். நிறம் மட்டும்தான் ஹெர்பலில் இருந்து பெறப்படுகிறது. அதை முடியில் நிலைக்கவைக்கப் பயன்படுத்தப்படுவது வழக்கமான ரசாயனமே. கண்டிஷனர் என்பது எண்ணெயோடு, அவசியமே இல்லாமல் பல ரசாயனங்கள் சேர்த்துச் செய்யப்படும் கலவைப்பொருள். எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கண்டிஷனர் அவசியமே இல்லை. முகத்துக்கு ஒரு சோப், முதுகுக்கு ஒரு சோப் என இப்போது இளசுகள் ரசாயனக் குளியல் நடத்துவது அதிகரித்துவருகிறது. முழுக்க முழுக்க நிறுவனங்களுக்கு இடையிலான வணிகப் போட்டியில் பெரும் வேதிக் கலவையையே நம் மீது தெளிக்கிறார்கள். இவற்றைத் தவிர்த்து, முகத்துக்கு நலங்கு மாவு, உடம்புக்கு பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளிப்போருக்கு, அழகோடு சேர்த்து ஆரோக்கியம் இலவச இணைப்பாகக் கிடைக்கும்!

பஞ்ச கற்பம் தயாரிக்கும் முறை

வேப்பம் வித்து, கஸ்தூரி மஞ்சள், நெல்லிக்காய் வற்றல், மிளகு, கடுக்காய்த் தோடு... இவற்றை சம அளவு எடுத்து, உலர்த்தி, பொடித்துவைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும்போது கை சூடு பொறுக்கும் அளவுள்ள பாலில் ஒரு டீஸ்பூன் பொடியைக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இது தலை சார்ந்த சைனசைட்டிஸ் முதலான நோய்களுக்கும் அற்புதமான மருந்து. இதில் உள்ள அத்தனை பொருட்களுமே புற்றுநோய்க்கு பல வகையிலும் எதிரானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன!