Published:Updated:

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

விகடன் டீம்

'அறம் செய விரும்பு’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுக்க பல்வேறு பணிகள் தொடங்கிவிட்டன. தன்னார்வலர்கள் பலர் நேரடியாகச் சென்று, கள ஆய்வுகள் செய்து, தங்கள் மூலமாக நடைபெறும் உதவிகள் தகுதியானவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றனர். 

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

திருச்சியைச் சேர்ந்த தமிழழகன் சுறுசுறுப்பான, உற்சாகமான இளைஞர். மாற்றுத்திறனாளியான இவர், மிகச் சிறந்த நீச்சல் வீரர். தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார். வறுமையில் வாடும் இவர், நீச்சல் பயிற்சிக்குத் தேவையான சில உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் வாங்கித் தந்தால் உதவியாக இருக்கும் என விரும்பினார். தன்னார்வலர் காயத்ரியின் நிதியில் இருந்து அவர் கேட்ட பொருட்கள் வாங்கித் தரப்பட்டன.

தன்னார்வலர் நாகராஜன், மதுரை தியாகராசா கல்லூரியில் ஒலி நூலகம் ஒன்றை அமைத்துத் தர விரும்பினார். கல்லூரி நிர்வாகம் இதற்குச் சம்மதம் தெரிவித்து, நூலகத்திலேயே ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கித்தந்தது. இரண்டு கம்ப்யூட்டர்கள் மற்றும் உரிய துணைக் கருவிகள் அங்கு நிறுவப்பட்டுள்ளன. அதில் தரவிறக்கப்படும் ஒலிவடிவப் புத்தகங்களை விழித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

தன்னார்வலர் ஆசிரியர் ஆனந்த்தின் முயற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு உதவிகள் நடைபெற்றுவருகின்றன. முன்னவால்கோட்டை என்ற ஊரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில், 450 மாணவர்கள் படிக்கின்றனர்;

30 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஊரின் நிலத்தடி நீர் சரியில்லாததால், பல மாணவர்களுக்கு கிட்னியில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் இந்தப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று பொருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதன்படியே அமைத்துத் தரப்பட்டது. காளாச்சேரி மேற்கு கிராமத்தில் உள்ள 172 மாணவர்கள் பயிலும் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தித் தரப்பட்டது.

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் 120 மாணவர்கள் படிக்கின்றனர். பேருந்து வசதி இல்லாத உள்ளடங்கிய கிராமம் இது. அந்தப் பள்ளியின் தண்ணீர்த் தொட்டி உடைந்து ஒழுகிக்கொண்டு இருந்தது. இதனால் மாணவர்கள் சுகாதாரம் இல்லாத குடிநீரை அருந்தவேண்டிய நிலை. இதைக் கருத்தில்கொண்டு இந்தப் பள்ளிக்கு புதிய தண்ணீர்த் தொட்டி கட்டித் தரப்பட்டது. தொட்டி கட்டப்படுவதை மாணவர்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் வேடிக்கை  பார்த்தனர். இப்போது புத்தம் புதிய தண்ணீர்த் தொட்டியின் குடிநீரை எந்த அச்சமும் இல்லாமல் அருந்துகின்றனர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு எட்டு பயிற்சிகள் நடக்கும். இந்தப் பயிற்சிக்காக நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள் சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தனர். நானும் சென்றிருந்தேன். அவர்களிடம் 'அறம் செய விரும்பு’ திட்டம் குறித்துப் பேசியதும் உற்சாகமானார்கள். எங்களுக்குப் பயிற்சிக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் தருவார்கள். அதை ஒன்றுசேர்த்து ஏதாவது உதவலாம் என எல்லோரும் முடிவு செய்தோம். இதன்படி 80 ஆசிரியர்கள் 8,000 ரூபாய் தந்தனர். சில ஆசிரியர்கள் கூடுதலாகத் தந்ததில் 10,000 ரூபாய் சேர்ந்தது. இந்தப் பணத்தை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி, மருத்துவ உதவிகளுக்குப் பயன்படுத்தலாம் என நினைக்கிறோம். இந்த ஒரு முறை மட்டும் அல்ல... இனிமேல் இப்படி பயிற்சிக்காகத் தரப்படும் பணத்தை ஒன்றுசேர்த்து, தொடர்ந்து இப்படிப்பட்ட உதவிகளைச் செய்யப்போகிறோம். இந்த எண்ணத்தை எங்களுக்குள் விதைத்தது 'அறம் செய விரும்பு’ திட்டம்தான். விகடனுக்கும் ராகவா லாரன்ஸுக்கும் நன்றி!'' என நெகிழ்ச்சியாகச் சொன்னார் ஆனந்த்.

கணவர் இல்லாத நிலையில் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, ஹோட்டலில் பாத்திரம் கழுவி, குடும்பத்தைக் காப்பாற்றும் பார்வதி என்கிற பெண் பற்றி விவரம் சொன்னார் தன்னார்வலர் கவின் ஆண்டனி. சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தப் பெண்ணின் வீடு மிகவும் மோசமாக ஒழுகும் நிலையில் இருந்தது. 'கூரையை மட்டும் மாற்றித் தந்தால்கூடப் போதும்’ என்பதுதான் அவரது கோரிக்கை. அதை நிறைவேற்றித்தந்தோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் நான்கு அரசுப் பள்ளி மாணவியர் விடுதிகளில் இன்வெர்ட்டர் வசதி செய்து தரப்பட்டது.

அறம் தொடரும்..!

'அறம் செய விரும்பு’ திட்டத்துக்கு என ஏழாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம்...

கோபிநாத்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

'நீயா? நானா?’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்; 'நீயும் நானும்’, 'பாஸ்வேர்டு’ உள்பட ஆறு புத்தகங்களின் ஆசிரியர்; 'சிறந்த தொகுப்பாளருக்கான’ விகடன் விருதுகள், சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தின் 'யூத் ஐகான்’ விருது வென்றவர். ''வேலைக்குச் சென்றுகொண்டே படிக்கும் ஏழை மாணவர்கள்தான் என் உதவிக்கான இலக்கு. வாழ்க்கையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறி, அவர்களுக்குள் அதிகம் இருக்கும். அப்படியான மாணவர்கள் பலர் சின்ன வழிகாட்டலுக்கும் தூண்டலுக்கும் காத்திருப்பார்கள். அவர்களின் எதிர்காலத்துக்கு என்னாலான சின்ன முயற்சியைச் செய்வேன்'' என்கிறார் கோபிநாத்!

அனிதா பால்துரை

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

இந்தியக் கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன்; சர்வதேசக் கூடைப்பந்து போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றவர். உலகின் சிறந்த 10 வீரர்களில் ஒருவராகத் தேர்வுபெற்றவர். ''நான் செல்லும் இடங்களில் திறமையான விளையாட்டு வீராங்கனைகளைப் பார்க்கிறேன். வறுமையான குடும்பச் சூழலால் சரியான விளையாட்டு உபகரணங்கள்கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான டி-ஷர்ட், காலணி, விளையாட்டு உபகரணங்களை வாங்கித் தர விருப்பம்'' என்கிறார் அனிதா!   

செல்வா

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

இந்திய மாணவர் சங்க முன்னாள் நிர்வாகி. தமிழ்நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் முகம். சமச்சீர் கல்விக்கான போராட்டம், கல்வி வியாபாரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் எனத் தீவிரமாகக் களத்தில் இயங்கிவருபவர். ''மாநிலம் முழுக்க ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளே செய்துகொடுக்கப்படுவது இல்லை. குறிப்பாக, அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பற்றாக்குறை வசதிகளோடு இருக்கின்றன. அவற்றைச் சீர்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்வேன்'' என்கிறார் செல்வா!  

 விஜயலட்சுமி

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

கண்ணமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர்; கற்றல் முறைகளில் நவீன உத்தியைப் பயன்படுத்துபவர்; அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில் நவீன கற்றல் முறை குறித்து வகுப்பு எடுப்பவர். சுட்டி விகடனில் இது தொடர்பாக தொடர்ந்து எழுதிவருகிறார். ''அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கணிப்பொறிக்கூடங்கள் உள்ளன. 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி வசதி கொடுக்கப்படுவது இல்லை. முடிந்தவரை சில இடங்களில் அந்த வசதிகளை அமைக்க விருப்பம்!'' என்கிறார் விஜயலட்சுமி!

அதியமான்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

இந்து அறநிலையத் துறையின் தணிக்கை ஆய்வாளர். சேலத்தில் இவர் நடத்திவரும் 'அதியமான் நிர்வாகப் பயிற்சி மையம்’ மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு, அரசுப் பணித் தேர்வுக்கான பயிற்சிகளை இலவசமாக அளித்துவருகிறார். இதுவரை 15 மாற்றுத்திறனாளிகள் இவரிடம் பயிற்சிபெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். ''படிக்கும் ஆற்றல் குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு பாக்கு மட்டை தயாரிப்பு உள்ளிட்ட சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க விரும்புகிறேன். அது பொருளாதாரரீதியாக அவர்களை மேம்படுத்தி, தற்சார்பும் தன்னம்பிக்கையும் அளிக்கும்'' என்கிறார் அதியமான்!

தமிழ்மறை

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

சுற்றுச்சூழல் ஆர்வலர்; மேற்குத் தொடர்ச்சி மலை வனவிலங்குப் பாதுகாப்புக்கு முனைப்புடன் செயல்படுபவர்; 'அறிவுச்சோலை’ என்ற அமைப்பின் மூலம் கல்வி உதவி செய்துவருகிறார். ''கோவையின் புறநகர் பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் சரியான கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு, சுகாதார வசதிகள் சென்றுசேர வேண்டும்; சுகாதாரம் தொடர்பான உபகரணங்கள் அமைத்து விழிப்புஉணர்வை உருவாக்க வேண்டும்'' என்கிறார் தமிழ்மறை!

மருத்துவர் ஏ.ஆர்.சாந்தி

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

சென்னை, இ.எஸ்.ஐ மருத்துமவனையின் மகப்பேறு மருத்துவர்; நோயாளிகள் மேம்பாட்டுக்காக அக்கறையோடு செயல்படுபவர்; மருத்துவர் நலன் தொடர்பான போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கெடுப்பவர். ''உலகில் ஏழு நிமிடத்துக்கு ஒரு பெண், கர்ப்பப்பை புற்றுநோயால் இறக்கிறார். அது குறித்த விழிப்புஉணர்வை உண்டாக்கும் வகையில், பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு சோதனையை நடத்த வேண்டும். இதற்காக, ஒரு பெண்ணுக்கு 100 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். அது பெரும் மாற்றத்தை உண்டாக்கும்'' என்கிறார் ஏ.ஆர்.சாந்தி!

திலீப்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்; கிராமப்புறப் பள்ளிகளில் கணினி மென்பொருள் மேம்பாட்டுக்கான மைக்ரோசாஃப்ட் விருது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஐ.சி.டி விருதுகளை வென்றவர். ''அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அறைகளை உருவாக்க வேண்டும். டிஜிட்டல் போர்டு உள்ளிட்ட வசதிகளோடு ஸ்மார்ட் வகுப்பு அறையை உருவாக்கினால், கல்வியின் தரத்தை அபாரமாக உயர்த்தலாம். இதற்கென ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அடிப்படைப் பயிற்சி முதல் உபகரணங்கள் வரை வழங்க ஆசை'' என்கிறார் திலீப்!  

வசந்த்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்; நண்பர்கள் சிலரின் உதவியோடு வகுப்பறையில் தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை உண்டாக்கியவர். ''கிராமப்புறங்களில் வறுமை காரணமாக படிக்காமல் இருக்கும் குழந்தைகள் ஏராளமானோர். அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ விருப்பம். குழந்தைகளின் மனநிலை, புரிதலுக்கு ஏற்ப கற்பித்தலிலும் அடுத்த தலைமுறை சிந்தனைகளை விதைக்க வேண்டும். அதற்கென நவீன கல்வி உபகரணங்களைக் கையாள வேண்டும்'' என்கிறார் வசந்த்!

கவாஸ்கர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

'தீக்கதிர்’ பத்திரிகையின் மூத்த நிருபர்; மனித உரிமை ஆர்வலர்; விளிம்புநிலை மக்களுக்கான போராட்டங் களில் களத்தில் நிற்பவர். ''சென்னையில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஒரு குழுவாக வசிக்கின்றனர். இந்தக் குடும்பங்களில் படிக்க வசதி இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்'' என்கிறார் கவாஸ்கர்!

'அறம் செய விரும்பு’ திட்டம் பற்றி அறிய...

இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும்.

திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu  என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புபவர்கள் / உதவி வேண்டுபவர்கள் aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்!

படங்கள்: தி.விஜய், ஜெ.வேங்கடராஜ், பா.காளிமுத்து, எஸ்.தேவராஜன், கா.முரளி, தி.ஹரிஹரன், மீ.நிவேதன், வி.சதீஷ்குமார், என்.விஜயரகுநாதன்

அடுத்த கட்டுரைக்கு