Published:Updated:

மரணம்... மர்மம்... மெளனம்!

மரணம்... மர்மம்... மெளனம்!

மரணம்... மர்மம்... மெளனம்!

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியாவின் தற்கொலை வழக்கு, எதிர்பாராத திசைகளில் எல்லாம் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. விஷ்ணுப்ரியா மரணத்தின் மர்மம் இன்னும் விலகாத நிலையில், அவருக்காக ஆதரவுக் கரம் நீட்டிய இன்னோர் அதிகாரிக்கும் சிக்கல் முளைக்க... மறுபுறம், குற்றம்சாட்டப்படும் நபர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். உண்மையில் விஷ்ணுப்ரியா தற்கொலை விவகாரத்தில் என்னதான் நடக்கிறது? 

விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கின் முடிச்சு, கோகுல்ராஜ் கொலையில் இருந்து தொடங்குகிறது. பள்ளிப்பாளையம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் வழக்கின் விசாரணை அதிகாரியான விஷ்ணுப்ரியா, குற்றவாளிகளைப் பிடிப்பதில் காட்டிய தீவிரமும் வேகமும்தான், அவரது உயிரிழப்புக்குக் காரணம் என பல தரப்பிலும் சொல்லப்படுகிறது. கோகுல்ராஜ், விஷ்ணுப்ரியா இருவரது மரண வழக்கிலும் விசாரிக்கப்படவேண்டியவர் யுவராஜ். ஆனால் அந்த யுவராஜோ, தலைமறைவாக இருந்தபடி தமிழ்நாடு காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்து, வரிசையாக வாட்ஸ்அப் குரல் பதிவுகளை அனுப்புகிறார். இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியே கொடுத்திருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் யுவராஜைத் 'தேடிக்கொண்டே இருக்கிறது’ தமிழ்நாடு காவல் துறை.

தேடப்படும் ஒரு நபர், நவீன தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ஆனால், அந்தத் தொலைத்தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி அந்த நபரைப் பிடிப்பதற்கு காவல் துறையால் முடியவில்லை என்றால், இது வெட்கக்கேடு. வெள்ளிக்கிழமைதோறும் புதுப்படம் ரிலீஸ் ஆவதைப்போல அவர் ஆடியோ, வீடியோ வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்; காவல் துறை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. எனில், ஒன்று நமது காவல் துறையின் திறமை இவ்வளவுதான் அல்லது அவர்கள் தெரிந்தே யுவராஜின் செயல்பாடுகளை அனுமதிக்கிறார்கள். வேறு எப்படியும் இதை யூகிக்க இடம் இல்லை.

விஷ்ணுப்ரியா மரணத்தின் பின்னுள்ள சந்தேகங்களை, கண்ணீர் மல்க ஊடகங்களிடம் பேசிய கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரிக்கும் இப்போது நெருக்கடி. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இப்போது தன் செல்போன் தொலைந்துவிட்டதாக புகார் கொடுத்திருக்கிறார். திடீரென மகேஸ்வரியின் செல்போன் தொலைந்துபோகவேண்டிய அவசியமும் நோக்கமும் நாம் யூகிக்கக்கூடியதுதான். ஆதாரங்களைப் பாதுகாக்கவும் அழிக்கவும் அவர்களுக்குத் தெரியாதா என்ன? ஆனால், இந்த நாடகங்கள் அனைத்தும் நம் ஒவ்வொருவரின் சாட்சியாக நம் கண் முன்னே நடந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் முக்கியம். எந்த ஒளிவுமறைவும் இல்லை. ஒரு கொலை, ஒரு தற்கொலை, அதன் பின்னால் பல்வேறு சதிவேலைகள், சாதியக் காரணங்கள், அதிகார அழுத்தங்கள் இவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும்.

இவற்றுக்கு எந்தப் பதிலும் அரசுத் தரப்பில் இருந்து சொல்லப்படுவது இல்லை.

உயிர்க் கொலைகளுக்கும் பதில் இல்லை; சமூக அவலங்களுக்கும் பதில் இல்லை. பதில் சொல்லவேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதையே அரசுப் பொறுப்பில் உள்ளோர் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. நாட்டில் என்ன நடந்தாலும் மர்மமான மௌனம் காக்கிறார்கள். 'அமைதி, வளர்ச்சி, வளம்’ எனச் சொன்னார்களே... அந்த அமைதிதான் இந்த அமைதியா என்றும் தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம்... மக்களின் வலியை,

மன உணர்வைப் புறக்கணிக்கும் யாரையும் மக்களும் புறக்கணிப்பார்கள் என்பதே கடந்த காலம் உணர்த்தும் பாடம்!