Published:Updated:

இந்திய வானம் - 9

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

இதயத்தின் ஜன்னல் 

காரைக்குடியில் உள்ள 'ஆயிரம் ஜன்னல் வீடு’ மிகவும் புகழ் பெற்றது. சுமார் 20 ஆயிரம் சதுரஅடியில் அமைந்துள்ள இந்த வீடு, 1941-ம் ஆண்டு கட்டப்பட்டது. 'உண்மையாகவே ஆயிரம் ஜன்னல்கள் இருக்கின்றனவா?’ எனக் கேட்டேன். 'இல்லை... நிறைய ஜன்னல்கள் இருப்பதைக் குறிக்க 'ஆயிரம் ஜன்னல் வீடு’ என அழைக்கிறார்கள்’ என்றார்கள்.

உண்மையில் ஆயிரம் ஜன்னல் வீடு என்பது மகத்தான கனவு. ஆயிரம் ஜன்னல்கள் இருக்க வேண்டும் என்றால், அந்த வீடு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். அத்தனை ஜன்னல்களையும் திறந்துவிட்டால், உள்ளே எவ்வளவு வெளிச்சமும் காற்றும் வந்து சேரும். யோசிக்க யோசிக்க மனம் சந்தோஷம்கொள்கிறது.

'உங்கள் வீட்டில் எத்தனை ஜன்னல்கள் இருக்கின்றன?’ என யாரைக் கேட்டாலும் சரியான பதிலைச் சொல்ல முடிவது இல்லை. யோசித்துப் பார்த்தோ, எண்ணிப்பார்த்தோ சொல்கிறார்கள்.

கதவுகளும் ஜன்னல்களும் பெரிதாகப் பெரிதாக, நாம் சந்தோஷம்கொள்கிறோம். கோயிலுக்குச் செல்கிற ஒவ்வொருவரும் அதன் பிரமாண்டமான கதவுகளை வியப்புடன் தொட்டுத் தடவிப்பார்த்தே போகிறார்கள். அது ஓர் ஆசை; பகிர்ந்துகொள்ளாமல் மனதுக்குள் கொள்ளும் ஏக்கம்.

இந்திய வானம் - 9

புது வீடு கட்டும்போதுகூட நிலைக்கதவு வைப்பதற்கு அழகான, பெரிய கதவாக வேண்டும் எனத் தேடித் தேடி வாங்குகிறார்கள்; அல்லது விருப்பமான முறையில் செய்யச் சொல்கிறார்கள். கதவும் ஜன்னலும் வீட்டின் அடையாளங்கள் மட்டும் அல்ல; பண்பாட்டின் சின்னங்கள்.

பழங்குடி மக்களின் வீடுகளைப் பாருங்கள்... பெரும்பாலும் கதவுகளே இருக்காது. ஒருவேளை கதவு இருந்தாலும் அது ஒரு மறைப்பு என்ற அளவில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும். அலங்கார வேலைப்பாடுகள் எதுவும் இருக்காது. ஐரோப்பிய நாடுகளில் வீட்டுக் கதவுகள் விதவிதமான கலை வேலைப்பாடுகளுடன் இருப்பதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக, கதவின் கைப்பிடி அழகான சிற்ப வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டிருக்கும்.

கடவுளுக்கு மட்டுமே பிரமாண்டமான கதவுகள். ஆனால், ஜன்னல்கள் மனிதர்களுக் கானவை. ஒவ்வொரு முறை ராஜஸ்தான் போகும்போதும் அங்கு உள்ள வீடுகளையும் அரண்மனைகளையும் கண்டு வியந்துபோகிறேன். குறிப்பாக, ஜன்னல்கள் விதவிதமாக அமைக்கப்பட்டுள்ளன. வீட்டுக்கு 100 கண்கள் முளைத்து, வெளி உலகைப் பார்த்துக்கொண்டி ருப்பதுபோலவே அந்த ஜன்னல்கள் காணப்படுகின்றன. ஆனால், பெருநகர வீடுகளில் ஒன்றிரண்டு ஜன்னல்களைத் தவிர மற்றவை திறக்கப்படுவதே இல்லை. சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஜன்னலைத் திறந்தாலும் உள்ளே வெளிச்சம் வருவதே இல்லை.

ஈரானின் புகழ்பெற்ற இயக்குநர் மெக்மல்பஃப், 'தி டோர்’ என்ற குறும்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல முக்கிய விருதுகள் பெற்ற படம் அது. அந்தப் படத்தில் ஒரு மரக் கதவு தனியே நடந்துபோகிறது. உண்மையில் அப்படித் தோன்றும்படி காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கதவை ஒரு வயதான மனிதர் தூக்கிக்கொண்டு மணல்வெளியில் நடந்துகொண்டிருக்கிறார். அவரிடம் மிச்சம் இருப்பது வீட்டின் கதவு மட்டுமே. அவரோடு முக்காடுபோட்ட அவரது மகளும் ஓர் ஆட்டுக்குட்டியும் உடன் பயணிக்கிறார்கள். வயதானவர் கதவைத் தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் நடந்துபோகிறார்.

அப்போது அந்த வீட்டுக்கு ஒரு தபால் வந்திருப்பதாக தபால்காரன் பின்தொடர்ந்து வருகிறான். முதியவர் தனது வீட்டின் கதவை தரையில் நிறுத்திவைக்கிறார். தபால்காரன் வீட்டின் கதவைத் தட்டி கடிதத்தைத் தருகிறான்.

இந்திய வானம் - 9

அது, அவரது மகளுக்கு வந்த காதல் கடிதம். வயதானவர் ஆத்திரத்துடன் அதைக் கிழித்துப்போடுகிறார். பிறகு, மகளையும் ஆட்டுக்குட்டியையும் கூட்டிக்கொண்டு நடக்கிறார். இருவரும் பலி கொடுக்கப்படும் உயிர்களைப்போல பின்தொடர்கிறார்கள்.

வீட்டோடு பொருந்தி இருந்த கதவு, பிரமாண்டமான கலைப்பொருள்போல இடம்விட்டு இடம் நகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. பழைமையின் அடையாளம்போலவும் மீதம் இருக்கும் வாழ்வின் குறியீடுபோலவும் அந்தக் கதவு தோற்றம் அளிக்கிறது. முதியவர் கதவை விற்க முயற்சிக்கிறார். ஆனால், அது சாத்தியம் ஆகவில்லை. முடிவில் கதவை விற்க முடியாமல் தன்னோடு தூக்கிக்கொண்டு, கடலை நோக்கி நடப்பதுடன் படம் நிறைவுபெறும்.

ஈரானியப் படத்தில் வரும் முதியவர் மட்டும் அல்ல... நாம் ஒவ்வொருவரும் வீட்டைச் சுமந்துகொண்டேதான் திரிகிறோம்.

திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அருகில் உட்கார்ந்து இருந்த ஒருவர், தனது செல்போனை எடுத்து அடிக்கடி பார்த்துக்கொள்வதும், பதற்றம் அடைந்து நகத்தைக் கடிப்பதுமாக இருந்தார். அருகில் இருந்த மற்றவர் 'என்ன சார்... ஏதாவது ப்ராப்ளமா?’ எனக் கேட்டார்.

'பெங்களூர்ல இருக்கிற என் வீட்டைப் பூட்டிட்டு கல்யாணத்துக்காக சென்னை வந்துட்டேன். ரெண்டு நாளா யாரோ ஒருத்தன் என் வீட்டையே சுத்திச் சுத்தி வந்துக்கிட்டு இருக்கான். அதான் என்ன பண்றதுனு தெரியலை. இந்தா பாருங்க...’ என தனது செல்போனைக் காட்டினார்.

அதில் அவரது வீட்டின் சுவர் ஓரமாக ஓர் ஆள் நிற்பது, நிழல்போன்ற காட்சியாகத் தெரிந்தது.

'வீட்ல செக்யூரிட்டி கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன். என்ன நடக்குதுனு செல்போன் வழியா பார்த்துக்கிடலாம். ரெண்டு நாளா இந்த ஆள் வீட்டையே சுத்திச் சுத்தி வந்துக்கிட்டு இருக்கான். திருடனா... இல்லை பைத்தியமா... யாரு என்னன்னு தெரியலை. யாரையாவது கூப்பிட்டு விசாரிக்கச் சொல்லலாம்னு பார்த்தா, பக்கத்துல இருக்கிற வீடுகளோடு பழக்கம் இல்லை. புது வீடு கட்டி ஆறு வருஷங்களாச்சு. பக்கத்துல எல்லாம் பெரிய பங்களாவா இருக்கு. யாரும் உதவிக்கு வர மாட்டாங்க.

இந்திய வானம் - 9

ஆபீஸ் ஃப்ரெண்டுகிட்ட சொன்னேன். அவன் போய்ப் பார்த்த நேரம் ஆள் நடமாட்டம் இல்லை. வீட்டைத் தனியா விட்டுட்டு வந்துட்டு நிம்மதியா இருக்க முடியலை; பயமா இருக்கு.’

'பூட்டிட்டு வந்த வீட்ல எப்படி நுழைய முடியும்?’ எனக் கேட்டார் மற்றவர்.

'கண்ணாடி ஜன்னலை உடைச்சு உள்ளே போயிட்டா, என்ன செய்றது? லேப்டாப், ஐ-பேட், மியூசிக் சிஸ்டம்னு நிறையப் பொருட்கள் இருக்கு.’

'யாரையாவது வீட்லவெச்சுட்டு வந்துருக்கலாம்ல..?’ எனக் கேட்டார் இன்னோர் ஆள்.

'உதவிக்கு யாரு கூட வந்து இருக் காங்க? அதோட யாரையும் நம்பி வீட்டை விட்டுட்டுப் போகவும் முடியலை...’ எனச் சலித்துக்கொண்டார்.

'பெரியவங்க யாராவது துணைக்கு இருந்தா, இந்தப் பிரச்னை வராது. அவங்களே பார்த்துக்கிடுவாங்க. அந்த அருமை இந்தத் தலைமுறைக்குத் தெரியலை’ என அலுத்துக்கொண்டார் ஒரு பெரியவர்.

'அதெல்லாம் பெரிய பிரச்னை சார். என் வொய்ஃப் ஒப்புக்கிட மாட்டா...’ எனப் புலம்பியபடியே, செல்போன் கேமராவை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் பெங்களூருக்காரர்.

பிறகு திடீரென பதற்றம் அதிகமாகிச் சொன்னார், 'சார்... அந்த ஆளைக் காணோம். ஒருவேளை பின்பக்க வழியா உள்ளே போயிருப்பானோ, இப்போ என்ன செய்றது?’

'எதுக்கும் நீங்க உடனே போலீஸ்ல சொல்லிடுங்க...’ என உஷார்படுத்தினார் மற்றவர்.

'ச்சே... தேவை இல்லாத டென்ஷன். எங்க வீடு இருக்கிற ஏரியாவுல நிறையத் திருட்டு பயம். இப்போ என்ன செய்றது?’னு தெரியலை எனப் புலம்பியபடியே, மனைவியைத் தேடி எழுந்து போனார். ஊருக்குப் போகிற வரை, அவருக்கு இந்தப் பதற்றம் நிச்சயம் குறையவே குறையாது.

வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்குப் போவது காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. முந்தைய காலங்களில் வெளியூர் போகும்போது அண்டை அயலாரிடம் வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போவார்கள். மளிகைக் கடை, பால்காரர் என பலரிடமும் சொல்லிவைப்பார்கள். இத்தனையும் மீறி ஒன்றிரண்டு திருட்டுக்கள் நடந்துவிடுவதும் உண்டு. ஆனால், அவை விதிவிலக்குகள். மற்றபடி நம் மீது அக்கறைகொண்ட யாரோ ஒருவர், நமக்காக நம் வீட்டைப் பாதுகாத்து வந்ததே இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது.

இந்திய வானம் - 9

ஆனால், இன்று வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்புகிற நாளில், 'யாரைப் பார்த்துக்கொள்ளச் சொல்வது?’ என்பது மிகப் பெரிய கேள்வி. இதற்கு மாற்றாக, செக்யூரிட்டி கேமரா வாங்கிப் பொருத்திவிடுகிறார்கள்; அல்லது செக்யூரிட்டி ஆளை நியமித்துவிடுகிறார்கள்.

இது பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னை மட்டும் அல்ல; மனித உறவுகள் அற்றுப்போய்விட்டதன் அடையாளம். நாமும் யாருடனும் பழகுவது இல்லை; யாரும் நம்மோடு பழகுவதும் இல்லை. நமது வீடுகள் தனித்தனி கல்லறைகள்போல் ஆகிவிட்டன. வாசற்படிகூட இல்லாமல் வீடுகள் சுருங்கிப்போனதுடன் மனித மனமும் சுருங்கிப்போய்விட்டது.

அண்டை அயலாரோடு நட்புடன் பழக விரும்புகிறவர்கள் சொல்கிற குற்றச்சாட்டு, 'அவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். எதற்காகவோ நாம் திட்டமிட்டுப் பழகுவதாக நினைக்கிறார்கள். பல நேரங்களில் நாம் ஆசையாகக் கொண்டுபோய்க் கொடுக்கும் இனிப்புகளை, உணவுப்பொருட்களை நாய்க்குப் போட்டுவிடுகிறார்கள். இப்படி அவமானப்படுவதைவிட அவர்களுடன் உறவாடாமல் இருப்பதே நல்லது என ஒதுங்கிவிடுகிறோம்’ என்கிறார்கள். இதுவும் நிதர்சனமான உண்மை.

கோடை விடுமுறையில் 10 நாட்கள் கேரளா போக விரும்பிய ஒருவர், தனது வளர்ப்பு நாயை யாரிடம் விட்டுச்செல்வது எனப் புரியாமல் தடுமாறிப்போனார். அந்த நாய்க்குத் தவறாமல் உணவு வைக்கவேண்டும். அதைத் தினமும் நடைப்பயிற்சிக்கு அழைத்துக்கொண்டு போக வேண்டும். யார் அதை எல்லாம் செய்வார்கள்? அவரது அண்ணன் - தம்பி, உறவினர் என பலரையும் கேட்டுவிட்டார். நாயைப் பராமரிக்க பணம் தருவதாகக்கூடச் சொல்லிப்பார்த்தார். ஒருவரும் அவருக்கு உதவத் தயாராக இல்லை. முடிவில் வளர்ப்பு நாய்களைப் பராமரிக்கும் காப்பகம் பற்றி கேள்விப்பட்டு, பணம் கொடுத்து அதில் தனது நாயை விட்டுவிட்டு பயணத்தை மேற்கொண்டார்.

நாய்கள், பூனைகளுக்குக்கூட இப்படி காப்பகங்கள் வந்துவிட்டன. ஆனால், உடன்வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை, நடமாட முடியாமல் படுக்கையில் கிடக்கும் வயதான வர்களை எங்கே போய் ஒப்படைப்பது, யார் கவனித்துக்கொள்வார்கள்? யாராவது அப்படி ஓர் உதவியை நம்மிடம் கேட்டால், செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோமோ?

மகாராஷ்டிரா மாநிலம், நெவாஸா தாலுகாவில் உள்ள சனி ஷிங்னாபூர் கிராமத்தில் இருக்கும் எந்த வீட்டுக்கும் கதவுகள் இல்லை. வங்கிக்குக்கூட கதவுகள் கிடையாது. 'சனி பகவான் தங்களைக் காப்பாற்றுவார்’ என ஊர் மக்கள் நம்புகிறார்கள். அத்துடன் ஊரே ஒற்றுமையாக வாழ்கிறது. ஆகவே, அந்தக் கிராமத்தில் இதுவரை திருட்டு நடந்ததே இல்லை என்கிறார்கள்.

ஒரு பக்கம் கதவுகளே இல்லாமல் வாழும் கிராமம். இன்னொரு பக்கம் செக்யூரிட்டி கேமரா வாங்கிப் பொருத்திவிட்டும் மனநிம்மதி இல்லாமல் அலையும் நகர வாழ்க்கை. இரண்டும் ஒரே இந்திய வானத்தின் கீழ்தான்.

உறவுகளை மேம்படுத்திக்கொள்வதுதான் இதற்கான ஒரே தீர்வு. அது ஒரே நாளில் சாத்தியமாகக்கூடியது அல்ல. அதே நேரம் சாத்தியமே ஆகாத விஷயமும் இல்லை.

நோபல் பரிசுபெற்ற அன்னை தெரசா, தனது உரை ஒன்றில் அன்பின் வலிமையைப் பற்றி குறிப்பிடுகிறார்...

'பலரும் 'நான் கடவுளை உண்மையாக நேசிக்கிறேன்; அன்பு செலுத்துகிறேன். ஆனால் எனது அண்டை அயலாரை நேசிக்க முடியவில்லை. அவர்களுடன் நட்பாகப் பழக முடியவில்லை’ எனச் சொல்கிறார்கள்.

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத கடவுளை நேசிக்க முடிகிற நம்மால், கண்ணுக்குத் தெரிகிற மனிதர்களை ஏன் நேசிக்கவும் அன்பு செலுத்தவும் முடியவில்லை? வெறுப்பு, குரோதம், பொறாமை, சுயநலம்... இவைதான் அடுத்தவர் மீது அன்பு செலுத்தத் தடைகளாக உள்ளன. நாம் வறுமையில்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் அன்பு இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது.

ஒருமுறை கல்கத்தாவில் சர்க்கரைப் பஞ்சம் வந்தது. கடைகளில் சர்க்கரை கிடைக்கவில்லை. எங்கள் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்குத் தேவையான சர்க்கரை கிடைக்கவில்லை.  இதைப் பற்றி கேள்விப்பட்ட நான்கு வயதுச் சிறுவன் ஒருவன், தன் அம்மாவிடம் 'எனது காபியில் போடும் சர்க்கரையை மூன்று நாட்களுக்குச் சேர்த்துவைத்து அன்னை தெரசாவிடம் ஒப்படைக்கப்போகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறான். அந்தக் குடும்பமே மூன்று நாட்கள் இனிப்பு சேர்க்கவில்லை. அந்தச் சர்க்கரையை என்னிடம் ஒப்படைக்க வந்த நாளில் அந்தச் சிறுவனும் வந்திருந்தான்.

எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. இந்தச் சின்னஞ்சிறு வயதில் அந்தச் சிறுவனின் மனதில் தூய அன்பு பீறிடத் தொடங்கி இருக்கிறது. அவன் தந்தது வெறும் சர்க்கரை  அல்ல; அது ஒரு நம்பிக்கை; அடுத்தவர் மீதான அக்கறை. அன்பு செலுத்துவது பலன் கருதிச் செய்கிற காரியம் அல்ல. அது உயர்ந்த பண்பு.

முதியோர் காப்பகங்களுக்குப் போகும்போதும் அங்கு உள்ளவர்கள் வாசலை நோக்கி உட்கார்ந்திருப்பதையும் அடிக்கடி வாசலை நோக்கி எழுந்து போய் வருவதையும் பார்த்திருக்கிறேன். அவர்களில் எவர் முகத்திலும் துளிப் புன்னகைகூட இருக்காது. 'எதற்காக வாசலைப் பார்த்தபடியே இருக்கிறார்கள்?’ எனக் கேட்டபோது காப்பகப் பொறுப்பாளர் சொன்னார்...

'தனது வீட்டில் இருந்து மகனோ, மகளோ தன்னைத் தேடி வருவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி யாரும் வரவில்லை என அறிந்தவுடன் வருத்தப்படுகிறார்கள். அது, தன்னைத் தேடி யாரும் வரவில்லை என்ற வருத்தம் இல்லை. பெற்ற பிள்ளைகளே தன்னை மறந்துவிட்டார்கள் என்ற வருத்தம். அந்த வேதனை தீர்க்கப்படவே முடியாதது.

இதுபோன்ற கைவிடப்பட்ட முதியவர்களுக்கு நாம் உணவு அளிக்கலாம்; உடையும் பாதுகாப்பும் தரலாம். ஆனால், பிள்ளைகள் வழியாகக் கிடைக்கும் அன்பை எப்படி நாம் தர முடியும்?

அன்பு செலுத்துவதன் காரணமாக ஒருவேளை நீங்கள் பரிகசிக்கப்படலாம்; விமர்சிக்கப்படலாம்; 'முட்டாள்’ எனப் பட்டம் சூட்டப்படலாம்; அவமானத்தையும் புறக்கணிப்பையும்கூடப் பெறக்கூடும். ஆனாலும் தொடர்ந்து அன்பு செலுத்துங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையின் அர்த்தம்.’

அன்னை தெரசா சொன்ன வார்த்தைகள் நம் அனைவருக்குமான வழிகாட்டும் வெளிச்சம் ஆகும். நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச் சூழலில் இருந்து மீட்சி அடைவதற்கு, நாம் திறக்கவேண்டியது வீட்டின் ஜன்னல்களை மட்டும் அல்ல... இதயத்தின் ஜன்னலையும்தான்!

- சிறகடிக்கலாம்...