மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 லின்சே அடாரியோ

நம்பர் 1 லின்சே அடாரியோ

'நான் ஒரு பெண்; நான் ஒரு பத்திரிகையாளர். புகைப்படங்கள் எடுப்பது என் பணி. அதுவும் ராணுவ வாகனங்கள் சீறும், தோட்டாக்கள் பாயும், குண்டுகள் வெடித்துச் சிதறும் போர்க்களங்களில்தான் என் வேலை. எதிரிகள் மீது பாயவேண்டிய குண்டு எந்த நேரமும் என் மீதும் பாயலாம்; நான் கடத்தப்படலாம்; ஒரு பெண்ணாகிய நான், வன்புணர்வுக்கும் ஆளாக நேரிடலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருந்தாலும் 15 வருடங்களாக இந்த வேலையை நேசித்துச் செய்கிறேன். எனக்கு கணவர் உண்டு; மகனும் உண்டு; என்னைச் சுற்றி எப்போதும் பேராபத்தும் உண்டு. ஆனாலும், நான் என் கேமராவுக்குப் பின் இருந்தபடி இந்த உலகைக் காண்பதையே விரும்புகிறேன். யுத்தக் களங்களில் இருந்தபடி வரலாற்றைப் பதிவுசெய்யவே மெனக்கெடுகிறேன். இதுவே நான். என் பெயர் லின்சே அடாரியோ!’ 

அமெரிக்காவின் கனெக்டிகட்டில் வசித்த இத்தாலியர் பிலிப்புக்கும் அமெரிக்கர் கேமிலிக்கும் நான்காவது மகளாகப் பிறந்த லின்சே, சிறுவயதில் துன்பம் என்றால் என்ன என்றே தெரியாமல் மகிழ்ச்சியாக வளர்ந்த பெண். பெற்றோர் ஒரு சலூன் நடத்திவந்தார்கள். 'உலகின் சந்தோஷமான வீடு’ என அக்கம்பக்கம் பொறாமைப்படும்படியாக அங்கே வார இறுதிகளில் பார்ட்டி களைகட்டும். எல்லாம் லின்சேவின் எட்டு வயது வரைதான். அப்போது பிலிப் குடும்பத்தைப் பிரிந்து, தன் பிரியத்துக்கு உரிய 'ஆணோடு’ நியூயார்க் சென்றுவிட்டார். பின் கேமிலிதான் குழந்தைகளை வளர்த்து, குடும்பப் பாரம் தாங்கினார். பிலிப், அவ்வப்போது 'நிதி’ ஆதரவுகொடுத்தார். தன் கடைக்குட்டி மகளது 13-வது வயதில் நிக்கான் ஸ்டில் கேமரா ஒன்றைப் பரிசாக அளித்தார் பிலிப். கேமராவுடன் முதல் ஸ்பரிசம். பூ, புகை, புன்னகை, புதுவானம், பூரண நிலா... இப்படித்தான் லின்சேவும் 'க்ளிக்’கத் தொடங்கினார். பொருளாதாரம், அரசியல் வரலாறு என பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி நியூயார்க்குக்கு நகர்ந்தார். 'நீ மனதால் எதை அதிகம் நேசிக்கிறாயோ, அதையே உன் தொழில் ஆக்கிக்கொள்’ என கேமிலி அடிக்கடி சொல்வது உண்டு. ஆகவே, லின்சே கேமராவை இறுகப் பற்றிக்கொண்டார்.

நம்பர் 1 லின்சே அடாரியோ

அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து புகைப்படங்கள் எடுத்தார். ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் சென்று மனிதர்களை வெவ்வேறு மனநிலையில் பதிவுசெய்து பழகினார். புகைப்படமும் கைப்பழக்கம். சில பத்திரிகைகளில் பகுதிநேரப் பணிகள் கிடைத்தன. சில சீனியர்கள் 'ஒளி மொழி’ கற்றுத்தந்தனர். 'அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்துக்காக கியூபாவுக்குச் சென்று தடைகளை மீறி, சில உண்மைகளைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற அசைன்மென்ட். லின்சே சவாலை ஏற்றுக்கொண்டு கிளம்பினார். கியூபாவின் வறுமையை லின்சேவின் லென்ஸ் பதிவுசெய்தது. அடுத்த சவால்? நியூயார்க் நகர வீதிகளில் திரியும் கறுப்பினத் திருநங்கைகளின் இரவு வாழ்க்கை. அவர்கள் தொடர்ந்து கொலையாவதன் பின்னணி. வாரக்கணக்கில் இரவுப் பறவையாக திருநங்கைகளோடு திரிந்து, பழகி, அவர்களது உலகின் ஆதர்ச ஸ்டில்களைப் பிடித்தார். அதற்குப் பின் இந்தியாவில் (கொல்கத்தா, வாரணாசி) சில மாதங்கள். புதிய களம். நல்ல பயிற்சி. 'இனி என்னால் உலகின் எந்த மூலைக்கும் செல்ல முடியும்’ என மனதில் அசட்டுத் தெம்பு உருவான சமயத்தில், 'ஆஃப்கானிஸ்தானுக்குச் செல்’ என வாய்ப்பு கைகாட்டியது.

திகைத்து நின்றார் லின்சே. 'முரட்டுத் தாலிபன்களின் இரும்புப் பிடியில் கட்டுண்டு திணறும் ஆஃப்கனுக்குச் செல்வதா? அதுவும் நான் ஒரு பெண். அங்கே சென்று கேமராவை வெளியில் எடுத்தாலே, தாலிபன்கள் உயிரோடு கொளுத்துவார்கள் அல்லது கல்லால் அடித்தே கொல்வார்கள்’. நினைக்கும்போதே பதறியது. 'அதுதான் விஷயமே. இப்படிப்பட்ட தாலிபன்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆஃப்கன் பெண்களின் நிலைமையை ஒரு பெண்ணாகிய உன்னால்தான் பதிவுசெய்ய முடியும்’ - சக பத்திரிகை நண்பர் உற்சாகப்படுத்தினார். நீண்ட யோசனைக்குப் பிறகு பாகிஸ்தான் வழியாக ஆஃப்கனுக்குக் கிளம்பத் தயாரானார் லின்சே. சில காலம் முன்தயாரிப்புகள்; அனுபவ ஆலோசனைகள். 'பர்தா அணிந்து, தலையைக் குனிந்து நடப்பதற்குப் பழகிக்கொள். ஒருபோதும் ஆஃப்கன் ஆண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்காதே. குறிப்பாக எந்த ஜோக்குக்கும் சிரித்துவிடாதே!’

மேற்கு உலக மீடியா, 9/11 சம்பவத்துக்கு முன்னர் வரை ஆஃப்கானிஸ்தானைக் கண்டுகொள்ளவில்லை. அதற்குப் பின்னர் உலகின் மொத்தக் கவனமும் அங்கேதான் குவிந்தது. அந்தச் சமயத்தில் நியூயார்க் டைம்ஸுக்காகச் செய்தி சேகரிக்கும் வாய்ப்பு லின்சேவுக்கு அமைந்தது. அவர் பரபரவென பாகிஸ்தானின் பெஷாவருக்குக் கிளம்பி வந்தார். முதன்முதலாகக் கையில் டிஜிட்டல் கேமரா. அங்கே ஏற்கெனவே சர்வதேசப் பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தார்கள். 'அமெரிக்கா ஒழிக!’ என எதிர்ப்புக் கோஷங்கள் நிறைந்த ஓர் ஊர்வலத்தை லின்சே புகைப்படம் எடுக்கச் சென்றார். அதிபர் புஷ்ஷின் புகைப்படத்தை தீ சுவைத்துக்கொண்டிருந்தபோது, லின்சேவின் பின்புறத்தை சில கரங்கள் பற்றின; பதறினார். மேற்கு உலகப் பெண்களை நீலப்படங்களில் மட்டுமே ரசித்த அந்த வக்கிர ஆண்களின் உதடுகளில் ஏதோ சாதித்த புன்னகை. 'இது ஹராம்! உங்க சகோதரிகள்கிட்ட இப்படித்தான் பண்ணுவீங்களா?’ என ஆங்கிலத்தில் லின்சே கோப வார்த்தைகள் வீச, மேலும் பல கைகள்... ஒருகட்டத்தில் தன் கேமரா லென்ஸால் ஒருவன் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு அங்கு இருந்து ஓடினார் லின்சே. அவர்கள் ஸ்தம்பித்தனர். காருக்குள் கண்ணீருடன் வந்து உட்கார்ந்தார். சக (ஆண்) பத்திரிகையாளர்கள் செய்தி அனுப்பவேண்டிய தங்கள் கடமையில் கவனமாக இருந்தார்கள்!

நம்பர் 1 லின்சே அடாரியோ

தாலிபன்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல் தீவிரம் அடைந்திருந்தது. ஆஃப்கனின் ஒவ்வொரு நகரமும் வீழ்ந்துகொண்டிருந்தது. தாலிபன் நிழல் நீங்கிய நகரங்களில் பாலிவுட் பாடல்கள் ஸ்பீக்கர்களில் ஒலித்தன. ஆஃப்கனியர்கள் சுதந்திரமாகக் கொண்டாடினார்கள். லின்சே பதிவுசெய்துகொண்டார். அதில் பர்தா விலக்கிய சில பெண்களின் கண்களும் அடக்கம்.

2003-ம் ஆண்டு. ஈராக் மீதான அமெரிக்கப் போர் குறித்த செய்தி சேகரிக்கும் அசைன்மென்ட்டுக்காக லின்சே கிளம்பினார். அமெரிக்கப் படைகளுடன் இணைந்து சென்று, செய்தி சேகரிக்கும் வாய்ப்பை மறுத்த லின்சே, வட ஈராக் பகுதிக்குச் சென்று சதாமால் ஒடுக்கப்பட்ட குர்து இன மக்களின் மனநிலையைப் பதிவுசெய்யத் துணிந்தார். தீவிரவாதத் தாக்குதல் நிறைந்த ஆபத்தான பகுதிகள் அவை. லின்சேவுக்கு சில அடிகள் தொலைவில் ஒரு கார் வெடிகுண்டு வெடிக்க, எங்கெங்கும் உடலின் சிதறல்கள். உறைந்துபோனார் லின்சே. முதல் வெடிகுண்டு அனுபவம். அருகில் இருந்த ஒரு கேமராமேன் செத்து விழுந்தார். இன்னொரு பத்திரிகையாளருக்கும் உடனடி மரணப் பரிசு. இப்படிப்பட்ட கொடூர முடிவு எந்தக் கணமும் தனக்கும் வாய்க்கலாம் என லின்சே அழுத்தமாக உணர்ந்த தருணம் அது. அதற்காக நொறுங்கிப்போகவில்லை. 'பாக்தாத் வீழ்ந்தது. சதாம் தப்பி ஓட்டம்’ என சி.என்.என் அறிவிக்க கேமராவைத் தூக்கிக்கொண்டு தயார் ஆனார். பாக்தாத்தில் ஓர் இடத்தில் தோண்டத் தோண்ட பிணங்கள். உபயம் சதாம். இன்னொரு பக்கம், அமெரிக்க வீரர்களின் அத்துமீறல். ஈராக் மக்களை அவர்கள் செய்த வதை. இரண்டையுமே பாரபட்சம் இல்லாமல் படம்பிடித்தது லின்சேவின் லென்ஸ். அதற்காக அமெரிக்க வீரர்களின் அதட்டல் மிரட்டல்களையும் சமாளிக்கவேண்டியிருந்தது.

2004-ம் ஆண்டு. பாக்தாத்தும் தீவிரவாதமும் ரத்தவாடையும் பிணக்குவியலும் லின்சேவுக்குப் பழகிப்போயிருந்தன. அப்போது மேத்யூ என்கிற பத்திரிகையாளருடன் செய்தி சேகரிக்கச் சென்றபோது, ஓர் இடத்தில் ஏ.கே.47 ஏந்திய ஈராக் போராளிகள் காரைச் சூழ்ந்தனர். அமெரிக்கர்கள் எனத் தெரிந்துவிட்டால் உயிர் காலி. லின்சே நடுங்கினார். 'கீழே இறங்கு. அமெரிக்கர்களா... எதற்காக வந்திருக்கிறீர்கள்... பாஸ்போர்ட் எங்கே?’ - மிரட்டினார்கள். 'நான் கிரீஸ். இவள் இத்தாலி. பத்திரிகையாளர்கள். பாஸ்போர்ட் கையில் இல்லை. ஈராக்கியர்கள் சார்பு செய்தி சேகரிக்கவே வந்திருக்கிறோம்’ - மேத்யூ சமாளித்தார். அவர்கள், லின்சேவின் கேமராவைப் பரிசோதித்தார்கள். அதில் ஈராக்கிய முகங்களே அதிகம் பதிவாகியிருந்தன. அந்தச் சமயத்தில் லின்சே, தங்களது அமெரிக்க பாஸ்போர்ட்களைச் சாதுர்யமாக உள்ளாடையில் பதுக்கிக்கொண்டார். போராளிகள் அவர்களுக்கு நீர் கொடுத்தனர். அது விருந்தோம்பலின் அடையாளம். லின்சே பெருமூச்சு விட்டார்.

'இப்போது கிளம்ப முடியாது. காலையில் செல்லுங்கள்’ எனச் சொன்ன அவர்கள், அருகில் ஒரு வீட்டில் உட்காரவைக்க, ஆபத்து நீங்கவில்லை என்பது புரிந்தது. 'நாம் கடத்தப்பட்டிருக்கிறோமா?’ லின்சேவுக்குச் சந்தேகம். 'இவர் என் கணவர், நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ லின்சே அந்த வீட்டில் இருந்த ஈராக்கியப் பெண்களின் ஆதரவைப் பெற தன் வயிற்றைத் தடவிக்காட்டினார். அதேநேரம் பிரிட்டன் பத்திரிகையாளர் ஒருவரும் பிடிபட்டு அங்கே அனுப்பப்பட்டார். நேரம் ஆக ஆக, 'இவர்கள் மனம் மாறி கொன்றுவிட்டால்?’ என்ற பயம் கவ்வியது. 'ஒன்றும் செய்ய மாட்டோம். கிளம்புங்கள்’ என சில மணி நேரம் கழித்து விடுவித்தனர். அந்த இடத்தைவிட்டு விலகி வெகுதூரம் வந்த பிறகே லின்சேவின் இதயத் துடிப்பு சீரானது. தன் அறைக்கு வந்து தந்தைக்கு போன் செய்து அழுதார், அளவின்றி!

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு லின்சே அதிகம் பதறி அழுதது காங்கோவில். கிழக்கு காங்கோவில் நடந்த உள்நாட்டுப் போரில், ருவாண்டா வீரர்களால் கடத்தப்பட்டு, மாதக்கணக்கில்/ வருடக்கணக்கில் அடைத்துவைக்கப்பட்டு, பலரால் மாறி மாறி சிதைக்கப்பட்ட அப்பாவிப் பெண்களின் கதைகள் ஒவ்வொன்றும் லின்சேவைப் பதைபதைக்கச் செய்தன. அவர்களது கண்ணீரை, லின்சேவின் புகைப்படங்கள் மூலமாக உலகம் அறிந்துகொண்டது.

எல்லைவிட்டு எல்லை தாண்டிச் சுற்றியபடியே இருந்ததால், 34 வயது லின்சேவுக்கு அமைந்த காதல்கள் எல்லாம் சில டேட்டிங்குகளோடு கரைந்துபோயின. அப்போது துருக்கியில் 'ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனப் பணியாளர் பவுல் உடன் லின்சேவுக்கு சிநேகம் உண்டானது. டேட்டிங் தினங்கள். இருவருமே ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்துகொண்டனர். 2009-ம் ஆண்டின் புத்தாண்டு நாளில் 'கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என கண்கள் நிறையக் காதலுடன் கேட்டார் பவுல். நெகிழ்ச்சியுடன் சம்மதித்தார் லின்சே. ஜூலையில் திருமணம். ஜூனில் பாகிஸ்தானில் பணியில் இருந்தபோது லின்சே கார் விபத்தில் சிக்கினார். டிரைவர் பலியாக, லின்சேவுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு. வேதனை சூழ்ந்த தருணத்தில் தாயாக, செவிலியாக, தோழனாக, காதலனாக, யாதுமாகி நின்று லின்சேவை மீட்டுக் கொண்டுவந்தார் பவுல். குறிப்பிட்ட தேதியில் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.

2010-ம் ஆண்டு. துனிசீயப் புரட்சி, பின் எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் லிபியாவிலும் அதிபர் கடாஃபிக்கு எதிராக ஆரம்பித்த புரட்சி, உள்நாட்டுப் போராக உருமாறியிருந்தது. 'நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையாளர்களான ஆண்டனி, டெய்லர், ஸ்டீபனுடன் லின்சேவும் லிபியாவுக்குக் கிளம்பினார். எவ்வளவு செய்தி கிடைத்தாலும் 'இன்னும் கொஞ்சம் கிடைக்காதா?’ என ஊடுருவிச் செல்வது பத்திரிகையாளர்களின் இயல்பு. அதுவும் எத்தனை ஆபத்தான சூழலாக இருந்தாலும். அப்படித்தான் நால்வரும் தங்கள் உள்ளூர் ஓட்டுநரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், எல்லை மீறிச் சென்று கடாஃபியின் ராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்டனர். 'மேற்கு உலகப் பத்திரிகையாளர்களைக் கண்டால் கொன்றுவிடுங்கள். அவர்கள் உளவாளிகள்’ என கடாஃபி சில தினங்களுக்கு முன் பேசியது, லின்சேவின் நினைவில் வந்து மூச்சை அடைத்தது.

நம்பர் 1 லின்சே அடாரியோ

வானை நோக்கி தோட்டாக்கள் பாய்ந்தன. அவர்கள் மீதே பாய்ந்ததுபோல் இருந்தது. தப்பித்து ஓடவும் வழி இல்லை. சுற்றிலும் எதுவுமற்ற பாலைவனம். நெருங்கி வந்த ஒருவன், லின்சேவின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். நால்வரது முகங்களும் தரையில் அழுத்தி நசுக்கப்பட்டன. உடைமைகள் பறிக்கப்பட்டன. 'இதுதான் என் இறுதி நாள்’ -  உள்ளுக்குள் பயம் சூழ்ந்தது. பவுலின் சிரிப்பும் குடும்பத்தினரது முகங்களும் நினைவில் வந்துபோயின. மற்ற மூவரையும் பரிசோதித்த அவர்களது கைகள், லின்சேவின் உடல் பாகங்களில் மட்டும் அத்துமீறிப் படர்ந்தன. 'கடவுளே... இவர்கள் என்னைச் சிதைக்கக் கூடாது’ லின்சேவின் கண்களில் கட்டுப்பாடு இல்லாமல் கண்ணீர் பொங்கியது.

கைகளைப் பின்னே கட்டி, கண்களையும் கட்டி ஏதோ ஒரு வாகனத்தில் ஏற்றி எங்கோ அழைத்துச் சென்றார்கள். 'என் கேமரா திரும்பக் கிடைக்குமா? அய்யோ, இனி நான் புகைப்படமே எடுக்க முடியாதா?’ - ஏதேதோ எண்ணங்கள் அலைபாய்ந்தன. 'நான் ஏன் அநாவசியமாக இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன்?’ மரணத்தின் விளிம்பில் நிற்கும்போது, லின்சேவுக்குள் இப்படி ஒரு கேள்வியும் தோன்றியது. இன்னொருவன் லின்சேவை நெருங்கினான். எங்கெங்கோ அவனது கைகள் எல்லை மீறின. 'நான் திருமணமானவள். எனக்கு கணவர் இருக்கிறார். நீ ஒரு இஸ்லாமியன்தானே?’ - லின்சேவின் கதறலை எல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை. மெதுவாகச் சொன்னான், 'இன்றிரவு நீ சாகப்போகிறாய்.’

வாகனம், ஒவ்வொரு செக்போஸ்ட்டாகக் கடந்து சென்றது. ஒவ்வொன்றிலும் யார் யாரோ வந்து உதைத்துவிட்டுப் போனார்கள். கடாஃபியின் ஊரான சிர்ட்டிலில் ஒரு சிறையில் நால்வரும் அடைக்கப்பட்டார்கள். கொஞ்சம் தண்ணீர், ரொட்டி, சாதம், காலி பாட்டில் வழங்கப்பட்டது. ஆண்கள் ஒதுங்கி பாட்டிலில் சிறுநீர் கழிக்க, லின்சே எதுவும் இயலாமல் முடங்கிக் கிடந்தார். சிறையின் பக்கத்து அறைகளில் யார் யாரோ அலறும் சத்தம் உயிரை உலுக்கியது. 'இங்கு இருந்து விடுவிக்கப்படுவோமா... இல்லை, மரணம்தான் விடுதலையா?’ பல மணி நேரத்துக்குப் பின் சிறை அறைக்குள் சிலர் புகுந்து, மீண்டும் நால்வரையும் கட்டி இழுத்துச் சென்று, ஒரு சிறு விமானத்தில் ஏற்றினர். எங்கோ ஓரிடத்தில் இறக்கினர். வெட்டவெளியில் சுட்டுக் கொல்லப்போகிறார்களா? நால்வரும் பயந்து நடுங்கிய வேளையில், ஒரு போலீஸ் வாகனம் வந்தது. கட்டடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

'பயப்படாதீர்கள். நீங்கள் லிபிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். ஒன்றும் ஆபத்து இல்லை’ யாரோ ஓர் அதிகாரி சொன்னார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். லின்சேவையும்.

'அவர்கள் உங்களைத் தொட்டார்களா?’

'ஆம்... அத்துமீறித் தொட்டார்கள்.’

'வன்புணர்வு செய்தார்களா?’

'இல்லை.’

'நல்லது’ எனப் புன்னகையுடன் அவர் விசாரணையை முடித்துக்கொண்டார்.

பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, மார்ச் 21-ல் நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். கதறலுடன் பவுலிடம் சரணடைந்தார் லின்சே. கோவாவில் சில நாட்கள் ஓய்வு. அடுத்த சில நாட்களில் டிம், கிரிஸ் என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் லிபியாவில் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது, லின்சேவின் முகம் வெளிறிப்போனது. 'இனியும் இதெல்லாம் தேவையா?’ என்ற ஒரு கேள்வி கொக்கிப்போட்டு இழுத்தது. எல்லாம் கொஞ்ச காலம்தான். டெல்லியில் அந்தப் பெண் மருத்துவர், லின்சேவின் கர்ப்பத்தை உறுதி செய்தபோது, 'நான் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல வேண்டும். பயணம் செய்யலாமா?’ என்றுதான் கேட்டார் லின்சே. மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி, வறுமையும் தீவிரவாதமும் நோய்களும் மண்டிக்கிடக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கர்ப்பவதியாகச் சுற்றித் திரிந்தார். சோமாலியாவின் ஒரு மருத்துவமனையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால், ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று தன் இறுதி நிமிடங்களில் இருந்தது. லின்சேவின் கண்களில் நீர்ப்பெருக்குடன் அதைப் பதிவுசெய்த நொடியில், அவரது வயிற்றுக்குள் ஆறு மாதக் கரு உதைப்பதை முதன்முதலாக உணர்ந்தார். என்ன வாழ்க்கை இது!

அடுத்த புராஜெக்ட் காஸா. பாலஸ்தீனக் கைதிகள் சிலரை விடுவித்து, இஸ்ரேல் வீரர் ஒருவரை மீட்கும் நிகழ்வைப் படம்பிடிக்கச் சென்றார் லின்சே. பணியை முடித்துவிட்டுத் திரும்பும்போது Erez Crossing  என்கிற இஸ்ரேலிய காஸா எல்லையில், இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரிகள், லின்சேவை 'எக்ஸ்ரே சோதனைக்கு’ கட்டாயப்படுத்தினர். 'நான் ஏழு மாத கர்ப்பம்’ என லின்சே பதறி மறுக்க, 'இங்கே மனித வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம். அத்தனை உடைகளையும் கழற்றி சோதனை செய்துகொள்ளவா?’ என நக்கலாகச் சிரித்தார் ஓர் அதிகாரி. கதிர்வீச்சால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுமோ எனத் தயங்கிய லின்சே, வேறு வழி இல்லாமல் சோதனை இயந்திரத்துக்குள் ஏறினார். முதல்முறை ஸ்கேன் செய்தார்கள். சரியில்லை எனச் சொல்லி மீண்டும் ஒருமுறை. வேண்டும் என்றே மூன்றாவது முறையும். அதற்குப் பிறகும் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை எனப் பொய் சொல்லி, உடைகளைக் கழற்றியும் பரிசோதித்தார்கள். சுற்றிலும் இருந்த இஸ்ரேலிய அதிகாரிகளின் உதடுகளில் நக்கல் புன்னகை. கோபத்தாலும் இயலாமையாலும் வெடித்து அழுதார் லின்சே. பின்பு தூதரகத்தில் புகார் கொடுக்க, சில நாட்கள் கழித்து, இஸ்ரேலிய ராணுவ அமைச்சகம் மன்னிப்பு கேட்டது.

2011-ம் ஆண்டு டிசம்பரில் லின்சே தாய் ஆனார். லூக்காஸ் பிறந்தான். தாய்மையின் பேரின்ப உணர்வுகள். மூன்றே மாதங்களில் மீண்டும் கேமராவைத் தூக்கிவிட்டார். அடுத்தடுத்த அபாயக் களங்கள். உலகம் எங்கும் நசுக்கப்படும், அழிக்கப்படும், ஒடுக்கப்படும் அப்பாவி மக்களின் அவலங்களை சர்வதேசக் கவனம் பெறச் செய்ய, மனிதம் நிறைந்த ஒரு பத்திரிகையாளராகத் தொடர்ந்து போராடிவரும் லின்சே, ஒரு தாயாக, ஒரு மனைவியாக சொந்த வாழ்க்கையைச் சமநிலைப்படுத்தவும் முயன்று வருகிறார்.

'ஒரு தாயான பின் இதெல்லாம் தேவையா?’, 'மோசமான பெண் இவள்’ என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும், எதையும் பொருட்படுத்தாமல் உலகின் மிக முக்கியமான, முதன்மையான 'போர்க்களப் பெண் பத்திரிகையாளராக’ லின்சே தொடர்ந்து தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவரது நோக்கம் ஒன்றே ஒன்றுதான். 'கேமரா என் ஆயுதம். உலகம் எங்கும் பாதிக்கப்பட்ட மக்களின் முகமாக, குரலாக என் புகைப்படங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும்!’

ரிஸ்க் எடுக்க முடியாது!

நம்பர் 1 லின்சே அடாரியோ

2007-ம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் ஆஃப்கனின் Korengal பள்ளத்தாக்கைக் கைப்பற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொண்டபோது, லின்சேவும் பல மாதங்கள் ராணுவத்தின«ராடு தங்கி செய்தி சேகரித்தார். அப்போது அமெரிக்க ராணுவ இளைஞர்களின் போர்க்கள இழப்புகளை, வலிகளைப் பதிவுசெய்தார். அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட, சிதைக்கப்பட்ட அப்பாவி ஆஃப்கனியர்களின் அவலங்களையும் பதிவுசெய்தார். அதில் அமெரிக்கக் குண்டுகளால் காயம்பட்ட 'காலிட்’ என்ற சிறுவனின் படத்தை, நியூயார்க் டைம்ஸ் பிரசுரத்துக்காகத் தேர்ந்தெடுத்தது. அமெரிக்க ராணுவ அமைச்சகம் 'காலிட் அமெரிக்க குண்டுகளால் காயம் அடைந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது’ என மறுக்க, நியூயார்க் டைம்ஸ், புகைப்படத்தைப் பிரசுரிக்க மறுத்தது. லின்சே போராடினார். 'ரிஸ்க் எடுக்க முடியாது’ என்றார் பத்திரிகை ஆசிரியர். 'களத்தில் நான் எடுத்த ரிஸ்க்குகளுக்கு என்ன பதில்?’ என்ற லின்சேவின் எதிர்க் கேள்விக்கு பத்திரிகையிடம் பதில் இல்லை! 

விருது மங்கை!

** 'நியூயார்க் டைம்ஸ்' தவிர, 'நேஷனல் ஜியாகிரஃபி’, 'டைம்ஸ்’ பத்திரிகைகளுக்காகவும் லின்சே பணிபுரிகிறார்.

** 2008-ம் ஆண்டில் லின்சே நியூயார்க் டைம்ஸ் குழுவினருடன் ஆஃப்கனில் எடுத்த Talibanistan என்ற புகைப்படங்களுக்காக, 2009-ம் ஆண்டில் அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

நம்பர் 1 லின்சே அடாரியோ

** புகைப்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ள லின்சே, 2009-ம் ஆண்டில் MacArthur Fellowship பெற்றார். அதாவது குறிப்பிட்ட துறையில் ஒருவர் மேலும் சாதிக்க, வழங்கப்படும் நிபந்தனையற்ற ஊக்கத்தொகை இது.

** It's What I Do: A Photographer's Life of Love and War - இது லின்சேவின் அனுபவங்களைச் சொல்லும் தன் வரலாற்றுப் புத்தகம்!