இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 3

ருத்துவ அவசர காலங்களில் உதவி பெற, மருத்துவக் காப்பீடு எவ்வளவு அவசியம் எனப் பார்த்தோம். இனி, பாலிசிக்களில் எத்தனை வகைகள் உள்ளன, எது பெஸ்ட் என்பதைப் பார்க்கலாம். மெடிக்ளெய்ம் பாலிசியை தனிநபர் பாலிசி, குடும்பத்தினர் பாலிசி, மூத்த குடிமக்கள் பாலிசி, கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி, புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற குறிப்பிட்ட நோய்களின்  சிகிச்சைகளுக்கான பாலிசி, கார்ப்பரேட் மற்றும் ஊழியர்களுக்கான குழும பாலிசி என ஆறாகப் பிரிக்கலாம்.

‘மெடிக்ளெய்ம் பாலிசி எனக்கு மட்டும் எடுத்தால் போதாதா? குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாலிசி எடுக்க வேண்டுமா?’ என்ற சந்தேகம் பலருக்கும் எழும். எந்த ஒரு பாதிப்பும் சொல்லிவைத்து வருவது இல்லை. மாறிவிட்ட வாழ்க்கைமுறை காரணமாக நோய்கள் சர்வசாதாரணமாக வந்துகொண்டிருக்கின்றன. இளம் வயதிலேயே மாரடைப்புக்கு ஆளாகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நாம் ஒழுங்காக வாகனம் ஓட்டினாலும் எதிரில் வருபவர் எப்படி வருவார் என்பதைச் சொல்ல முடியாது. அதனால், சாலை விபத்தில் சிக்கலாம், டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படலாம், சிறுநீரகக் கல் போன்ற பிரச்னை வரலாம். இந்த மாதிரியான சூழலில் ‘எனக்கு மட்டும் போதும்’ என்று இருந்தால் மருத்துவச் செலவும் நம்மையே வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய முழு மருத்துவச் செலவையும் நாம்தான் கட்டியாக வேண்டும். எனவே, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மெடிக்ளெய்ம் கவரேஜ் இருப்பது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 3

சரி, குடும்பத் தலைவருக்கு ஒரு லட்ச ரூபாய், மனைவிக்கு ஒரு லட்ச ரூபாய், இரண்டு குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் எனத் தனித்தனியாக எடுக்கிறோம் என்றால், ப்ரீமியம் அதிகமாகும். க்ளெய்ம் தொகையும் குறைவாக இருக்கும். இதற்கு பதில், ஃபேமிலி ஃப்ளோட்டரில் நான்கு பேருக்கும் சேர்த்து 3 லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்தோம் என்றால், ப்ரீமியம் குறைவுதான். க்ளெய்ம் தொகையும் அதிகமாகக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு, உங்கள் மனைவிக்கு தனிநபர் திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் மனைவிக்கு எதிர்பாராத மருத்துவச் செலவு ஏற்படுகிறது. ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகிறது என்றால், ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டும்தான் க்ளெய்ம் பெற முடியும். மீதம் உள்ள தொகையை நீங்கள்தான் செலுத்தியாக வேண்டும். இதுவே, இந்த மூன்று பேருக்குமான தொகைக்கு அதாவது, மூன்று லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்திருந்தால், முழு க்ளெய்மும் பெற முடியும். பாலிசிக்கு உட்பட்டு எல்லா செலவுகளையும் காப்பீட்டு நிறுவனமே செலுத்திவிடும். மேலும், இதே ஆண்டில், நமக்கோ, குழந்தைக்கோ வேறு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், மீதம் உள்ள ஒன்றரை லட்சத்தில் இருந்து க்ளெய்ம் பெறவும் முடியும். இதனால், குறைந்த ப்ரீமியத்தில், முழு குடும்பத்துக்கான மருத்துவ உதவியைப் பெற முடியும்.

‘நான் தனி ஆள் சார்... எனக்கு என்ன பாலிசி எடுப்பது?’ என்று கேட்பவர்களுக்கு தனிநபர் பாலிசி உள்ளது. இவர்கள், திருமணம் ஆன பின்பு மனைவி மற்றும் குழந்தைகளையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும். தனித்தனியாக எடுப்பதைவிட, ஃப்ளோட்டர் பாலிசி ப்ரீமியம் குறைவு. ஃப்ளோட்டர் ஃபேமிலி பாலிசியில் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

கார்ப்பரேட் அல்லது குழு பாலிசி பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்!

மூத்த குடிமக்கள் பாலிசி

வயதானவர்களுக்கு அதிக அளவில் மருத்துவச் செலவு இருக்கும் என்பதால், நிறைய காப்பீட்டு நிறுவனங்கள் மெடிக்ளெய்ம் பாலிசி அளிப்பது இல்லை. அவர்களை குடும்ப ஃப்ளோட்டரில் சேர்க்கலாம் என்றால் ப்ரீமியமும் அதிகமாக இருக்கும். அதனால், அவர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான பாலிசி பெரிதும் உதவியாக இருக்கும். நேஷனல், நியூ இந்தியா, ஸ்டார் ஹெல்த், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கான பாலிசியை அளிக்கின்றன.

அச்சுறுத்தும் நோய்களுக்கு பாலிசி

கிரிட்டிக்கல் இல்னெஸ் என்பது மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரகச் செயல் இழப்பு போன்ற குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சைக்கு மட்டும் பாலிசி எடுப்பது. இதில் பல தனிநபர், ஃப்ளோட்டர் பாலிசியிலேயே கவர் ஆகிவிடும் என்பதால், தனியாகத் தேவையா என்பதை பாலிசி எடுப்பவர் முடிவு செய்துகொள்ளலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் பாலிசி எடுப்பதும் தனியாக உள்ளது. உதாரணத்துக்கு புற்றுநோய்க்கு மட்டும் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். இப்படி, சில நோய்களுக்கு மட்டும் என்று தனித்தனி பாலிசிகள் உள்ளன.

- பா.பிரவீன் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism