Published:Updated:

பரம்பிக்குளம் : நட்ட நடுகாடு, சைலன்ட் மோடு, மர வீடு! பூலோக சொர்க்கம்|ஊர் சுத்தலாம் வாங்க பாகம் - 5

பரம்பிக்குளம்
பரம்பிக்குளம் ( Twitter )

ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்திராதபோது, பெயரை வைத்து அர்த்தம் புரிந்து கொள்வோமே... அது மாதிரிதான் 'பரம்பிக்குளம்' என்றால்... ‘ஏதோ பரந்து விரிஞ்ச குளம்போல’ என்று நினைத்தேன். ஆனால்...

‘ப்ளீஸ்.. என்னை ஒரு நல்ல அட்வென்ச்சர் ட்ரிப் பண்ற மாதிரி ஓர் இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்க’ என்று நயன்தாரா போல் அப்பாவியாகக் கேட்டால்... ‘சொல்லுங்க, நான் என்ன பண்ணணும்’ என்று விஜய் சேதுபதிபோல் டபுள் மடங்கு அப்பாவியாய் சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் அசடு வழியும். ட்ரெக்கிங், அனிமல் சைட், நைட் கேம்ப் ஃபயர், காம்ப்ளிமென்டரி டின்னர், ஜில் அருவிக் குளியல், போட்டிங், கொஞ்சம் ஆன்மிகப் பழங்கள் என்றால் கோயில் குளங்கள்... இதைவிட டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு வேறென்ன தகுதிகள் வேண்டும் என்றுதான் இதுநாள் வரை இருந்தேன். ‘பரம்பிக்குளம்’ போகும் வரை...

ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்திராதபோது, பெயரை வைத்து அர்த்தம் புரிந்து கொள்வோமே... அது மாதிரிதான் 'பரம்பிக்குளம்' என்றால்... ‘ஏதோ பரந்து விரிஞ்ச குளம்போல’ என்று நினைத்தேன். ஆனால், கேரள மாநிலம் டூரிஸத்துக்கு ‘பரம்பிக்குளம்’ எத்தனை முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்ட தருணம் அது. ‘‘கைடு விட்டு எங்கேயும் போகாண்டாம். அனிமல்ஸ் அதிகமாயிட்டுண்டு.. உங்களட சேஃப்டிக்கு ஞாந்தான் ரொஸ்பான்ஸிபிளிட்டியானு’’ என்று பரம்பிக்குளத்தில் ஒவ்வொரு அதிகாரியும் டூரிஸ்ட்டுகளைக் கவனித்த விதம்... ‘இப்பவே இப்படி காடா இருக்கே... அப்போ அந்தக் காலத்தில எப்படி இருந்திருக்கும்’ என்று பரம்பிக்குளக் காடுகள் என்னை டைம் டிராவல் பண்ண வைத்த விதம்... இரவு நான் கேட்ட ஏதோ ஒரு விலங்கின் அலறல் சத்தம்... எல்லாமே இப்போது வரை என் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை மென்று தின்று கொண்டிருக்கின்றன.

பரம்பிக்குளம்
பரம்பிக்குளம்
விகடன்

இனி ஓவர் டு பரம்பிக்குளம்...

முதலில் ஒரு விஷயம் - கார்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் கைதூக்குங்கள்! உங்களுக்கான ஓர் அம்சமான பேக்கேஜ் இது. ஆர்கே நகர் சுயேட்சை வேட்பாளர்கள்போல் பரம்பிக்குளத்துக்கு வதவதவென பஸ்களை எதிர்பார்க்க முடியாது. எப்போதாவதுதான் பேருந்து வசதி உண்டு. அதுவும் சேத்துமடை எனும் இடத்தில் இருந்துதான். பொள்ளாச்சிதான் இதற்கு சென்டர் பாயின்ட். பொள்ளாச்சியில் நைட் ஸ்டே பண்ணிவிட்டு, காலையில் ஒரு நல்ல எஸ்யூவி-யில் கிளம்பினேன். அதற்கு முந்தைய நாளே பரம்பிக்குளத்துக்கு ஆன்லைனில் ரூம் புக் செய்து கொண்டுவிட்டேன். கொஞ்சம் காஸ்ட்லிதான். ஆனால், டபுள் வொர்த்!

தமிழ்நாடு ஒரு விஷயத்தில் பெருமைகொள்ள வேண்டும். அதாவது, டாப் ஸ்லிப். இந்த டாப் ஸ்லிப்பைத் தாண்டித்தான் பரம்பிக்குளத்துக்குப் போக வேண்டும். காட்டு விலங்குகளைத் தவிர வேறு எந்த அந்நியரும் பரம்பிக்குளத்துக்குள் அத்துமீறி கால் பதித்துவிட முடியாது. டாப் ஸ்லிப்தான் பரம்பிக்குளத்துக்கு இருக்கும் ஒரே வழி.

ஆழியார் அணைக்கட்டில் மாங்காய் கடித்துவிட்டு, ஃபில்டர் காபியை உறிஞ்சிவிட்டு சும்மா ஒரு ரவுண்ட் வந்தேன். அப்படியே யு-டர்ன் அடித்தால், ஆனைமலை. ஆழியாரில் இருந்து இன்னொரு ஷார்ட் ரூட் இருக்கிறது. ஆனால், நான் ஆனைமலையைத் தேர்ந்தெடுத்தேன். காரணம், பரம்பிக்குளத்தில் தின்பண்டங்கள் எதுவும் கிடைக்காது. அதனால், ஏர்போர்ட்டில் இருந்து ஆமைகளைக் கடத்தும் கும்பல் மாதிரி, சில ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை டிக்கிக்குள் பதுக்கிக் கொண்டேன்.

ஆனைமலை, சேத்துமடை, டாப் ஸ்லிப், பரம்பிக்குளம் - இதுதான் ரூட். டாப் ஸ்லிப்பில் தங்கிச் செல்பவர்களுக்கு ஒரு முக்கியமான டிப்ஸ். பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்துவிட்டுத்தான் சேத்துமடையைத் தாண்டவேண்டும். ஏற்கெனவே டாப் ஸ்லிப்பில் தங்கிய அனுபவம் உண்டு. ‘அம்புலி இல்லம்’ என்ற அறைக்கு வாடகை ரூ.4,000 என்றார்கள். பராமரிப்பு, கார் பார்க்கிங், என்ட்ரீ ஃபீஸ் என்று எக்ஸ்ட்ரா 420 ரூபாய் பல்லிளித்தது. ‘‘இதுக்கு மேல சல்லிக்காசு வாங்கமாட்டோம்’’ என்று ‘அபியும் நானும்’ லேடி ஹெட்மாஸ்டர்போல் வாக்குறுதி கொடுத்தார்கள்.

ஆனால், சேத்துமடை செக்போஸ்ட்டில், ‘‘இது ட்ரைபல் வெஃல்பேர் சார். Pay பண்ணியே ஆகணும்’’ என்று 150 ரூபாயும், கேமரா சார்ஜ் 150 ரூபாயும், மேலே ஏறியவுடன் ‘‘கார் பார்க்கிங் சார். இது எருமைப் பாறை ட்ரைபல் வெல்ஃபேருக்காக! இந்தா... பில் பாருங்க’’ என்று 200 ரூபாயும், ‘‘சாப்பாடு நீங்கதான் பார்த்துக்கணும்’’ என்று அதற்கு ஒரு 450 ரூபாயும் என்று கன்னாபின்னாவென ‘பே’ பண்ணச் சொல்லி ‘பெப்பே’ காட்டினார்கள். ‘இன்னும் எத்தனை பேர்தான்டா இருக்கீங்க’ என்று ‘சிவாஜி’ ரஜினியை வைத்து மீம்ஸ் போட்டால் எனக்கு செட் ஆகும். நல்லவேளையாக, அறையில் மின் விசிறி பயன்படுத்தியதற்கு... இரவில் அசமந்தமாய்த் தூங்கியதற்கு... பாத் ரூமில் பல் துலக்கியதற்கு என்று கட்டணங்கள் வசூலிக்கவில்லை என்பதற்காக தமிழ்நாடு டூரிஸத்துக்கு ஒரு ஷொட்டு. ‘இதுக்கு மேல என்ட்ட காசு இல்லடா... என்னை விடுங்கடா’ என்று ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணிபோல் கத்த வேண்டும்போல் இருந்தது.

பரம்பிக்குளம்
பரம்பிக்குளம்
Vikatan

என் டார்கெட் பரம்பிக்குளம்தான். இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் - காடுகளில் உள்ள காட்டேஜ்களில் செக்-இன் நேரம் - மதியம் 12 மணி முதல் மறுநாள் காலை 10 மணி. இதை நினைவில் கொள்க! சேத்துமடை செக்போஸ்ட்டில் வழக்கம்போல், ட்ரைபல் வெல்ஃபேர் ஃபீஸும், (150) என்ட்ரி ஃபீஸும் (120) கட்டிவிட்டு மேலேறினேன். இங்கே செக்போஸ்ட்டில் காலை 7 முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதி.

டாப் ஸ்லிப் வரை ரோடு கன்னாபின்னாவென இருந்தது. ஆனால், அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு இதுபோன்ற சாலைகள்தான் உத்தமம். ரோடு நன்றாக இருந்தால், பறக்கத் தோன்றும். இது விலங்குகளுக்கும் ஆபத்து; நமக்கும் நல்லதில்லை. ‘மச்சி, பரம்பிக்குளம் போறோம். ரூம் போடுறோம்; சரக்கடிச்சுட்டு ட்ரெக்கிங் போறோம்’ என்று நினைத்தீர்கள் என்றால், ஸாரி... உங்களுக்கு வேறு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. இங்கே கடுமையான செக்கிங் உண்டு. பிளாஸ்டிக்குகளுக்கே தடை விதிப்பவர்கள், ஆல்கஹாலை அலோவ் பண்ணுவார்களா என்ன?

டாப் ஸ்லிப்பில் ஒரு சின்ன போட்டோ ஷூட். ரொம்ப நாட்களாக நிறுத்தி வைத்திருந்த யானைச் சவாரியை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். சூர்யா, அஜித், விஜய் என்று வெரைட்டியான நடிகர்களின் பெயரில் யானைகள் சவாரி ஏற்றிக் கொண்டிருந்தன. யானைச் சவாரிக்கும் நீங்கள் முந்த வேண்டும். 10.30 மணி முதல் ஆரம்பிக்கிறது. ஒரு சவாரிக்கு 800 ரூபாய் கட்டணம். 2 பேருக்கும் அதே; 4 பேருக்கும் அதே! ‘‘யானைங்க முகாம்க்குக் கூட்டிட்டுப் போவீங்களா?’’ என்றபோது, ‘‘ஒரு ஆளுக்கு 120 ரூபாய். டூரிஸ்ட் அவ்வளவா இல்லை. 18 பேர் வேன்ல போலாம். மொத்த அமௌன்ட்டையும் நீங்களே குடுத்தீங்கன்னா (அதாவது, 18X120) வண்டியைக் கிளப்பலாம்’’ என்று ஆடி முடிந்தும் ஆஃபர் தந்தார் ஓர் உயர் அதிகாரி. சீஸன் இல்லாத நேரத்தில் இது ஒரு பெரிய பிரச்னை.

Vikatan

டாப் ஸ்லிப் தாண்டினால், ஒன்றரை கி.மீ தொலைவில் வருகிறது பரம்பிக்குளம் காட்டுப்பகுதிக்கான செக்போஸ்ட். கற்களால் செதுக்கப்பட்ட புலி, சிறுத்தை ஆர்ச்சே மிரட்டியது. தமிழ்நாட்டில் அவமானப்பட்ட எனக்கு, கேரள எல்லையில் மயிலிறகால் வருடுவதுபோல் பேசியது ரொம்பவும் ஆறுதலாக இருந்தது. ‘‘எண்ட பூமிக்கு வெல்கம். இந்தாங்க உங்க ரிஸிப்ட். ரைடு உண்டு. கோம்ப்ளிமென்டரி ஃபுட் மூணு வேளையும். ஒரு கைடு கூடவே வொருவாங்க!’’ என்று மலையாளத் தமிழில் பேசினார்.

பரம்பிக்குளத்தில் டூர் அடிக்கும்போது, ரூம்களைத் தேர்ந்தெடுப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. மொத்தம் 6 வகையான ரூம்கள் காட்டினார்கள். 3,000 ரூபாயில் இருந்து 9,500 வரை வாடகை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி. ஒரு பேக்கேஜில், காட்டுக்குள் இரவு சவாரி கூட்டிப் போவார்கள். நம் காரிலேயே கைடுடன் காட்டைச் சுற்றிப் பார்ப்பது இன்னொரு பேக்கேஜ். தூணக்கடவு என்றொரு அணைக்கட்டுக்குப் பக்கத்தில் உள்ள மர வீட்டு பேக்கேஜில், இரவுச் சவாரி - மாலைச் சவாரி, காட்டுவாசிகளின் நடனம், எக்ஸ்பெர்ட்டான கைடுடன் காட்டுக்குள் நடந்தே ட்ரெக்கிங் போவது என்று வெரைட்டி காட்டுகிறார்கள்.

எல்லாவற்றிலும் அல்ட்டிமேட்டான பேக்கேஜ் ஒன்றுண்டு. ‘வீட்டுக்குன்னு ஐலேண்ட் நெஸ்ட்’ எனும் ஆப்ஷன். பரந்து விரிந்த பரம்பிக்குளம் அணையில், படகிலேயே 2 மணி நேரம் பயணித்து, மொட்டைக் காட்டுக்குள் தங்குவது. 4 பேருக்கு 9,500 ரூபாய் கட்டணம் என்றார்கள். உணவு மட்டும் எக்ஸ்ட்ரா செலவு. அடர்ந்த காடு என்பதால், நம் பாதுகாப்புக்கு எப்போதுமே 5 கைடுகள் உடன் இருப்பார்களாம்.

ஏழைக்கேற்ற கடலை மிட்டாய்போல், 3,000 ரூபாய் பேக்கேஜைத் தேர்ந்தெடுத்திருந்தேன். கைடு ஒருவர் உடன் ஏறிக் கொண்டார். குடும்பமாகச் சென்றால், பெண் கைடுகள்தான் வருவார்களாம். அங்கங்கே முளைத்திருந்த சால்ட் தாடியுடன், எப்படிப்பட்ட வழக்கிலும் உள்ளே தள்ளலாம் என்கிற முகவெட்டு எனக்கு. வகையான ட்ரைபல் ஒருவர் கைடாய் மாட்டினார். தோடர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராம். மலையாளத்தில் ஏதோ ஒரு பேர் சொன்னார். ‘‘நிங்கட பேரு நன்னாயிட்டுண்டு’’ என்று நான் சீன் போட்டதை வைத்தே கண்டுபிடித்து விட்டார். ‘‘தமிழா?’’

பரம்பிக்குளம்
பரம்பிக்குளம்
Kerala Tourism

‘கிங்காங்’, ‘அனகோண்டா’ போன்ற படங்களில், ‘‘அந்தத் தீவுக்கா? அங்க போனவங்க யாரும் திரும்ப வந்ததில்லையே’’ என்று பில்ட்-அப் கொடுப்பார்கள். அந்தளவு இல்லை; அதற்கு இணையாக ஒரு பில்ட்-அப் பரம்பிக்குளத்துக்குக் கொடுக்கலாம். பரம்பிக்குளம் வந்துவிட்டு விலங்குகள் பார்க்காமல் வந்தால், அவர்கள் போன பிறவியில் இதே காட்டில் விலங்குகளாய்ப் பிறந்திருக்கலாம். டாப் ஸ்லிப் வரை, குஸ்காவுக்குள் இருக்கும் பீஸ் போல் ரொம்ப அரிதாகத்தான் காட்டெருமையோ, மானோ, மயிலோ, குரங்கோ, அணிலோ பார்த்தேன். ஆனால், பரம்பிக்குளம் அப்படியல்ல! பொங்கலுக்குள் இருக்கும் மிளகுகள்போல அங்கங்கே யானைக் கூட்டங்கள், காட்டெருமைத் தம்பதிகள், காட்டு அணில்கள், கும்பல் கும்பலாக மான்கள், கீரிப்பிள்ளைகள், கருமந்திகள், காட்டுப் பன்றிகள்... வாவ்! ஒரு காட்டெருமையை செம க்ளோஸ்-அப்பில் நான் புகைப்படம் எடுத்ததைக் கண்டு, எனக்கு நானே பெருமைப்பட்டுக் கொண்டேன். ‘‘குட்டியோட இருந்தாதான் டேஞ்ஜர். குத்திக் கிழிச்சுப்புடும்’’ என்று டிப்ஸ் தந்தார் கைடு. குட்டியோடும் ஒரு காட்டெருமை அம்மாவைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

Vikatan

“சிறுத்தையெல்லாம் உண்டோ?’’ என்றேன். ‘‘புலி, சிறுத்தை, ஜாகுவார் எல்லாமே இவ்விட உண்டு. அதுக்கெல்லாம் லக் வேணும்’’ என்றார் கைடு. 5 மணி வாக்கில், பழங்குடி நடனம் பார்த்தேன். கூடச் சேர்ந்து ஆட ஆப்ஷனும் கொடுத்தார்கள். இருட்ட ஆரம்பித்து விட்டிருந்தது. பகலிலேயே மிரட்டியது பரம்பிக்குளம். இரவில் சொல்லவா வேணும்? செம த்ரில்லிங்காய் இருந்தது. பரம்பிக்குளத்தில் பழங்குடியினரைத் தவிர வேறு யாரும் கால் வைக்க முடியாது. ஊருக்கு... ஸாரி காட்டுக்கு நடுவில் ஒரே ஒரு கடை இருந்தது. பிஸ்கட், பழம் வாங்கிக் கொண்டேன்.

நம் ஊரில் நாய்கள்போல், பரம்பிக்குளத்தில் பன்றிகள் கும்பல் கும்பலாய்த் திரிகின்றன. ‘பன்னி வித்தியாசமா இருக்கே’ என்று செல்ஃபி எடுத்தேன். விசாரித்தால், காட்டுப் பன்றி என்றார்கள். ‘டர்’ அடித்தது. காட்டுப் பன்றிகள் செம ஆபத்து. 5 பன்றிகள் சேர்ந்தால், ஒரு சிறுத்தையைக்கூட விரட்டிவிடுமாம். ‘‘பன்னி கடிச்சிடுச்சுன்னா, ட்ரீட்மென்ட் இங்கே கிடைக்காது. கீழதான் போகணும்’’ என்று எச்சரித்தார் கைடு. அதனால், இரவில் அறையில் இருந்து 300 மீ பயணித்து - சாப்பிடும் இடத்துக்கு வந்தாலும், காரில்தான் வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இரவு சப்பாத்தியும் சிக்கனும் ‘கோம்ப்ளிமென்டரி’ டின்னர் கொடுத்தார்கள். நட்ட நடு காடு; செம சைலன்ட் மோடு; அதில் ஒரு மர வீடு. உள்ளே நான். அனிமல்ஸ் பற்றிய கனவாக வந்து பயமுறுத்தியது. விரட்ட விரட்ட தூக்கம் துரத்துவதுதான் எப்போதும் எனக்கு நேரும். இப்போது தூக்கம் துரத்தப்பட்டது. நள்ளிரவில் எங்கோ ஒரு புலி உறுமிய சத்தம் நன்றாகவே கேட்டது. நடுநடுவே முழித்து பால்கனியில் நின்று அடிக்கடி பார்த்தேன். எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. நான் கண்ணைத் திறந்திருக்கிறேனா... மூடியிருக்கிறேனா? எல்லாமே ஒரே மாதிரிதான் இருந்தது. இருட்டுக்கு மட்டும் அப்படி ஒரு ஸ்பெஷல். என் மர வீட்டுக்குப் பக்கத்தில் திடீரென மின்மினிப் பூச்சிகளாகத் தெரிந்தன. டார்ச் அடித்துப் பார்த்தால், யானைக் கூட்டம்! பயமாகவும், சுகமாகவும் இருந்தது.

காலை 7 மணிக்கு வந்து கதவைத் தட்டினார் கைடு. ட்ரெக்கிங் கிளம்பினோம். கும்பலாக மான்கள் மார்னிங் வாக்கிங் போய்க் கொண்டிருந்தன. ‘‘இதெல்லாம் கரடிங்களோட வேலை...’’ என்று ஏதோ சில பள்ளங்களைக் காட்டினார். கரடிகள் இங்கே உணவுப் பொருட்களைச் சேர்த்து வைக்குமாம். ‘‘செந்நாய் இந்தப் பக்கம் போயிருக்கு’’ என்று எதையோ மோப்பம் பிடித்துவிட்டுச் சொன்னார். இரவு கண்ட கனவைவிட பயங்கரமாக இருந்தது. ‘‘புலி, சிறுத்தை, யானைகிட்ட இருந்துகூடத் தப்பிச்சுடலாம். கரடிங்ககிட்டயும் செந்நாய்கிட்டேயும் சிக்கினா கைமாதான்!’’ என்று கிலியூட்டினார் கைடு. கரடியும் செந்நாயும் இரைக்காக நம்மைத் தாக்காது. கடுப்பைக் கிளப்பினால் மட்டும் மனிதர்களைத் தாக்குவது கரடியின் ஸ்டைல் என்றால், பார்த்தாலே போட்டுத் தள்ளும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்களின் ஜீன் செந்நாயினுடையது. சுற்றுலாவாசிகளின் குறும்பால் தாக்க வந்த கரடியிடம் கடிபட்டு, சிகிச்சை எடுத்து உயிர் பிழைத்து, மறுபடியும் வேலையில் சேர்ந்த கைடு ஒருவரைக் காட்டினார் என் கைடு.

ட்ரெக்கிங் முடிந்து போட்டிங். பரம்பிக்குளம் அணை. பெடல் படகிலோ, மோட்டார் படகிலோ போய் என்ஜாய் பண்ணும் விஷயமில்லை. மூங்கில் கழிகளாய் கட்டி, மேனுவலாக பெரிய படகு தயாரித்திருந்தார்கள். ‘‘இதுதான் சார் மூழ்காது. ஆபத்தில்லை’’ என்றார் படகோட்டி. அடுத்து அவர் சொன்ன சேதி, வடிவேலுபோல் படகிலேயே ‘உச்சா’ போய்விடுவேன் என்கிற நிலைக்கு ஆளாகிவிட்டேன். ‘‘குளத்துல லட்சக்கணக்குல முதலைங்க இருக்குது சார்.’’

என் மிரட்சியைப் பார்த்துப் புரிந்து கொண்டவராக, ‘‘மனுஷங்களை ஒண்ணும் பண்ணாது சார். அதுக்கு சாப்பிட நிறைய மீன் இருக்கு!’’ என்று தேற்றினார். சமயங்களில் முதலையே முதலையைச் சாப்பிட்டுப் பசியாறிக் கொள்ளுமாம். என் குரல் கேட்டோ என்னவோ, கரையில் ‘சன் பாத்’ எடுத்துக்கொண்டிருந்த முதலை ஒன்று சரேலெனத் தண்ணீருக்குள் பாய்ந்து, நம் படகின் கீழ் சென்றது. கும்மிருட்டில் குண்டூசியைத் தேடுவதுபோல் தண்ணீருக்குள் முதலையைத் தேடினேன். அடுத்த கரையில் யானையார் ஒருவர் குளியல் போட்டுக் கொண்டிருந்தது குட்டியாய்த் தெரிந்தது. ரொம்ப நாட்களாக அவர் இங்கேயே இருப்பதாகவும், கிட்டே போனால் அணையில் நீச்சல் அடித்துத் துரத்துவதாகவும் சொன்னார் படகோட்டி.

பிரேக்ஃபாஸ்ட் முடித்தபோது, செக்-அவுட் டைமிங் வந்துவிட்டது. மறுபடியும் காரில் பயணம். பரம்பிக்குளத்தில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடம் - ‘கன்னிமரா தேக்கு’. மொத்தமாக 5 பேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அளவு தடிமன் கொண்டது. 460 வருடம் பழைமையானது என்று 40 வருடத்துக்கு முன் அறிவிப்புப் பலகை வைத்திருந்தார்கள். அப்படியென்றால், 500 வருட பழசு. கன்னி கழியாத மரம், ஒரு காலத்தில் சீதைபோன்று கற்புக்கரசியாக இருந்த கன்னி எனும் பெண்ணைக் கட்டி வைத்த மரம், தேவதை மரம் என்று ஆளுக்கொரு கதை சொன்னார்கள். ஃபேன்டஸி படம் என்று விளம்பரப்படுத்தி, ரசிகர்களைப் படுத்தி எடுக்கும் சில டைரக்டர்கள், இதைக்கூடப் படமாகப் பண்ணலாம்.

5 கி.மீ போவதற்கு 1 மணி நேரம் ஆனது. அப்படிப்பட்ட கரடுமுரடு காடு. நான் எஸ்யூவியைத் தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம். நீருக்குள்ளே மூழ்கும்போது காதடைத்து அமைதியின் சத்தம் கேட்குமே... அதுபோல்தான் காட்டுக்குள்ளே அமைதி ‘குய்’யென சத்தம் போடும். கன்னிமரா தேக்கு மரத்துக்குப் போகும் வழி அப்படியொரு அமைதி. ‘‘இவ்விட ஒரு புலியோட குகையுண்டு.... உள்ளே விலங்குகளோட எலும்புகளாயிட்டு காணலாம்...’’ என்று புலி கதை சொல்லி கிலியூட்டினார் கைடு. பரம்பிக்குளம் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 40 புலிகள் இப்போது 25-ஆகக் குறைந்திருப்பதாகச் சொன்னார் கைடு. இங்கே காரை விட்டு இறங்கத் தடை; கைடு துணையின்றி நாமாகச் செல்லத் தடை. இப்போதெல்லாம் கோபக்கார யானைகள் கன்னிமராவைச் சுற்றித் திரிவதாகவும் சொன்னார் அவர். இரவு 7.30 மணிக்கு மேல் புலி நடமாடுவதை இங்கே பார்க்கலாமாம். அதற்காகத்தான் ஒரு பேக்கேஜுக்கு இரவு சவாரி ஆப்ஷன் வைத்திருக்கிறது கேரள அரசு. கன்னிமரா தேக்கு, சாதாரண மரம் இல்லை இது. 1994-95-ல் இந்திய அரசால் ‘மஹாவிருக்ஷா புரஸ்கார்’ விருதெல்லாம் வாங்கியிருக்கிறது. கன்னிமரா தேக்கில் செல்ஃபி எடுக்கும்போது, கை நடுங்கியது.

மறுபடியும் 5 கி.மீ-யை ஒரு மணி நேரத்தில் பயணித்தேன். அடுத்து தூணக்கடவு டேம் வந்தோம். இதுவும் கொஞ்சம் டெரரான காட்டேஜ். 6.30 மணிக்கு மேல் ‘ஜங்கிள் புக்’ படத்தில் வருவதுபோல் மொத்தமாக எல்லா விலங்குகளும் இங்கே தண்ணீர் அருந்த வருமாம். காட்டேஜ் பால்கனியில் ஹாயாக கட்டஞ்சாயா உறிஞ்சியபடி, விலங்குகள் தண்ணீர் அருந்துவதைப் பார்க்கலாம் எனும்படி இந்த மரவீட்டை வடிவமைத்திருக்கிறார்கள் இன்ஜீனியர்கள்.

திடீரென கேரளாவுக்கு நடுவே தமிழ்நாடு வந்தது. இங்குள்ள ‘சர்க்கார்பதி டனல்’ தடை செய்யப்பட்ட ஏரியா என்றார்கள். டனல் வழியைத் தாண்டி ஓர் இடத்தில் ‘குருதிப்புனல்’ கமல்போல் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு சாம்பார் மான் என்னை மிரட்சியாகப் பார்த்தது. ‘‘புலி, சிறுத்தை கடிச்சிருக்கலாம். இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல செத்துடும்’’ என்றார் கைடு. பாவமாய் இருந்தது.

லேசாக மழை தூறியது. இப்போது, தேசியப் பறவைகளும் ஜோசியப் பறவைகளும் ஹாய் சொல்லின. மழை வந்தால் இறகுகள் கனமாகி, பறக்க முடியாமல் கிளைகளில் டேரா போட்டு விடுமாம் மயில்கள். பரம்பிக்குளம் ரிசப்ஷனில், குண்டு குண்டாக இருந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் செக்போஸ்ட் வந்தேன். கிளம்பிச் செல்ல மனசே இல்லை. பேசாமல், திரும்பவும் யு-டர்ன் அடிக்கலாமா என்றுகூட யோசித்துவிட்டேன். நடக்கப் பழகும்போது குழந்தைகள், இறக்கிவிடச் சொல்லி அடம்பிடிக்கும். நடக்கப் பழகியபிறகு தூக்கச் சொல்லி அடம்பிடிக்கும். நானும் அந்த மனநிலையில்தான் இருந்தேன்.

அடுத்த கட்டுரைக்கு