Published:Updated:

ஏ..குருவி சிட்டுக்குருவி..!

வீ.மாணிக்கவாசகம், படங்கள்: க.சத்தியமூர்த்தி

ஏ..குருவி சிட்டுக்குருவி..!

வீ.மாணிக்கவாசகம், படங்கள்: க.சத்தியமூர்த்தி

Published:Updated:

வீட்டின் திண்ணைச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியில் கால் பதித்து, சிட்டுக் குருவிகள் முகம் பார்த்துச் சிரித்தது ஒரு காலம். இப்போது சிட்டுக்குருவிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இந்த நிலையில்தான் ஒரு பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்பில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை வளர்க்கிறார்கள்.

ஈரோடு - சென்னிமலை செல்லும் வழியில் மருதுறை எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஒரு காலை நேரத்தில் அங்கு சென்றபோது, சிட்டுக்குருவிகளுக்குத் தீனி வைப்பதில் மும்முரமாக இருந்தனர் மாணவர்கள். இன்னும் சிலர் சிட்டுக்குருவிக் குஞ்சுகளை கையில் வைத்துக்கொண்டு வாஞ்சையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தனர்.

ஏ..குருவி சிட்டுக்குருவி..!

வகுப்பறையின் வெளியே வராண்டா கூரையில் வரிசையாக ஓட்டை போடப்பட்ட பானைகள் தொங்க... எல்லாவற்றிலும் சிட்டுக்குருவிகள் கொஞ்சி விளையாடுகின்றன.  

''முதல்லல்லாம் காக்கா, குருவியைப் பார்த்தா ஜாலியா அடிச்சு விரட்டுவோம். இப்போ அப்படிச் செய்யறது இல்லை. நாம வளர்க்கிற குருவி, நம்ம ஃப்ரெண்டு மாதிரினு தோணுது'' என்கிறான் மாணவன் ஹரி.

பள்ளி வளாகம் முழுக்க கிட்டத்தட்ட 25 கூடுகள் அசைந்தாடுகின்றன. வளாகம் எங்கும் 'க்ரீச்... க்ரீச்’ சத்தம். இவர்களின் இந்த ஆர்வத்துக்கு முழுமுதல் காரணம், ஆசிரியர் கார்த்திகேயன்.  

''எனக்குச் சுற்றுச்சூழல் மேல ஆர்வம் அதிகம். கோயம்புத்தூர் 'ஓசை’ அமைப்பின் செயல்பாடுகளில் பங்கெடுப்பேன். அவங்க சுற்றுச்சூழல் சம்பந்தமா நிறைய விஷயங்கள் சொல்வாங்க. அப்படித்தான் சிட்டுக்குருவிகள் மேல ஆர்வம் வந்தது. செல்போன் டவர் வந்ததுனால சிட்டுக்குருவிகள் குறைஞ்சுப் போச்சானு தெரியலை. ஆனா, சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கியக் காரணம், சிறுதானியங்களை யாரும் பயிர் பண்ணாததுதான். கேழ்வரகு, சோளம், கம்பு இதுகளைத்தான் சிட்டுக்குருவிகள் அதிகமா விரும்பிச் சாப்பிடும். இதையெல்லாம் யாரும் பயிர் பண்றதே இல்லை. அதனால தானாகவே சிட்டுக்குருவி குறைஞ்சுபோச்சு. அதுபோல மனிதர்கள் வசிக்கிற கூரை வீடு, ஓட்டு வீடுதான் அதுங்களோட வீடு. அந்த மாதிரியான வீடுகளும் இன்னைக்குக் குறைஞ்சிடுச்சு.  பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் அதிகமா பயன்படுத்துறதால சின்னச் சின்னப் புழுக்களும், பூச்சி இனங்களும் தோட்டத்துல இல்லாம போச்சு. அவைதான் சிட்டுக்குருவிக்கான உணவு.  

ஏ..குருவி சிட்டுக்குருவி..!

தங்குற இடம், உணவு... இது ரெண்டும்தான் சிட்டுக்குருவிகளுக்கு இப்போதைய பிரச்னைகள். அதனால பள்ளி மாணவர்களைவெச்சு இது ரெண்டையும் எங்களால் முடிஞ்ச வரை சரி பண்ணணும்னு நினைச்சேன். பொதுவா எல்லா பசங்களையும்போல இவங்களும் வேட்டையாடுறது, ஒரக்கை அடிக்கிறதுன்னுதான் இருந்தாங்க. ஒரு உயிரை நாம துன்பப்படுத்துறோமேங்கிற எண்ணமே இருக்காது. அவங்க மனசுல சக உயிர்கள் மேல இயல்பான பிரியத்தை உண்டாக்கணும்னுதான், 'நாம சிட்டுக்குருவி வளர்ப்போம்’னு இதை ஆரம்பிச்சேன். விளையாட்டுபோல ஆரம்பிச்ச பசங்க அப்புறம் அதை ஆர்வமா செஞ்சாங்க. அவங்களே முன்ன நின்னு செய்ய ஆரம்பிக்கவும், மொத்தப் பொறுப்பையும் கையில எடுத்துக்கிட்டாங்க. சிட்டுக்குருவி முட்டை விட்டா, 'சார், ரெண்டு முட்டை விட்டுருக்குது’னு சந்தோஷமா ஓடி வருவாங்க. அந்த முட்டை குஞ்சு பொரிச்சா பரவசமாகிருவாங்க. பொதுவா சிட்டுக்குருவிகள் ஆள் அரவம் கேட்டாலே பறந்துரும். ஆனா, இங்கே வளர்ற சிட்டுக்குருவிகள் ரொம்ப சகஜமா வகுப்புக்குள்ளேயே வந்து உலாத்துதுங்க'' எனப் பூரிக்கிறார் கார்த்திகேயன்.

ஆறு முதல் எட்டு வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள்தான் சிட்டுக் குருவிகளுக்கான பொறுப்பாளர்கள். பானைகளைக் கொண்டுவருவது, அதற்குள் வைக்க தேங்காய் நார்களைச் சேகரிப்பது, குருவிக் குஞ்சுகளைப் பாதுகாப்பது போன்றவை இவர்களின் பணி. இவற்றை ஆசை ஆசையாகச் செய்துவருகின்றனர் மாணவர்கள்.

''இங்கே நாங்க கட்டிவிட்டிருக்கிற பானையில சிட்டுக்குருவி வந்து குடியிருக்காது. இதுல வந்து ஜாலியா விளையாடும், பொழுதுபோக்கும். பானையில நாங்க வைக்கிற தேங்காய் நாரை எடுத்துட்டுப் போய் சுவர் இடுக்கு, ஜன்னல் ஓரத்துல கூடு கட்டி அதுலதான் குடியிருக்கும்; முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். அதுபோல சிட்டுக்குருவி அதோட கூட்டுக்கு எப்பவும் வரும்னு சொல்ல முடியாது.

ஏ..குருவி சிட்டுக்குருவி..!

இனச்சேர்க்கை செய்ய, முட்டை இட வரும். குஞ்சு பொரிச்சு அதுங்க பெரிசாயிருச்சுன்னா அப்புறம் கூடு பக்கமே வராது. அடுத்து முட்டையிடும்போது அடுத்த கூட்டை அமைச்சுக்கும். இதெல்லாம் நாங்க குருவிங்களோடு தொடர்ந்து பழகித் தெரிஞ்சுக்கிட்டது. எனக்கு மட்டும் இல்லை. எங்க பசங்க யாரைக் கேட்டாலும் இப்போ சிட்டுக்குருவிகளோட வாழ்க்கை வரலாற்றையே சொல்வாங்க'' என மேலும் மேலும் பெருமிதம் பகிர்கிறார் கார்த்திகேயன்.

சிட்டுக்குருவிகள் வளர்க்கத் தொடங்கிய பிறகு மாணவர்களின் பழக்கவழக்கத்தில் ஆச்சர்யப்படும்படியான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நடத்தையில் ஒழுங்கு, மற்றவர்கள் மீது அக்கறை, பிற உயிர்களைத் துன்புறுத்தாமை போன்ற குணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர். மாணவர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்கவும் வளர்த்தெடுக்கவும் பள்ளியில் நீர் நாள், வன நாள், சிட்டுக்குருவி நாள்... என ஒவ்வொரு நாளையும் கொண்டாடுகின்றனர்; கருத்தரங்கம் நடத்துகின்றனர். இதன் வழியே மரங்கள் மற்றும் மற்ற சிறு உயிரினங்களின் முக்கியத்துவத்தை பிஞ்சு மனங்களில் பதியவைக்கின்றனர். இந்தச் செயல்பாடுகளின் நல்விளைவாக மாணவர்கள் சிலர், அவர்களின் வீடுகளிலும் சிட்டுக்குருவிகளுக்கு கூடுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

''இதைத்தானே எதிர்பார்க்கிறோம்? ஒரு நல்ல விஷயத்தை நாமளும் செய்வோம்னு அவன் நினைக்கிறதுதான் முக்கியம். இதைவிட வேற என்ன வேணும்?'' - கார்த்திகேயன் சொல்லும்போது

பாரதியாரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

'காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்!’