Published:Updated:

‘அதிர்ச்சி’ கவர்ச்சி இனி இல்லை!

கார்க்கிபவா

‘அதிர்ச்சி’ கவர்ச்சி இனி இல்லை!

கார்க்கிபவா

Published:Updated:

நிர்வாணம்... 'ஆதாம்-ஏவாள்’ தவிர அனைத்து மனித மனங்களையும்  சஞ்சலப்படுத்தும் விஷயம். அதைப் பலவிதங்களில் கடைச்சரக்காக்கி காசாக்கினான் மனிதன். ஆனால், 'நிர்வாணத்துக்கும்’ ஒரு கலை அந்தஸ்துகொடுத்து பூஜித்துப் போஷித்தது அமெரிக்காவில் இருந்து வெளியான 'ப்ளேபாய்’ பத்திரிகை. அந்தப் பத்திரிகையின் நடுப்பக்கம், அட்டைப் படம் என, எங்கெங்கும் அலங்கரித்தன ரசனை நிர்வாணங்கள். படிக்கவே தெரியாத  உலகின் எந்த நாட்டுக் குடிமகனுக்கும்கூடத் தெரிந்த ஒரே பத்திரிகை 'ப்ளேபாய்’. காரணம்...நிர்வாணம்!      

ஆனால், அந்த 62 ஆண்டுகால வரலாறு, கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. 'இனி நிர்வாணப் படங்களை வெளியிடுவது இல்லை’ என முடிவெடுத்திதிருக்கிறது 'ப்ளேபாய்’ நிர்வாகம். உலகத்தை உலுக்கும் அதிர்ச்சி செய்தி அல்ல இது. ஆனால், நிச்சயம் ஒரு கலாசாரத் திருப்புமுனை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 ‘அதிர்ச்சி’ கவர்ச்சி இனி இல்லை!

ப்ளேபாயின் இந்த முடிவுக்கு, பல காரணங்கள்... அச்சு ஊடகங்கள் இனி இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் இடம்பிடித்தால் மட்டுமே இளைஞர்கள் இடையே ஊடுருவ முடியும். அவர்கள்தான் எதிர்கால வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.  ஆனால், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் நிர்வாணப் படங்களை எளிதில் அனுமதிப்பது இல்லை. ஆப்பிள் போன்ற மொபைல் நிறுவனங்களும் போர்னோகிராஃபி விஷயங்களைத் தடைசெய்கின்றன. எனவே, 'ப்ளேபாய்’ இன்றைய வாசகர்களைச் சென்றடைய நிர்வாணப் படங்களை விட்டுக்கொடுத்தே ஆகவேண்டியிருக்கிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நிர்வாணப் படங்கள் இணையம் முழுக்க  கொட்டிக்கிடக்கின்றன. அதற்கான தேவைகளும் இப்போது குறைவு. அதனாலேயே 'நிர்வாணப் படங்களை மட்டுமே ப்ளேபாய் நிறுத்துகிறது. செக்ஸ் தொடர்பான கட்டுரைகளும், மற்ற விஷயங்களும் தொடர்ந்து வெளிவரும்’ என்கிறார் ப்ளேபாயின் தலைமை நிர்வாகி (உள்ளடக்கம்) கோரி ஜோன்ஸ். இவர் சென்ற ஆண்டு ஜூலை மாதம்தான் இந்தப் பொறுப்புக்கு வந்தார். ப்ளேபாய் நிறுவனர் ஹ்யு ஹெஃப்னரிடம் தனது இந்தப் பரிந்துரையை காரண காரியங்களுடன் அழுத்தமாகச் சொல்லி, இந்த முடிவை எடுக்கவைத்திருக்கிறார்.

 ‘அதிர்ச்சி’ கவர்ச்சி இனி இல்லை!

ஏற்கெனவே ப்ளேபாயின் இணையதளத்தில் நிர்வாணப் படங்கள் இடம்பெறுவது இல்லை. அலுவலக நேரங்களில் இணையத்தை மேய்பவர்கள் ப்ளேபாய் தளத்தைத் திறக்கத் தயங்குவார்கள். அதனாலேயே இணையதளத்தில் 'நோ நிர்வாணம்’ கொள்கையை அமல்படுத்தியது ப்ளேபாய். அந்த நடவடிக்கையால் ப்ளேபாய் தளத்தின் ஹிட்ஸ் அதிகரித்தது. அது மட்டும் அல்லாமல், பார்வையாளர்களின் சராசரி வயது 47-ல் இருந்து 30 ஆகக் குறைந்திருக்கிறது. எனவே, இணையதளத்தில் எடுத்த அதே முடிவை, அச்சுப் பதிப்பிலும் பரிசோதிக்க முடிவெடுத்திருக்கிறது.  

ப்ளேபாயின் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் ரென்சின்.

' 'ப்ளேபாய்’க்காக நான் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்களைப் பேட்டி எடுத்திருக்கிறேன். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், 'நிர்வாணப் படங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களில் என் பேட்டியை இடம்பெறச் செய்யாதீர்கள்’ என்பதுதான்’ என்கிறார் ரென்சின்.

மர்லின் மன்றோவில் ஆரம்பித்து ட்ரூ பேரிமூர், மடோனா, பமீலா ஆண்டர்சன், லிண்ட்சே லோஹன் என 'ப்ளேபாய்’க்காக ஆடை துறந்தவர்கள் ஏராளம். இப்போதும் டாப் ஸ்டார் நடிகைகள் ப்ளேபாய்க்காக ஆடை துறக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், நிதர்சனம் என்னவென்றால், 1975-ம் ஆண்டுவாக்கில் 56 லட்சம் புத்தகங்கள் விற்ற ப்ளேபாய், தற்போது 8 லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனை ஆகிறது. 'செக்ஸ் இலக்கியம்’ என்ற வரையறைக்குள் அடங்கும் பத்திரிகையாக ப்ளேபாய் இருந்தாலும், இன்றைய இளைஞர்கள் கிளர்ச்சியைத் தூண்டும் செக்ஸ் எழுத்துக்களை வாசிக்க முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.  'அதுக்கும் மேல’ ஏதேதோ எதிர்பார்க்கிறார்கள். அதனால் தனது அடையாளத்தையே மாற்றிக்கொள்ள முன்வந்திருக்கிறது 'ப்ளேபாய்’. இது லாப பலன்களைக் கொடுக்குமா என்பதற்கு... காலமே பதில் சொல்லும்!

பாசிட்டிவ் ஆன நெகட்டிவ்!

 ‘அதிர்ச்சி’ கவர்ச்சி இனி இல்லை!

மர்லின் மன்றோ பிரபலமாவதற்கு முன்னர், டாம் கெல்லி என்கிற புகைப்படக் கலைஞர் வெறும் ஐம்பது டாலருக்கு அவரை நிர்வாணமாகப் படம்பிடித்தார். ஹெஃப்னர், 'ப்ளேபாய்’ பத்திரிகை ஆரம்பித்தபோது அந்தப் படங்களை எங்கேயோ வாங்கி நடுப்பக்கத்தில் 'ஸ்வீட் ஹார்ட் ஆஃப் த மன்த்’ எனப் பிரசுரித்தார். அப்போது மர்லின் மன்றோ நடித்த படங்கள் வெளியாகி, சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தன. 'நிர்வாணச் சர்ச்சை’யை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாத மர்லின், உடனடியாக ஒரு பேட்டி கொடுத்தார். 'நிர்வாண போஸ் தந்தபோது என்னிடம் வீட்டு வாடகைக்குக்கூடப் பணம் இல்லை. வேறு வழி இல்லாமல்தான் அதைச் செய்தேன்’ என உள்ளது உள்ளபடிச் சொன்னார். அந்த ஐடியா வொர்க்-அவுட் ஆனது. மர்லின் மீது மக்களுக்கு இரக்கமும் அபிமானமும் பிறக்க, அவரின் புகழும் கொடிகட்டிப் பறந்தது!

ஒரே இந்திய நடிகை!

இந்தியாவைச் சேர்ந்த ஷெர்லின் சோப்ரா ஒருமுறை 'ப்ளேபாய்’-க்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார். இந்தியாவில் ' 'ப்ளேபாய்’ தடைசெய்யப்பட்ட புத்தகம். அதில் இந்திய நடிகை ஒருவரின் நிர்வாணப் படமா..!’ எனச் சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அதன் பின்னர்தான் ஷெர்லின் சோப்ராவின் புகழ் இந்தியாவில் அதிகமாகியது. 60 ஆண்டுகளில் தயாரான 713 'ப்ளேபாய்’ அட்டைப் படங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகை ஷெர்லின் சோப்ராதான்!