'இளமையில் நோயேற்றி முதுமையில் நோயாற்று!’ - போலி நவீனமும் குப்பை உணவுக்கூட்டமும் நமக்கு விட்டுச்சென்றிருக்கும் சொலவடை இது. இளமையின் நெருக்கடிகளும், அதன் விளைவாக நிகழ்த்தப்படும் பண்பாட்டுச் சிதைவுகளும் நோய்க் கூட்டத்துக்குக் களம் அமைக்கின்றன. விளைவு? நம்மில் பலருக்கும் 'முதுமை’ என்பது, நோயின் கிடுக்கிப்பிடியில் நசுங்கும் காலமாக மட்டுமே மாறிவருகிறது. அதிலும் புற்றைப் பிரசவிக்கும் பொழுதாக முதுமை மாறிவிடுகிறது என்கின்றன ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும். 

வயிற்றில் அடிக்கடி சின்னதாக நிகழும் வாயுக்குத்துக்குப் பின்னால், இரைப்பை, பித்தப்பை அல்லது கணையத்தின் அடினோகார்சினோமாக்கள் ஒளிந்திருப்பது பெரும்பாலும் அந்த வயதில்தான். 'சர்க்கரை நோய்தான் கட்டுக்குள் உள்ளதே, பிறகு ஏன் இரவில் சிறுநீர் கழிக்கும் உந்துதல் அடிக்கடி நிகழ்கிறது?’ என்ற பிரச்னைக்குப் பின்னால் ஆண்களுக்கு தற்செயலாக வரும் புராஸ்டேட் கோள வீக்கம், 'நான் அதையும் தாண்டி’ எனப் பயமுறுத்துவது முதுமையில்தான். வெறும் மலச்சிக்கலுக்குப் பின், 'மலக்குடலினுள் குருத்துவிட்டிருக்கும் சின்ன முளைப்புற்றா... வெறும் சதை வளர்ச்சியா?’ என்ற ஐயம் பெரிதாகக் கிளம்பும் காலம் பின்நரைக் காலம்தான். 'மாதவிடாய் முடியும் சமயம்கூட இத்தனை குறுக்குவலி வரவில்லை. இப்ப முதுகு ஏன் இப்படிக் குடையுது?’ என்ற மன உளைச்சலுக்குப் பின்னால், 'முதுகுத்தண்டு வடத்தில் ஏற்பட்டிருப்பது வயோதிகத் தேய்வா... அல்லது புற்றரிப்பா?’ எனும் கேள்வி தொக்கி நிற்பதும், பேத்திக்கு காலையில் உணவு கட்டிக்கொடுத்து அனுப்பும் வயதின்போதுதான்!

உயிர் பிழை - 11

துரதிர்ஷ்டவசமாக இந்த முதுமைக்கால நோய்க்கூட்டத்தை ஆரம்பத்திலேயே சரியாகக் கண்டறிய, நம் ஊர் வாழ்வியல் நெருக்கடிகள் பெரும்பாலும் விட்டுவைப்பது இல்லை.  'கோகிலாவுக்கு வரன் ஒண்ணு கும்பகோணத்துல இருக்குதுனு லோகு மாமா சொன்னாங்க. ஒரு எட்டு போய் வந்திடுவோமா?’ என்ற கேள்வி, ஆறு, ஏழு மாதங்களாக தன் மலக்குழாய்க்குள் வளரும் குருத்தைப் பரிசோதிக்கும் சோதனையைத் தள்ளிப்போடும். 'ஆறு வருஷம் கடந்தும் மகள் வயிற்றில் இன்னும் பிள்ளை தங்கலையே!’ எனும் வருத்தத்தில், இரண்டு வருடங்களாகத் தொடரும் அம்மாவின் வயிற்றுவலிக்கான சிகிச்சை புறக்கணிக்கப்படும். இதை எல்லாம் தாண்டி ஒருவேளை, 'சார்... இது மலக்குடலின் கீழ் பகுதியில் உள்ள புற்று. பயப்பட வேண்டாம். அறுவைசிகிச்சையில் அகற்றிவிடலாம். கட்டி சிறியதுதான். மலம் கழிவதற்கு வயிற்றுப் பகுதியில் பை எல்லாம் வைக்க வேண்டாம்; அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள்’ என மருத்துவர் சொல்லும்போது, 'எதுக்கு சார் இப்போ தண்டச் செலவு? கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், மூணு லட்சத்தைத் தொட்டுவிடும்போல இருக்கே. வேணாம் சார். ரத்தம் போவதை நிறுத்த மட்டும் மருந்து கொடுங்க. வேட்டியில் அடிக்கடி சிவப்பாகி சில நேரம் சங்கடமாகிடுது’ எனச் சொல்லும் ஏழை முதியவர்கள் பலரை எனக்குத் தெரியும்.

'அப்பா... நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்?’ எனச் சொல்லவேண்டிய அவர்களது மகன்கள் சிலிகான்வேலிக்குள்ளும், 'கொஞ்சம் நீ நகர்ந்துக்கோம்மா, நான் சமைக்கிறேன்’ என உதவவேண்டிய மகள்கள் சின்னத்திரை சீரியலுக்குள்ளும் சிக்கிச் சின்னாபின்னமாகி சில வருடங்கள் ஆகிவிட்டன. பணக்கார முதுமை... தனிமையிலும் தவிப்பிலும், சொந்த வீட்டு முதியோர் இல்லத்திலோ அல்லது வாடகை முதியோர் இல்லத்திலோ தவிக்க, வறுமையின் முதுமையோ அரசாங்க மருத்துவமனை வாசலில் தவம் இருக்கிறது.

இந்திய முதியோர் ஆண்களில் மடமடவென உயரும் உயிர்பிழைதான் 'புராஸ்டேட் கோளப் புற்று’. ஒருகாலத்தில் ஐரோப்பியருக்கும் அமெரிக்கருக்கும்தான் இந்த நோய் அதிகம் என இருந்த காலம் மலையேறி, இந்தியப் புற்றுநோய்க் கூட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது புராஸ்டேட் கோளப் புற்றுக்கள். ஆனாலும் அமெரிக்கரில் லட்சத்தில் 85 பேருக்கும், வட ஐரோப்பாவில் லட்சத்தில் 30 பேருக்கும் புராஸ்டேட் புற்று உள்ளது. இப்போது இந்தியாவில் லட்சத்தில் வெறும் 8 முதல் 9 பேருக்கு மட்டுமே என, புள்ளிவிவ ரங்கள் சொல்கின்றன.

புராஸ்டேட் கோளம் ஆணுக்கு மட்டுமே உண்டு. சிறுநீர்ப்பைக்குக் கீழாக அணைந்தபடி ஒரு சிறு வாதங்கொட்டை அளவில் இருக்கும் இந்தக் கோளம்தான், உடலுறவில் விந்தைப் பீய்ச்சியடிக்கும் பிதுக்கல் வேலைக்கு உதவும் உறுப்பு. கூடவே விந்தணுக்களுக்கான உணவை, தன் திரவம் மூலம் தந்து வாழவைக்கும் கோளம் அது. முதுமையின் வாசற்படிக்கு 50-களின் முடிவில் வரும்போது இந்த உறுப்பு சற்றே லேசாக வீங்குவது இயல்பு. சில நேரத்தில் வீக்கம் கொஞ்சம் ஓவராகப் போகும்போது,  தாம்பரத்தில் ரயில் ஏறி, எக்மோரில் இறங்கி, பென்ஷன் ஆபீஸுக்குப் போவதற்குள்ளாக ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி, 10-15 சொட்டுக்கள் சிறுநீரைக்கூடக் கழிக்க ஓடவைக்கும். மருத்துவ சோதனையில் ஸ்கேனில்,  Prostatic hypertrophy   என்பது உறுதிப்படுத்தப்படும். ஆனால், அந்த வீக்கம் சாதாரண வீக்கமா (benign) அல்லது புற்றுவீக்கமா  (malignant) என்பது ரத்தப் பரிசோதனையில்தான் தெரியவரும்.

சாதாரண வீக்கத்தைப் பொறுத்தவரையில் அது மயிரில் ஏற்படும் நரைபோல மடியின் உள்ளே ஏற்படும் நரை மட்டுமே. அதிக மெனக்கெடல்கள் தேவை இல்லை. சின்னச் சின்னப் பராமரிப்பு மருத்துவங்கள் போதுமானது.  நவீன மருத்துவம் புராஸ்டேட் கோள வீக்கத்தை ஹார்மோன்கள் மூலம் சுருக்கி, உள்ளே சிக்கி நைந்திருக்கும் சிறுநீரகப் பாதையை விரித்துவிட்டு, இந்தத் தொல்லையைக் கட்டுப்படுத்துகிறது. சமயங்களில் சிறுநீர் வரும் பாதை வழியாக சலாகை (tube) ஒன்றைச் செலுத்தி, அடைத்திருக்கும்  சதைப் பகுதியை நீக்கி சரிசெய்வர். சித்த மருத்துவர்கள் நெருஞ்சி முள்ளில் இருந்து கண்ணுப்பீளைச் செடி கஷாயம் வரை பல மூலிகைகளைக் கொண்டு, இந்தச் சதை அடைப்பைச் சரிசெய்வார்கள்.

'கள்ளினும் காமம் பெரிது’ எனும் நம் வள்ளுவ ஆசானின் சொல், புராஸ்டேட் கோள வீக்கம் குறித்த விஷயத்தில் கூடுதல் கவனம் பெறுகிறது. உடலுறவு மகிழ்வை அடிக்கடி பெறும் ஆணுக்கு, இந்தப் பிரச்னை அதிகம் வருவது எல்லை என ஒரு மருத்துவப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உடனே, 'அடடா... ஒன்பது வாரங்கள் கழித்துத்தான் இந்த முக்கியமான விஷயத்தைச் சொல்லணுமா?’ என அவசரப்பட வேண்டியது இல்லை.

'கன்னிமயக்கத்தால் கண்டிடும் மேகமே; கோதையர் கலவி போதை கொழுத்த மீனிறைச்சி போதை... பிரமேகம் வந்து சேரும்தானே’ என மேக நோய்க்கான காரணங்களாக பல ஐ.பி.சி செக்‌ஷன்கள் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. அளவாக காதல் செய்தால் மேகமும் வராது; புராஸ்டேட் வீக்கமும் வராது.

'சரிங்க சார்... வந்திருச்சு. பந்தியில் என்ன சங்கதி எல்லாம் பார்க்கணும்னு சொல்லுங்க’ என்பவர்களுக்கு சில செய்திகள்.

ஒரு கப் மாதுளைச் சாறு (ஆன்ட்டி ஆக்சிடென்ட்), மூன்று தக்காளிப் பழத்தோல் (லைக்கோப்பின்கள்), இரண்டு ஆரஞ்சுப் பழத்தின் உட்தோல் (சிட்ரஸ் பெக்டின்), பூசணி விதை, வெள்ளரி விதை...  இப்படி பல உணவுக் கரிசனங்கள் புராஸ்டேட் வீக்கத்தைக் குறைக்க உதவும். அதோடு அதைப் புற்றாக மாறிவிடாது தடுக்கவும் செய்யும் என்கிறது தமிழ் மருத்துவத் தரவுகளும் தாவர அறிவியல் ஆய்வுகளும்.

அதே சமயம் Prostatic specific antigen அளவு கூடிப்போய்  புராஸ்டேட் கோளத்தின் வீக்கம் புற்றாக இருக்கும் பட்சத்தில், அதன் சிகிச்சை பராமரிப்பு விஷயங்கள் முற்றிலுமாக மாறுகின்றன. பெரும்பாலும் 70-வது வயதுகளில் ஏற்படும் இந்தப் புற்றைக் கண்டு முதலில் பெரிதாகப் பதறவேண்டியது இல்லை. இயல்பிலேயே கொஞ்சம் அசமந்தமான புற்று இது. இந்தப் புற்றுக்கான உற்சாகப் பானம் 'டெஸ்டோஸ்டிரான்’ எனும் ஆண்மைச் சுரப்பு. வயோதிகத்தில் இயல்பாக டெஸ்டோஸ்டிரான் குறையும்போது ஊக்கமும் உற்சாகமும் கிடைக்காமல், இந்தப் புற்றின் வளர்ச்சியும் மந்தப்படுமாம். ஒருவேளை புராஸ்டேட் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், டெஸ்டோஸ்டிரானைச் சுரக்கவைக்கும் விதைப் பையின் உள்ளே இருக்கும் விதைகளை (testes)  நீக்கவும் நவீன மருத்துவர்கள் முடிவுசெய்வர். ஆரம்பக்கட்ட புராஸ்டேட் புற்றாக இருக்கும்பட்சத்தில், நவீன கீமோ மருந்துகளின் பயன் பெரிதாக வருமேயொழிய வயோதிகத்தின் தீவிரத்தில், முதுமையின் தளர்வில் இருக்கும் ஒருவருக்கு அவசியம் இல்லாமல் பெரும்ரசாயன மருந்துகளைக் கொடுப்பதில் பெரிதாகப் பயன் எதுவும் இல்லை. மாறாக, முதுமையின் தளர்வுடன் இந்தப் பெரும் ரசாயனங்களின் அதீத வீரியமும் சேர்ந்து, முதுமையை முழுமையாக நோய்க் காலத்துக்குள் தள்ளுவதற்கான சாத்தியமே அதிகம்!

முதுமையின் முதல் தேவை அரவணைப்பு.  மருந்தும் விருந்தும் இரண்டாம்பட்சம்தான். 'இப்பத்தானே போயிட்டு வந்தே? கொஞ்சம் நின்னு இன்னும் போயிட்டு வர்றதுதானே. எத்தனை தடவை கண்டக்டரிடம் திட்டு வாங்கி இறங்குவது?’ எனப் பயணத்தில் திட்டாமல் இருப்பது கதிர்வீச்சைவிட உயர் வீச்சு. கூடவே மேலே சொன்ன பழங்களை எல்லாம் சீட்டில் எழுதி வாங்கித் திங்கச் சொல்லிவிட்டு ஓடாமல், கரிசனமாக வாங்கிவந்து அதன் சாறு எடுத்துக்கொடுத்து, 'அப்புறம் எல்லாம் நீ குடிக்க மாட்டே... இந்தா இப்பவே குடி’ என, உங்கள் கையில் கோப்பையை வைத்து அவர் வாயில் பருகக் கொடுங்கள்.

சிறுவயதில் இதேபோல் ஒரு புழுக்கமான பயணத்தில், நம் மூத்திரம் நனைத்த சட்டைப்பையின் ஈரத்தால் குளிர்ந்த அவர் இதயம் உங்களின் இந்த அக்கறையில் இன்னும் கொஞ்சம் குளிரும். கூடவே, 'அந்த

மனக்குளிர்ச்சி அவரது நோய் வீக்கத்தைச் சீக்கிரம் விரட்டும்’ எனப் பல ஆய்வுகள் வருங்காலத்தில் நிச்சயம் சொல்லும்!

- உயிர்ப்போம்...

வீட்டிலேயே செய்யலாம் காயகல்பம்!

பலர் நினைப்பதுபோல் காயகல்பம் என்பது 'அந்த’ விஷயத்தில் தடாலடி செய்யும் மருந்து அல்ல; அது முதுமையில் ஏற்படும் வயோதிக மாற்றங்களை, உடலின் நோயாக மாறாமல் காப்பவை. அதேபோல் அவை ஏழு மலைகள் தாண்டி ஏழு கடல்கள் தாண்டினால் மட்டுமே கிடைக்கும் விலை உயர்ந்த அமிர்தமும் அல்ல. சின்னச் சின்னக் கல்பங்களை வீட்டிலேயே செய்ய முடியும்.

• இஞ்சி - சின்னச்சின்ன இஞ்சித் துண்டுகளை தேனில் ஊறவைத்து, தினம் காலை உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.

உயிர் பிழை - 11

•  நெல்லிக்காய் - நெல்லியை லேசாக ஆவியில் வேகவைத்து, பின்னர் குண்டூசியால் சிறு சிறு துளைகள் இட்டு, தேனில் ஊறவைக்கலாம். அதை தினமும் காலை உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.

•  கரிசாலை - இந்தக் கீரையை நிழலில் உலர்த்தி, பொடிசெய்து, 1/2 டீஸ்பூன் அளவு தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

•  கடுக்காய் - இதன் விதையை நீக்கி, பொடிசெய்து இரவில் 1 தேக்கரண்டி சாப்பிடுவது, முதுமையில் பல நோய்கள் வராது காக்க உதவும்.

•  ஓர் இதழ் தாமரை - சித்த மருத்துவரிடம் அடையாளம் காட்டிப் பெற்று, அதன் உலர்ந்த பொடியை, 1/2 டீஸ்பூன் அளவு காலை உணவுக்கு முன்னர் பாலில் கலந்து சாப்பிடலாம்.

•  கீழாநெல்லி - வாரம் ஒரு நாள் கீழாநெல்லியை மோரில் அரைத்து 1/2 டீஸ்பூன் அளவு உணவுக்கு முன் சாப்பிடலாம்.

'இவை எல்லாமே எனக்குக் கிடைக்குமே!’ என அனைத்தையும் ஒரு கலக்குக் கலக்கிச் சாப்பிடுவது அதிகப் பிரசங்கித்தனம் மட்டும் அல்ல... ஆபத்தும் கூட. ஏதேனும் நோய்க்கான சிகிச்சையில் இருப்பின், சித்த மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னரே கல்பம் சாப்பிடுவது நல்லது. கூடவே கல்பம் உண்ணும் காலத்தில் அலைபாயும் மனம், பிற உணவு குறித்த கட்டுப்பாடும் அவசியம்.

saw palmetto fruit

புராஸ்டேட் கோளம் தவிர்க்குமா?

உயிர் பிழை - 11

முள்சீதா, மார்புப் புற்றுக்குப் பயனாவதைப்போல, sணீஷ் ஜீணீறீனீமீttஷீ யீக்ஷீuவீt மூலிகை 'புராஸ்டேட் கோளப் புற்று வராது தடுக்க உதவுமா?’ என அதிகம் ஆராயப்பட்டுவருகிறது. பனையின் ஒரு வகையான இந்த மரம் இந்தியாவில் இல்லை. யாராவது வளர்த்தால் நிச்சயம் வளரும். இந்தப் பனை வகைப் பழத்தில் புராஸ்டேட் கோள வீக்கம் குறைவது ஆராய்ந்து சொல்லப்பட்டுள்ளது. அதோடு 'புராஸ்டேட் சாதாரண வீக்கத்தை புற்று வீக்கமாக மாறாமல் தடுக்கவும் உதவுகிறதா?’ எனும் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. வெளிநாடுகளில் இதன் சாற்றை Saw palmetto extract  என, புட்டியில் அடைத்து விற்பது பெரும் வணிகம்!