ப்பு என்கிற ஆம்ஸ்ட்ராங்! 

நிலவில் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை, உலகுக்கே தெரியும். எனக்குத் தெரிந்த அப்பு என்கிற ஆம்ஸ்ட்ராங் சைவ ஹோட்டல் ஒன்றின் சப்ளையர். சந்திரனில் மனிதன் காலடி வைத்த 1969-ம் ஆண்டு பிறந்த காரணத்தால் அவருக்கு ஆம்ஸ்ட்ராங் என்ற பெயரை வைத்துவிட்டார்கள்.

வாழ்வில் ஒருமுறையாவது தாஜ்மஹாலைப் பார்க்க வேண்டும்; இமயமலைக்குப் போய் வர வேண்டும் என, பலருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அப்புவுக்கு, கர்நாடகாவின் லோகுர் கிராமத்தில் உள்ள நரசிங்கநவார் குடும்பத்தை நேரில் சென்று பார்த்து வரவேண்டும் என்பதுதான் ஒரே ஆசை. அப்படி அந்தக் குடும்பத்தில் என்ன விசேஷம் இருக்கிறது?

இந்தியாவின் மிகப் பெரியக் கூட்டுக் குடும்பம் அது. 180 பேர் ஒன்றாக வசிக்கிறார்கள். இரண்டு பெரிய வீடுகளில் ஐந்து தலைமுறையாக ஒன்றாக வாழ்கிறார்கள். சமண சமயத்தைச் சார்ந்த குடும்பம் அது. அந்தக் குடும்பத்தினர் அனைவரும், தங்களின் 270 ஏக்கர் நிலத்தில் ஒன்றாகப் பாடுபடுகிறார்கள்; நிலத்தில் விளையும் காய்கறிகள், தானியங்களை உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள். வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. முறைவைத்துக்கொண்டு, பெண்கள் ஒன்றிணைந்து சமைக்கிறார்கள். வீட்டைப் பராமரிக்கிறார்கள். ஒரு நாளைக்கு அந்த வீட்டில் ஆயிரம் ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்தக் கூட்டுக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய். அதற்குள் உடை, மருத்துவம், படிப்பு என யாவும் நிர்வகிக்கப்படுகின்றன!

இந்திய வானம் - 11

ஒரே பிளாட்டில் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருக்க அண்ணன்-தம்பிகளே ஆசைப்படாத இன்றைய சூழலில் 180 பேர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால், அவர்களின் பரந்த மனதைப் பாராட்ட வேண்டும். அதற்காக அவர்களை ஒருமுறை தேடிச் சென்று பார்த்து, அந்த வீட்டில் ஒரு ரொட்டியாவது சாப்பிட்டு வர வேண்டும் என்பது அப்புவின் ஆசை. அப்பு அப்படித்தான்!

நிலவில் காலடி எடுத்து வைத்த தனது சாதனையைப் பற்றி கூறும்போது நீல் ஆம்ஸ்ட்ராங் இப்படிச் சொன்னார்... 'இது மனிதனுக்கு ஒரு சிறிய கால் தடம். ஆனால், மனிதகுலத்துக்குப் பெரும் தாவல்!’ ஆனால், 'அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் காலடி வைக்கவே இல்லை. இப்போது நாம் காணும் புகைப்படங்கள் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்துத் தந்தவை’ என்ற ஒரு சர்ச்சை இன்றும் உலவிவருகிறது. இந்தச் சர்ச்சையை மறுத்த ஆம்ஸ்ட்ராங், 'நாங்கள் விட்டுவந்த கேமரா மற்றும் இதர உபகரணங்கள் இன்றும் நிலாவில்தான் இருக்கின்றன. அவை உலகுக்கு உண்மையை விளக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

நிலாவில் மனிதன் காலடி வைத்ததை அப்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு அவர் கூறும் காரணம், 'அமெரிக்காக்காரன் காலடி எடுத்து வெச்ச எந்த இடமும் உருப்பட்டது இல்லை; சர்வநாசம்தான். ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் காலடி எடுத்து வைக்கும்போது முதலில் இடது காலையே வைத்தார். பிறகு எப்படி உருப்படும்? அமெரிக்காக்காரன் எதைச் செய்தாலும் ஆதாயம் இல்லாம செய்ய மாட்டான். இப்போ நிலாவுல காலடி எடுத்து வெச்சுட்டான்; அடுத்து அங்கே  வீடு கட்ட பிளான் போடுவான்; பிறகு, இன்னொரு அமெரிக்க முதலாளி கடை போடுவான்; அப்புறம் ரோடு, வண்டி, போக்குவரத்துனு ஆரம்பிப்பாங்க. அப்புறம் என்ன, ஒரே சந்தைக்கடைதான். சச்சரவு, வெட்டு, குத்துனு பிறகு அந்த இடத்துல மனுஷன் வாழவே முடியாது. மனுஷன் காலடி எடுத்து வெச்ச பின்னாடி நிலாவைப் பார்க்கும்போது அதிசயமாவே இல்லை. எப்போ அமெரிக்காக்காரன் பிளாட் போட்டு விக்கப்போறானோனு பயமா இருக்கு. இது என் அபிப்பிராயம். உலகம் ஆயிரம் சொல்லட்டும். எனக்குனு ஓர் அபிப்பிராயம் இருக்கும்ல. அதுவும் ஆம்ஸ்ட்ராங்குனு பேர் வெச்சுட்டு நிலாவைப் பத்தி அபிப்பிராயம் சொல்லாட்டி எப்படி?’ என்கிறார் அப்பு.

அப்பு என்கிற ஆம்ஸ்ட்ராங் இப்படித்தான். அவரது பேச்சில் எப்பவும் கோபம் கொப்புளிக்கும். காரணம், வாழ்க்கையில் அவ்வளவு அடிபட்டிருக்கிறார். வறுமையான குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர, பத்துக்கும் மேற்பட்ட சிறு வேலைகள் செய்திருக்கிறார். எதிலும் நிலைக்க முடியவில்லை. கடைசியில் வயிற்றுப்பாட்டைப் போக்கிக்கொள்ள ஹோட்டல் வேலையில் சேர்ந்துவிட்டார். பசியைப் போக்குவதுதானே முக்கியம். ஹோட்டலில் சாப்பாட்டுப் பிரச்னை கிடையாது. தனது வருமானத்தில், தன் ஒருவனையே கவனித்துக்கொள்ள முடியாதபோது, எதற்கு கல்யாணம் என அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நிலவில் கால் வைப்பது மட்டும்தான் சாதனையா என்ன? அப்பு என்கிற ஆம்ஸ்ட்ராங் இதுவரை ஒருமுறைகூட எவரிடமும் கை நீட்டி கடன் வாங்கியதே இல்லை. அதுவும் சாதனைதானே! ஒன்று இரண்டு பேருக்கு அவர் கடன் கொடுத்திருக்கிறார். அவர்கள் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கிறார்கள். ஆனால், அப்பு அதைப் பெரிதாக எண்ணவே இல்லை. இந்தக் காலத்தில் ஒரு மனிதன் கடனே வாங்காமல் 45 வயது வரை வாழ முடிந்திருக்கிறது என்பது சாதனை அல்லவா?!

இந்திய வானம் - 11

அப்பு, கடன் வாங்காமல் இருப்பதற்கு அவரது அப்பா முக்கியக் காரணம். ஏனெனில், அவர் கடன் வாங்காத ஆளே கிடையாது. அன்றாடம் யாராவது வீடு தேடி வந்து, கொடுத்தக் கடனைக் கேட்டு நிற்பார்கள்; அசிங்கமாகத் திட்டுவார்கள். யார் கடனையும் அப்புவின் அப்பா முழுமையாக அடைக்கவில்லை. அற்ப ஆயுளில் இறந்தும் போய்விட்டார். ஒரு மனிதனின் மரணத்துடன் அவன் வாங்கிய கடன்கள் இறந்துவிடுவது இல்லை. அந்தக் கடன்கள், வட்டிக்கு வட்டி எனக் குட்டிபோட்டு உயிர் வாழ்ந்துகொண்டிருந்தன. முடிவில் ஒருநாள் கடன்காரர்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் குடியிருந்த வீட்டைப் பிடுங்கிக் கொண்டு துரத்திவிட்டார்கள்.

அப்போது அப்புவுக்கு 16 வயது இருக்கும். குடும்பம், நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. ஓர் இரவு யார் வீட்டிலாவது போய்த் தங்கலாம் என்றால்கூட, எங்கே போவது எனத்தெரியவில்லை. வேறு வழி இல்லாமல் அன்று இரவு கோயில் மண்டபத்தில் படுத்துக் கொண்டார்கள். அப்போதுதான் 'வாழ்வில் இனி ஒரு முறைகூட யாரிடமும் கடன் வாங்கக் கூடாது’ என முடிவுசெய்தார் அப்பு. ஆனால், அப்படி இருப்பது எளிது அல்ல என்பதையும் தனது கஷ்ட ஜீவனத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறார். சட்டைப் பையில் நாலணாகூட இல்லாத நாளிலும் அப்பு யாரிடமும் கை நீட்டி, கடன் கேட்டதே இல்லை. ஒருவேளை பெண்டாட்டி பிள்ளைகள் இருந்திருந்தால், கடன் வாங்க நேரிட்டிருக்குமோ என்னவோ!

கடன் வாங்குவது ஒரு கலை. எல்லோருக்கும் எளிதாக அது கைவந்துவிடுவது இல்லை. இதில் தேர்ந்த கில்லாடிகள் இருக்கிறார்கள். அவர்களின் நடிப்போடு எந்த ஆஸ்கர் விருது வென்ற நடிகரும் போட்டியிட முடியாது. முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு பரிதாபமான குரலில் கேட்பவர் நம்பும்படியாக ஒரு கதையைச் சொல்வார்கள். அந்த நடிப்பை நம்பி பணம் தந்துவிட்டால், பிறகு அவர்களை நாம் சந்திக்கவே முடியாது. பணம் அரோகராதான். பணம், மனிதர்களைச் சேர்த்து வைத்ததைவிட பிரித்துவைத்ததே அதிகம். எத்தனையோ பேரின் உறவு, பணத்தால் சீர்கெட்டுப்போய் இருக்கிறது. நண்பர்கள், பணத்தின் காரணமாகச் சண்டையிட்டு பகையாளி ஆகியிருக்கிறார்கள். 'பணம் பத்தும் செய்யும்!’ என்பார்கள், அந்தப் பத்தில் ஒன்பது மோசமானவை!

அப்புவும் அப்படி ஒருமுறை ஏமாந்திருக்கிறார். அவரோடு வேலைபார்த்த முத்துராமன், ஓர் இரவில் கதவைத் தட்டி 'அவசரமாக ஐந்தாயிரம் ரூபாய் வேண்டும்’ எனக் கேட்டான். 'எதற்காக?’ என அப்பு கேட்டபோது, 'மகளை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன். இன்றைக்கு டிஸ்சார்ஜ் செய்வதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், ஆஸ்பத்திரிக்குக் கட்ட பணம் இல்லை. நானும் பலரிடம் கடன் கேட்டுப் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. ஆஸ்பத்திரியில் மகளும் மனைவியும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள்தான் உதவ வேண்டும்’ எனக் கண்ணீர் விட்டான்.

அப்பு அவனது பதற்றத்தை நம்பி, தனது சேமிப்பில் இருந்த 2,300 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அவன் இதை வைத்துக்கொண்டு எப்படி ஹாஸ்பிட்டல் பில் கட்டுவது என அழுதபடியே சென்றான். அன்று இரவு முழுவதும் முத்துராமனின் குடும்பத்தைப் பற்றியே அப்பு நினைத்துக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு, இரண்டு நாட்கள் ஆகியும் முத்துராமன் வேலைக்கு வரவில்லை. ஹோட்டல் சூப்பர்வைசரிடம், 'என்ன ஆயிற்று?’ என அப்பு கேட்டதற்கு, 'அவன் வேலையைவிட்டு நின்று நாலு நாள் ஆகுதே!’ என்றார். 'முந்தாநாள் என்னிடம் வந்து மகளுக்கு உடல் நலம் இல்லை எனப் பணம் வாங்கிச் சென்றானே?!’ என அப்பு கேட்க, சூப்பர்வைசர் சிரித்தபடியே சொன்னார், 'அதெல்லாம் சுத்தப் பொய். அவன் பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லாரும் தஞ்சாவூர்ல இருக்காங்க. அவன் உன்கிட்ட பொய்ச் சொல்லி கடன் வாங்கியிருக்கான். அவன் சுத்த ஃபிராடு. கடன் கொடுக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒருமுறை கேட்டிருக்கலாம்ல!’ என்றார். கடன் வாங்குவதற்காக இப்படி கண்ணீர்விட்டு நடிக்க முடியுமா என்பது அப்புவுக்கு வியப்பாக இருந்தது. ஆனால், சூப்பர்வைசர் சொன்னது நிஜம் என்பது புரிந்தது.

கடன் வாங்குகிறவர்கள் விதவிதமான பொய்களை, காரணங்களாகச் சொல்கிறார்கள். கடனைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்கிறபோது தயக்கமும் சங்கடமும் இயலாமையும் வந்துவிடுகின்றன. கடனைத் திருப்பித் தராமல் இருக்க புதுப்புதுப் பொய்கள் சொல்லத் தொடங்குகிறார்கள். கடன் வாங்குவதோ, திரும்பக் கொடுக்காமல் இருப்பதோ எவரையும் உறுத்துவதே இல்லை. காற்றுப்போன பலூனைப்போல மனசாட்சியும் சுருங்கி வலுவற்றுப்போய்விட்டதா என்ன?

தன்னால் அப்படி மனசாட்சி இல்லாமல் நடக்க முடியாது என்பதில் அப்பு உறுதியாக இருந்தார். ஒரே ஒருமுறை அவர் கடன் கேட்கவேண்டிய நெருக்கடியான நிலை உருவானது. அவரது தங்கை ஹோட்டல் வாசலில் வந்து நின்றுகொண்டு, 'ஊருக்குப் போக எப்படியாவது ஐந்நூறு ரூபாய் வேண்டும்’ எனக் கெஞ்சினாள். தன் கையில் பணம் இல்லை என அவர் சொல்லியும் அவள் கேட்கவில்லை. முடிவில் கல்லாவில் இருந்த முதலாளியிடம் அவர் கடன் கேட்கச் சென்றார். முதலாளி ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. ஐந்நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டுச் சொன்னார், 'இது கடன் இல்லை, உதவி. உன் தங்கச்சியை ஊருக்கு அனுப்பி வை!’ 'இதை என் சம்பளத்துல பிடிச்சிக்கோங்க முதலாளி’ என்றார் அப்பு. 'போடா, போய் வேலையைப் பாரு. இந்த ஐந்நூறு ரூபாயை வெச்சுத்தான் நான் கோட்டை கட்டப்போறேனா? உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். நீ ஒருத்தனாவது கடன் வாங்காம காலத்தை ஓட்ட பாரு!’ என்றார்.

ஒருவரைக் கடனாளி ஆக்குவது எளிது; ஆனால், அதில் இருந்து மீட்பது எளிது அல்ல. அதை அப்பு நன்றாக உணர்ந்திருக்கிறார். வறுமையாலும் நெருக்கடியாலும்கூட அவரைக் கடன் வாங்கவைக்க முடியவே இல்லை. 'இப்படியே கடன் வாங்காமல் என் வாழ்நாள் முழுக்க இருந்துவிட்டால் போதும். சந்தோஷமாகச் சாவேன்’ என அப்பு சொல்கிறார்.  

எளிய வாழ்க்கை வாழ்வது தவறு அல்ல. ஆனால், அறம் இல்லாத வாழ்க்கையை வாழ்வது தவறானது. அந்த வகையில் 'இப்படித்தான் வாழ்வேன்’ என்ற மனஉறுதியோடு வாழும் அப்பு, ஒரு சாதனையாளரே!

எலீசா இவான்ஸ் என்ற உளவியல் ஆய்வாளர், தனது உரை ஒன்றில் மனிதனின் பலவீனங்களில் முதன்மையானது பயம் எனக் கூறுகிறார். 'பயம் தன்னை மறைத்துக்கொண்டு பல்வேறுவிதமான வடிவங்களில், உருவங்களில் எண்ணங்களாக வெளிப்படுகிறது. பயம் ஒரு விதையைப்போல மனதில் ஊன்றி வளரத் தொடங்குகிறது. அதை வளர அனுமதித்துவிட்டால் நமது வளர்ச்சி தடைபட்டுவிடும். ஆகவே, அச்சம், தோல்வி பற்றி சதா ஆராய்ந்துகொண்டு வீணாகக் காலம் கடத்தவேண்டியது இல்லை. அதற்கு மாறாக  துணிவுடன் செயல்படத் தொடங்கினால், அச்சம் தானாகவே விடைபெற்றுவிடும். புதிய  செயல்களில் ஊக்கமுடன் ஈடுபடும்போது மட்டுமே ஒருவரின் முழு ஆளுமைத்திறனும் வெளிப்படும். படைப்பாற்றல் திறன் என்பது, எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமேயானது அல்ல; அது சாதாரண மனிதர்களுக்கும் அவசியமானது. வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுக்க  படைப்பாற்றல் பெரிதும் உதவிசெய்கிறது.

தோல்வி ஏற்படும்போது, நாம் அடுத்தவர்களைக் குற்றம் சொல்கிறோம்; நம் மீது பரிதாபத்தையும் அனுதாபத்தையும் பெற முயற்சிக்கிறோம். அது தவறான வழிமுறை. இதற்கு மாறாக அடுத்து என்ன செய்வது எனச் சிந்தித்தால், தோல்வியைக் கடந்துவிடலாம். என்றோ நாம் ஒரு வெற்றி அடைந்திருந்தால் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அதைத் தாண்டி செயல்பட என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். ஆளுமையை வளர்த்துக்கொள்ள நமக்கு நாமே உத்வேகம் ஊட்டிக்கொள்ள வேண்டும்’ என்கிறார்.

'நிலவில் காலடி பதித்த சாதனையைச் செய்ய ஆம்ஸ்ட்ராங்குக்கு ஆதாரமாக இருந்தவை நிதானமான செயல்பாடு, அச்சமின்மை, உறுதியான மனம், அடக்கம் ஆகிய நான்கும்’ என்கிறார்கள். இவை விண்வெளியில் சாதனை செய்வதற்கு மட்டும் அல்ல, அன்றாட வாழ்வுக்கும் அவசியமான நெறிகளே!

- சிறகடிக்கலாம்...