Published:Updated:

அமெரிக்கவின் முதல் பெண் அதிபர்!

மருதன், ஓவியம்: ஹாசிப்கான்

அமெரிக்கவின் முதல் பெண் அதிபர்!

மருதன், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:

மெரிக்கா, தனது முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுத்து முடித்துவிட்டது. வாக்குப்பதிவு, கணக்கெடுப்பு, அதிகாரபூர்வ அறிவிப்பு போன்ற சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. வேறு எவரையும்விட ஹிலாரி கிளின்டன் இதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார். 'எதிர்காலத்தில் உன்னாலும் அதிபராக முடியும் என, ஒரு தந்தை தன் பெண் குழந்தையிடம் இனி தைரியமாகச் சொல்லலாம்’ என்று புன்னகைக்கிறார் ஹிலாரி. 'பராக் ஒபாமாவின் ஆட்சியைக் காட்டிலும் உங்களுடைய ஆட்சி வேறுபட்டதாக இருக்குமா?’ எனக் கேட்டதற்கு, அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சாதுர்யத்துடன் ஹிலாரி பதில் அளித்தார்... 'ஒரு பெண், முதல்முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றால், ஒபாமாவிடம் இருந்து மட்டும் அல்ல, இதுவரை அமெரிக்காவை ஆண்ட அனைத்துப் பிரதமர்களிடம் இருந்தும் அவருடைய ஆட்சி வேறுபட்டுதான் இருக்கும்!’

இது ஹிலாரி கிளின்டனின் இரண்டாவது அதிபர் கனவு. முதல் கனவு 2008-ம் ஆண்டு டெமாக்ரடிக் பிரைமரி தேர்தலில் உதயமானது. 'அமெரிக்கா, தனது முதல் பெண் அதிபருக்குத் தயாராகிவிட்டது’ என ஹிலாரி நம்பினார். அவரை எதிர்த்துப் போட்டியிட இலினாய்ஸில் இருந்து பராக் ஒபாமா முன்வந்தபோது, ஹிலாரியின் வெற்றியை உறுதிசெய்து இறுதித் தீர்ப்பு எழுதி முடித்தது மீடியா. 'வாக்குப்பதிவு, கணக்கெடுப்பு, அதிகாரபூர்வ அறிவிப்பு போன்ற சம்பிரதாயங்கள் மட்டுமே

எஞ்சியிருக்கின்றன’ என இப்போதுபோலவே அப்போதும் பலர் ஆருடம் சொன்னார்கள். அவர்களுக்கு ஏற்றாற்போல் ஒபாமா அதிகம் அறியப்படாதவராக, அந்நியராக, நன்கொடை திரட்டத் தெரியாதவராக, மீடியா வெளிச்சத்தைத் திரட்டத் தெரியாதவராக, எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளையாக இல்லாதவராக இருந்தார்.

'சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்த பில் கிளின்டனின் மனைவியை எதிர்த்து, பின்னணியே இல்லாமல் ஒபாமா நிற்பது பரிதாபமானது; இது சம பலம் கொண்ட இருவரிடையே நடத்தப்படும் போட்டியே அல்ல’ எனச் சிலர் உச்சுக்கொட்டி அங்கலாய்த்தார்கள். ஆனால் பராக் ஒபாமா, ஹிலாரியை வென்று, ரிபப்ளிகன் போட்டியாளரான ஜான் மெக்கெயினையும் தோற்கடித்து அமெரிக்காவின் அதிபர் ஆனார். 'இது ஒரு வரலாற்றுத் தருணம்’ என, மீடியா தனது தீர்ப்பைத் திருத்தி எழுதியது.

அமெரிக்கவின் முதல் பெண் அதிபர்!

'ஒபாமா எப்படி வென்றார்?’ என்பதைவிட, 'ஹிலாரி ஏன் தோற்றார்?’ என்பதுதான் இன்றையச் சூழலுக்குப் பொருத்தமான கேள்வி. தலைவலி, காய்ச்சல் தொடங்கி சர்வதேசப் பிரச்னைகள் வரை அனைத்துக்கும் ஒரே தீர்வு போர் மட்டுமே எனும் ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் துணிச்சலாகச் செயல்பட்டவர் முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ். தன் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் உலக அரங்கில் மிச்சம் இருந்த அமெரிக்காவுக்கான நல்ல பெயரையும் ஒரே சமயத்தில் மின்னலென சுத்தமாகத் துடைத்து அழித்து, புதிய சாதனை புரிந்தவர் அவர். எனவே, யார் வேண்டும் என்பதைவிட யார் வேண்டாம் என்பதை அமெரிக்கா தீர்மானமாக முடிவுசெய்து இருந்தது. 'ஒருபோதும் இன்னொரு புஷ்ஷை வெள்ளை மாளிகைக்குள் அனுமதித்துவிடக் கூடாது!’

'கவலைப்படாதீர்கள்... நான் நிச்சயம் அமெரிக்கா விரும்பும் நல்ல அதிபராக இருப்பேன்’ என ஹிலாரி நம்பிக்கையூட்டினார். வீசிய பெரும்புயலில் முதலில் அமெரிக்கர்கள் தொலைத்தது தங்கள் நம்பிக்கையைத்தான் என்பதால், அவர்களால் ஹிலாரியின் வார்த்தைகளைப் புனித வேதாகமமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. புஷ்ஷின் ஆட்சியில் இருந்து தன்னுடையது எப்படி எல்லாம் வேறுபட்டிருக்கப்போகிறது என்பதை ஹிலாரியால் குறைந்தபட்சம் கோடிட்டுக்கூட காட்ட முடியவில்லை. தவிரவும், அவர் தன் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் வாரம் இரு முறை அல்லது மாதம் ஒரு முறை மாற்றிக்கொண்டிருந்தார். பொருளாதாரம், போர், சமூகநலத் திட்டங்கள் என எதிலும் ஆணித்தரமாக அவர் நிற்கவில்லை. மிக முக்கியமாக, ஒருபோதும் அவர் மக்களிடம் நெருங்கவும் இல்லை; தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும் இல்லை.

மற்றொரு பக்கம், அமெரிக்கர்கள் அழுத்தமாகக் கேட்க விரும்பிய 'மாற்றம்’ எனும் மந்திரச்சொல்லை, ஒபாமா கூரை மேல் ஏறி நின்று சத்தம் போட்டு உச்சரித்தார். பெரிய பெரிய பதாகைகளில், பெரிய பெரிய எழுத்துருக்களில் அதை எழுதிவைத்தார். 'உங்களை, உங்கள் தேசத்தை, உங்கள் வாழ்வை மாற்றுவேன்’ என முழங்கினார். அமெரிக்கர்கள் தாவி வந்து அவரைத் தாங்கிப்பிடித்துக் கொண்டார்கள். சோர்ந்து கிடந்த அமெரிக்கா, ஒரு நீருற்றுபோல் உற்சாகத்துடன் எழுந்து நின்றது. அந்த அலையில், ஒபாமாவின் பலவீனங்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் அடித்துச் செல்லப்பட்டன.

அப்படியோர் அலையைத்தான் இப்போது ஹிலாரி கிளின்டன்

எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒபாமாவிடம் இருந்து பெற்ற தோல்வி, ஒபாமாவிடம் இணைந்து பணியாற்றியபோது கிடைத்த வெற்றி இரண்டிலும் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு, இரண்டில் இருந்தும் தன் பலத்தைத் திரட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார் ஹிலாரி.

தான் ஒரு பெண் என்பதை பெருமிதத்துடன் நினைவுபடுத்தவேண்டிய அதே சமயம், தன் பலம் அது மட்டுமே அல்ல என்பதையும் அவ்வப்போது நினைவுபடுத்திவருகிறார் ஹிலாரி. 'மக்களுக்காகப் போராடிய நீண்ட வாழ்நாள் அனுபவம் எனக்கு இருக்கிறது. குழந்தைகளுக்காக, பெண்களுக்காக, குடும்பங்களுக்காக நான் போராடியிருக்கிறேன். எடுத்துக்கொண்ட விஷயத்தை எப்படி வெற்றிகரமாகச் செய்து முடிப்பது என எனக்குத் தெரியும்’ என்கிறார். 'ஒசாமா பின் லேடன் குறித்து முடிவெடுக்கும் சிக்கலான தருணத்தில் ஒபாமா கலந்தாலோசித்த ஒருசிலரில் நானும் ஒருவர்’ என்பதை அழுத்தமாகப் பல முறை நினைவுபடுத்தியுள்ளார் ஹிலாரி. தன்னால் வலிமையான முடிவுகளை எடுக்க முடியும் என்பதை அமெரிக்கர்களின் மனதில் பதியவைப்பதே ஹிலாரியின் நோக்கம்.

ஆனாலும் ஒபாமாவைப் போல் 'மாற்றம்’ என மீண்டும் பெரிதாக முழங்க முடியாது என்பது ஹிலாரிக்குத் தெரியும். அதே சமயம் ஒபாமா முழுக்க முழுக்க நல்லாட்சியை மட்டுமே அளித்தார் என்றும் சொல்லிவிட முடியாது. இந்த இக்கட்டை ஹிலாரி சாதுர்யமாகக் கடந்துசென்றார். 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததைத் தொடர்ந்து, ஒபாமா அரசிடம் இருந்து கூடுமானவரை தன்னை விலக்கி வைத்துக்கொண்டார். சரியான ஒரு தருணத்தில் ஒபாமாவை எதிர்க்கவும் செய்தார். அதற்கொரு நல்ல வாய்ப்பும் கிடைத்தது. புஷ்ஷ§க்கு ஒரு அல் கொய்தா என்றால், ஒபாமாவுக்கு ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ். 'சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் பலம் பெற்றிருப்பதற்கு ஒபாமாவின் தவறான வெளிவிவகாரக் கொள்கையே காரணம்’ என இடித்துக் காட்டினார் ஹிலாரி.

அமெரிக்கவின் முதல் பெண் அதிபர்!

கடந்த முறையைப்போல் இல்லாமல் நிலையான அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக்கொண்டார். அவற்றைச் சுருக்கமாக இப்படி வகைப்படுத்த முடியும்... 'பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். சமூகநலத் திட்டங்களை அரசிடம் இருந்து பறித்து தனியார்களிடம் கொடுக்கக்கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றம் குறையும் எனச் சொல்ல முடியாது. துப்பாக்கி உரிமம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாசுபாட்டைக் குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். கருத்தடை செய்துகொள்ள ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பெண்களையும் சிறுபான்மையினரையும் பணியில் அமர்த்திக்கொள்வது சட்டமாக்கப்பட வேண்டும். சுதந்திரச் சந்தை, ஆதரிக்கப்பட வேண்டும்; விரிவாக்கப்பட வேண்டும். மற்றபடி, ராணுவ விரிவாக்கம் அவசியம் அற்றது!’

ஒபாமாவைப் போலவே இரண்டு கட்டங்களை ஹிலாரி கடந்துசென்றாக வேண்டும். அதிபர் தேர்தல், 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன் டெமாக்ரடிக் பிரைமரி தேர்தலில் வெற்றிபெற்று, அந்தக் கட்சியின் அதிகாரபூர்வமான அதிபர் வேட்பாளராக அவர் நியமிக்கப்பட வேண்டும். இதில் எந்தச் சிக்கலும் இருக்கப்போவது இல்லை என்பதை இப்போதே தொடங்கிவிட்ட வாக்கெடுப்புகளும் மீடியா செய்திகளும் உறுதிசெய்கின்றன.

எதிர்த்தரப்பில் இருந்து ஹிலாரியுடன் போட்டிபோட அதிகச் சத்தத்தையும் தூசியையும் எழுப்பிக்கொண்டிருக்கிறார் ரிபப்ளிக் கட்சியின் டொனால்டு டிரம்ப். 'சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் இடையில் எந்தவிதத் தொடர்பும் இருக்கவேண்டியது இல்லை’ எனும் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றிவரும் டிரம்ப், நாளரு உளறல்... பொழுதொரு பிளிறல் என, தேர்தல் களத்தைக் குப்பையாக்கிக்கொண்டிருக்கிறார். 'அகதிகள் வரமுடியாதபடிக்கு அமெரிக்க எல்லைகளில் நீண்ட சுவர்களை அமைப்பேன். கருத்தடையா... கூடவே கூடாது. ராணுவம், பல மடங்கு அதிக பலம் பெறவேண்டும். துப்பாக்கி, அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை’ ஆகியவை அவர் சமீபத்தில் உதிர்த்த அச்சிடத்தக்க முத்துக்கள். அச்சிட முடியாதவற்றின் பட்டியல் மிகவும் நீண்டது. அவை இணையத்தில் ஜோக்குகளாக உலவிக்கொண்டிருக்கின்றன.

மற்றபடி, ஹிலாரியின் மிகப் பெரிய சவால் ஹிலாரிதான். நான்கு முக்கியப் பிரச்னைகளில் அவர் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை எதிர்வரும் தேர்தலில் அவர் தோற்கவேண்டி இருந்தால் அதற்கு இவையே காரணம் எனக் கொள்ளலாம்.

முதலாவது, இமெயில். அதிகாரபூர்வமான மெயில் ஐ.டி இருக்கும்போது, எதற்காக ஹிலாரி கிளின்டன் தன் அலுவலகப் பரிவர்த்தனைகளுக்குத் தனிப்பட்ட மெயிலைப் பயன்படுத்தினார்? சில விஷயங்கள் வெளியில் தெரியக் கூடாது என அவர் நினைத்தாரா? முந்தைய ஜார்ஜ் புஷ் ஆட்சியின்போது இப்படித்தான் 22 மில்லியன் பிரத்யேக இமெயில்களை வெள்ளை மாளிகை ரகசியமாகத் துடைத்து அழித்தது. இரண்டாவதாக, ஏன் ஹிலாரி எளிதில் அணுக முடியாதவராக இருக்கிறார்? ஒரு கேள்வி கேட்டால் 'ஆம்’, 'இல்லை’ எனப் போட்டு உடைக்காமல் ஏன் தயங்கிக் குழைகிறார்? எடுத்த முடிவில் ஏன் நிலையாக இருப்பதில்லை? மூன்றாவதாக, கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளின்டன் நடத்திவரும் கிளின்டன் ஃபவுண்டேஷனுக்கு வந்து குவிந்த நன்கொடையில் உள்ள ஓட்டைகள். அவற்றை ஹிலாரி தன் பதவியைப் பயன்படுத்தி எப்படி அடைத்தார் என்பதையும் இந்த நன்கொடைகள் எப்படி, எதற்காக, எங்கு இருந்து வந்தன என்பதையும் அம்பலப்படுத்தி பல புலனாய்வுக் கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துவிட்டன.

நான்காவது, பெங்காஸி சம்பவம். 2012-ம் ஆண்டில் லிபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டபோது அமெரிக்கத் தூதர், அயல் துறை அதிகாரி, இரு சி.ஐ.ஏ அதிகாரிகள்  ஆகியோர் கொல்லப்பட்டனர். 'கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என முன்பே தூதரகம் ஒபாமா அரசிடம் விண்ணப்பித்து இருந்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்ற விமர்சனம் எழுந்தபோது, தவிர்க்க இயலாதபடி ஹிலாரி கிளின்டன் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். இது பற்றிய அதிகாரபூர்வமான விசாரணை நடைபெற்றுவருகிறது. எதிர்க்கட்சி இதை மேலதிகத் தீவிரத்துடன் ஹிலாரிக்கு எதிராகத் திருப்பத்தான்போகிறது.

ஆனால், ஹிலாரி ஆதரவாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். 'இன்னும் அவகாசம் இருக்கிறது, இந்தச் சர்ச்சைகள் எல்லாம் பறந்துபோய்விடும்’ என்கிறார்கள் அவர்கள். மக்கள் ஆதரவு மட்டும் அல்ல, ஹிலாரியின் தேர்தல் நிதியும் பெருகிக்கொண்டிருக்கிறது என்பதை இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கிட்டத்தட்ட

30 மில்லியன் டாலர் இதுவரை நன்கொடையாகத் திரண்டிருக்கிறது. 'நிறம், குணம், பணம், புகழ் அனைத்தும் எங்கள் பக்கம்தான்’ என இப்போதே ஆரவாரிக்கத் தொடங்கிவிட்டார்கள் ஹிலாரி ஆதரவாளர்கள்.

இந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்கின்றனர் எனச் சொல்ல முடியாது. 'ஆணா-பெண்ணா, கறுப்பா-வெளுப்பா என்பது முக்கியம் அல்ல. அமெரிக்கா என்றும் அமெரிக்காவாகவே இருக்கப்போகிறது’ என இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 'முதல் கறுப்பு அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் இப்படித்தான் ஓர் அதிசய நீரூற்று கிளம்பியது. இப்போது முதல் பெண் அதிபர் என்றொரு நீரூற்று கிளம்பியிருக்கிறது. இதுவும் அடங்கியே தீரும்’ என்கிறார்கள் அவர்கள். பார்க்கலாம்!