Published:Updated:

பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள்!

பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள்!

பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள்!

பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள்!

Published:Updated:
பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள்!

ர்நாடகா மாநிலத்தில், கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இது தொடர்பாக ஒரு பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு, 'உன்னை யாராவது கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?’ எனப் பதில் அளித்திருக்கிறார் பா.ஜ.க தலைவர் ஈசுவரப்பா. கர்நாடகா மேல்சபை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான இவருடைய கருத்து இவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்திய அரசியல்வாதிகள் பலர், இதற்கு முன்பு இதேபோலவும் இதைவிட மோசமாகவும் பேசியிருக்கின்றனர். 'பாலியல் பலாத்காரம் இயல்பானது’, 'ஆண்கள், பலாத்காரம் செய்வது இயல்புதான். அதற்காக அவர்களைத் தூக்கில் போட முடியுமா?’ - இவை எல்லாம் நமது அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் உதிர்த்த முத்துக்கள். 

அரசியல்வாதிகள் 'தாய்மார்களே... சகோதரிகளே!’ என அன்பொழுக அழைப்பது எல்லாம் தேர்தல் காலத்தில் மட்டும்தான். அப்போது வணங்கி, தாழ்ந்து மரியாதை செலுத்தும் இவர்கள், வெற்றிபெற்ற பிறகு தலைகீழாக மாறிப்போகின்றனர். இதன் பொருள் 'அப்படி இருந்தவர்கள்... இப்படி மாறிவிடுகின்றனர்’ என்பது அல்ல. அவர்கள் எப்போதுமே பெண்கள் குறித்து உயரிய கருத்துக்கொண்டிருப்பது இல்லை. ஓட்டு வாங்குவதற்காக தேர்தலின்போது நடிக்கிறார்கள். வெற்றிக்குப் பிறகும் அப்படி நடிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், அவ்வப்போது உண்மை முகத்துடன் வெளிப்படுகின்றனர்.

உண்மையில், நவீனத் தொழில்நுட்பங்கள் உச்சம் பெற்றிருக்கும் இந்தக் காலம்தான் பெண்களுக்கு மிக ஆபத்தான காலமாகவும் இருக்கிறது. அனைத்துத் தொழில்நுட்பங்களும் பெண்ணை வேவு பார்க்கவும், பெண்ணுக்குத் தீங்கு இழைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கிராம-நகர வேறுபாடுகள் இன்றி எல்லா இடங்களிலும் தன்னைக் கண்காணிக்கும் மனித மற்றும் தொழில்நுட்பக் கண்களிடம் இருந்து தப்பிப்பதற்கே ஒரு பெண்ணுக்கு மூன்றாவது கண் தேவைப்படுகிறது. வீதியில் நடமாடும் ஒரு பெண், எல்லா கணங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ள நிலையில், பெண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய பெரும் கடமை அரசுக்கே இருக்கிறது. அரசு என்றால், அரசின் பொறுப்பில் உள்ளவர்கள்தான் அதை நிறைவேற்ற வேண்டும். மாறாக, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவரே இப்படி பொறுப்பின்றி பதில் சொன்னால், பெண்கள் எப்படி தைரியத்துடன் வீட்டைவிட்டு வெளியில் வர முடியும்?

'பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?’ எனக் கேட்கிறார் ஈசுவரப்பா. சமூக அமைதியை நிலைநாட்டுவதும், குற்றங்களைத் தடுப்பதும்தான் மக்கள் பிரதிநிதிகளின் முதன்மை கடமை என்பதை அவர் மறந்துவிட்டார். இது, தனிப்பட்ட சம்பவம் சார்ந்த மறதி அல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பதில் சொல்லவேண்டிய கடமை தங்களுக்கும் இருக்கிறது என்ற எண்ணமே அரசியல்வாதிகளின் மனங்களில் இருந்து விடைபெற்றுவிட்டது. அதனால்தான் மக்கள் பிரதிநிதி ஒருவர், 'இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?’ என வெளிப்படையாகக் கேட்கிறார். இந்தப் பதிலை விலைவாசி உயர்வு முதல் மதக் கலவரம் வரை எந்தக் கேள்விக்கும் பொருத்தலாம்!

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், முதலில் தங்களுக்கு இருக்கும் பொறுப்புகளையும் கடமைகளையும் உணர வேண்டும். தாங்கள் கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிசெய்கிறோம் என்ற எண்ணம், எந்நேரமும் அவர்கள் மனதில் இருக்க வேண்டும். இந்தப் பொறுப்புணர்ச்சிதான் அரசியல்வாதிக்கான அடிப்படை அணிகலன். அரசியல்வாதிகள் இதைச் சூடிக்கொள்ளட்டும்... தேர்தலின்போது மட்டும் அல்ல, எப்போதும்!