Published:Updated:

இந்திய வானம் - 12

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

சுடர்மிகும் அறிவு! 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் காசிக்குச் சென்றிருந்த ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, 'பாரதியார் வசித்த வீடு எங்கே இருக்கிறது? அதைப் பார்க்க விரும்புகிறேன். யாரைக் கேட்டாலும் 'தெரியவில்லை’ என்கிறார்கள். அரை நாளாகச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.

' 'ஹனுமான் காட்’ எனக் கேளுங்கள். காஞ்சி மடத்துக்கு நேர் எதிராக 'சிவ மடம்’ என தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழைய வீடு ஒன்று இருக்கும். அதுதான் காசியில் பாரதி வசித்த இடம்’ என்றேன்.

அன்று இரவு அவர் மறுபடியும் போன் செய்து, 'பாரதி வசித்த இடம், இப்படி பராமரிப்பே இல்லாமல் கிடக்கிறதே’ என வருந்திக் கண்ணீர்விட்டார். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நினைவகங்களையே நாம் முழுமையாகப் பராமரிப்பது இல்லை. காசியில் பாரதி வசித்த வீட்டைப் பற்றி யார் கவலைப்படப்போகிறார்கள்?

1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் காலமானதும், அவரது வாழ்க்கை நிலை நெருக்கடியானது. அப்போது அத்தை குப்பம்மாளும், அவரது கணவர் கிருஷ்ணசிவனும் காசியில் இருந்தார்கள். பாரதியை காசிக்கு வருமாறு அத்தை அழைக்கவே, அவரும் புறப்பட்டுச் சென்றார். தனது 16 முதல் 21வது வயது வரை பாரதியார் காசியில் வசித்திருக்கிறார். அவரது சிந்தனையிலும் உடையிலும் உருவத்திலும் மாற்றத்தை உருவாக்கியது வாரணாசியே!

இந்திய வானம் - 12

நெரிசலான சந்துக்குள்தான் சிவ மடம் என்ற பாரதி வசித்த வீடு அமைந்து இருக்கிறது. அதில் தற்போது பாரதியின் உறவினர் கே.வி.கிருஷ்ணன் வசிக்கிறார். மிகவும் வயதான மனிதர். பாரதியின் மார்பளவு சிலை ஒன்று, வேப்பமரத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. பாரதி அமர்ந்து படித்த மேஷை, அவர் பயன்படுத்திய ஹார்மோனியம் போன்றவை நினைவுப் பொருட்களாக உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் அந்த வீட்டை பாரதி நினைவகமாக மாற்றி, அங்கே அவரது பாடல்கள், புகைப்படங்கள், செய்திகள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. அத்துடன் பாரதி வசித்த வீடு பற்றிய தகவல் பலகை வாரணாசி ரயில் நிலையத்திலும் முக்கிய இடங்களிலும் விடுதிகளிலும் வைக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய  மாநில அரசுகளிடம் குரல்கொடுக்கவேண்டியது நம் அனைவரின் கடமை!

ஜப்பானில் கவிஞர் பாஷோவின் நினைவிடத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே தினமும் இளைஞர்கள் ஒன்றுகூடி கவிதை வாசிக்கிறார்கள். ஹைக்கூ கவிதை எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பாஷோவின் கவிதைகளை வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். அந்த இடம் ஒரு தியான மண்டபம்போல அத்தனை அமைதியாக, இயற்கையோடு இணைந்து உருவாக்கப்பட்டிருந்தது. அதுதான் ஒரு கவிஞருக்கு நாம் செய்யும் மரியாதை!

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 'மகாகவி பாரதியார் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மிதித்துத் தள்ளி இறந்துபோய்விட்டார்’ என ஒரு பேச்சாளர் உணர்ச்சிப் பொங்க முழக்கமிட்டு கைதட்டல்கள் வாங்கிப்போனார். இவரைப்போல பலரும் இந்தப் பொய்யான தகவலை, தொடர்ந்து பகிர்ந்துவருகிறார்கள். மக்களும் இதை உண்மை என்றே நம்புகிறார்கள். ஒரு பொய் தொடர்ந்து சொல்லப்படுவதன் வழியே உண்மையாக உருமாறிவிடுகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.

பாரதியை யானை தூக்கி வீசியது நிஜம். ஆனால், அவர் அதில் மரணம் அடையவில்லை. அதன் சில மாதங்களுக்குப் பிறகு, திடீரென ஏற்பட்ட வயிற்றுப்போக்கால்தான் மரணம் அடைந்தார். இந்த உண்மையை பாரதியியல் ஆய்வாளர்கள் பாரதியின் மரணச் சான்றிதழுடன் நிரூபித்திருக்கிறார்கள். பாரதியாரின் இறுதிநாட்களைப் பற்றிய உண்மைச் செய்தியை உள்ளடக்கிய ஆய்வு நூலாக 'பாரதியின் இறுதிக்காலம்’ என்ற புத்தகத்தை முனைவர் ய.மணிகண்டன் எழுதியிருக்கிறார். அதில் உண்மையான தகவல்களை தகுந்த ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். பாரதியின் இறுதிக்காலத் தோற்றம் எப்படி இருந்தது என்பதைப்பற்றி ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸன் ஒரு சித்திரத்தைத் தருகிறார்.

நடுத்தர உயரம், ஒற்றை நாடி, மாநிற மேனி, பிரிபிரியாகச் சுற்றிய வால்விட்ட தலைப்பாகை, அகன்ற நெற்றி, அதன் மத்தியில் காலணா அளவு குங்குமப்பொட்டு, அடர்ந்த புருவங்கள், நிமிர்ந்த நாசி, முறுக்கிய மீசை, பித்தான் இல்லாத ஷர்ட்டு, அதை மூட ஒரு அல்பகா கோட், அது கிழிந்த நிலையில் இருக்க, சாந்தம் நிறைந்த கண்களுடன் பாரதி நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். புதுவையில் புகுந்த பாரதி வேறு... புதுவையில் இருந்து வெளியேறிய பாரதி வேறு. உள்ளே சென்றவர் வீரர், வெளியே வந்தவர் ஞானி.

இதுதான் கடைசிக் காலத்தில் இருந்த பாரதியின் தோற்றம். பாரதியை அவரது இறுதிக்காலத்தில் சந்தித்த பலரும், 'அவரது தோற்றமும் செயல்களும் ஞானியைப்போல் இருந்தன. அவர் ஒரு ஞானக்கிறுக்கர்போல நடந்துகொண்டார்’ எனக் கூறுகிறார்கள். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வ.ரா., பாரதியை யானை வீசி எறிந்த சம்பவத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

பாரதியார் சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் பக்கத்து வீதியில் குடியிருந்தார். கோயிலுக்குப் போகும்போதெல்லாம் கையில் தேங்காய், பழம் கொண்டுபோவது அவரது வழக்கம். கோயில் மண்டபத்தில் கட்டப்பட்டிருக்கும் அர்ச்சுனன் என்கிற யானையிடம் அவருக்குத் தனி பிரியம் இருந்தது. அந்த யானைக்குப் பழங்களைத் தந்து தும்பிக்கையைத் தடவிவிடுவார். இருவருக்குள்ளும் ஓர் இணக்கம் கூடியிருந்தது.

இந்திய வானம் - 12

ஒருநாள் யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அதை பாரதி அறிந்திருக்கவில்லை. வழக்கம்போல யானைக்குப் பழம் கொடுக்கப் போனார். பழத்தை வாங்குவதற்குப் பதிலாக யானை அவரையே தும்பிக்கையால் தூக்கிவிட்டது. நிமிட நேரத்தில் அவரைக் கீழே போட்டது. யானையின் கால்களுக்கு இடையே பாரதி விழுந்தார். கல்பாவிய தரை. தூக்கிப்போட்ட வேகத்தில் தலையில் காயம் படவே ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சிலர், குரல்கொடுக்கவே அங்கு இருந்த குவளைக்கண்ணன் ஓடிவந்தார். கூட்டத்தை விலக்கி உள்ளே பாய்ந்து பாரதியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்து மண்டபத்தில் படுக்கவைத்தார். எதிர்வீட்டில் இருந்த மண்டையம் ஸ்ரீனிவாஸாச்சாரியார் விரைந்து ஒரு வண்டிக்கு ஏற்பாடு செய்து, ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்.

அங்கே பாரதியாருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்து தொடர்சிகிச்சை அளிக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமாக எதுவும் இல்லை என்பதால், திருவல்லிக்கேணி வீட்டுக்குக் கொண்டுவந்தார்கள். யானைக்கு மதம் பிடித்திருந்ததால் தன்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றும், தன்னை மிக அருகிலே பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டு கீழே போட்டு அசையாமல் நின்றது என்றும் பாரதி சொன்னார். இது நடந்தது 1921-ம் ஆண்டு ஜூன் மாதம்.

இந்தச் சம்பவம் பற்றி, பாரதியின் மகள் சகுந்தலா பாரதியும் எழுதியிருக்கிறார். 'ஸ்ரீனிவாஸாச்சாரியார் மகள் ரெங்காள் என்பவள் எங்கள் வீட்டுக்கு ஓடிவந்து 'சகுந்தலா அப்பாவை ஆனை அடிச்சுடுத்து’ என அழுதுகொண்டே கத்தினாள். நான் ரெங்காவுடன் பார்த்தசாரதி கோயிலுக்கு ஓடினேன். அதற்குள் அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்விட்டிருந்தார்கள். திருவல்லிக்கேணி விக்டோரியா ஹாஸ்டலில் இருந்த என் தாயாரின் இளைய சகோதரரை அழைப்பதற்காகச் சென்றேன். அதற்குள் தந்தையை வீட்டுக்குக் கொண்டுவந்திருந்தார்கள். மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால் ஏற்பட்ட காயம். தலையில் பலமான அடி. பெரிய தலைப்பாகை இருந்தபடியால் தலை தப்பிற்று. அவர் குணமடைந்து மீண்டும் வேலைக்குச் செல்ல பல நாட்கள் ஆகின!’

ஆனால், 'பாரதி ஆய்வாளர்கள் பலரும் சொல்வதுபோல 1921-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தச் சம்பவம் நடைபெறவில்லை. 1920-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது 1921-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும்’ என்கிறார் முனைவர் ய.மணிகண்டன்.

யானை தூக்கி வீசிய சம்பவத்தை, தன் கற்பனை கலந்து 'கோயில் யானை’ என்ற நாடகமாக பாரதியார் எழுதியிருக்கிறார், 'சுதேசமித்திர’னில் வெளியான அந்த நாடகம், தற்போது மீள்பதிப்பு கண்டுள்ளது. பாரதியாரைத் தூக்கி வீசிய யானை, 1923-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துபோய்விட்டது. உடல் நலம் தேறிய பாரதி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். முண்டாசு கட்டிய பாரதியின் புகைப்படம் சென்னை பிராட்வேயில் இருந்த ரத்னா ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. அதை பாரதிதாசனுக்கு  அனுப்பிவைத்திருக்கிறார். பாரதியார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மொத்தமே ஐந்துதான். அவை முப்பது வயதில் இருந்து முப்பத்தைந்து வயதுக்குள் எடுக்கப்பட்டவை. புதுச்சேரியில் இரண்டும், காரைக்குடியில் இரண்டும், சென்னையில் ஒன்றுமாக எடுத்திருக்கிறார்.  

ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்த வக்கீல் தங்கப்பெருமாள் பிள்ளையின் அழைப்பின் பேரில், வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக பாரதியார் ஜூலை மாதம் ஈரோடு சென்றார். 1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 'மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் பேருரையாற்றினார்.

'மரணம் இல்லாமல் வாழ்வதுகுறித்த என்னுடைய கொள்கையை பெரிய மகான்கள் கூடியிருக்கிற இந்தச் சபையில் தர்க்கம்செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்’ என பாரதி தனது உரையைத் தொடங்கினார். 'நாணத்தை, கவலையை, சினத்தை, பொய்யை, அச்சத்தை, வேட்கையை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும்’ எனச் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இதையே ஐரோப்பிய சயின்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினங்கொண்டவர் தன்னைத்தானே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். கோபம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டு தாம் செய்தது எண்ணித் துயரக்கடலில் வீழ்ந்து சாவார்கள். ஆகவே, சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன’ என விளக்கினார் பாரதி.

' 'நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் நிகழும்’ என விஞ்ஞானி ஜகதீச சந்திரபோஸ் கூறுகிறார். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு’ என்றார் பாரதி. இப்படி மனிதனுக்கு எதனால் அழிவு நேருகிறது. அதை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றி பாரதி தெளிந்த ஞானத்துடன் உரையாற்றினார்.

பாரதியாரின் கருங்கல்பாளைய உரையை நேரில் கேட்ட ச.து.சு யோகியார் வியந்து எழுதியிருக்கிறார். 'மனிதருக்கு மரணமில்லை’ என்றபடியே பாரதியார் பாட ஆரம்பித்தார். 'அடடா... அவர் பாடியதைக் கேட்க வேண்டுமே! அது என்ன மனிதனுடைய குரலா? இல்லை. இடியின் குரல்; வெடியின் குரல். 'ஓஹோஹோ’ என அலையும் ஊழிக்காற்றின் உக்கிர கர்ஜனை. அர்த்த புஷ்டியுள்ள அசாதாரண வீரியத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக் குரல்’!

ஈரோடு நகரில் நிகழ்த்தப்பட்ட உரை, மக்களைப் பெரிதும் சிந்திக்கவைத்தது. ஆகவே, மறுநாள் ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து 'இந்தியாவின் எதிர்கால நிலை’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை திரும்பிய பாரதியார் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி சுதேசமித்திரனில் 'எனது ஈரோடு யாத்திரை’ என ஒரு கட்டுரை எழுதினார்.

இந்திய வானம் - 12

செப்டம்பர் மாதம், திடீரென ஏற்பட்ட வயிற்றுப்போக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டார். வேலைக்குப் போக முடியவில்லை. படுக்கையில் கிடந்தார். திருவல்லிக்கேணி மாட வீதியில் குடியிருந்த ஹோமியோபதி டாக்டர் டி.ஜானகிராமன் பாரதியைப் பரிசோதனைசெய்து மருந்து தந்திருக்கிறார். அதை பாரதியார் ஏற்க மறுத்துவிட்டார் என்கிறார்கள். செப்டம்பர் 11-ம் தேதி இரவு பாரதி தன் நண்பர்களிடம் ஆஃப்கானிஸ்தான் அரசராக இருந்த அமானுல்லா கானைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தார். அதுவே அவரது கடைசிப் பேச்சு என நீலகண்ட பிரம்மசாரி குறிப்பிடுகிறார்.

அன்றைய முன்னிரவு முழுவதும் பாரதி மயக்கத்தில் இருந்தார். பாரதியார் இறந்தது இரவு 1:30 மணி. ஆகவே, செப்டம்பர் மாதம் 12-ம் தேதி என மரணச் சான்றிதழில் குறிக்கப்பட்டுள்ளது. ஆக... யானை மிதித்ததற்கும் பாரதியின் மரணத்துக்கும் நேரடியாக ஒரு தொடர்பும் இல்லை. அவரது மரணச் சான்றிதழில் நீடித்த வயிற்றுப்போக்கின் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இனிமேலாவது நாம் அந்தப் பொய்யைக் கைவிட வேண்டும்!

பாரதியார் மிகச் சிறப்பாகப் பாடுவார் என்கிறார்கள். அவரது குரலைப் பதிவுசெய்து வைக்காமல்போனது நமது துரதிர்ஷ்டம். சென்ற தலைமுறைக்கு பாரதியோடு இருந்த உணர்ச்சிபூர்வ உறவு இந்தத் தலைமுறைக்கு இல்லை. அடுத்த தலைமுறைக்கு பாரதியார் என்பது வெறும் பிம்பமாக மட்டும் போய்விடுவாரோ என நினைக்கும்போது கவலையாகத்தான் இருக்கிறது!

- சிறகடிக்கலாம்...