Published:Updated:

ஏ மக்கா... அசத்திட்ட!

பா.ஜான்ஸன், படங்கள்: பகத்குமார்

ழகிய பெண்களை வைத்து இன்னும் ஒரு போட்டோஷூட் அல்ல இது... 'திருநங்கை’களை மாடல்களாகக்கொண்டு திருத்தமாக அரங்கேறிய போட்டோஷூட்! லாபப் பலன் எதிர்பாராத இந்த முனைப்புக்கு ‘International Photography Awards’ அமைப்பு 'மரியாதைக்கு உரிய பதிவு’ என அங்கீகாரம் அளித்துள்ளது. 

அழகியலும் உணர்வியலுமாக ஈர்த்திருப்பவர் ஃபேஷன் போட்டோகிராஃபர் பகத் குமார். ​'மக்கா போட்டோகிராஃபி’ என்ற பெயரில் ஸ்டுடியோ நடத்திக்கொண்டிருப்பவர்.

''சொந்த ஊர் நாகர்கோவில். ஃபிலிம் ரோல் கேமரால ஆரம்பிச்ச ஆர்வம், இப்போ ஃபேஷன் போட்டோகிராஃபியில வந்து நிக்குது. வைல்டு லைஃப் போட்டோகிராஃபிதான் என் ஆர்வம். ஆனா, கல்யாண் வர்மானு ஒரு போட்டோகிராஃபர், 'உனக்கு வைல்டு லைஃப் போட்டோகிராஃபி வராது. ஆனா, நீ மனித முகங்களை நல்லா போட்டோ எடுக்கிற. அதுல கவனம் செலுத்து’னு திசைத்திருப்பினார்.

ஏ மக்கா... அசத்திட்ட!

ஃபேஷன் போட்டோகிராஃபி பண்ணலாம்னு முடிவெடுத்தேன். அதுவரை அமெரிக்காவில் இருந்தேன். 'போயிங்’ல பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு சென்னைக்கு வந்தேன். சின்னதும் பெருசுமா புராஜெக்ட் பண்ணி ஸ்டுடியோ ஆரம்பிச்சேன். எங்க ஊர் பக்கம் 'என்ன மக்கா... நல்லா இருக்கியா?’னு பேசிக்கிறது வழக்கம். அதனால ஸ்டுடியோவுக்கு 'மக்கா’ன்னே பேர் வெச்சேன்.

ஏ மக்கா... அசத்திட்ட!

பொதுவா ஒரு பொண்ணுக்கு கலர்ஃபுல் டிரெஸ் போட்டு போட்டோஸ் எடுத்தாலே அது ஃபேஷன் போட்டோகிராஃபினு நினைப்போம். நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். இதைப் பற்றி அலெக்ஸ்னு ஒரு சீனியர் போட்டோகிராஃபர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, 'ஃபேஷன் போட்டோகிராஃபியை யாராலயும் விளக்க முடியாது. ஃபேஷன் போட்டோகிராஃபருக்கான தகுதி உனக்கு இருந்தா, நீயே அதைக் கண்டுபிடிச்சுருவ’னு சொன்னார். அப்பவும் எனக்குப் புரியலை. ஆனா, அடுத்தடுத்து புராஜெக்ட் பண்ண பிறகுதான் புரிய ஆரம்பிச்சது. டிரெஸ், நகைகள் மட்டும் ஃபேஷன் இல்லை. ஒரு காபி ஷாப்கூட ஃபேஷன்தான். முன்னாடி ஒரு சின்னக் கடை முன்பு ரெண்டு பெஞ்ச் போட்டா அது காபி கடைதான். ஆனா, இப்போ ஏ.சி, லாஞ்ச், பாஸ்ட்ரீஸ்னு 'காபி ஷாப்’க்கு வேற அடையாளம் வந்திருக்கு. அப்படி ஒரு மாற்றத்தைப் பதிவுபண்றதுதான் ஃபேஷன் போட்டோகிராஃபி. இந்தத் துறையில் லெஜெண்டா இருக்கிறவங்க அப்படியான மாற்றங்களை உடனுக்குடன் தங்கள் ஷூட்களில் பதிவுபண்ணியிருப்பாங்க. அதைப் புரிஞ்சுக்கவே எனக்கு வருஷக் கணக்கு ஆச்சு. அப்படி நானும் ஏதாவது முத்திரைப் பதிக்கணும்னுதான் திருநங்கைகளை வெச்சு போட்டோஷூட் பண்ணலாம்னு முடிவெடுத்தேன்.

ஏ மக்கா... அசத்திட்ட!
ஏ மக்கா... அசத்திட்ட!
ஏ மக்கா... அசத்திட்ட!
ஏ மக்கா... அசத்திட்ட!

ஒரு ஆண் இப்படி இருப்பான்; ஒரு பெண் இப்படி இருப்பாள்னு நமக்கு ஒரு நினைப்பு இருக்கிற மாதிரி, ஒரு திருநங்கை இப்படித்தான் இருப்பாங்கனு ஒரு எண்ணம் எல்லாருக்கும் இருக்கு. ஆனா, அது தப்பான புரிதல். அதனாலதான் அவங்களோட இயல்புகளை வெளிப்படுத்துற மாதிரி ஒரு போட்டோ ஷூட் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். 'பார்ன் டு வின்’னு ஒரு அமைப்பு மூலமா தேடினப்ப, கவிதா, ஷனா, ப்ரதீஷானு மூணு பேர் இந்த போட்டோஷூட்டுக்கு ஆர்வமா முன்வந்தாங்க. 'எந்த ஸ்டைல்ல பண்ணலாம்?’னு அவங்ககிட்டயே கேட்டப்ப, 'எங்களை ஒரு கிராமத்துப் பெண் மாதிரி காட்டுங்க. ஏன்னா, நகரத்துப் பெண்களைவிட அவங்க அதிக பெண்தன்மையோடு இருப்பாங்க’னு சொன்னாங்க. மேக்கப், டிரெஸ்னு ஆரம்பிச்சு எல்லாத்திலும் கிராமத்து டச் கொண்டுவந்துட்டோம். என் மேக்-அப் ஆர்ட்டிஸ்ட்கள் விஜி, ஒலிவியா, ஷரத் எல்லாரும் பைசாவே வாங்கிக்காம மேக்-அப் பண்ணாங்க. ஆனா, காஸ்டியூம், போட்டோஷூட்டுக்கு ஸ்பான்ஸர் கிடைக்கலை. 'திருநங்கைகளை வெச்சு எதுக்கு பண்ணணும்... இதனால என்ன லாபம்?’- இதுதான் ஸ்பான்ஸர்கள் கேட்ட கேள்வி. தவிச்சு நின்னப்ப என் காஸ்டியூம் டிசைனர் ராஜ் ஸ்பான்ஸர் பண்ணார். மடமடனு வேலைகளைப் பார்த்து படபடனு போட்டோஸ் எடுத்தோம். நாங்க எதிர்பார்த்ததைவிட போட்டோஸ் நல்லாவே வந்திருக்கு. ஆனா, இந்தப் படங்களை ஃபேஸ்புக்ல போட்டு லைக்ஸ் வாங்கணும்னு தோணலை. ஏன்னா, சிலர் இதுக்கு நெகட்டிவ் கமென்ட் போட வாய்ப்பு இருக்கு. இந்த போட்டோஷூட் பண்ணதால, எங்க மாடல்களுக்கு ஒரு சின்ன வருத்தம்கூட வந்துவிடக் கூடாது'' - அத்தனை அக்கறை தொனிக்கிறது பகத் குமார் குரலில்!