Published:Updated:

ஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..!

நா.சிபிச்சக்கரவர்த்தி , படங்கள்: ஜெ.சுரேஷ்

ல்லிக்கட்டு... தமிழர்களின் சாகசப் பெருமிதம்! திமிறும் திமில், கூரான கொம்பு, உடுக்கை வார்போல விம்மித்தெறிக்கும் முரட்டு உடல்வாகு... 'ஒன் அனிமல் ஆர்மி’யாக மிரட்டும் காளைகளோடு சரிமல்லுக்கு நிற்கும் நிராயுதபாணி இளைஞர்கள்... இந்தக் காட்சியை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. அப்படியான காளைகளின் கம்பீரத்திலும் இளைஞர்களின் வீராப்பிலும் மெய்மறந்து, 15 வருடங்களாக ஜல்லிக்கட்டுப் புழுதியில் புரண்டெழுந்து புகைப்படங்கள் க்ளிக்கிக்கொண்டிருக்கிறார் சுரேஷ். இந்த இடைவிடா ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டுக்காக 'சிறந்த புகைப்படக்காரருக்கான’ யுனெஸ்கோ விருது முதல் இந்திய அரசின் விருது வரை குவித்துக்கொண்டிருக்கிறார். தமிழகப் பாரம்பர்யத்தை இடைவிடாமல் பதிவுசெய்யும் இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். தனது 15 ஆண்டுகால உழைப்பை, முதல்முறையாக கண்காட்சியாக்கும் பணிகள் பரபரப்பாக இருந்தவரிடம் பேசினேன்...  

ஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..!

''பொதுவா கேமராமேன்கள் சொல்ற கதைதான். பி.எஸ்ஸி படிச்சுட்டு இருந்தப்ப கேமரா கைக்குக் கிடைச்சது. சகட்டுமேனிக்கு எல்லாத்தையும் படம் எடுத்தேன். ஊர்லயே சின்ன போட்டோ ஸ்டுடியோ வெச்சேன். வொய்ல்டு லைஃப் போட்டோகிராஃபி மேல ஆர்வம் வந்தது. அப்ப வின்சென்ட்னு ஒரு கேமராமேன் பழக்கமானார். அவர்தான் 1998-ம் ஆண்டுல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என்னைக் கூட்டிட்டுவந்தார். வாடிவாசல், நூற்றுக்கணக்கான காளைகள், சட்டை, டவுசர் தவிர நிராயுதபாணியா காளைகளை அடக்கும் இளைஞர்கள்னு அந்த செட்டப் பார்த்ததுமே அசந்துட்டேன். அதுவும் காளைகள் வாடிவாசலில் இருந்து திமிலை ஆட்டி கம்பீரமா வெளியே வரும் பாருங்க... சான்ஸே இல்லை. அடக்குறவங்களை விடுங்க... பக்கத்துல இருந்து வேடிக்கை பார்க்கிறவங்களுக்கே, உடம்புக்குள்ள அட்ரினலின் சுரக்கும்'' என வாடிவாசல் பரவசங்களை நினைவுகூர்வதற்காக சின்ன இடைவெளி கொடுக்கிறார்.

ஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..!
ஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..!

''ஜல்லிக்கட்டு போட்டோ எடுக்க ஸ்பாட் பிடிக்கிறது பெரிய வேலை. காலை 10:30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குதுன்னா, 6 மணிக்கே  போய் ஸ்பாட் புடிக்கணும். சாயங்காலம் 6 மணி வரைக்கும் ஒரே இடம்தான். ஏன்னா, சமயங்கள்ல சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல வீச்சான காளை வந்து நின்னு விளையாட்டு காட்டும். அதனால நடுவுல சாப்பிட, பாத்ரூம் போகனு எதுக்குமே போக முடியாது. அப்படி இருந்ததால சிலசமயம் மயக்கம் போட்டும் விழுந்திருக்கேன். ஆனா, அந்தப் பிடிவாதமான காத்திருத்தல்தான், எனக்கு உலக அங்கீகாரம் வாங்கித் தந்திருக்கு! 

ஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..!
ஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..!
ஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..!

ஒவ்வொரு காளையையும் ஒலிம்பிக் வீரர்போல தயார்ப்படுத்துவாங்க. 'டேய்... நீதான்டா என் குலதெய்வம், நீ ஜெயிப்படா. மானத்தைக் காப்பாத்திருடா’னு அன்பும் அதட்டலுமா காளைகளோடு பேசுவாங்க. பசங்களும் சளைச்சவங்க இல்லை. இத்தனை வருஷம் கவனிச்சதுல மூணு ஸ்டெப்ல அவங்க காளைகளை அடக்கிடுறாங்கனு புரிஞ்சது. காளை ஓடிவரும்போது அது கூடவே ஓடி திமிலைப் பிடிப்பாங்க. திமில்ல தொத்திக்கிட்டதும் காலை மாட்டின் கால்களுக்கு முன்னாடி விடுவாங்க. அதனால அது தடுமாறும். அப்போ அதோட காதுக்குள்ள சத்தமா கத்துவாங்க. அந்தத் திடீர் சத்தத்துல மாடு ஒரு நொடி திகைச்சு நிக்கும்.  அந்த ஒரு நொடிதான்... 'பிடிமாடு’னு சொல்லிருவாங்க. சிலர் திமில்ல தொத்திக்கிட்டு மாட்டுக் கண்களை மறைப்பாங்க. அப்போ மாடு மூர்க்கமாகிடும். அந்தச் சமயம் பக்கத்துல நிக்கிறவங்க அடிவாங்குவாங்க. நாள் முழுக்க பரபரனு இருக்கும் ஜல்லிக்கட்டுக்கு நிகரான சாகச விளையாட்டு, எனக்குத் தெரிஞ்சு வேற எதுவும் கிடையாது'' எனப் பூரிப்பவரிடம், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை பற்றி கேட்டதும் அமைதி ஆகிறார். சின்ன மௌனத்துக்குப்  பிறகு சொல்கிறார்...

 “’ஏறு தழுவுவதால் காளைகளுக்கு கஷ்டமில்லை!’- கமல் வாய்ஸ்”

மேலும் படிக்க: https://www.vikatan.com/news/article.php?aid=54537

''காளைகளைக் கொடுமைப்படுத்துறாங்கனு சொல்லி ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கியிருக்காங்க. ஆனா, அதுல ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை. என் இத்தனை வருஷ அனுபவத்துலேர்ந்து சொல்றேன்... களத்துல மனுஷங்க இறந்து பார்த்திருக்கேனே தவிர, ஒரு காளைகூட இறந்ததோ, பெரும்காயப்பட்டதோ இல்லை. ஸ்பெயினில் நடக்கும் 'Bullfight’-ல்தான் மாடு சித்ரவதைக்கு ஆள் ஆகும். ஆனா, தமிழ்நாட்டுல காளை மாடுகளை தெய்வமா, தங்களோட பெத்த பிள்ளைகளாத்தான் வளர்க்கிறாங்க.  உலகத்துல 4,000 வருஷத்துக்கும் மேல் விளையாடப்பட்டுவரும் ஒரே வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு மட்டும்தான். அதுக்கு இப்போ தடை விதிக்கப்பட்டிருப்பது...  பாரம்பர்ய இழப்பு. ஆனா, ஜல்லிக்கட்டு திரும்ப நடக்கும். நான் அந்தத் தருணங்களை என் கேமராவால் வேட்டையாடுவேன்' என்கிறார் நம்பிக்கையுடன்!