Published:Updated:

மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத குழந்தைகளைக் காப்பாற்றிய அன்னா பாட்டியின் கதை! #FeelGoodStory

மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத குழந்தைகளைக் காப்பாற்றிய அன்னா பாட்டியின் கதை! #FeelGoodStory
மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத குழந்தைகளைக் காப்பாற்றிய அன்னா பாட்டியின் கதை! #FeelGoodStory

மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத குழந்தைகளைக் காப்பாற்றிய அன்னா பாட்டியின் கதை! #FeelGoodStory

ன்பு என்ற ஒன்றைவிடப் பெரிய, வேறு எந்த ஞானத்தை உங்களால் அடைந்துவிட முடியும்?’ என்று கேட்கிறார் ஃபிரெஞ்ச் தத்துவவியலாளர் ரூஸோ (Jean-Jacques Rousseau). இதில் ஆழமான உட்பொருள் ஒன்று, இரண்டல்ல... நிறைய இருக்கின்றன. அவற்றை அனுபவபூர்வமாகத்தான் உணர முடியும். பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்ற மகளைப் பாராட்டப் பரிசுப் பொருள்கள் தேவையில்லை... நெற்றிப்பொட்டில் கொடுக்கும் முத்தம் ஒன்றே மிகச் சிறந்த கிஃப்ட். பெரும் துயரத்தைச் சுமந்து நிற்கும் நண்பனைத் தேற்ற வார்த்தைகளைவிட, தோளில் கைவைத்துக் கொடுக்கும் ஓர் அழுத்தம் போதுமானது. பல வருடங்கள் கழித்து ட்ரெயினில் வந்திறங்கும் தோழிக்குத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இறுக்கமான ஓர் அணைப்பு இன்னொரு தோழிக்குப் போதுமானது. புன்னகை, கை குலுக்குதல், தொடுதல், தட்டிக் கொடுத்தல், கைதட்டிப் பாராட்டுதல்... என நம் அன்பைப் பிறருக்கு வெளிப்படுத்த எத்தனையோ வழிகளும், உடல்மொழியும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் கையாள்வதில்லை. அன்பு மனதுக்கு மட்டுமல்ல... உடலுக்கும் உற்சாகம் கொடுக்கும், சமயத்தில் மருந்தாக, சிகிச்சையாகவும் செயல்படும் என்பதை விளக்கும் கதை இது.

20-ம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் இந்த உலகம் எதிர்கொண்ட பிரச்னைகள் அநேகம். அவற்றில் முக்கியமான ஒன்று, குழந்தைகள் இறப்பு. ஏதோ ஒரு நோய், பிரச்னை என ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒரு வயதுக்குட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் இதுதான் காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமலேயே இறப்பதும் நடந்தது. ஐரோப்பிய நாடுகளில், சில மருத்துவமனைகள் ஒருவழிமுறையைக் கையாண்டன. சீரியஸான பிரச்னையோடு ஒரு குழந்தை மருத்துவமனைக்கு வந்தால், `நம்பிக்கையில்லை’ (Hopeless) என்று அடையாளப்படுத்திய பின்னர் அனுமதிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு அதிகமாக இருந்தது குழந்தைகள் இறப்பது.

நிலைமை இப்படி இருந்தாலும், குழந்தைகள் இறப்பைத் தடுக்க, உண்மையான அக்கறையோடு, ஆத்மார்த்தமாகப் போராடிய மருத்துவர்களும் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரிட்ஸ் டால்போட் (Dr.Fritz Talbot). டஸ்ஸல்டார்ஃப் (Düsseldorf) என்ற நகரில் இருந்த குழந்தைகளுக்கான ஒரு கிளினிக்கில் இருந்தார். பல தாய்மார்களுக்கு டால்போட் கண்கண்ட தெய்வம். எத்தனையோ மருத்துவமனைகள் `நம்பிக்கையில்லை’ என்று கைவிட்ட கேஸ்களெல்லாம்கூட அவரிடம் வந்தன. தன்னால் முடிந்த வரை போராடுவார் டாக்டர் டால்போட். வெறும் மருந்து, மாத்திரைகளை நம்பாமல் பல புதுப்புது வழிகளையும் கடைப்பிடிப்பார். அவரின் பெரு முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. அந்தச் சிக்கலான காலகட்டத்திலும், அவரிடம் வந்த பெரும்பாலான குழந்தைகள் பிழைத்துக்கொண்டார்கள்.

மருத்துவமனையில் தன் மருத்துவர்கள் குழுவோடு ரவுண்ட்ஸ் போவார்; வார்டு வார்டாகப் போவார்; ஒவ்வொரு குழந்தையாக ஆராய்ந்து, குழந்தையின் நோயைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று யோசிப்பார். பின்னர் புதிதாக ஒரு வழியைக் கண்டுபிடித்து, அதைக் கடைப்பிடிக்கச் சொல்வார். டாக்டர் டால்போட்டின் குழுவிலிருந்தவர்களில், அவரோடு உடன் பணியாற்றியவர்களில் டாக்டர் ஜோசப் பிரென்னெர்மேனும் (Dr. Joseph Brennermann) ஒருவர். பின்னாளில் அந்தக் காலகட்டத்தையும் டாக்டர் டால்போட் குழந்தைகளை அணுகும் முறையைப் பற்றியும் அவரே விவரித்திருக்கிறார்.

ரவுண்ட்ஸின்போது டாக்டர் டால்போட் ஒவ்வொரு குழந்தையாகப் பார்த்தபடி வருவார். மிக சீரியஸான நிலையிலிருக்கும் குழந்தையைப் பார்த்தால், ஒரு கணம் நிற்பார். கட்டிலின் முன்னால் தொங்கும் குழந்தையின் சார்ட்டில், ஏதோ எழுதுவார். அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பது யாருக்கும் புரியாது. ஆனால், பல குழந்தைகள் அவர் எழுதிய `கிறுக்கல்’ எனப்படும் மாயாஜால கையெழுத்தில் பிழைத்து எழுந்திருக்கிறார்கள். டாக்டர் பிரென்னர்மேனுக்கு, டால்போட் சார்ட் ஷீட்டில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளத் தீராத ஆர்வம். அதில் அவர் பரிந்துரைத்திருப்பது அப்படி என்ன அற்புதமான மருந்து, அந்தச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகள் எப்படிப் பிழைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளத் தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால், டால்போட்டிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.

அன்றைக்கு அப்படித்தான், பிழைக்கவே பிழைக்காது என மருத்துவமனையே நம்பிக்கொண்டிருந்த ஒரு குழந்தை பிழைத்துக்கொண்டது. பிரென்னெர்மேனால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ரவுண்ட்ஸ் முடிந்ததும், தன் வார்டுக்குப் போவதற்கு முன்னர் டாக்டர் டால்போட்டின் தனி அறைக்குப் போனார். அப்படியும் கதவைத் தட்ட அவருக்குக் கைவரவில்லை. தன் வார்டுக்குத் திரும்பும் வழியில் தலைமை நர்ஸைப் பார்த்தார். அவருக்குத்தான் டால்போட் எழுதும் கையெழுத்தும், அதில் உள்ள சிகிச்சையும் புரியும். தலைமை நர்ஸிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தார்.

“மேடம்... எனக்கு ஒரு சந்தேகம்...’’

“கேளுங்க டாக்டர்...’’

“இன்னிக்கி ஒரு குழந்தை உயிர் பிழைச்சுதே... அது எப்படி? டாக்டர் டோல்போட் அப்படி என்ன மருந்து கொடுத்தார்?’’

“இதைத்தான் தெரிஞ்சுக்கணுமா? அந்தக் குழந்தை பிழைச்சதுக்குக் காரணம் அன்னா பாட்டி’’ என்ற தலைமை நர்ஸ், ஓர் அறையைச் சுட்டிக்காட்டினார். அந்த அறையை எட்டிப் பார்த்தார் பிரென்னர்மேன். உள்ளே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஒரு மூதாட்டி. அவர் மடியில் ஒரு குழந்தை இருந்தது. அதை மென்மையாகத் தட்டிக் கொடுத்து, தாலாட்டிக்கொண்டிருந்தார் அந்த அன்னா பாட்டி.

நர்ஸ் சொன்னார்... “எங்களால முடிஞ்ச அத்தனை சிகிச்சைகளையும் செஞ்சும் பிழைக்கவே முடியாதுங்கிற நிலைமையில இருக்குற குழந்தையை அன்னா பாட்டிக்கிட்ட கொண்டு வருவோம். அவரோட அரவணைப்பு, தாலாட்டு பல குழந்தைகளைக் காப்பாத்தியிருக்கு. இந்த ஆஸ்பத்திரியில இருக்குற டாக்டர்களாலயும் நர்ஸுகளாலயும் கொடுக்க முடியாத சிறந்த சிகிச்சையை அன்னா பாட்டி பல குழந்தைகளுக்குத் தந்திருக்காங்க.’’

அடுத்த கட்டுரைக்கு