வேலைக்குச் செல்லும் எல்லோருக்குமே மருத்துவப் பாதுகாப்பு அவசியம். இதற்காக இருப்பதுதான் குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸ். இது ஒவ்வொரு நிறுவனமும் தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்குவது.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 4

யாருக்கு குரூப் பாலிசி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு இ.எஸ்.ஐ மூலம் மருத்துவப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மெடிக்ளெய்ம் இருப்பது தற்போது அவசியம். குரூப் பாலிசியை தன் ஊழியர்களுக்கு மட்டும் வழங்குவதா அல்லது அவரது குடும்பத்தினருக்கும் சேர்த்து வழங்குவதா, காப்பீட்டுக்கான செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதா அல்லது குரூப் பாலிசி எடுத்துவிட்டு, அதற்கான ப்ரீமியத்தை ஊழியர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதா என்பதை முடிவுசெய்வது நிறுவனங்கள்தான்.

இத்தகைய பாலிசி டெய்லர் மேட் வகையைச் சேர்ந்தவை. அதாவது, நிறுவனம் தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப சில நோய்களுக்கு கவரேஜ் பெற முடியும். தன்னுடைய ஊழியர்களுக்கு பணிச் சூழல் காரணமாக, குறிப்பிட்ட பாதிப்பு வரக்கூடிய அபாயம் இருப்பதாகக் கருதினால், அந்த நோய்களையும் பாலிசியில் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, இன்ஷூரன்ஸ் நிறுவனம் பாலிசி தொகையை முடிவுசெய்யும். இதனால், ப்ரீமியம் சற்று அதிகமாக இருக்கும். இந்த பாலிசியில், காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு க்ளெய்ம் இன்மை போன்ற பிரச்னைகள் இருக்காது. இந்த பாலிசியைக்கூட போர்ட்டபிலிட்டி செய்யும் வசதி இப்போது உள்ளது.

எனக்குத்தான், அலுவலகத்திலேயே மெடிக்ளெய்ம் பாலிசி உள்ளதே, பிறகு தனியாக எடுக்க வேண்டுமா என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். இதுபற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

பாலிசி அலசல்

நேஷனல் மெடிக்ளெய்ம் பாலிசி

‘நேஷனல் ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ எனும் பொதுத்துறை நிறுவனம், தனிநபர் மற்றும் குடும்பத்துக்கான ‘நேஷனல் மெடிக்ளெய்ம் பாலிசி’ என்ற பெயரில் காப்பீட்டை அளிக்கிறது. ஆரோக்கியமான குடும்பத்துக்கு இதுபோன்ற பாலிசிகள் போதுமானதாக இருக்கும். இதிலேயே, விபத்து மற்றும் பெரும்பாலான நோய்களுக்கு கவரேஜ் கிடைத்துவிடும். இந்த பாலிசியில், இந்த நிறுவனம் கூட்டுறவு வைத்திருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும், பணம் இல்லாமல் மேற்கொள்ளும் கேஷ்லெஸ் செட்டில்மென்ட் வசதியைப் பெறலாம். மற்ற மருத்துவமனைகளில், செலவு செய்துவிட்டு அதற்குரிய ஆவணங்களை அளித்து, பணத்தைத் திரும்ப பெறும் வசதியும் உள்ளது. 

தனிநபர் பாலிசி என்றால் 18 வயது முதல் 80 வயது வரை யார் வேண்டுமானாலும் பாலிசியை எடுக்கலாம். அதேபோல், `50,000 முதல் `5,00,000 ரூபாய் வரை மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியும். பாலிசி எடுத்த முதல் 30 நாட்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்களுக்கு, 60 நாட்களுக்குப் பிறகும் இந்த பாலிசியில் கவரேஜ் கிடைக்கும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது, பாலிசி தொகையில் ஒரு சதவிகிதம் வாடகையாகக் கொடுக்கப்படும். இது `5,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதுவே, ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டிருந்தால், 2 சதவிகிதம் வரை க்ளெய்ம் கிடைக்கும். நான்கு ஆண்டுகள் எந்த க்ளெய்மும் பெறவில்லை எனில், நான்காவது ஆண்டின் இறுதியில் இலவச மருத்துவப் பரிசோதனை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு மட்டும் அல்லாமல், 140க்கும் மேற்பட்ட ‘டே கேர்’ சிகிச்சைகளுக்கும் இதில் கவரேஜ் உள்ளது. பாலிசி எடுத்த ஓர் ஆண்டுக்குப் பிறகு பிரசவச் செலவும்கூட இதில் கவர் ஆகும். முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் இந்த பாலிசியின் கீழ் க்ளெய்ம் பெறலாம். வாழ்நாள் முழுக்க பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளலாம். ஏற்கெனவே ஏதேனும் நோய் இருந்தால், பாலிசி எடுத்த முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கான கவரேஜ் பெற முடியும்.

இந்த பாலிசி எடுத்தால், வருமான வரிவிலக்கும் உண்டு. பிரான்ஸ், சில்வர், கோல்டு, பிளாட்டினம் என நான்கு வகையான பிளான்களில் வருகிறது.

20 வயதுள்ள ஒருவர் `5,00,000-க்கு பாலிசி எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் பிரான்ஸ் பிளானில் `3,571 மட்டும் செலுத்தினால் போதும். சில்வர் பிளானுக்கு `4,320-ம், கோல்டு பிளானுக்கு `6,471-ம், பிளாட்டினம் பிளானுக்கு `15,050-ம் செலுத்த வேண்டும்.

இதுவே 55 வயதுள்ள நபர் 5,00,000 ரூபாய்க்கு பாலிசி எடுப்பதாக இருந்தால், அவர் பிரான்ஸ் பிளானுக்கு `11,953-ம், சில்வர் பிளானுக்கு  `14,803-ம், கோல்டு பிளானுக்கு `22,654-ம், பிளாட்டினம் பிளானுக்கு `53,669-ம் செலுத்த வேண்டும்.

இதுவே, 30 வயதுள்ள கணவன், 25 வயதுள்ள மனைவி, ஐந்து வயதான குழந்தை என மூவருக்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பதாக இருந்தால், பிரான்ஸ் பிளானில் `7,585-ம், சில்வர் பிளானில் `8,678-ம், கோல்டு பிளானில் `12,659-ம், பிளாட்டினம் பிளானில் `16,717-ம் செலுத்த வேண்டும்.

- பா.பிரவீன் குமார்

உங்கள் கவனத்துக்கு...

நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டும்தான் க்ளெய்ம் பெற முடியும். அதுவும், மருத்துவமனையில் குறைந்தபட்சம் 24 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டும்தான் க்ளெய்ம் பெற முடியும்.

காஸ்மெட்டிக், பல் மருத்துவம் போன்ற சில சிகிச்சைகளுக்கு மெடிக்ளெய்ம் கிடைக்காது. ஆனால், விபத்து காரணமாக இந்த சிகிச்சை தேவைப்பட்டால் க்ளெய்ம் கிடைக்கும்.

எந்தெந்த நோய்க்கு க்ளெய்ம் கிடைக்கும் என்று பாலிசி எடுக்கும்போதே தீர ஆய்வு செய்துகொள்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism