Published:Updated:

ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நட்பைச் சுமந்த கடிதங்கள்! #MaryAndMax #MovieRewind

சுரேஷ் கண்ணன்
ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நட்பைச் சுமந்த கடிதங்கள்! #MaryAndMax #MovieRewind
ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நட்பைச் சுமந்த கடிதங்கள்! #MaryAndMax #MovieRewind

44 வயது அமெரிக்க ஆசாமிக்கும் 8 வயது ஆஸ்ரேலிய சிறுமிக்கும் இடையில் கடிதங்களின் வழியாக வளரும் உன்னதமான நட்பு பற்றிய அனிமேஷன் திரைப்படம் Mary and Max . விநோத குணாதிசய கதாபாத்திரங்கள், அவர்களின் விசித்திரமான செய்கைகள் என்று இதில் நிகழும் சம்பவங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. 

ஆண்டு 1976. ஆஸ்திரேலியாவில் உள்ள சிறுமி, மேரி டெய்ஸி டிங்கிள். ‘தான் அழகற்றவள்’ என்கிற தாழ்வுணர்ச்சி உள்ளவள். சக மாணவர்களின் கிண்டலால் இன்னமும் சுருங்கிப்போகிறாள். அவள் தந்தை தூரத்தில் தனியாக வாழ்கிறார். மிகையான உதட்டுச்சாயம் பூசியிருக்கும் தாய்க்குப் பொருள்களைத் திருடும் மனநோய். ‘தவிட்டுக்கு உன்னை வாங்கினேன்’ என்று நம்மூரில் சொல்வதுபோல “நீ பிறந்ததே ஒரு விபத்துதான்” என்பார்கள். “பியர் டின்னில் நீ பிறந்தாய்” என்பார் தந்தை. 

தன் பிறப்பு மட்டுமின்றி, பொதுவாகவே ‘குழந்தைகள் எவ்வாறு பிறக்கிறார்கள்?' என்கிற சந்தேகம் மேரிக்கு ஏற்படுகிறது. ஒருமுறை டெலிபோன் டைரக்டரியைப் பார்த்துக்கொண்டிருக்கையில், அதில் உள்ள அமெரிக்கப் பெயர்கள் அவளைக் கவர்கின்றன. அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, கடிதம் அனுப்ப தீர்மானிக்கிறாள். அப்படி அவளால் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசாமிதான், மேக்ஸ் ஜெர்ரி ஹோரோவிட்ஸ். 

மேக்ஸ், நியூயார்க்கில் தனிமையில் வசிக்கும் 40 வயது ஆசாமி. அவரின் விநோத குணாதிசயம் காரணமாக, பல பணிகளிலிருந்து மாறிக்கொண்டே இருப்பவர். மேரிபோலவே அச்சவுணர்வும் தாழ்வுணர்ச்சியும் உண்டு. அவரிடம் திடீரென ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டால், உடல்நடுங்கி, வியர்த்து வழிந்து மூலையில் உள்ள நாற்காலியின் மீது நெடுநேரம் நின்றுவிடுவார். பதட்டமாகும்போதெல்லாம் அதிக அளவு சாக்லேட் உண்பதால், உடல்பருமன் பிரச்னையும் உண்டு. ‘The Noblets’ என்கிற கார்ட்டூன் தொடருக்கு மேரியும் மேக்ஸூம் ரசிகர்கள் என்பதுதான் அவர்களை இணைக்கும் ஒரே விஷயம். 

‘குழந்தைகள் எவ்வாறு பிறக்கிறார்கள்?’ என்கிற கேள்வியுடன் மேரி அனுப்பும் கடிதம், மேக்ஸூக்கு வருகிறது. அவருடைய சுபாவப்படி நடுங்கிவிடுகிறார். மேரி தன் உருவத்தையும் செல்லப் பிராணியான சேவலின் படத்தையும் வரைந்து அனுப்பியிருக்கிறாள். அறிமுகம் இல்லாத இந்த உறவினால், திகைத்துப்போகும் மேக்ஸ், பிறகு சுதாரிக்கிறார். தன் டைப்ரைட்டரில் விரிவான பதில் கடிதம் ஒன்றை அடித்து மேரிக்கு அனுப்புகிறார். 

இப்படிக் கடிதங்களின் வழியே அவர்களின் உறவு வளர்கிறது. கடிதம் மூலமே பரஸ்பரம் சாக்லேட்களையும் பரிமாறிக்கொள்கிறார்கள். அவரவர்களின் உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஒருமுறை ‘காதல்’ குறித்த வில்லங்கமான கேள்வி ஒன்றை மேரி கேட்கிறாள். அதை வாசித்து அதிகமாகப் பதட்டப்படும் மேக்ஸ், அதிக சாக்லேட்டுக்களைத் தின்று ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். 

மேக்ஸின் கடிதங்கள் வருவது நின்றுபோவதால், மேரி மனச்சோர்வு அடைகிறாள். இதற்கிடையில், நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பெரும்பணம் மேக்ஸுக்கு லாட்டரியில் பரிசாகக் கிடைக்கிறது. தன் வாழ்நாளுக்குத் தேவையான சாக்லெட்டுக்களை வாங்கி அடுக்குகிறார். கார்ட்டூன் உருவப் பொம்மைகளை வாங்குகிறார். மீதமுள்ள பெரும்பணத்தை, தன் பக்கத்து வீட்டுத் தோழிக்கு வழங்கிவிடுகிறார். என்ன செய்தாலும் நிறைவு வரவில்லை. திடீரென மேரியின் நினைவு வருகிறது. அவளுக்கு நீண்ட காலமாகக் கடிதம் அனுப்பாததை உணர்கிறார். எனவே, மருத்துவமனையில் இருந்தது உள்ளிட்ட தன் நிலைமையை விளக்கமாக எழுதி அனுப்புகிறார். அவர் கடிதத்தைக் கண்டதும் மகிழ்ச்சி அடையும் மேரி, அவரைச் சந்திக்க பணத்தைச் சேமிக்க ஆரம்பிக்கிறாள். கடித உறவின் மூலம் வளரும் இந்த நண்பர்கள், நேரில் சந்தித்தார்களா? இடையில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதைச் சுவாரசியமும் நெகிழ்வுமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

'ஸ்டாப் மோஷன்' என்கிற தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள இந்த அனிமேஷன் திரைப்படம், விமர்சகர்களின் அமோகமான பாராட்டுக்களைப் பெற்றது. பல விருதுகளையும் வாங்கியுள்ளது. இரண்டு தேசத்துப் பின்னணிகளுக்கு எனத் தனித்தனி நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான அனிமேஷன் திரைப்படங்கள்போல வேகமான அசைவுகள் இல்லை. கதையின் உள்ளடக்கத்தை எதிரொலிக்கும் வகையில் நிதானமாக நகரும் காட்சிகள் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றன. 

தாழ்மை உணர்ச்சியும் மனச்சிக்கலும் உள்ளவர்களின் உலகம் எத்தனை விநோதமானது, அவர்கள் எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை வேடிக்கையாகவும், மிக நுட்பமாகவும் பதிவுசெய்கிறது இந்தத் திரைப்படம். மேக்ஸ் மற்றும் மேரி இருவருமே வேகமாக இயங்கும் இந்த உலகத்துக்குப் பொருத்தம் இல்லாதவர்கள். எனவே, தங்களின் கடித உறவுமூலம் பிரத்யேகமான உலகத்தைப் படைத்துக்கொள்கிறார்கள். தங்களின் விநோதமான குணாதிசயங்களின் இடையேயும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறார்கள். 

இந்தத் திரைப்படத்தின் இயக்குநரான ஆடம் எலியட், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். நியூயார்க்கைச் சேர்ந்த ஒருவருடன் கடிதங்களின் வழியாக 20 ஆண்டுகளுக்கும் நண்பராக இருந்த ஓர் ஆஸ்திரேலியரைப் பற்றிய உண்மையான கதை இது. இத்திரைப்படத்துக்காக ஆயிரக்கணக்கான மினியேச்சர் கலைப்பொருள்கள் உருவாக்கப்பட்டன. 57 வாரங்களின் கடும் உழைப்பு இதன் பின்னணியில் உள்ளது. படத்துக்கு அருமையான இசைக்கோர்ப்பை தந்திருப்பவர் Dale Cornelius. மனஉளைச்சல் காரணமாக மேரி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்யும்போது, பின்னணியில் ஒலிக்கும் ‘Que Sera, Sera (Whatever Will Be, Will Be)’ என்கிற பாடல் அற்புதம். படத்தின் இறுதிக் காட்சி மிகுந்த நெகிழ்வு. 

பேனா நண்பர்கள் (Pen Friend) என்கிற கடிதம் வழியாக வளரும் நட்பு உலகம் பற்றி அறியாத, இன்றைய கணினி சிறார்கள் அவசியம் காணவேண்டிய திரைப்படம் இது.