
'அறம் செய விரும்பு’ திட்டம் நிகழ்த்தும் உதவிப் பணிகளின் அப்டேட்..!
கோவை மாவட்ட மலைப்பிரதேச வனக் கிராமம் தூமனூர். பல தலைமுறைகளாக இருளர் சமூகப் பழங்குடி மக்களின் வாழ்விடம் இது. மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியையும் அனுபவித்திராத இவர்கள், தங்கள் பிள்ளைகள் படிக்க, வன விலங்குகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மின் விளக்குகள் அமைத்துத் தர அரசை வலியுறுத்திவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தன்னார்வலர் லட்சுமணன் இந்தக் கோரிக்கையை நம் கவனத்துக்குக் கொண்டு வந்தார். சூரிய ஒளி மின்சார விளக்குகள் அதிகமாகத் தேவைப்படும் இடங்களாக தூமனூரில் ஒன்றும், மலைகாயம்பதி கிராமத்தில் மூன்றும் தேர்வுசெய்யப்பட்டு, அடுத்த ஓரிரு தினங்களில் சூரிய ஒளி மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. ஒரு முன்னிரவில் ஒளிரத் தொடங்கிய மின் விளக்குகள், அந்தப் பகுதி மக்களின் மனங்களிலும் மகிழ்ச்சி வெளிச்சத்தைப் பாய்ச்சின.

''இது எங்க பல வருஷக் கோரிக்கை. உங்க மூலமா நிறைவேறியிருக்கு. படிக்கிற எங்க பிள்ளைகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இரவு நேரத்துல இனிமே பயம் இல்லாம நடமாட முடியும்'' என்கின்றனர் மகிழ்ச்சி பொங்க!
படம்: ரமேஷ் கந்தசாமி
நல்ல தண்ணி மெஜின்!
'சிவகங்கை மாவட்டம், கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 87 மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு நிலத்தடி நீர் கடினத்தன்மையோடு உப்பாகவும் இருக்கிறது. நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்துக் கொடுத்தால், மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்’ என்ற கோரிக்கையை, தன்னார்வலர் சொக்கலிங்கம் மூலம் அனுப்பி இருந்தார் பள்ளித் தலைமை ஆசிரியர் கற்பகம். அதேபோல், சாக்கோட்டை ஒன்றியம், பழையூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதாவிடம் இருந்தும் இதே கோரிக்கை வந்திருந்தது. இரு பள்ளிகளிலும் மணிக்கு 25 லிட்டர் முதல் 50 லிட்டர் வரை நீரைச் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

''மதியம் சாப்பிட்டு முடிச்சதும் உப்புத் தண்ணியைத்தான் குடிப்போம். எவ்வளவு குடிச்சாலும் தாகம் போகாது. இன்டர்வெல்ல வீட்டுக்கு ஓடிப்போய் தண்ணி குடிச்சுட்டு வருவோம். இனிமே அப்படி ஓடவேண்டி இருக்காது. நல்ல தண்ணி மெஷின் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்'' என்றனர் கொடிக்குளம் கிராம பள்ளி மாணவர்கள்.
படம்: எஸ்.சாய் தர்மராஜ்
மேகமலையில் சுடுநீர் இயந்திரம்!
தேனி மாவட்டம் மேகமலையில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம். இங்கு ஆண்டின் பாதி நாட்கள் கடும் குளிரின் ஆதிக்கம் அதிகம். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க, ஹைவேசிஸ் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியும், இரவங்கல்லார் மலைக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இயங்குகின்றன. 'பள்ளி மாணவர்கள் குளிர்ந்த நீரைக் குடிப்பதால், அடிக்கடி உடல்நலக் குறைவுக்கு ஆளாகிறார்கள். இந்தப் பள்ளிகளின் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், ஹாட் வாட்டர் டிஸ்பென்சர் மெஷின் அமைக்க கோரிக்கை வைத்தார் தன்னார்வலர் அ.உமர் பாரூக். அது நிறைவேற்றப்பட்டது.

'வரப்போகும் மழை, குளிர்காலங்களை பள்ளி மாணவர்கள் சமாளிக்க இந்த ஹாட் வாட்டர் டிஸ்பென்சர் மெஷின் ரொம்ப உதவியா இருக்கும். 'அறம் செய விரும்பு’ திட்டத்துக்கு ரொம்ப நன்றி' என்றனர் பள்ளி ஆசிரியர்கள்.
படம்: வீ.சக்தி அருணகிரி
சென்னை தேன்மொழி

''நான் நல்லா படிக்கிற ஸ்டூடன்ட். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், பேஸ்கட் பால்னு விளையாட்டிலும் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனா, காலேஜ் ஃபீஸ் கட்ட வசதி இல்லை. படிப்போடு சேர்ந்து என் விளையாட்டுத் திறமையும் பாதிக்கப்படும் நிலை. அப்போதான் 'அறம் செய விரும்பு’ திட்டத்துக்கு விண்ணப்பிச்சேன். லாரன்ஸ் சார், என் காலேஜ் ஃபீஸைக் கட்டி, படிப்பைத் தொடரச்செஞ்சார். உதவிய நெஞ்சங்களுக்கு நன்றி'' என்கிறார் தேன்மொழி. இவருக்கான உதவி, தன்னார்வலர் கோபியின் நிதியில் இருந்து அளிக்கப்பட்டது.
படம்: சொ.பாலசுப்ரமணியன்
இலங்கை மாணவர்களுக்கு, கல்வி உதவி!

அபிஷேக் ராய், சஞ்சீவனி... இலங்கையைச் சேர்ந்த இருவரும், இப்போது குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரி மாணவர்கள். இவர்களுக்கு விடுதிக் கட்டணம்கூட கட்ட முடியாத வறுமையான குடும்பச் சூழல். ஒழுங்காகச் சாப்பிடாததால் ஒருநாள் சஞ்சீவனி மயக்கம் போட்டு விழ, அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்தான் சில உதவிகளைச் செய்திருக்கிறார். அப்போதுதான் அபிஷேக் ராய் பற்றியும் தெரியவந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் கட்ட தன்னார்வலர் ச.பாலமுருகன் பரிந்துரைத்தார். அதன்படி இவர்கள் இருவரின் விடுதி மற்றும் கல்விக் கட்டணங்களுக்கான செக், கல்லூரி முதல்வரிடம் வழங்கப்பட்டது.
படம்: க.தனசேகரன்
அறம் தொடரும்!
அறம் செய விரும்பு திட்டத்தின் செயல்பாடுகள் ஆனந்த விகடனில் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.விகடன் டீம்