Published:Updated:

சோட்டா இப்போது... தாவூத் எப்போது?

மருதன்

சோட்டா இப்போது... தாவூத் எப்போது?

மருதன்

Published:Updated:

ரு வழியாக நிழல் உலக தாதா சோட்டா ராஜன் பாலித் தீவின் விமான நிலையத்தில் இந்தோனேஷியக் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுவிட்டான். நியாயப்படி, இந்தக் கைது இந்தியாவைப் புரட்டிப்போட்டிருக்க வேண்டும். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியும் ஆச்சர்யமும்! 

1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி மும்பையில் வெடித்த 13 வெடிகுண்டுகளையும், அவற்றில் சிக்கிச் சிதறிய 350 உயிர்களையும் இந்தியா மறக்காது. துல்லியமான ஒருங்கிணைப்போடு ஒரே நாளில், ஒரு நகரில் இத்தனை குண்டுகள் வெடித்தது... உலகில் அதுவே முதல்முறை. சுமார் 1,200-க்கும் அதிகமானோர் இந்தத் தாக்குதல்களில் காயம் அடைந்தனர். இதை நிகழ்த்திக்காட்டியவர்கள் தாவூத் இப்ராஹிமின் குழுவினர். இந்த தாவூத் இப்ராஹிமின் வலது கரமாகச் செயல்பட்டவன் சோட்டா ராஜன். ஆக, 'சின்ன மீன்’ சோட்டா ராஜன்; 'பெரிய மீன்’ தாவூத் இப்ராஹிம்.

20 ஆண்டுகளாக இன்டர்போல் அமைப்பால் தேடப்பட்ட குற்றவாளி சோட்டா ராஜன் மீது இந்தியாவில் மட்டும் மொத்தம் 68 வழக்குகள். கொலை வழக்குகள் 17. இந்தியாவில் இருந்து வெளியேறி, முதலில் தென் கிழக்கு ஆசியாவில், பிறகு ஆப்பிரிக்காவில் தலைமறைவாகத் திரிந்த சோட்டா ராஜன், ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பிறகு, பாலித் தீவுக்கு வந்திருக்கிறான். அங்கேதான் கைது நடைபெற்றுள்ளது. 'சின்ன மீனை வைத்து பெரிய மீனைப் பிடிக்கப்போகிறோம்’ என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோட்டா இப்போது... தாவூத் எப்போது?

அது சாத்தியமா?

1960-ம் ஆண்டு மும்பையில் ஒரு மில் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த சோட்டா ராஜனின் நிஜப்பெயர், ராஜேந்திர சதாசிவ நிகல்ஜே. திரையரங்குகளில் பிளாக் டிக்கெட் விற்றவன், படிப்படியாக தொடர் திருட்டுகளில் ஈடுபட்டான். மும்பை செம்பூர் ராஜன் நாயர் என்கிற படா ராஜனிடம் சேர்ந்தபோது இவனது கிரிமினல் வாழ்க்கை விரிவடைந்தது. மினி தாதாவாக உள்ளூரில் வலம்வந்த படா ராஜன் 1983-ம் ஆண்டு கொல்லப்பட்டபோது அந்த இடத்தைப் பிடித்துக்கொண்ட நிகல்ஜே, விரைவில் 'சோட்டா ராஜனாக’ அங்கீகரிக்கப்பட்டான்.

பிறகு, மும்பை நிழல் உலக முடிசூடா மன்னன் தாவூத் இப்ராஹிமுக்கு தோஸ்த் ஆன பிறகு, சோட்டா ராஜனின் வளர்ச்சியில் அதிவேகப் பாய்ச்சல் நிகழ்ந்தது. எந்த அளவுக்கு என்றால், தாவூத் ஒருகட்டத்தில் துபாய்க்குத் தப்பிச் சென்றபோது அவனின் பிசினஸை ஏற்று நடத்தியதே சோட்டா ராஜன்தான். இந்தியாவில் தனக்கும் வலைவீசப்படுவதை உணர்ந்து வளைகுடா நாடுகளுக்குத் தப்பிச்செல்லும் வரை மும்பை நிழல் உலக விவகாரங்கள் அனைத்தும் சோட்டா ராஜன் கண்ணசைவில்தான்.

ஒருகட்டத்தில் தாவூத்துக்கும் சோட்டா ராஜனுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு விரிசல், மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு முற்றிலும் சிதைந்தது. தாவூத்திடம் இருந்து சோட்டா ராஜன் பிரிந்து சென்றதற்கு மும்பை குண்டுவெடிப்பே காரணம் எனச் சொல்லப்பட்டதை,  இந்தியத் தரப்பும்  ஏற்றுக்கொண்டது. இப்படி தாவூத் குழுவினருக்கு நேர் எதிராகத் தன்னை நிறுவிக்கொண்டான் சோட்டா ராஜன்.  

தாவூத் தரப்பு, சோட்டா ராஜன் குழுவைத் தேடித் தேடி வேட்டையாடியதும், பதிலுக்கு சோட்டா ராஜன் தரப்பு, தாவூத் ஆட்களைக் கொன்றதும் பரபர தீப்பொறி நிகழ்வுகள். இவற்றில் சில பாலிவுட் படங்களாக வெளிவந்து கனமாகக் கல்லா கட்டியதும் தனிக் கதை.

சோட்டா இப்போது... தாவூத் எப்போது?

2000-ம் ஆண்டு பேங்காக்கில் தங்கியிருந்த சோட்டா ராஜனை, தாவூதின் டி கம்பெனியைச் சேர்ந்த சோட்டா ஷகில், சரத் ஷெட்டி குழு கண்டுபிடித்து, கொல்ல முயன்றபோது சோட்டா ராஜன் தப்பியது கேங்ஸ்டர் சினிமாவுக்கான சீன். தாய்லாந்து தொழிலதிபர் ஒருவர் ஏற்பாடு செய்த ராணுவ வண்டியில் ஏறி, கம்போடியா வந்தடைந்து, அங்கிருந்து பாதுகாப்பாக ஈரான் சென்று சேர்ந்தான். அடுத்த மூன்றே ஆண்டுகளில் சோட்டா ராஜனின் ஆட்கள் சரத் ஷெட்டியை துபாயில் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பழிவாங்க, ஆஸ்திரேலியாவில்  சோட்டா ராஜனைக் கொல்லத் திட்டமிட்டான் சோட்டா ஷகில். ஆனால், எதுவும் பலிக்கவில்லை.

முன்னர் ஒருமுறை தாவூத் இப்ராஹிமே நேரடியாக சோட்டா ராஜனைக் கொல்ல முயன்றானாம். தன் கப்பலுக்கு வரும்படி சோட்டா ராஜனுக்குப் பிரத்யேக அழைப்பு விடுத்தான் தாவூத். அதன் உண்மை நோக்கம் உணர்ந்த சோட்டா ராஜன், அந்த அழைப்பை நிராகரித்துவிட்டான். அவனேகூட பலமுறை தாவூத் இப்ராஹிமைக் கொல்ல முயற்சி செய்து தோற்றவன்தான். 'நான் தாவூதைக் கொல்ல எட்டு முறை முயற்சிசெய்தேன்’ என பேட்டி ஒன்றில் சொன்னான் சோட்டா ராஜன். எனினும் அவனால், தாவூத்துக்கு நெருக்கமான சிலரைத்தான் ஒழித்துக்கட்ட முடிந்ததே தவிர, தாவூதின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

உண்மை கலந்த பொய்க் குறிப்புகள், பொய் கலந்த உண்மைக் கதைகள்... என தாவூத் - சோட்டா ராஜன் உறவு, பகை, சாகசங்கள் எல்லாவற்றையும் இரண்டாகப் பிரிக்க முடியும். 'இவற்றில் சில இந்த இரு குழுவினரே கவனமாகப் பரப்பியவை’ என்கிறார்கள். அவர்கள் மீதான  மக்களின் அச்சத்துக்கும் அவர்களின் நிழல் உலகத் தொழிலுக்கும் இந்த இரண்டும் முக்கிய மூலதனங்கள்.

கடத்தல், கறுப்புப் பணம், கொலை மிரட்டல், கொலை என இயங்கிய மும்பை நிழல் உலகம், கொஞ்சம்போல் வெளிச்சத்துக்கு வந்து ரியல் எஸ்டேட், பாலிவுட் சினிமா என பரவிப் படர்ந்தது. திரட்டிய பெரும் செல்வத்தைக் கொண்டு ஒரு மாபெரும் சர்வதேச வலைப்பின்னலையும் வெற்றிகரமாக உருவாக்கியது. அதே சமயம், மும்பை நிழல் உலகின் செல்வாக்கு தேயவும் தொடங்கியது. இந்த இரண்டும் நடந்தது 1990-களில்.

இதை எல்லாம் கிட்டத்தட்ட வேடிக்கை மட்டுமே பார்த்துவந்த இந்தியத் தரப்பு, மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகே அதிர்ச்சியுடன் விழித்துக்கொண்டது. அப்போது அவர்கள் கண்களுக்கு இரண்டு குழுக்கள் தென்பட்டன. குண்டுவெடிப்புக்குக் காரணமான தாவூத் இப்ராஹிம் குழு... குண்டுவெடிப்பில் இருந்து தன்னை விலக்கிக்கொண்ட சோட்டா ராஜன் குழு. இது சோட்டா ராஜன் தாதா வாழ்வின் இன்னோர் அத்தியாயம்.

இந்த அத்தியாயத்தில் இடம்பெறும் சோட்டா ராஜன் அவ்வளவு மோசமானவன் கிடையாது. அவன் இந்தியத் தரப்புக்கு உதவுபவன். தாவூத் இப்ராஹிம் பற்றிய பல முக்கியத் தகவல்களை அளித்தவன். இப்ராஹிமைப் போலவே கொலைகள் புரிந்தவன்தான். ஆனாலும் இவன் கொலை செய்தது தாவூத் ஆட்கள், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளிகள், வேறு சில தீவிராதிகளை. அதாவது இந்தியாவுக்கு எதிரானவர்களை சோட்டா ராஜன் நீக்கியிருக்கிறான். தவிரவும்,  நம்பர் 1 தாதா தாவூதைக் கண்டுபிடிக்க, இவன் இனி உதவக்கூடும்.

காவல் துறை, உளவு நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், கிரிமினல் நெட்வொர்க் ஆகிய அனைத்தும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி உள்ளது. அப்படி ஒரு புள்ளியில் சோட்டா ராஜன் இப்போது வீற்றிருக்கிறான்.  

சோட்டா ராஜன் கைதை 'கூட்டு நடவடிக்கை’ என்றார்கள். 'இது கைது அல்ல; ஒரு வகையான 'ஏற்பாடு’ ’என்றும் சொல்கிறார்கள். 'தாவூதுக்குப் பயந்து நான் கைதாகவில்லை’ என சோட்டா ராஜன் அறிவித்தான். 'சிறுநீரகக் கோளாறு காரணமாகவே சரணடைந்துள்ளான்’ என்கிறார்கள் வேறு சிலர். சோட்டா ராஜனின் கைது எத்தகைய உணர்ச்சிகளையும் கிளப்பாமல்போனதற்கு, இந்தக் குழப்பங்கள் முதல் காரணம்... இதைக் களைய இந்தியா முயலவில்லை என்பதும் அடுத்த காரணம்.

இன்டர்போலால் 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் ஒருவனால், எப்படி நாடுவிட்டு நாடு... கண்டம்விட்டுக் கண்டம் பறக்க முடிந்தது; சர்வதேச நெட்வொர்க்கை வளர்க்க முடிந்தது?  சோட்டா ராஜன் கைதுக்குக் காரணம் இந்தியா என்றால், முன்னர் அவன் கைதாகாமல் இருக்க யார் காரணம்?

'பெரிய மீன் தாவூத் கராச்சியில் இருக்கிறான்’ என பலகாலமாகச் சொல்லிவருகிறார்கள். 'கராச்சியில் குறிப்பாக எங்கே எனச் சொன்னால், தேட வசதியாக இருக்கும்’ என நகைக்கிறது பாகிஸ்தான். இந்த நிலையில் சோட்டா ராஜனைக்கொண்டு என்ன சாதிக்க நினைக்கிறது இந்தியா?

தாவூத் இப்ராஹிம் ஒரு தீவிரவாதி. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவன் என்பதை இந்திய நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. ஐ.நா உள்பட சர்வதேச அளவிலும்கூட தாவூதின் குற்றங்கள் நிரூபணம் ஆகிவிட்டன. சோட்டா ராஜனும் இதே குற்றங்களை இழைத்தவன்தான். இருந்தும் தாவூதைவிட சோட்டா ராஜன் ஆபத்துக் குறைவானவன் என இந்தியா கருதுவது ஏன்?

'மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாகவே நான் தாவூதிடம் இருந்து விலகினேன். அந்தக் குண்டுவெடிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை’ என சோட்டா ராஜன் சொன்னதை இந்தியா கேள்வியே இல்லாமல் ஏற்றுக்கொண்டது ஏன்? தாவூத் இப்ராஹிம் ஓர் இஸ்லாமியத் தீவிரவாதி எனில், சோட்டா ராஜன் தேசாபிமானம் கொண்ட தாதாவா? 'ஓர் இஸ்லாமியத் தீவிரவாதியைவிட ஓர் இந்துத் தீவிரவாதி ஆபத்து குறைவானவன்’ என எந்த அடிப்படையில் இந்தியா முடிவெடுத்தது?

தாவூத் இப்ராஹிம் தண்டிக்கப்படவேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் சோட்டா ராஜன் தண்டிக்கப்பட வேண்டியதும். மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் எவரும் பயங்கரவாதியே. அந்தப் பயங்கரவாதி, தன் இன்னொரு கரத்தால் எந்த மதத்தைப் பற்றிக்கொள்கிறான் என்பதை ஆராயத் தேவை இல்லை. அது இன்னும் மேலதிக ஆபத்தையே விளைவிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism