Published:Updated:

“என் அம்மாதான் பெஸ்ட்!”

கார்க்கிபவா, படம்: கே.ராஜசேகரன்

“என் அம்மாதான் பெஸ்ட்!”

கார்க்கிபவா, படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:

சென்னை, டி.டி.கே சாலையில் கமல்ஹாசன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. புதிதாகக் குடியேறியிருக்கும் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகூட இன்னும் திறக்காமல் இருக்கிறது. மேஜை மீது புத்தகங்கள் குவிந்துகிடக்க, சாமி அறையில் விளக்கு ஒளிர்கிறது.  

'புத்தகங்களையும் சாமியையும்தான் நான் நம்புறேன். அதான் முதல்ல இந்த ரெண்டையும் பிரிச்சு வெச்சிருக்கேன்' - மென்புன்னகையுடன் பேசுகிறார் பிரபல வழக்குரைஞர் சுமதி. மேடைத் தமிழ் முகம். பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்டவர். இவரது மகள் சிம்ஹாஞ்சனாவும் இப்போது இளம்தலைமுறைப் பேச்சாளராகப் பரிணமித்துவருகிறார். ‘ABK-AOTS Dosokai’ என்ற அமைப்பு நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்று, ஜப்பான் சென்றுவந்திருக்கிறார்.

'சின்ன வயசுல ரொம்பப் பேச மாட்டா... எப்படி இதை மாத்தலாம்னு யோசிச்சு, ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ் நடத்தும் பேச்சுப்போட்டியில் கலந்துக்கவெச்சேன். முதல் பரிசு ஜெயிச்சா. அதுதான் முதல் ஐஸ் பிரேக்' என்கிற அம்மாவைப் பார்த்து சிரிக்கிற சிம்ஹாஞ்சனா, ''அதுக்கு முன்னாடி ஒரு காமெடி நடந்துச்சே... அதுதான் ஐஸ் பிரேக்' என கண் சிமிட்டுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஃபேமிலி ஃப்ரெண்ட் பால சீனிவாசன் அங்கிள்தான் என்னை திருக்குறள் பேச்சுப்போட்டியில் கலந்துக்கவெச்சார். அம்மா தந்த ஸ்கிரிப்ட்டை நல்லா தயார் பண்ணிட்டுப் போனேன். ஸ்டேஜ் ஏறினதும் நான் பேசவேண்டிய திருக்குறள் எதுனு மறந்துபோச்சு. ரெண்டு நிமிஷம் சும்மா நின்னுட்டு வந்துட்டேன்' என்னும் சிம்ஹாஞ்சனா, 'வாழைத்தண்டுக்கா உண்டு தடுக்கிற கணுக்கள்...’ என்பதுபோல இப்போது கலகலவெனப் பேசுகிறார். அதற்குக் காரணம், அம்மாவின் பயிற்சி.

 “என் அம்மாதான் பெஸ்ட்!”

'ஏதாவது போட்டி வந்துட்டா, எங்களைவிட பக்கத்து வீட்டுக்காரங்கதான் பயப்படுவாங்க. ஏன்னா, பயிற்சிங்கிற பேர்ல அவ்ளோ சத்தமா எனக்கும் அம்மாவுக்கும் ஒரு சொற்போரே நடக்கும்' என அம்மாவைப் பார்த்துச் சிரிக்கிறார் சிம்ஹாஞ்சனா.

'மனப்பாடம் பண்ணிப் பேசக் கூடாது.

ஒரு கவிதையை மேற்கோள் காட்டுறோம்னா, அதன் அர்த்தம் என்ன, எமோஷன் என்னனு தெரிஞ்சுக்கிட்டுச் சொல்லணும். சுதந்திரப் போராட்டத் தியாகி நீலகண்ட பிரம்மச்சாரி, 'சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு’னு பாரதியைப் பார்த்துச் சொன்னப்போ, அந்தக் கோபத்துல பாரதி சொன்னதுதான் 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’. அது வெறும் ரெண்டு வரிக் கவிதை இல்லை. அது உலகத்தின் கோடானு கோடி பசித்த வயிறுகளைப் பற்றிய அறச்சீற்றம்னு புரிஞ்சாதான், நீ மேடை ஏறணும்' என்கிற சுமதியை ஆமோதிக்கிறார் சிம்ஹாஞ்சனா.

''அம்மா எனக்காக அவங்க வாழ்க்கையையே அர்ப்பணிச்சிருக்காங்க. எந்தப் போட்டி வந்தாலும் என்னைவிட அதிகமா உழைக்கிறது அவங்கதான். ஆனா, ஜெயிச்சாகணும்னு பிரஷர் தர மாட்டாங்க. அதில் நான் கலந்துக்கணும் என்பதில்தான் ஆர்வமா இருப்பாங்க. ஆனா, ஜெயிச்சு வந்து நிற்பதில் ஒரு த்ரில் இருக்கே!   இப்ப நான் சட்டம் படிக்கிறேன். அதுகூட என் முடிவுதான். எப்பவுமே என் அம்மாதான் பெஸ்ட்' என தோள்சாயும் சிம்ஹாஞ்சனா, 'ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் லா’ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி.

''அம்மாபோல யார் யாரெல்லாம் உங்களுக்கு உதவியா இருந்தாங்க?''

''பாடகி அருணா சாய்ராம் எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. அம்மா யு.எஸ் போனப்ப, அவங்க வீட்டுலதான் ஒரு மாசம் இருந்தேன். பாட்டு, படிப்புனு என்னை சப்போர்ட் பண்ணுவாங்க. இன்னொரு பக்கம் டீ போடுறது, வீட்டு வேலைசெய்றதுனு என்னை அவங்க பொண்ணாவே வளர்த்தவங்க அருணாம்மா. அப்புறம் வாலி சார். அவர் உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ போய்ப் பார்த்தேன். ஒரு நிமிஷம் சோகமாப் பேசுவார். அடுத்த நிமிஷமே ஜாலி ஆகிடுவார். கேட்டா 'மனசு ஒரு குரங்கும்மா. அதான் என் பேர்லயே இருக்கே’னு சிரிச்சார். என் மேல அவருக்கு நிறைய அக்கறை'' என்கிறார் நெகிழ்ச்சியாக.

'என் பொண்ணுக்கு நான் சேர்த்துவெச்ச பெரிய சொத்தே எங்க நண்பர்கள்தான். நானே இல்லைனாலும், அவளைப் பார்த்துக்க அக்கறையான ஆட்கள் இருக்காங்கங்கிற நிம்மதி போதும்' என்கிறார் சுமதி.

''ஆனா, எனக்கு நீ மட்டும் போதுமேம்மா' என அணைத்துக்கொள்ளும் சிம்ஹாஞ்சனாவிடம் குழந்தையாகிறார் சுமதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism