Published:Updated:

துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்..! புலிகளைக் கடத்துபவர்களின் வியூகம் #AnimalTrafficking - அத்தியாயம் 5

துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்..! புலிகளைக் கடத்துபவர்களின் வியூகம் #AnimalTrafficking - அத்தியாயம் 5
துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்..! புலிகளைக் கடத்துபவர்களின் வியூகம் #AnimalTrafficking - அத்தியாயம் 5

துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்..! புலிகளைக் கடத்துபவர்களின் வியூகம் #AnimalTrafficking - அத்தியாயம் 5

உலகின் பிரபல காட்டுயிர் புகைப்படக்காரர் அவர். பல லட்சங்கள் செலவு செய்து புலியின் புகைப்படம் எடுக்கக் காடுகளுக்குள் மூன்று மாதங்களாகக் காத்திருக்கிறார். ஆனால், புலிகள்  கிடைக்கவில்லை. மூன்று மாதங்களின் முடிவில் காட்டுக்குள் மூன்று பேரை சந்திக்கிறார். அவர்கள் வைத்திருந்த பையில் புலியினுடைய தோல் இருந்திருக்கிறது. என்னவென்று விசாரித்ததில் 3000 ரூபாய் பணத்துக்காக புலியைக் கொன்று தோலை எடுத்திருக்கிறார்கள். விரக்தியின் உச்சத்துக்குச் செல்கிற புகைப்படக்காரர் “புலிகளைப் புகைப்படம் எடுப்பதை விடக் கொல்வது எளிதாகிவிட்டது” என வேதனையோடு சொல்கிறார். கடந்த நூற்றாண்டில் உலகில் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்தன. அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 60 ஆயிரம். இன்று உலகில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 3500. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1,706 மட்டுமே. பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் முதலில் இருப்பதும் புலிதான். தோல், பல், நகம் எனப் புலியின் உடல் பாகங்கள் உலகம் முழுமைக்கும் டிமாண்டான ஒரு பொருள். கள்ளச் சந்தையின் கோயிலாக தாய்லாந்து இருக்கிறது என்றால் அதன் கடவுளாக இருப்பது புலி.

தாய்லாந்தில் காஞ்சனபுரி நகருக்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஒரு புத்தக் கோயில். 1999-ம் ஆண்டு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புலிக் குட்டி ஒன்றைக் கிராம மக்கள் கோயிலுக்குக் கொடுத்திருக்கிறார்கள். சில நாள்களில் அந்தப் புலிக்குட்டி இறந்துவிட்டது. பின்னர் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும் பெண்  புலிகளின் குட்டிகள்,  இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன.  2006-ம் ஆண்டுக் கணக்கின்படி மொத்தம் 17 புலிகள் இருந்தன. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதக் கணக்கின்படி கோயிலில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 150. அங்கிருக்கிற புலிகள் எல்லாம் சாதுவாகவே  இருக்கும். புத்த பிட்சுகள் வாக்கிங் போவார்கள். புலிகளின் இயற்கை குணத்துக்கு மாறாக இக்கோவிலிலுள்ள புலிகள் வளர்ந்தன.  கூண்டிலிருக்கும் புலிகளோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், அவற்றைக் கயிற்றால் கட்டி அவற்றுடன் பயணிகள் நடக்கவும் அனுமதித்ததன் மூலம் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான வருமானத்தை இந்தக் கோயில் ஈட்டிவந்தது.

அங்கிருக்கிற புத்தபிட்சுக்கள்  புலிகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து வளர்ப்பதாகவும், அவற்றுக்குப் போதை மருந்து வழங்கி வசீகரித்து வைத்திருப்பதாகவும் பல ஆண்டுகளாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியான எந்தக் குற்ற நிகழ்வுகளும் நடக்கவில்லை எனக் கோயில் நிர்வாகம் பதிலளித்துவந்தது. ஆனால், வனத்துறையும்  நகரக் காவல்துறையும் கோவிலைக் கண்காணித்தபடியே இருந்தனர். புலி கடத்தல், துன்புறுத்தல் குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தாய்லாந்து அரசு கோயிலிருந்து புலிகளை மீட்டு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்தது. கோயில் நிர்வாகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், வன அதிகாரிகள் கடந்த ஆண்டு மே 30-ம் தேதி புலிகள்  மீட்புப் பணியைத் தொடங்கினர். புலி இருக்கிறதா என அதிகாரிகள் கோயிலில் வலைவீசித் தேட ஆரம்பித்தனர். அங்கிருந்த குளிர்பதனப் பெட்டியைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப்பெட்டியில் 40 புலிக்குட்டிகள் இறந்த நிலையில் பதப்படுத்தப்பட்டிருந்தன. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் அவற்றில் சில குட்டிகள் பல மாதங்களாகப்  பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் புலி கோயிலைப் புத்த கோயிலாக மாற்றிவிட்டார்கள்.  புலிக்கோயில் குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

சர்வதேச கடத்தலுக்கும் உள்ளூர் கடத்தலுக்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.  சில வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் பகுதியைச் சேர்ந்த பொம்மன் என்பவரை வனத்துறையினர் கைதுசெய்தனர். இவரும் இவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து எட்டேகவுண்டர் தொட்டி மற்றும் மூக்கன்பாளையம் வனப்பகுதிகளில் உள்ள நீர்த் தொட்டிகளில் யூரியாவுடன் விஷத்தன்மையுள்ள பொருள்களைக் கலந்து விட்டுள்ளனர். தண்ணீர் தேடி நீர்த்தொட்டிக்கு வருகிற விலங்குகள் அதனைக் குடித்ததும் உயிரிழக்கும். அவற்றைக் கைப்பற்றுகிற கும்பல் மான் இறைச்சிகளை விற்பது, யானைகளின் தந்தங்கள், புலி நகங்கள் மற்றும் தோல்களைக் கடத்துவது என குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. தாளவாடி அருகே புலிக்கு விஷம் வைத்துக் கொன்று அதன் நகங்கள், தோலைக் கர்நாடகத்துக்கு கடத்தியதாக ஒப்புக்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து உள்ளே தள்ளியது காவல்துறை. இதைத்தவிர சூட்கேசில் வைத்து உயிருடன் புலியைக் கடத்துவது, காருக்குள் ஒளித்துவைத்து புலிக்குட்டிகளை கடத்துவது, கூரியரில் புலித் தோலை கடத்துவது எனக் கடத்தல் ரகங்கள் பல வழிகளில்  நடந்துகொண்டிருக்கிறது.

புலி கடத்தலில் தாய்லாந்து முக்கிய இடம் வகிக்கிறது. பாங்காக்கில் சட்டவிரோதமாக செயல்படும் விலங்குகள் மார்க்கெட்டில் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடல் உறுப்புகளும் அங்கே சர்வசாதாரணமாக கிடைக்கிறது. புலிக்குட்டிகளை குடோன்களில் பதுக்கி வைத்து அவற்றுக்கான டிமாண்டை உருவாக்குகிறார்கள். இது புலிக்குட்டிக்கான மதிப்பை பல மடங்காக உயர்த்துகிறது. எவ்வளவு விலை என்றாலும் அவற்றை கைப்பற்றுவதற்கு தனியாக சில கும்பல்கள் செயல்படுகின்றன. பாங்காக் விமான நிலையத்தில் மாதத்துக்கு முப்பது கடத்தல்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தாய்லாந்து காவல்துறையினர். ஆனால், தப்பிப்போகிற எவையும் கணக்கிலும் இல்லை; கவனத்திலும்  இல்லை.

எல்லா நாடுகளிலும் வேட்டையாடுகிறவர்கள் மிருக குணம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். வனத்துறையின் எல்லாத் தடைகளையும் தாண்டுகிற கடத்தல்காரர்கள் மிகக் கச்சிதமாக மிருகங்களை வேட்டையாடி விடுகிறார்கள்.  2014-ம் ஆண்டு கணக்கின் படி ஒவ்வொரு நான்கு நாள்களுக்கும், உலகில் ஒரு வனப் பாதுகாவலர், கடத்தல் குறித்த சம்பவங்களில் கொல்லப்படுகிறார். பல நாடுகளில் கடத்தல்காரர்களின் அட்டூழியத்துக்குப் பயந்தே வனத்துறை தொடர்பான வேலைகளுக்கு யாரும் முன்வருவதே இல்லை. ஏனெனில் வனத்துறையில் இருக்கிற ஊழியர்களுக்குக் கடத்தல்காரர்கள் மரண பயத்தைக் காட்டிப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்; என்பதுதான் காடுகளில் கடத்தல்காரர்களின் மந்திரச் சொல். கடத்தலின்போது யாராவது காவல்துறையில் மாட்டிக்கொண்டால் உயிரை விட்டுவிட வேண்டும் என்கிற நியதியும் சில கும்பல்களிடம் இருக்கிறது. அதனாலேயே பல குற்றங்களுக்கு காரணமான முக்கியப்புள்ளிகளை நெருங்க முடியாமல் தவிக்கிறது இன்டர்போல் காவல்துறை.

உலகின் அழிவின் விளிம்பில் இருக்கிற எல்லா விலங்குகளின் அழிவுக்கும் காரணமாக இருப்பது ஒரே நாடுதான். அது சீனா. விலங்குகளின் உடற்பொருள்களிலிருந்து மருந்து தயாரிப்பதே முக்கிய காரணம். புலிகளின் உடற்பகுதிகளை மருத்துவப் பொருள்களாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளைச் சீனாவில் முன்பே தடை செய்துள்ளனர். புலிகளைச் சட்ட விரோதமாக வேட்டையாடுவதற்கு மரண தண்டனை அறிவித்தது. மேலும், சீனாவிலும் 1993-ம் ஆண்டிலிருந்து தேசிய அளவிலான இவ்வகைக்கான வணிகத் தடை உள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் பெய்ஜிங்கில் கையெழுத்தானது. ஆனாலும், புலிகளுக்கான அச்சுறுத்தல்கள் குறைவதாக இல்லை.

இந்தியா, மியான்மர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. மேற்கண்ட பகுதிகளில் கடத்தல் பொருள்களின் பிரபல சந்தைகளாக மியான்மர் - தாய்லாந்து எல்லையில் டாச்சிலிக் நகரம் மற்றும் சீனா எல்லையில் மாங்லா நகரம் இருக்கின்றன. இங்கெல்லாம் வனச்சட்டங்கள் அமலில் இருந்தாலும்கூட புலியின் உடல் பாகங்கள் பகிரங்கமாகவே விற்பனை செய்யப்படுகின்றன. மாங்லா நகரச் சந்தைகளில் புலிக் கடத்தல் அதிகரித்திருப்பதாக சைட்ஸ் என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது. 2006-ம் ஆண்டு மாங்லாவில் 6 சட்ட விரோதக் கும்பல் மட்டுமே இருந்தன. ஆனால், 2014-ம் ஆண்டுக் கணக்கின்படி கும்பலின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்திருக்கிறது.  சில வருடங்களுக்கு முன்பு ‘பாவ்ஸ்’ (PAWS (Protection of Asian Wildlife Species) என்கிற பெயரில் வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இன்டர்போல் உதவியுடன் உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு போலீஸார் ஆசியா முழுவதும்  நடத்திய தொடர் வேட்டையில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் மற்றும் உடல் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பலர் கைதுசெய்யப்பட்டார்கள். ஆனாலும்கூட இன்னும் வேட்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஏனெனில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் கூலிக்கு கடத்தியவர்கள். கோடிக்குக் கடத்தியவர்கள் யாரும் சிக்குவது இல்லை. அப்படியே சிக்கினாலும் லாகவமாக வெளியே வந்துவிடுகிறார்கள்.

சர்வதேச கடத்தல் நெட்ஒர்க் கண்ணுக்குத் தெரிவதே இல்லை. ஏனெனில் அவர்கள் இன்டர்நெட், லேப்டாப், பாஸ்வேர்ட், ஃபண்ட் ட்ரான்ஸ்பர், அண்டர்கவர் ஆப்பரேஷன் என  ஹைடெக் விஷயங்களைக் கையாள்வதால் யாரால் எங்கிருந்து, யாருக்கு, கடத்தப்படுகிறது என்கிற தகவல் தெரிவதில்லை. அப்படியே கடத்துவதைக் கண்டறியும் அளவுக்கு இந்திய வனத்துறையிடம் தொழில்நுட்ப வசதிகளோ, திறமையான வன அதிகாரிகளோ இல்லாததால் கண் இமைக்கும் நேரத்தில் கடத்தல்கள் நடந்துவிடுகின்றன. எல்லா வகையான கடத்தல்களையும் தடுத்தாக வேண்டுமென்றால்; புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால் வனத்துறை அப்டேட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வனம் என்பது அதன் விலங்குகளிடம் இருந்து பிரிக்கமுடியாத ஒன்று. இதில் ஒன்றை அழித்தாலும் மற்றொன்று அழிந்துவிடும். ஆனால், மனிதன் இரண்டையும் அழித்தால் என்ன செய்ய?

அடுத்த கட்டுரைக்கு