Published:Updated:

டுமீல்... டமால்...படார்!

டுமீல்... டமால்...படார்!

டுமீல்... டமால்...படார்!

டுமீல்... டமால்...படார்!

Published:Updated:

ட்டாசின் கதை தெரியுமா? அது ஒரு சிறிய கதை. சீனக் கதை. எப்போது நடந்தது, தேதி என்ன, நடந்தபோது மணி என்ன என்ற கேள்வித் திரிகளைக் கிள்ளாமல், கதையாக மட்டும் கடந்து செல்லுங்கள்! 

அந்தச் சீன சமையல்காரருக்கு அன்று மூட் சரியில்லைபோல. பொஞ்சாதியுடன் சண்டையா அல்லது அறச்சீற்றமா எனத் தெரியவில்லை. எரியும் அடுப்பை வெறித்துப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். அடுப்பைவிட அவரது முகத்தில் அதிகக் கணகணப்பு. கோபத்தில் அருகில் தட்டுப்பட்ட குச்சி, இலை, சிறுபாத்திரங்கள் எல்லாவற்றையும் நெருப்பில் தூக்கி எறிந்தார். அப்படித்தான் அந்த வெள்ளை உப்பையும் தூக்கி எறிந்தார். நெருப்பில் விழுந்த அந்த உப்பு, டப்பு... டப்பு... எனப் பொறிந்து தங்க வண்ணம் காட்டிச் சிரித்தது. கோபம் மறந்து ஆச்சர்யம் ஆக்கிரமிக்க, அந்தச் சமையல்காரர் மீண்டும் இன்னும் கொஞ்சம் உப்பை நெருப்பில் அள்ளிப்போட்டார். மீண்டும் டப்பு... டப்பு... பொன் வண்ண மத்தாப்பு.

டுமீல்... டமால்...படார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வெள்ளை உப்பு - வெடி உப்பு என்னும் பொட்டாசியம் நைட்ரேட். சீனர்கள், அதை மருத்துவத்திலும் சமையலிலும் உபயோகப்படுத்தி வந்தனர். அந்தச் சமையல்காரர் உப்பை அள்ளி நெருப்பில் தூவிய நிகழ்வில் இருந்து பட்டாசுக்கான அதிகாரபூர்வ சரித்திரம் ஆரம்பம் ஆகிறது. ஆனால், அதற்கு முன்பே சீனாவில் 'மூங்கில்’ அதிகாரபூர்வம் இல்லாத பட்டாசாகப் பணியாற்றியிருக்கிறது. எரிப்பதற்கு மரக்கட்டைகள் ஏதும் இல்லாத ஒரு நாளில் சீனன் ஒருவன், பச்சை மூங்கில் துண்டுகளை நெருப்பில் போட்டான். அவை கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பில் சூடேறி, உள்ளே வெற்றிடத்தில் உள்ள காற்று சூடாகி, 'படார்...’ என பெரும் சத்தத்துடன் வெடித்தன. சுற்றிலும் இருந்தவர்கள் பயந்து விலக, அங்கு இருந்த விலங்குகளும் சத்தத்தில் மிரண்டன. அடுத்த மூங்கில் துண்டும் அதேபோல சத்தத்துடன் வெடித்தது. 'அட, பச்சை மூங்கிலை எரித்தால் வெடிக்கிறது. அதற்கு விலங்குகள் பயப்படுகின்றன. எனில், பேய்களும் துர்சக்திகளும்கூட நிச்சயம் பயப்படத்தான் செய்யும்’. இப்படி யோசித்த சீனர்கள், நியானை (Nian) விரட்ட மூங்கில் வெடியை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். நியான் என்றால், கடலிலும் மலைகளிலும் மறைந்து வாழும் கொடூரமான சீன (புராண) விலங்கு.

வசந்த காலங்களில் வெளிப்பட்டு மனிதர்களை, குறிப்பாக குழந்தைகளைக் கபளீகரம் செய்துவிடும். அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்களை நாசமாக்கிவிடும். இந்த நியான், சிவப்பு வண்ணம், படார் என்ற பெரும் சத்தம் ஆகியவற்றுக்குப் பயப்படக்கூடியது என்பதால், சீனர்கள் அறுவடை சமயத்திலும், சீனப் புத்தாண்டு சமயத்திலும் நியானைப் பயமுறுத்தி விரட்டுவதற்காக, பச்சை மூங்கிலை எரிக்க ஆரம்பித்தார்கள். இப்படியாக அந்த விநோத உருவம்கொண்ட நியான் என்ற ஜந்துதான், விசேஷங்களுக்குப் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்துவைத்தது. (வெடிக்கும் பட்டாசுகள் பெரும்பாலும் சிவப்பு காகிதம் சுற்றித் தயாரிக்கப்படுவதன் பின்னணிகூட, தீயசக்திகள் சிவப்பைக் கண்டு பயப்படும் என்பதே.)

பல நூற்றாண்டுகளாக ரசவாதிகளின் வேலை என்னவாக இருந்தது? ஏதாவது உலோகங்களையும் வேதிப்பொருட்களையும் கலந்து பார்த்து தங்கம் உருவாகிறதா எனக் கண்டுபிடிக்க முயல்வது. இப்படி தங்கப் பித்துப் பிடித்துத் திரிந்த ரசவாதிகளின் அபாய ஆய்வுகளில் பெரும் விபத்துகளும் நிகழ்ந்தன; புதிய வேறு கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தன. அப்படி நிகழ்ந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் பட்டாசு.

கி.பி 6-ம் நூற்றாண்டுக்கும் 9-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சீன ரசவாதிகள், வெடி உப்பு - கந்தகம் - கரி மூன்றையும் கலந்து கொளுத்திப் பார்த்திருக்கின்றனர். அவை பிரகாசமாக, பெரும் புகையுடன் எரிந்திருக்கின்றன. அடுத்த கட்டமாக மூங்கில் துண்டில் இந்தக் கலவையை நிரப்பி எரித்திருக்கிறார்கள். வண்ணச் சிதறல்களுடன் எரிந்திருக்கின்றன. பின்னர் மூங்கில் குழாயில் வெடிமருந்துக் கலவையை அடைத்து, அதில் ஒரு துவாரம் போட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். அது பீய்ச்சியடிக்கும் நெருப்புடன் எரிந்திருக்கிறது. அதற்கு அடுத்து மூங்கில் குழாயில் வெடிமருந்துக் கலவையை மிக நெருக்கமாக அடைத்து, குழாயை முழுவதுமாக மூடி, பின்னர் அதில் மிகச் சிறிய துவாரம் ஒன்றை மட்டும் இட்டிருக்கிறார்கள். அதை எரித்தபோது பூவாணச் சிதறல்களுடன் பயங்கரமான சத்தத்துடன் வெடித்திருக்கிறது. மனிதன் தன்னைக் கண்டுபிடித்ததற்காக வெடியே, தன்னை வெடித்துக் கொண்டாடிய நிகழ்வு அது. அதன் பரிணாம வளர்ச்சியாகத்தான், மூங்கில் வெடித் துவாரத்தில் நெருப்பைப் பற்றவைக்க திரியைக் கண்டுபிடித்ததும் நிகழ்ந்திருக்கிறது. காகிதத்தைக் கண்டறிந்த சீனர்கள், மூங்கில் குழாய்களுக்குப் பதிலாக, காகிதக் குழல்களைப் பயன்படுத்த ஆரம்பித்தது அடுத்தகட்ட வளர்ச்சி.

குழாய்களில் அடைக்கப்பட்ட வெடிமருந்து சில நேரங்களில் தரையில் இருந்து வெடிக்காமல், நெருப்பைக் கக்கியபடி காற்றில் தாறுமாறாகப் பறக்க ஆரம்பித்தன. அப்படித்தான் சீனர்கள் 'ராக்கெட்’ முன்மாதிரியைக் கண்டுபிடித்தார்கள். நெருப்பை வைத்தால் குறிப்பிட்ட திசையில் சென்று வெடிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார்கள். நீண்ட கம்புகளிலோ அல்லது அம்புகளிலோ ராக்கெட்டுகளைச் செருகி எய்து, எதிரிப் படைகளைப் பதறப் பதறப் பின்வாங்கவும் வைத்தார்கள். குறிப்பாக, எதிரிகளின் குதிரைப்படை இதனால் சிதறுண்டுபோனது. கி.பி 1232-ம் ஆண்டில் சீனர்களுக்கும் மங்கோலியர்களுக்கும் ‘Kai Feng Fu’ என்ற இடத்தில் நடந்த போரில் சீனர்கள் அதிக அளவில் டிராகன் முகம் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவி, மங்கோலியர்களைக் கலங்கடித்து பின்வாங்கச் செய்தனர். சீனாவின் ராக்கெட் பலத்தை உணர்ந்துகொண்ட மங்கோலியர்கள், பொன்னையும் பெண்ணையும் காண்பித்து ஆசைகாட்டி, சீன ஆயுதத் தயாரிப்பு நிபுணர்களை வளைத்துப் பிடித்து கடத்தி வந்தனர். அதன் மூலம் மங்கோலியர்களும் ராக்கெட் நுட்பம் கற்றுக்கொண்டனர். அதன் பிறகு சீனர்களையே தோற்கடித்து சீனாவில் மங்கோலிய ராஜ்ஜியத்தை நிறுவினர். ராக்கெட்டுகளின் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான், நெருப்புக் குண்டுகளைப் பொழியும் பீரங்கிகள் உருவாகின என்பது 'ஆயுத’ வரலாறு.

13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலியப் பயணி மார்க்கோபோலோ, மங்கோலியர்களின் ராஜ்ஜியமாக இருந்த சீனாவுக்குப் பயணம் செய்தார். பேரரசர் குபிலாய் கானின் அன்புக்குக்

டுமீல்... டமால்...படார்!

கட்டுப்பட்டு 17 ஆண்டுகள் சீனாவிலேயே தங்கியிருந்தார். அப்போது இவர் சீனர்களிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். மார்க்கோபோலோதான் வெடி மருந்தை ஐரோப்பியக் கண்டத்துக்கு முதன்முதலில் கொண்டுசென்றார். பட்டாசு தயாரிக்கும் தொழில்நுட்பம் மார்க்கோபோலோ மூலமாகத்தான் அங்கே பரவியது.

13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிட்டனைச் சேர்ந்த அறிஞரான ரோஜர் (Roger Bacon)  என்பவர், வெடிமருந்துக் கலவை குறித்த பெரும் ஆராய்ச்சிகளை நிகழ்த்தினார். எந்தெந்த விகிதத்தில் எவற்றைக் கலந்தால் அதிபயங்கரமாக வெடிக்கும் ஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்றும் கண்டறிந்தார். ஆனால், தன் ஃபார்முலா கெட்டவர்களிடம் சிக்கினால், ஆகப்பெரும் நாசவேலைகள் நிகழக்கூடும் என்பதால், தன் கண்டுபிடிப்புக் குறிப்புகளை, எளிதில் புரியாத குறியீடுகளாக எழுதிவைத்துவிட்டுச் சென்றார் இந்த நல்லவர்.

1560-ம் ஆண்டில் ஐரோப்பிய வேதியியலாளர்கள் வெடிமருந்துக் கலவைக்கான மிகச் சரியான விகிதாசாரத்தை நிர்ணயித்தனர் (பொட்டாசியம் நைட்ரேட் 75%, கரி 15%, கந்தகம் 10%). பொதுவாக இந்த விகிதாசாரம்தான் இன்றும் பட்டாசுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு ராணுவ வெற்றிகளுக்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடும் கலாசாரம் ஐரோப்பிய நாடுகளில் பரவியது. அப்படியே திருவிழாக்கள், ஆட்சியாளர்களின் பிறந்த நாள், திருமணம், பதவியேற்பு என மற்ற சந்தோஷ நிகழ்வுகளிலும் தொற்றிக்கொண்டது. 'இனிப்பு எடு, கொண்டாடு’ தருணங்களில் 'வாண வேடிக்கைக் காட்சி’ நடத்தும் வழக்கம் முதன்முதலில் பிரிட்டனில் உண்டானது.

பிரிட்டனின் வரலாற்றில் முதன்முறையாக கி.பி 1486-ம் ஆண்டில் கிங் ஏழாம் ஹென்றி திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வேடிக்கைகள் முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்டன. இப்படி வாண வேடிக்கைக் கண்காட்சி நடத்த அரசரால் ‘Fire Master’  என்ற ஒருவர் நியமிக்கப்பட்டார். 'ம், அதைக் கொளுத்து, இப்போது இதைப் பற்ற வை’ என அவர் டைரக்ட் செய்ய, அவருக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த உதவியாளர்கள் தங்கள் தலையைப் பாதுகாக்க பெரிய பச்சைத் தொப்பி அணிந்திருந்ததால் ‘Green Men’ என அழைக்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் கிரீன் மேன் என்பது உலகின் அதி அபாயகரமான வேலை.  

கி.பி 1749-ம் ஆண்டில் 'ஆஸ்திரிய வாரிசு உரிமைப் போர்கள்’ ஓர் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தன. கிங் இரண்டாம் ஜார்ஜ், மே 15-ம் தேதி அன்று, லண்டன் தேம்ஸ் நதியில் ராஜாங்கக் கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இரவில் வாண வேடிக்கைத் திருவிழா நடந்தது. நதிக்கரைகளில் மட்டும் அல்லாமல், நதியிலும் படகுகளில் வெகு உயரத்துக்கு எழும்பி நெருப்புப் பூக்களைத் தூவும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. அதில் தாறுமாறாகப் பறந்துசென்ற ஒரு பட்டாசு, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த மற்ற பட்டாசுகளையும் 'ஜோதியில் கலக்கச்செய்து’ மூன்று பார்வையாளர்களின் உயிரைக் கருக்கியது. இதேபோல சரித்திரத்தில் பதிவான பட்டாசு பலிகள் பல உள்ளன.

சரி, இந்தியாவுக்கு வருவோம். இந்தியாவில் பட்டாசு என்றாலே அனிச்சையாக அடுத்து தோன்றும் வார்த்தை 'சிவகாசி’தானே! வறண்ட பூமியான சிவகாசிக்குப் பட்டாசுத் தொழில் அறிமுகமானது எப்படி? அங்கே 1905-ம் ஆண்டு பிறந்தவர் அய்யன். அவர் தனது நண்பர் சண்முகத்துடன் சேர்ந்து, உறவினர் ஒருவரது ஆலோசனைப்படி கல்கத்தாவுக்குக் கிளம்பினார். இருவரும் அங்கே எட்டு மாதங்கள் தங்கியிருந்து தீப்பெட்டித் தொழிலைக் கற்றுக்கொண்டார்கள். பின்னர் சிவகாசிக்குத் திரும்பினார்கள். ஜெர்மனியில் இருந்து இயந்திரம் ஒன்றை இறக்குமதி செய்து தீப்பெட்டித் தொழிலை ஆரம்பித்தார்கள். செலவு கட்டுப்படியாகவில்லை. பின்னர் ஊரில் பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும்விதமாக, மனிதர்களைக்கொண்டே தீப்பெட்டித் தயாரிப்பைத் தொடங்கினார்கள். லாபம் கிட்ட ஆரம்பித்தது. அடுத்தகட்டமாக பட்டாசுத் தயாரிப்பிலும் இறங்கினார்கள். வேலைவாய்ப்பு இன்றி ஊரைவிட்டு வெளியேறி யிருந்த பலரும் மீண்டும் சிவகாசிக்கே திரும்பினார்கள்.

'சிவகாசின்னா பொழைக்க வழி இல்லாத ஊரு. பொண்ணைக் கட்டிக்கொடுக்க மாட்டோம்’ என அசலூர்க்காரர்கள் முகம் திருப்பிய நிலை மாறி, சிவகாசி வளம் பெற்றது. 'குட்டி ஜப்பான்’ என நேரு புகழும் அளவுக்குத் தொழில் வளர்ச்சி கண்டது. இன்றைக்கு இந்தியாவின் 90 சதவிகித பட்டாசுத் தயாரிப்பு சிவகாசியில்தான். ஆண்டுக்கு 300 நாட்கள் பட்டாசு உற்பத்தி இங்கு நடக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஆபத்தான வேலை, உயிரைக் குடிக்கும் விபத்துக்கள், கந்தக நெடியில் கருகும் குழந்தைத் தொழிலாளர்கள்... என சிவகாசிப் பட்டாசுத் தொழிலின் கறுப்புப் பக்கங்கள் கனமானவை. இப்போது சிவகாசிப் பட்டாசுகளுக்குப் புதிய எதிரியாக சீனப் பட்டாசுகள் வந்து இறங்க ஆரம்பித்துள்ளன. 'சீனர்கள்தானே பட்டாசைக் கண்டுபிடித்தார்கள். அவர்களது பட்டாசை வாங்கினால் என்ன தவறு?’ என அறிவுஜீவித்தனக் கேள்வி எழுப்பாமல், பட்டாசுகளிலும் (பட்டாசுகளிலாவது) நாம் 'சுதேசிக் கொள்கை’யைத் தீவிரப்படுத்தவேண்டிய தருணம் இது. 'பட்டாசே தேவை இல்லை!’ என ஒரு படி மேலே சென்று குரல் எழுப்பினால், காற்று சந்தோஷப்படும். தீயின்றித்தான் அமையாது உலகு - பட்டாசு இன்றி அமையலாம்!

''இது இந்தியாவுக்கான அச்சுறுத்தல்''

அபிரூபன் - தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர்

''சீனப் பட்டாசுகள், நான்கு முக்கியப் பாதிப்புகளை அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்துகின்றன. முதலாவது, இந்தப் பட்டாசை இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதியே கிடையாது. சட்டவிரோதமாக கடத்தித்தான்  கொண்டுவருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு, இந்தப் பட்டாசுகள் கடத்திவரப்பட்டிருக்கலாம். இதனால் மத்திய - மாநில அரசுகளுக்கு சுமார் 600 கோடி ரூபாய் வரி இழப்பு நேரும். இரண்டாவது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வெடிகள் உராய்வால் வெடிக்காது. ஆனால், சீனப் பட்டாசு உராய்ந்தாலே வெடிக்கக்கூடியது. இது பெரும் ஆபத்து. மூன்றாவது, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு போன்ற ரசாயனங்கள் கொண்டுதான் சீனப் பட்டாசுகளைத் தயாரிக்கிறார்கள். இதனால், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய கேடு. நான்காவது, இந்தியாவின் 95 சதவிகிதப் பட்டாசு உற்பத்தி தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. இந்தத் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பிழைப்புக்கு எங்கே போவார்கள்? முக்கியமாக சீனாவில் இருந்து கடத்திவரப்பட்டிருப்பது பட்டாசு மட்டும்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இது இந்தியா முழுவதுக்குமான பெரிய அச்சுறுத்தல்!''

- சிபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism