சினிமா
Published:Updated:

உயிர் பிழை - 13

மருத்துவர் கு.சிவராமன்

''அது ஒரு நார்க்கட்டி. கிட்டத்தட்ட 6 செ.மீ வளர்ந்திருக்கு.'

''அப்படின்னா ரத்தப்போக்குக்கும், மாசா மாசம் உயிர்போற அளவுக்கு வர்ற வலிக்கும், இந்த நார்க்கட்டிக்கும் சம்பந்தம் இருக்குமா?''

''ஆமாம்.'

''இந்தக் கட்டியைக் கரைக்க முடியாதா?''

''மருந்தைவெச்சுக் கரைக்க முடியாது. ஆனா, ஆபரேஷன் பண்ணி நீக்கிடலாம்.''

''கட்டியையா?'

''ஆமாம்... தேவைப்பட்டா சில நேரம் கர்ப்பப்பை, சினைப்பையைக்கூட நீக்கிடலாம்.'

- இப்படிப்பட்ட சில உரையாடல்களைக் கடந்து வந்தாலுமேகூட கடும் மனக்குழப்பத்தில் ஆழ்ந்துவிடும் பெண்கள் இன்று மிக அதிகம். மாதவிடாய் முடிகிற காலத்தில் அல்லது அதற்கு முன்னதாக இந்தப் பிரச்னையில் சிக்கும் பெண்களுக்கு, இப்போது புதிதாகப் பிறந்திருக்கும் இன்னொரு பயம், 'கர்ப்பப்பைப் புற்று வந்துவிட்டால்..?’

மேற்சொன்ன நார்க்கட்டிகளில் மிக மிகச் சொற்பமே புற்றுக்கட்டியாக மாறும். அதாவது, 10 ஆயிரம் பேரில் மூவருக்கே அப்படியான வாய்ப்பு உள்ளதாக மருத்துவப் புள்ளிவிவரம் சொல்கிறது. அதைத் தாண்டி நம்மை விழுங்கும் பிற புற்று வாய்ப்புகள் நிறையவே உண்டு. ஆனால், 'நார்க்கட்டி, புற்றுக்கட்டியாக மாறிவிடுமோ?’ எனும் பயத்தில், 'கர்ப்பப்பை இருந்து இனிமே என்ன செய்யப்போகுது?’ எனும் மனோபாவத்தில், அதை அறுவை சிகிச்சையில் நீக்கிவிடும் பெண்கள், கிராமங்களில்கூட இன்று அதிகம். என்ன நடக்கிறது, எங்கே எச்சரிக்கை தேவை, 'இது இயல்புதான்’ எனக் கடந்துசென்றுவிட முடியுமா?

உயிர் பிழை - 13

கண்ணுக்கே தெரியாத அளவில் ஆரம்பித்து கடுகு அளவு, கிரிக்கெட் பந்து அளவு அல்லது அதற்கும் பெரிய அளவில் முகிழ்க்கும் நார்க்கட்டிகள் அடிப்படையில் புற்றுக்கட்டிகள்  அல்ல. கர்ப்பப்பை தசைப்பகுதியின் ஒரு செல் தடாலடியாக வளர்வதும், தன் அக்கம்பக்கச் செல்கள்போல அல்லாமல், நார் அல்லது ரப்பர் போன்ற கடினத்தன்மையோடு இருப்பதுமே நார்க்கட்டியின் இயல்பு. இது... லைன் வீட்டில் நாம் குடியிருக்கும்போது, கொஞ்சம் வசதியானவர் தன் ஒல்லி வீட்டை அடுக்கடுக்காக உயர்த்திக் கட்டுவதுபோலத்தான். பல பெண்கள் கர்ப்பப்பைக்குள் வளரும் அந்தக் கட்டியை தன் வாழ்நாளில் உணராமலே கடப்பதும் உண்டு. கருத்தரித்த காலத்தில் தலைகாட்டிய இந்த நார்க்கட்டி, பிரசவித்த பிறகு கர்ப்பப்பை தன் இயல்புநிலைக்குத் திரும்பும்போது காணாமல்போவதும் உண்டு.

சில நேரத்தில் இந்த நார்க்கட்டி, தன் சக்தியைக் காண்பிக்க பக்கத்து வீட்டுச் செல்களை இடித்து, நசுக்கி, உயரமாக வளரும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகும். அதிக ரத்தப்போக்கு, மூன்று - நான்கு நாட்கள் தாண்டியும் தொடர்ந்து இருக்கும் ரத்தப்போக்கு, அடிக்கடி சிறுநீர் கழிக்க உண்டாகும் உந்துதல், மலச்சிக்கல், கால்வலி, தலைவலி போன்ற சின்னச்சின்னப் பிரச்னைகள் தலைதூக்கும்.  'இந்தக் கட்டியின் வளர்ச்சிக்குக் காரணம்தான் என்ன?’ என விஞ்ஞானம், தன் மூளையைப் போட்டுப் பிசைந்ததில் காரணங்களாகச் சொல்வது, கொஞ்சம் மரபணுவையும் கொஞ்சம் ஹார்மோன்களையும்தான். 'ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்டிரோன் இரண்டும்தான் இந்த நார்க் கட்டிகளை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றன’ என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.  எனவேதான் மாதவிடாய் முடியும்போது அதிகமான பெண்களுக்கு இந்தச் சுரப்புகள் குறைந்துபோவதால், யதேச்சையாக இந்த நார்க்கட்டியும் நைந்து, சுருங்கி, நலமாகிவிடுகிறது. இன்னொரு முக்கிய விஷயம்... சமீபத்திய அவசரமான வாழ்வில், 'எங்கள் பன்னாட்டு கம்பெனிகள் படைக்கும் சாப்பாட்டில் என்ன குற்றம் கண்டீர்?’ எனக் கொதித்தெழுந்து, குப்பை உணவு சாம்ராஜ்யத்தை மீண்டும் திறந்துவைக்க, அதில் சிக்கி, சீக்கிரமே மாதவிடாய் தொடங்கும் குண்டு செல்லப் பெண்களுக்கு இந்த ஃபைப்ராய்டு கட்டிகள் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

அதிக ரத்தப்போக்கோடு அதிக வலியும் வேதனையும் தரும் இன்னொரு பிரச்னை எண்டோமெட்ரியோசிஸ் எனும் நோய். கர்ப்பப்பை உட்சுவரினுள் மட்டும் இருக்க வேண்டிய செல் படலம், 'அதுக்கும் மேல...’ என  வளர்ந்து கர்ப்பப்பை வெளிப்பகுதி, சினைப்பை வெளிச்சுவர் போன்றவற்றில் படர்ந்து செழிக்கும். கூடவே, கடுமையான மாதவிடாய் வலியையும் தரும். இது நார்க்கட்டி அல்ல;  புற்று வகையிலும் வராது; ஒருபோதும் புற்றாகவும் மாறாது. நார்க்கட்டியை, எண்டோமெட்ரியோசிஸ் எனும் தொல்லையை, தேர்ந்தெடுத்து உண்ணும் உணவின் மூலமும், சரியான மருத்துவம் மூலமும் கட்டி மேலும் வளராமல், அதிக வலி தரும் ரத்தப்போக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் (கூடுதல் விவரம் பெட்டிச் செய்தியில்).

சரி... அப்படி எனில், கர்ப்பப்பைப் புற்றுநோய் எப்படி வருகிறது? கர்ப்பப்பைப் புற்று என மொத்தமாகச் சொன்னாலும், சினைப்பைப் புற்று, கர்ப்பப்பை கழுத்துப் புற்று, கர்ப்பப்பை உட்சுவரில் வரும் எண்டோமெட்ரியப் புற்று... என இதில் சில பிரிவுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் சேர்த்தே 'கர்ப்பப்பைப் புற்று’ என்கின்றனர். ஒருகாலத்தில் நம் ஊரில் மிக அதிகமாக இருந்தது, கர்ப்பப்பைக் கழுத்துப் புற்றுதான். ஒரு பஞ்சாயத்து யூனியனையே பெற்றெடுத்த நம் பாட்டிகளில் ஓய்வு என்பது, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்த ஓரிரு மாத தாய்வீட்டுப் பராமரிப்பு மட்டும்தான். அப்படி அடிக்கடி நிகழ்ந்த பிரசவத்தில் கர்ப்பப்பை கழுத்துப் பகுதி புண்படுவதால், அதில் புகும் HPV வைரஸால், அப்போது கர்ப்பப்பை கழுத்துப் புற்று அதிகம் வந்தது.

‘Human Pappilomavirus- ன் சில வகைதான் (வகை-16, வகை-18) கர்ப்பப்பை கழுத்துப் புற்றுக்குக் காரணம்’ என்கிறது நவீன அறிவியல். கிட்டத்தட்ட 100 வகைக்கும் அதிகமுள்ள பிறிக்ஷி வைரஸ்களில் 13 வகைகளை மட்டும் 'பயங்கரவாதிகள்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த 13 வகைகள்தான் கிட்டத்தட்ட 83 சதவிகித உலக புற்றுநோய் மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறதாம். இதற்காகவே HPV -க்கு எனத் தடுப்பூசிகளைக் கொண்டுவந்து அவை முக்கியம் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். ஆனால், இந்தத் தடுப்பூசிகள், அமெரிக்க வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டவை. 'நம் ஆண்டிபட்டியும் அரியகுளமும், சியாட்டில், சிகாக்கோவாக மாறுகிற இந்தக் காலத்தில், அந்தத் தடுப்பூசிகள் நமக்கும் அவசியம்தானோ?’ என யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்தத் தடுப்பூசியை, பருவம் எய்துவதற்கு முன்னரே பெண்களுக்குப் போடச் சொல்கிறார்கள். உடலுறவு மூலம் பெண்ணின் கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் தங்கிவிடும் HPV வகை வைரஸ்கள், அங்கு புண்ணை உண்டாக்கி, அதன் பின் 12-15 வருடங்களுக்கு பிறகுகூடப் புற்றைத் தோற்றுவிக்குமாம். உடலுறவின் மூலம் பிறிக்ஷி வைரஸ்கள் நுழைந்துவிட்டால், பிறகு இந்தத் தடுப்பூசிகள் போட்டும் பயன் இல்லை. அதனால்தான், 14 வயதுக்கு மேல் உடலுறவு சாத்தியம் அதிகம் உள்ள அமெரிக்கக் கலாசாரத்தில், இந்தத் தடுப்பூசிகள் அவசியமாகின்றன. ஆனால், 'நம் ஊருக்கு அது தேவையா?’ என்பதும் வளர்ந்துவரும் கேள்வி. அதே சமயம், 'இந்தத் தடுப்பூசி பெண்களுக்கு மட்டும் ஏன் வலியுறுத்தப்படுகிறது? இது ஆணாதிக்கம் காலங்காலமாக இருந்துவந்த மருத்துவச் சிந்தனையின் வெளிப்பாடா?’ என்றும் தெரியவில்லை. கூடவே, HPV வைரஸ் தடுப்பூசிக்கு என இந்தியாவில் நடந்த கிளினிக்கல் டிரையலில் ஏற்பட்ட மரணங்கள் உண்டாக்கிய சர்ச்சையையும் மறக்க முடியாது. தடுப்பூசியைவிட 'காமப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும் பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வுமென்று ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வோடு மறையென மொழிதல் மறையோர் ஆறே’ என, களவியலுக்கும் கற்பியலுக்கும் இடையிலான மேம்பட்ட வாழ்வியல் சூத்திரத்தை, கி.மு 7-ம் ஆண்டிலேயே  சொன்ன நம் வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தால், இந்தப் பிரச்னை உருவாகுமா... தடுப்பூசிக்குத்தான் அவசியம் இருக்குமா என்பது விவாதத்துக்கு உரியது!

கர்ப்பப்பை வாய் புற்றுக்கு அடுத்து அதிகம் வருவது, 'ஓவரியன் கேன்சர்’ எனும் சினைப்பை புற்று. சினைப்பையில் நீர்க்கட்டி இல்லாத பெண்ணுக்கு, சௌபாக்யா வெட் கிரைண்டர் கொடுத்துவிடலாம் என்கிற அளவுக்கு, பாலிசிஸ்டிக் ஓவரி நம் ஊரில் தலைவிரித்தாடுகிறது. இனிப்பை ஒதுக்கி, உடலைக் குறைத்து, கொஞ்சம் மூச்சுப்பயிற்சி செய்தால், பெரும்பாலான நீர்க்கட்டிகள், நீர்த் திவலைகளாகக் காணாமல்போய்விடும்.  ஆனால், மாதவிடாய் முடிந்த பின்னர் அல்லது மாதவிடாய் முடிவை ஒட்டிய பருவத்தில் சினைப்பையில் தோன்றும் சற்று பெரிய கட்டிகளைக் கொஞ்சம் உற்றுப்பார்க்கத்தான் வேண்டும். மரபில் சினைப்பைப் புற்று இருந்தால் நமக்கும் அந்தக் கட்டி புற்றுக்கட்டியாக மாற வாய்ப்பு அதிகம். அதற்காக ஒண்ணுவிட்ட ஓர்ப்படியாளின் இரண்டுவிட்ட மச்சினியின் கட்டி வரலாற்றைப் பார்த்தெல்லாம் பதறவேண்டியது இல்லை. அதீத ரத்தப்போக்கு, வயது, பாரம்பர்ய வரலாறு, மன அழுத்த வாழ்வியல்... இவற்றைக் கருத்தில்கொண்டும் நீர்க்கட்டியின் அல்ட்ரா சவுண்டு வடிவத்தைக் கொண்டும் CA - 125எனும் கட்டிக்கான ரத்த சோதனை மூலமும் அவசியப்பட்டால், பயாப்சி சோதனை மூலமும் வந்திருப்பது 'சினைப்பைப் புற்றுதானா?’ என அறிய முடியும். CA - 125 புற்று அல்லாத, அதிக ரத்தப்போக்கைத் தரும் எண்டோமெட்ரியாசிஸாக இருக்க வாய்ப்பு இருப்பதால், குடும்ப மருத்துவரின் ஆலோசனை முடிவே முக்கியம். டாக்டர் கூகுள் முடிவைப் பார்த்துப் பதற வேண்டாம்.

கர்ப்பப்பையின் புற்றுகள் அதிகமாக உதாசீனப்படுத்தப்படுவது, வளர்ந்துவரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும்தான். அதே சமயம் அவசியமே இல்லாமல் அவசரப்பட்டு, கர்ப்பப்பையைக் கழற்றி எறியும் கொடுமையும் இங்குதான் மிக அதிகம். பல வளர்ந்த நாடுகளில் கர்ப்பப்பை நீக்கத்துக்கு, மருத்துவமனையின் உயர்மட்ட எத்திக்கல் கமிட்டியின் ஒப்புதல் வேண்டும். இங்கே ஓரகத்தி சொன்னாலே போதும்... எடுத்துவிடுகிறோம். அவசியம் இல்லாமல் கர்ப்பப்பையை எடுத்த பிறகு அந்தப் பெண்ணுக்கு வரும் உடல் எடை அதிகரிப்பால் உண்டாகும் முதுகு, இடுப்பு வலி, திடீர் செயற்கை மாதவிடாய் தரும் உளவியல் சிக்கல், படபடப்பு, பயம்... எனத் தொடரும் துன்பங்கள் நம் சமூகச் சூழலில் பெண்ணுக்குப் பெரும் பாதிப்பைத் தருபவை. புற்றாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கர்ப்பப்பை நீக்கம் அவசியமான, அவசரமான, நிரந்தரமான தீர்வு. அந்த முடிவை அறம் சார்ந்து மருத்துவர் மட்டுமே எடுக்க முடியும். அப்படிப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே இங்கே இப்போதைய அவசரத் தேவை!  

- உயிர்ப்போம்...

எளிய மருத்துவச் சோதனைகள்!

** சில எளிய மருத்துவச் சோதனைகள் நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, முழுமையாகக் குணமாக்கும்.

**  மாதவிடாய் முடியும் சமயம் பாப்ஸ்மியர் சோதனை மிக அவசியம். ஒவ்வொரு பெண்ணும் 45-வது வயதில் இந்தச் சோதனையைச் செய்துகொள்வது நல்லது.

**  சினைப்பையில் பெரிய கட்டிகள் இருந்தால், CA - 125 சோதனை மிக அவசியம்.

**  அல்ட்ரா சவுண்டு சோதனையில் கர்ப்பப்பை உட்சுவரில் எண்டோமெட்ரியத் தடிப்பின் அளவை அறிதல்.

**  தேவைப்பட்டால், திசுக்களில் சோதனை!

நார்க்கட்டியில் இருந்து

நகர்ந்து செல்ல...

அதிக ரத்தப்போக்கு இருந்தால், அதை முதலில் சரிசெய்ய வேண்டும். ஆடாதொடா இலையை சட்னியாக அரைத்து 10 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், நார்க்கட்டியால் உண்டாகும் ரத்தப்போக்கு உடனடியாக நிற்கும்.

துவர்ப்புச் சுவையுள்ள வாழைப்பூப் பொரியல், அதில் வடை - வடகம், நெல்லிக்காய்ச் சாதம், இரவில் கடுக்காய்ப் பொடி... இவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் உணவில் சேர்த்து உட்கொண்டால், அதிக ரத்தப்போக்கு இருக்காது.

நார்க்கட்டி, சந்தேகத்துக்கு உரிய அதிக எண்டோமெட்ரியப் படலம், பெரிய நீர்க்கட்டி போன்றவை புற்றுக்கட்டியாக மாறாமல் இருக்கத் தேவை... கசப்பு - துவர்ப்புச் சுவை அதிகம் உள்ள உணவுகள்.

தவிர்க்கவேண்டியவை:

இனிப்பு, அதிக புளிப்புச் சுவை உள்ள உணவுகள். வெந்தயம், சுண்டைக்காய், பாகற்காய், கறிவேப்பிலை... போன்றவை கசப்பும் துவர்ப்பும் உள்ள உணவு வகைக்கான உதாரணங்கள். வெள்ளைச்சர்க்கரை, வற்றல்குழம்பு, புளியோதரை போன்றவை தவிர்க்கப்படவேண்டியவை.

எச்சரிக்கையாக இருக்கவேண்டிய சமயங்கள்:

**  மாதவிடாய்க்குப் பிந்தைய வெள்ளைப்படுதல்.

**  வெள்ளைப்படுதலில் ரத்தம் கலந்து இருத்தல்.

**  உடலுறவுக்குப் பிந்தைய ரத்தக் கசிவு.

**  சில ஆண்டுகளாக மாதவிடாய் நாட்களுக்குப் பிறகும் இருக்கும் ரத்தப்போக்கு.