Published:Updated:

சிக்ஸர் சிங்கம்!

சார்லஸ்

பிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்... உலகம் முழுக்க கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர், பௌண்டரிகளால் அதிர்வேட்டுகள்  நிகழ்த்தும் அதிரடி நாயகன். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலகம் முழுக்க ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என எல்லோரது லைக்ஸையும் அள்ளியிருக்கிறார் டி வில்லியர்ஸ். 16 பந்து களில் 50 ரன், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன் என அனைத்து வேகமான சாதனைச் சதங்களும் இவர் வசம்.

2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 21 வயது இளைஞனாக தென்ஆப்பிரிக்க அணிக்குள் நுழைந்தார் ஏ.பி.டி வில்லியர்ஸ். எல்லா சாதனை மன்னர்களையும்போல இவரும் தோல்வியுடன் தொடங்கியவர்தான். முதல் சதம் அடிக்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலானது. 2007-ம் ஆண்டில் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் டி வில்லியர்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை. ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கியவர், லீக் போட்டிகளில் நான்கு முறை டக் அவுட் ஆனார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஃபார்முக்கு வந்தார். 92 ரன்கள் எடுத்திருந்தபோது அவசரப்பட்டு ஓடி ரன் அவுட் ஆனார். முதல் சதம் அடிக்கும் வாய்ப்பு ஜஸ்ட் லைக் தட் மிஸ்ஸானது. ஆனால், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் 12 பௌண்டரி, 5 சிக்ஸர் விளாசி 146 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை அடித்தார். அதன் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 23 சதங்கள் விளாசி, தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்கள் கிரிஸ்டன், கிப்ஸ், காலிஸ், ஆம்லா என அனைவரது சாதனைகளையும் முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அனைத்து சதங்களிலுமே ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் மேல். தற்போது நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மட்டும் 20 சிக்ஸர்கள் விளாசி, ஓர் ஆண்டில் 58 சிக்ஸர்களுக்கும் மேல் அடித்தவர் என்ற உலக சாதனை படைத்திருக்கிறார். இந்த ஆண்டு இன்னும் முடியவில்லை. இன்னும் எத்தனை சிக்ஸர்கள் பறக்கப்போகின்றனவோ!

சிக்ஸர் சிங்கம்!

'டி வில்லியர்ஸ் கிரிக்கெட் மட்டும் அல்ல, தென் ஆப்பிரிக்காவுக்காக டென்னிஸ் விளையாடினார்; ரக்பி விளையாடினார்; பள்ளிப்பருவத்தில் நீச்சல் போட்டிகளில் ஆறு சாதனைகள் படைத்திருக்கிறார். அறிவியல் ஆய்வுக்காக நெல்சன் மண்டேலா விருது வாங்கியிருக்கிறார்’ என அவரைப் பற்றிய ஒரு வாட்ஸ்அப் தகவல் உலகக் கோப்பையின்போது உலவியது. பலர் இதை வாட்ஸ்அப்பில் உலவும் பல 'டுகால்ட்டி’ செய்திகள்போல 'டூப்’ என்றுதான் நினைத்தனர். ஆனால், அந்த வாட்ஸ்அப் செய்தி நூற்றுக்கு நூறு உண்மை.

‘Afrikaanse Hoër Seunskool’  என்னும் ஆப்பிரிக்காவின் மிகப் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பள்ளியில் 13 வயதில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் சிறப்பாக ஆடி ஆர்வம் காட்ட, எல்லா விளையாட்டுகளிலும் அவரைச் சேர்த்தனர். கோல்ஃப், ரக்பி, டென்னிஸ், ஸ்விம்மிங் என எல்லாமே விளையாடினார். கிரிக்கெட்டில் சதங்களும், அரை சதங்களுமாக அடித்து ஆடி... அடித்து ஆடி, இயல்பாக ஒரு கிரிக்கெட் வீரராக மாறினார் டி வில்லியர்ஸ்.

பந்தை பௌண்டரி நோக்கி அடிப்பார் அல்லது ரன் எடுக்க ஓடுவார். இந்த இரண்டு வகையில்தான் அவரை அவுட் செய்ய முடியும். கிளீன் போல்டு செய்ய வாய்ப்பே இல்லை. பௌலர்களையும் ஃபீல்டர்களையும் டி வில்லியர்ஸ் அளவுக்குக் குழப்பியவர்கள் யாரும் இல்லை. அவருடைய பாடிலாங்வேஜைப் பார்த்து டிரைவ் ஷாட் அடிக்கப்போகிறார் என ஃபீல்டர்கள் நினைத்தால், அது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டாக மாறும். அதனால்தான் பௌலர்கள் அவருக்கு பந்து வீசத் திணறுகிறார்கள்.

'என் அப்பா, அம்மா, இரண்டு அண்ணன்கள் என வீட்டில் எல்லோருமே விளையாட்டு வீரர்கள். 10 வயதில் எனக்கும் விளையாட்டு ஆர்வம் தொற்றியது. அண்ணன்கள் மற்றும் அவரது நண்பர்களுடன் நானும் விளையாடுவேன். ஆனால், எனக்கு பேட்டிங் சான்ஸ் கடைசியில்தான் கொடுப்பார்கள். அதுவரை என்னை தண்ணீர் பாட்டில்கள் கொண்டுவரப் பயன்படுத்தி வெறுப்பேற்றுவார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் கடைசி பேட்ஸ்மேனாகக் களம் இறங்குவேன். என்னை வெறுப்பேற்றியவர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே ட்ரிக் ஷாட் ஆடக் கற்றுக்கொண்டேன்’ என செம ஜாலியாக தன் கிரிக்கெட் வரலாறு சொல்கிறார் ஏபிடி.

டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் வரிசையில் கிரிக்கெட் உலகின் இந்தத் தலைமுறை நாயகன் ஏபிடி வில்லியர்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு