சினிமா
Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

ட்டணம்பட்டியில எறங்கி வீடு வந்து சேர்றதுக்குள்ள சேதியெல்லாம் தெரிஞ்சு போச்சு சின்னப்பாண்டிக்கு.

 வயித்துக்கும் நெஞ்சுக்குமா ஒரு வருத்தம் போயிட்டுப் போயிட்டு வருது.

மாட்டுச் சாணிய மிதிச்சும் மிதிக்காம வீட்டுக்குள்ள நுழைஞ்சான்.

திண்ணையிலகெடந்த ஒரு கெழடு, சாயம் போனாலும் அழுக்குப் போகாத போர்வைய லேசா விலக்கி, 'ஒம் பங்குக்கு நீயும் வந்துட்டியா?’ன்னு சின்னப்பாண்டிய ஒரு பார்வை பாத்துட்டு மறுபடியும் பொத்திப் படுத்திருச்சு பொசுக்குன்னு.

சல்லிக்கட்டு முடிஞ்ச வாடிவாசல் மாதிரி அலங் கோலமாக்கெடக்கு வீடு.

கோமியமும் சகதியும் குப்பையும் கூளமுமாகக்கெடக்கிற வாசல்ல வெளக்கமாரும் கெடக்கு ஒரு பெருக்காத பொருளா.

உடம்பெல்லாம் தழும்பு விழுந்துகெடக்கு ஒரு பித்தளைச் சொம்பு.

மூன்றாம் உலகப் போர்

அந்த வீட்டுல மூணு தலமுறையா இடிதாங்கி அந்தப் பித்தளச் சொம்புஒண்ணு தான். யாருக்குக் கோவம் வந்தாலும் எடுத்து எறிஞ்சுக் கிரலாம்; அது ஒண்ணும் பண்ணாது. உள்காயத்தோட கெடக்கற சொம்பை எடுத்துத் துலக்கி உள்ள போயி வச்சிக்கிரலாம் - இன்னொரு தடவை எறியறதுக்கு. பரம்பரைக்கே 'பெருஞ் சேவை’ பண்ணிருக்கு அந்தச் சொம்பு. தவிச்ச வாய்க்குத் தாகம் தணிக்கிறதும் அதுதான்; சண்டை சத்தம் வந்தாக் கோபம் தணிக்கிறதும் அதுதான்.

காலையிலருந்து பாலுக்குக் கழத்திவிடாத கன்னுக்குட்டி 'உங்க வம்பு முடியாம என்னத் தும்பு திரிச்சுவிட மாட்டீங்களா?’ன்னு கலங்கிப் பாக்குது கண்ணுல தண்ணி கட்டி.

கத்திக் கித்தித் தொலச்சிட்டாக் கழுத்தக் கிழுத்த நசுக்கிருவாகளோன்னு சத்தம் வராம வாய மட்டும் தொறந்து தொறந்து மூடுதுக காடிக்குள்ள ஓடி ஒளிஞ்சு நிக்கிற கோழிக.

கோவிந்த நாயக்கரு, இப்ராகிம் ராவுத்தரு, வீரணத் தேவரு, கண்ணப்பக் கோனாரு, ஒத்த வீட்டு மூளி எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு பேசாம அங்கங்க ஒக்காந்திருக்காக. விலக்கிவிட வந்தவக பாதி; வேடிக்கை பாக்க வந்தவக பாதி.

மூன்றாம் உலகப் போர்

தொடைக்கு மேல சுருட்டுன வேட்டிய உள்கூட்டுல சொருகி, விட்டத்த வெறிச்சுப் பாத்து ஒக்காந்திருக்காரு கருத்தமாயி.

உள்வீட்டுல உக்காந்திருக்கா சிட்டம்மா மூக்கைச் சிந்தி முனகிக்கிட்டே.

சல்லிக்கட்டு மாடு முட்டுனவன் குடல் மாதிரி, கயிறு சரிஞ்சு கெடக்கிற கட்டில்ல உக்காந்து சண்டைப் பாம்பு மாதிரி 'தஸ்ஸ¨புஸ்ஸ¨ன்னு மூச்சு விட்டுக்கிட்டிருக்கான் முத்துமணி.

நாலு பக்கமும் கண்ண ஓடவிட்டு, நடந்த கூத்து கொடுமையையெல்லாம் நெஞ்சுக் கூட்டுல வாங்கி நிறுத்திக்கிட்டு, அண்ணன் சாஞ்சிருந்த கட்டில் சட்டத்துல போய் ஒக்காந்தான் சின்னப்பாண்டி.

கொஞ்ச நேரம் ஒண்ணும் பேசல அண்ணன் தம்பி ரெண்டு பேரும்.

ஒரு சைசா ஆரம்பிச்சான் சின்னப்பாண்டி:

''சாப்பிட்டியாண்ணே?''

''ஆமடா... உங்கப்பன் கெடா வெட்டி வச்சிருக்கான். நீ வாழை எல வாங்கிட்டு வந்திருக்கியாக்கும்...''

''அப்பன் கெடா வெட்டலையேன்னு தான் அப்பனையே வெட்டப் போனை யாக்கும். அதுக்கு என்னையே வெட்டி யிருக்கலாமேண்ணே.''

''இருந்தா வெட்டியிருப்பேன். இப்பத்தான வர்ற...''

''இப்பக்கூட வெட்டுண்ணே. எம்மேல என்னண்ணே கோவம் ஒனக்கு?''

''ஒரு வார்த்த சொல்லியிருப்பியாடா. அண்ணன் கடனத் திருப்பிக் கொடுத்திரணும். பிள்ளைகுட்டியோட கஷ்டப் படுறான்னு.''

''அப்பனும்தான் புள்ளகுட்டி யோட கஷ்டப்படுது? உனக்காச்சும் ரெண்டு புள்ள; ஒன்னச் சேத்து மூணு புள்ளண்ணே அப்பனுக்கு.''

''நெனச்சானாடா? நானும் அவன் புள்ளதான்னு என்னைக்காச்சும்நெனச் சானா ஒங்கப்பன்? கடனஒடனவாங்கித் தான கல்யாணம் பண்ணிவச்சேன் தங்கச்சிக்கு? வாங்குன கடனுக்கு வட்டி கட்டியே எஞ் சம்பளம் போச்சு. எப்பத் தரப்போறான் உங்கப்பன்? எழுதிக் கொடுக்கச் சொல்லு.''

''எழுதப் படிக்கத் தெரியாதவர்கிட்டப் போயி எழுதிக் கொடுங்கறியே. ஒரு வெள்ளாமைக்குப் பொறுத்துக்கண்ணே.''

''எத்தன வெள்ளாமைக்குப் பொறுக்கறது? வாழைல வந்துரும்னாக; கரும்புல கழியும்னாக; நெல்லுன்னாக; கத்திரின்னாக. வெள்ளாமை வீடு வந்திருக்கு; என் கையில காசு வந்திருக்கா?''

மூன்றாம் உலகப் போர்

அது வரைக்கும் சும்மாஇருந்த இப்ராகிம் ராவுத்தர் எந்திரிச்சுட்டாரு.

''தம்பி முத்துமணி! நானும் சம்சாரிதான்; நீயும் சம்சாரி வீட்டுப் பிள்ளைதான். நீயாச் சொல்லு. இந்த அஞ்சு வருசத்துல எந்த வெள்ளாமையாச்சும் எச்சா மிச்சா வெளஞ்சிருக்கா? அப்படி வெளஞ்ச பொருளுக்கு வெல கெடச்சிருக்கா? மூண்டு தலைமுறையா நல்ல பொழப்புப் பொழைச்ச பொன்னுச்சாமி நேத்து பருத்திக்கு வச்சிருந்த மருந்தைக் குடிச்சிட்டுப் படுத்துட்டான். வத்தலக் குண்டு ஆசுபத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க வாயில நுரையோட. சாகிறானா, பொழைக்கிறானா தெரியல. அவன் குடிச்சிட்டான்; உங்கப்பன் குடிக்கல. தருமம் நீதிக்குக் கட்டுப்பட்ட வரப்பா உன் தகப்பனாரு. கடவுள் கண் தெறக்கட்டும். உனக்குக் குடுக்காம யாருக்குக் குடுக்கப்போறாரு?''

அது வரைக்கும் குழிஞ்ச கட்டில்ல சரிஞ்சுகெடந்த முத்துமணி தவ்வி எந்திரிச்சுட்டான்.

''ராவுத்தரய்யா... எனக்குக் குடுக்காம யாருக்குக் குடுப்பாகன்னா கேட்டீங்க? பொட்டச்சிக்குப் போகுதய்யா பொறந்த வீட்லயிருந்து. அவ ஒருத்திதான் இந்த வீட்டுல பெறந்தவளா? நாங்க பெறக்கலையா? களத்துல நெல்லடிக்கறாகளா? அஞ்சு மூட்டை அவுளுக்கு. கத்தரிக்கா காய்க்குதா? மொதச் சாக்கு அவுளுக்கு. வாழை தாரு போட்டுச்சா? மொதச் சீப்பு அவளுக்கு. பசுமாடு கன்டு போட்டுச்சா? மொதச் சீம்பா அவுளுக்கு. கன்னுக்குட்டி சாணி போட்டுச்சா? எருவெல்லாம் அவுளுக்கு. எங்களுக்கு என்னா இருக்கு மிச்சம்? எல்லாமே பொட்டச்சிக்குன்னு எழுதிவச்சிருங்களேன்.''

மேலயும் கீழயும் கத்தி வீசற மாதிரி கையையும் காலையும் ஆட்டி ஆட்டிப் பேசிக்கிட்டிருந்த அண்ணங்காரனைத் தோள்ல கைவச்சு ஒரு அழுத்தி அழுத்தி உக்காரவைக்கிறான் தம்பி.

''ஏன்ணே! கூடப் பெறந்தவதான? குடுத்தா என்னண்ணே தப்பு? பொட்டப்புள்ளைக்குச் சொத்துல பங்கு இருக்குன்னாலும் அது கேக்கப்போறதுமில்ல; நீ குடுக்கப்போறதுமில்ல. என் படிப்பு முடிஞ்சு நான் ஒரு வேலை வாங்கிக்கிர்றேன். தாய் தகப்பன் காலத்துக்குப் பெறகு எல்லாச் சொத்தையும் நீயே எடுத்துக்க.''

''வாடா என் வள்ளலுக்குப் பொறந்தவனே... இருந்தாத்தான எடுக்க முடியும்? இருக்குமா சொத்து? நம்ம அப்பன் நம்ம சொத்தக் கடங்காரன் கையில கொடுப்பானோ... இல்ல, தங்கச்சிக்குத் தாரை வாக்கப்போறானோ யாருக்குத் தெரியும்?''

ஒண்ணும் பேசல கருத்தமாயி.

ஓரமாக்கெடந்த வெளக்காமாத்துல ஒரு குச்சி எடுத்து ஒடிச்சுக் கடவாப் பல்லுல மாட்டிக்கிட்ட கீரை நாரைக் குத்திக்கிட்டு ஒண்ணும் கேக்காதது மாதிரி தூண்ல சாஞ்சு ஒக்காந்திருக்காரு எச்சி துப்ப ஏதுவா.

உள் வீட்டுல உக்காந்திருந்த சிட்டம்மா மூஞ்சி காமிக்கல; சத்தம் மட்டும் வருது.

''ஏலே அய்யா முத்துமணி! என்னத்தக் கொண்டுவந்தோம்? என்னத்தக் கொண்டுபோகப் போறம்? நம்ம கையில என்ன இருக்கு? சொத்து இருந்தா இருந்ததுதான், வித்தா வித்ததுதான்.''

''விப்ப கெழவி விப்ப. முத்துமாணிக்கம் வீட்ல இருந்து மூக்குத்திகூட இல்லாம வந்தவதான நீயி. யார் சொத்தை யார் விக்கிறது? இது ஒண்ணும் கருத்தமாயி சுயசம்பாத்தியம் கெடையாது. எங்க பாட்டன் சீனிச்சாமி தேடிவச்ச சொத்து. சும்மா விட்டுருவமா? விக்கிற ஆள வீட்டுல பாப்போம்; வாங்கற ஆள ரோட்டுல பாப்போம்.''

''ஏப்பா! படிச்சவன் பேசற பேச்சா இது? உளுத்து உள்கூடு தேஞ்சு உக்காந்திருக்காரு ஒங்கப்பன். கடனைக் குடு, கடனைக் குடுங்கறியே! பெத்த கடனை எப்பிடித் தீப்ப? ஊட்டி வளத்தாளே ஒங்க ஆத்தா. அவ குடுத்த தாய்ப்பால எப்பிடித் திருப்பிக் கொடுப்ப?''

தோள்ல கெடந்த துண்டை உதறிக் கடுஞ்சு பேசிட்டாரு வீரணத் தேவரு.

''வாருமய்யா வெட்டிப் பேச்சு வீரணத் தேவரே! நீரு உங்கப்பன் சொத்துல மஞ்சக் குளிக்கிற ஆளு. தனக்கு வந்தாத்தான தெரியும் தலைவலியும் குடைச்சலும்? தாய்ப்பால வாயில வெரலவிட்டு வாந்திஎடுக்கச் சொல்றீகளாக்கும்; அது முடியாது. ஆனா, பொறுங்க. எப்பிடியும் எம் பொண்டாட்டி மூணாம்பிள்ளைக்கு முழுகாம இருக்கப்போறதில்ல. பெறக்கட்டும் புள்ள. சங்குல பீச்சியாச்சும் கொண்டாந்து குடுத்திர்றேன் தாய்ப்பால. நீங்க ஒரு ஓரமாக் காச்சி உறை ஊத்திவச்சாலும் வச்சுக்குங்க. பேச வந்துட்டாக பேச்சு... தாய்ப்பாலு கொடுக்க வக்கு இல்லாமலா பிள்ள ஒருத்தி பெறுவா பிள்ள?''

''அண்ணே வேணாம்ண்ணே! பெரியவுகள அப்பிடிப் பேசக் கூடாதுண்ணே'' கையப் புடிக்க வந்த சின்னப்பாண்டியத் தடால்னு தட்டிவிட்டான் முத்துமணி.

''பெரியவுக பெரியவுகளா இருக்கணுமா இல்லையா? நாளைக்குக் கருத்தமாயி வீட்டுல ஓசி மோரு குடிக்கலாம்னு ஒரு பக்கமாப் பேசக் கூடாதுல்ல?''

''முத்துமணி! வேணாமப்பா! நாங்க எல்லாம் வெந்த சோத்துக்கு விதி இல்லாத ஆளுக இல்லப்பா. வெவகாரம் முடியணும். ஒரு வழிக்கு வா. கடைசியா நீ என்னதான் சொல்லணும்ங்கற சொல்லு.''

முத்துமணி கையி ரெண்டையும் கெட்டி யாப் புடிச்சுக்கிட்டு அவன் உள்ளங்கையில் பெருவிரலவச்சு ஓங்கி அழுத்துனாரு கோவிந்த நாயக்கரு.

''மகன் கடனை எப்ப அடைக்கப்போற? அப்பிடி அடைக்கலைன்னா, மகனுக்கு என்ன ஏற்பாடு பண்ணப் போற? கேளுங்கய்யா கெழவன.''

கொஞ்ச நேரம் யாரும் பேசல.

பல்லு இடுக்குல சிக்குன கீரை நாரு இப்போதைக்கு வராதுன்னு தெரிஞ்சுக் கிட்டு, 'சரி கழுதை இருந்துட்டுப் போகுது’ன்னு பல் குச்சியத் தூர எறிஞ்சிட்டு, கட்டிப்போன தொண்டையச் செருமிச் சரிசெஞ்சுக்கிட்டு, தூண்லகிடந்த முதுகைத் தூக்கி ஒக்காந்தாரு கருத்தமாயி.

''அய்யா... நல்லவக நாலு பேரு வந்திருக்கீக. உங்களுக்குத் தெரியாம எம் பொழப்புல ஏதாவது இருக்கா? முடிஞ்சு வைக்கப் பொருளும் இல்ல; மூடிவைக்கப் பொழப்பும் இல்ல. செயிலுக்குப் போயித் திரும்பி வந்தேன். தூக்குச் சொல்லியிருந்தா, சோலி முடிஞ்சிருக்கும்; சாச்சி இல்லன்னு வெளிய விட்டுட்டாக. வெளியில வந்தேன். வங்காடு வெட்டி நெலம் சேக்கற மாதிரி வம்பாடுபட்டு நெலம் சேத்தேன். மம்பட்டி தேஞ்சிருச்சு; மனசு தேயல. புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருமா வெவ சாயம் பண்ணுனோம். ஏதோ எங்க சத்துக்குக் கால்வாசித் தோட்டம் கத்திரி நட்டோம். அடிச்ச அடைமழையில காயும் பிஞ்சும் அழுகிப்போச்சு. கத்திரி அழுகப் பெறந்த வன்தான் இந்தக் கடன்காரப் பய.

போச்சுடா பொழப்புன்னு ஒடுங்கி ஒக்காந்திரல. நெல்லு நட்டேன். என் ஆயுசுக்கு அப்பிடி ஒரு மகசூல் பாத்ததில்ல. களத்து நெல்லு வீட்டுக்கு வர சீக்குல விழுந்துபோனா சிட்டம்மா. கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்குது. என்ன சீக்குன்னு கண்டறிய முடியல. காச்சலும் கொறயல. பொழப்பாளா மாட்டாளா? புடிபடல. இந்தா இந்த வாசல்ல எறக்குன நெல்லு வீட்டுக்குள்ள போகுமுன்ன ஏவாரிக்கு வித்தேன். தானியம் போனாப்போகுது எந் தங்கம் பொழைச்சாப் போதும்னு காப்படி நெல்லுகூடக் கஞ்சிக்கு வைக்காம வித்துக் காப்பாத்துனேன் என் பொண்டாட்டிய.

ஒரு வெள்ளாமை குடுக்கும்; மூணு வெள்ளாமை படுக்கும். இதுதானய்யா வெவசாயம். சம்சாரி வாழ்க்கையில செலவு தெரியாதா? விவசாயம் வெளிச் செலவு; வீடு, விருந்தாளு, செய்முறை உள் செலவு. அம்பது ரூவா வருமானம் உள்ள வர்றபோதே எம்பது ரூவாச் செலவ இழுத்துக்கிட்டே வருது. இதுல என்னத்தச் சேத்துவைக்க? எங்ஙன கடனைக் கட்ட? எண்ணெயத் தேச்சு உருண்டாலும் ஒட்டறது தானய்யா ஒட்டுது. பாப்பம்... இப்பிடியே போயிராது காலம். மூணு வெள்ளாமை சேந்து வெளையட்டும். இந்தக் கடன்காரப் பய காசை மொதல்ல குடுத்துடறேன்.''

''ஆமா! வேப்பெண்ணெ கடைஞ்சு வெண்ணெ எடுக்கிறதெப்ப? வெள்ளாமை வெளஞ்சு கடனை அடைக்கிறதெப்ப? நடக்கிற கதையை பேசச் சொல்லுங்கப்பா'' அப்பன் பேசி முடிக்கு முன்ன முந்திட்டான் முத்துமணி.

''யப்பா! முத்துமணி! இருந்தாக் குடுத்துருவாரு உங்கப்பன்; இல்லாத குறைதான்'' தவ்வி வந்த பயலை அமத்திப் பாத்தாரு இப்ராகிம் ராவுத்தரு; அவன் அடங்கல.

''இல்ல இல்லேங்கறீகளே... என்னியப் பாத்து இல்லேன்னு சொல்லச் சொல்லுங்க. மகளுக்கு ஒண்ணுன்னா மட்டும் சீல வாங்கிப் போறீக; சேவலப் புடிச்சுப் போறீக. அஞ்சு குத்துச்சட்டியில பணியாரம் போகுது ஆடிச் சீருக்கு. உப்பு புளி மொளகாயில இருந்து உப்புக் கருவாடு வரைக்கும் பொட்டச்சிக்குச் செய்ய மட்டும் கருத்தமாயி சிட்டம்மா கையில காசு பொரளுது. மகபுள்ள பேத்திக்கு மொட்டைஅடிச்சா மட்டும் சிறுவாட்டுக் காசுல சங்கிலி போகுது. எங்கடனக் கேட்டா மட்டும் இல்ல... நொள்ள. போங்கய்யா ஒங்க பேச்சுக்கு நான் வல்ல.''

''பொண்ணுக்குச் செய்யறது பொறந்த ஆசாரமப்பா. அப்பன் ஆத்தா இருக்கிற வரைக்கும்தானப்பா ஒரு பொட்டச்சி அனுபவிக்க முடியும். அப்பன் ஆத்தா காலத்துக்குப் பெறகு அனுபவிக்கிறவன் ஆம்பளப் பயதானப்பா.''

''அது சரி... இவுக சாகுமுன்ன நான் செத்துப்போனா?''

''நெறஞ்ச வீட்டுல நல்ல பேச்சுப் பேசப்பா. நாளைக்கு ஒனக்குக் கடனே இல்லேன்னு போனாலும் சொத்து இல்லேன்னு போயிருமா?''

''போகாதில்ல..?''

''போகாது.''

''அப்ப எனக்குக் கடன் வேணாம்; வீடு வேணும்.''

''எடுத்துக்கப்பா. உம் பங்கு ஒனக்கு இல்லேன்னு போயிருமா? அப்பன் ஆத்தா காலத்துக்குப் பெறகு பாதி வீட்ட எடுத்துக்க.''

''எனக்கு இப்பவே வேணும். பாதி வீடு என் பங்குக்கு; பாதி வீடு கடனுக்கு. முழு வீடும் வேணும் எனக்கு.''

''நல்ல கதையா இருக்கே... எங்க போவாக உங்கப்பன் ஆத்தா ரெண்டு பேரும்?''

''தோட்டத்துல எடம் இருக்குல்ல. அங்க குடுசை போட்டுக் குடியிருக்கச் சொல்லுங்க.''

கன்னுக்குட்டிய அவுத்துப் பால்மாடுகிட்ட விட்டுக்கிட்டிருந்த சின்னப்பாண்டி பதறிப்போயி ஓடி வந்தான்.

''வேணாம்ண்ணே... பழிபாவத்துக்கு ஆளாகாதண்ணே. படிச்சு முடிச்சதும் எப்பிடியும் வெளிநாட்டுல ஒரு வேலை வாங்கிருவேன். அப்பன் ஆத்தா ரெண்டு பேரையும் என்கூடக் கூட்டிட்டுப் போயிடறேன். என் பங்கையும் நீயே சேத்து ஆண்டுக்க; அனுபவிச்சுக்க. அது வரைக்கும் பாகம் பிரிக்காத; அப்பன் ஆத்தாள நடுக்காட்டுக்கு அனுப்பிராத.''

மூன்றாம் உலகப் போர்

''நானும் என் பிள்ளகுட்டியும் சிறுமல அடிவாரத்துல நடுக்காட்டுல இருக்கலாம்; நீங்க மட்டும் நடு வீட்டுலயா? இன்னைக்கே வீட்டை எழுதிவச்சாகணும் எம் பேர்ல.''

''ஏலேய்! ஒன்னியப் பெத்ததுக்கு...'' கத்தி வெளியே ஓடி வந்தா சிட்டம்மா.

நெஞ்சுல எடம் இல்லாம நெத்திக்கு ஏறுன கோபத்தையெல்லாம் கட்டுப்படுத்தி நிக்கிறாரு கருத்தமாயி. என்னமோ ஒண்ணு ஆகப்போதுன்னு ஊரே தவிச்சு நிக்கையிலே, வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்த சிவங்காளை மூச்சு வாங்கிச் சொல்றான்:

''அய்யா! மருந்து குடிச்ச பொன்னுச்சாமி செத்தேபோனாருய்யா.''

- மூளும்