Published:Updated:

`பாட்சாவ்' இன குழந்தைகளைக் காத்த தாய்மரம்... வரலாற்றின் சாட்சியாக நிற்கும் கோவை காஸ் அருங்காட்சியகம்!

`பாட்சாவ்' இன குழந்தைகளைக் காத்த தாய்மரம்... வரலாற்றின் சாட்சியாக நிற்கும் கோவை காஸ் அருங்காட்சியகம்!
`பாட்சாவ்' இன குழந்தைகளைக் காத்த தாய்மரம்... வரலாற்றின் சாட்சியாக நிற்கும் கோவை காஸ் அருங்காட்சியகம்!

கோவை, கெளலி பிரெளன் சாலையில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கிறது காஸ் மியூசியம். 1902-ல் தொடங்கப்பட்ட காஸ் மியூசியம், இந்திய வன அருங்காட்சியங்களுள் மிகப் பழைமையானது. காஸ் என்னும் தனி மனிதரின் முயற்சியில் உருவான இந்த அருங்காட்சியகம், இந்திய வனங்களின் மொத்த உருவம். இங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒரு வரலாறைச் சுமந்து நிற்கிறது. 

என்ன இருக்கிறது மியூசியத்தில்?

அருங்காட்சியகத்தின் நடுவே, பிரமாண்டமாக வீற்றிருக்கிறது இந்தியன் பைசன். இது மைசூரை ஆண்ட ஜெயச்சந்திர உடையாரால் 1956-ல் வழங்கப்பட்டது. இங்கே இடம்பெற்றிருக்கும் புலியின் நான்கு வார கருவும், "யானை டாக்டர்", வி.கிருஷ்ணமூர்த்தியால் அளிக்கப்பட்ட யானையின் கருவும், பார்ப்பவரை அவ்வளவு எளிதில் நகர விடுவதில்லை. இதுதவிர ஒரு பெரிய யானையின் எலும்புக் கூடு, பாடம் செய்யப்பட்ட சிறுத்தை, லங்கூர், கேஷ்ல் மான் போன்றவற்றின் பாகங்களும் இருக்கின்றன. இவையனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் இந்திய வனங்களில் சுற்றித்திரிந்தவை.

வனத்தின் விலை சொல்லும் வரலாறு

"காற்று நடுநடுங்க வெள்ளையரின் இரும்புக் கோடாரிகள் பேரொலியைக் கிளப்பிய போதுதான் காடுகளின் மரண ஓலம் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த ஓலத்தை ஒவ்வொரு மரமும் கேட்டது. வான் முட்ட எழுந்த புகைத்தூண்கள் காலனின் வருகைக்கு பாலம் அமைத்தன" என்று தங்கள் காடுகள் அழிக்கப்பட்டதை பதிவு செய்தார் கலிபோர்னிய எழுத்தாளர் ஜான் முயர். இதே வன்முறைகள்தான் இந்திய வனங்களிலும் பிரயோகிக்கப்பட்டது. ஆட்சி செய்ய வந்த வெள்ளையர்களால் அதிகளவிலான மரங்கள் வணிக நோக்கத்துக்காக வெட்டப்பட்டன. தேவை என்ற பெயரில் தேவைக்கதிகமாக சூறையாடப்பட்டன. 

தென்னிந்திய மர வகைகளில் தேக்கு, ஆங்கிலேயரின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. 1900-ம் ஆண்டு மட்டும் 63,598 டன்  தேக்கு மரம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. தேக்கின் வரலாறே பிரமிப்பாக இருக்கும்பொழுது, இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கும் 456 வருட பழைமையான தேக்குமரம் வியப்பின் உச்சம். அம்மரத்தின் குறுக்கு வெட்டு துண்டின் சுற்றளவு 5.7 மீட்டர். வாஸ்கோடகாமா இந்தியாவில் தரையிறங்கியபோது இந்த மரத்தின் வயது 50. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட போது இதன் வயது 260. இப்படி பல நூற்றாண்டுகளைக் கடந்து, இங்கே நிற்கிறது இந்த டெக்டோனா கிராண்டீஸ் (தேக்கு மரம்). கிராண்டீஸ் என்ற சொல்லின் பொருள் 'பிரமாதம்'

வனத்தின் குழந்தைகள்:

வனமும், மக்களும் எந்தளவுக்கு உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இங்கே இருக்கும் ஒரு புகைப்படம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி இனம் பாட்சாவ். இவ்வின ஆண்கள் மீன் வேட்டைக்குச் சென்றுவிட, பெண்கள் கிழங்கு அகழச் செல்வார்களாம். அந்த சமயங்களில் 'தாய் மரம்' என்று அவர்கள் நம்பிய பெரிய மரத்தின் அடியில், தங்கள் குழந்தைகளைக் கிடத்தி, கால்களை இலை சருகாலும், மண்ணாலும் மூடுவார்கள். இதனால் குழந்தையால் அசைய முடியாது. ஆனால், தாய் திரும்பி வரும்வரை குழந்தைகள் அழவோ, பயப்படவோ செய்யாதாம். தாங்கள் இல்லாத நேரங்களில், குழந்தைகளை 'தாய் மரம்' பார்த்துக்கொள்வதாக நம்பினர் பாட்சாவ் இன மக்கள்.

இப்படி பல அதிசயங்களை உள்ளடக்கிய  காஸ் அருங்காட்சியகத்தில் மிக உயரமான சந்தன மரம், மிகப்பெரிய விதை, கிங் கோப்ரா முட்டைகள், விமான கட்டுமானத்தில் பயன்படும் எடை குறைவான பால்சா மரத்துண்டு, இந்தியப் பூச்சி இனங்கள் எனப் பல  வியப்பூட்டும் காட்சிப் பொருள்களும் இருக்கின்றன. 

காஸ் அருங்காட்சியகம், இரண்டாம் உலகப்போரின்போது, கீரீஸ் (Greece) மற்றும் மால்டா (Malta)வில் இருந்து வந்த போர் அகதிகள் தங்கும் இடமாக  மாற்றப்பட்டது. அகதிகளாக வந்தவர்களின் மனநிலை, பொருள்களை ரசிக்க இடம் கொடுக்கவில்லை பல அரிய பொருள்களை குளிர் காய்வதற்காக எரித்துவிட்டார்கள். பல பொருள்கள் ஏலத்தில் விற்கப்பட்டது. ஜே.ஏ.மாஸ்டர்  என்னும் பிரிட்டிஷ் வன அதிகாரியின் பெரும் முயற்சியால் காப்பாற்றப்பட்டவைதான் தற்போது இங்கே எஞ்சியிருப்பவை.

காஸ் நினைத்திருந்தால் தான் சேகரித்த பொருள்களை கப்பலில் ஏற்றி தாயகம் கொண்டு போயிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அடிமைப்படுத்தப்பட்ட ஒரு நாட்டில் அம்மக்களுக்கான வரலாற்றைச் சொல்லும் ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என அவர் நினைத்தார். அந்த எண்ணம்தான் இந்த அருங்காட்சியகத்தின் அஸ்திவாரம்.