இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 5

ல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மெடிக்ளெய்ம் பாலிசியை அளிக்கின்றன. சில நிறுவனங்களோ, ஊழியரின் குடும்பத்தினர் அனைவருக்கும் சேர்த்து பாலிசியை அளிக்கின்றன. நிறுவனம்தான் பாலிசியை அளித்துவிடுகிறதே, தனியாக எதற்கு நாம் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க வேண்டும் எனப் பலரும்  நினைக்கின்றனர். இங்குதான் அவர்கள் தவறு செய்கின்றனர். இதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்.

ரமேஷுக்கு ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை; நல்ல சம்பளம். அவருக்கு வேறு ஒரு நிறுவனம் அதைவிட சிறப்பானதாகத் தோன்ற, வேலையை ராஜினாமா செய்துவிட்டு புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர முடிவு செய்தார். ஒரு மாதம் ஓய்வெடுத்துவிட்டு, அதன் பிறகு புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாம் என முடிவு செய்து, வெளியூர் கிளம்பிவிட்டார். திடீரென அவரது மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘அப்பண்டிசைடிஸ்’ எனப்படும் குடல்வால் பிரச்னை. ‘உடனடியாக அறுவைசிகிச்சை செய்தாக வேண்டும்’ என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 5

பழைய நிறுவனத்தில் அளித்திருந்த மெடிக்ளெய்ம் பாலிசி, அவர் வேலையைவிட்டு விலகியதும் காலாவதியாகிவிட்டது. புதிய நிறுவனத்தில் இன்னும் சேரவில்லை என்பதால், அந்த நிறுவனம் அளிக்கும் பாலிசியும் இவருக்கு இல்லை. இதனால், மொத்தச் செலவையும் தன்னுடைய கையில் இருந்தே செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார். ஒருவேளை, அவர் தன் குடும்பத்துக்காகத் தனியாக ஒரு பாலிசி எடுத்திருந்தால், அவருக்கு இந்த எதிர்பாராத நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

பொதுவாக, நிறுவனங்கள் ஒரு லட்சம் முதல் மூன்று லட்ச ரூபாய் வரைக்குமே கவரேஜ் அளிக்கின்றன. சில நிறுவனங்கள்தான் ஐந்து லட்சம் வரை கவரேஜ் அளிக்கின்றன. மூன்று நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு லட்சமோ, மூன்று லட்சமோ போதுமானதாக இருக்காது. குரூப் பாலிசியிலும் நிறைய கண்டிஷன்கள் உள்ளன. சில பாலிசிகளில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்குக் காத்திருப்புக் காலம் இருக்கும். சில பாலிசிகளில் இருக்காது. ஒருவேளை காத்திருப்புக் காலம் இருந்தால், அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு பாலிசி க்ளெய்ம் கிடைக்காமல் போய்விடும். இன்றையக் காலகட்டத்தில், எல்லோரும் தங்கள் வாழ்நாள் முழுக்க ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்வோம் எனச் சொல்வதற்கு இல்லை. இத்தகையச் சூழ்நிலையில், ‘புதிதாகச் சேரும் நிறுவனத்தில் எந்த மாதிரியான பாலிசி அளிக்கிறார்கள், எதற்கு எல்லாம் கவரேஜ் கிடைக்கும்?’ என்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மேலும், ‘சுயதொழில் செய்கிறேன்’ எனச் சென்றுவிட்டால், பாலிசி இல்லாமல் போய்விடும். இளம் வயது என்றால், பாலிசி ப்ரீமியம் குறைவாக இருக்கும்.

பெரியவர்களுக்கு ப்ரீமியம் அதிகமாக இருக்கும். நிறுவனம் அளிக்கும் பாலிசியை நம்பிக்கொண்டிருந்தால், ஓய்வு பெறும் காலத்தில், பாலிசி காலாவதி ஆகிவிடும். அந்த நேரத்தில் புதிதாக மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்தால், ப்ரீமியம் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே உள்ள நோய்க்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு க்ளெய்ம் கிடைக்காமல் போய்விடும். பிற்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றால், ப்ரீ எக்சிஸ்ட்டிங் டிசீஸ், கவரேஜ், ப்ரீமியம் என அனைத்திலும் பிரச்னை ஏற்படும். எனவே, குடும்பத்துக்கு எனத் தனியாக மெடிக்ளெய்ம் பாலிசி வைத்திருப்பது மிகவும் நல்லது.

- தொடரும்

படம்: சி.தினேஷ்குமார்

பாலிசி அலசல்

அப்போலோ ம்யூனிச் ஆப்டிமா ரீஸ்டோர்

இந்த பாலிசி தனி நபர் பாலிசியாகவும், ஃப்ளோட்டர் பாலிசியாகவும் கிடைக்கிறது. இதில், மூன்று லட்சம் முதல் 50 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். 4,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் க்ளெய்ம் பெற முடியும். வாழ்நாள் முழுக்க இந்த பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம். ரூம் வாடகைக்கான கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. ஒருவேளை உடல்நலக் குறைவு ஏற்பட்டு கிளெய்ம் வாங்கியிருந்தாலும்கூட, அடுத்த ஆண்டு பாலிசியைப் புதுப்பிக்கும்போது, கூடுதல் கட்டணம் கிடையாது.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 5

இந்த பாலிசியில் மொத்த கவரேஜையும் க்ளெய்ம் செய்தாலும்கூட, மீண்டும் பாலிசியின் மொத்த கவரேஜையும் திருப்பிக்கொடுப்பார்கள். உதாரணத்துக்கு, பாலிசியின் கவரேஜ் மூன்று லட்ச ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்தில், மூன்று லட்ச ரூபாயையும் குடும்பத்தில் ஒருவருக்கு க்ளெய்ம் பெற்றுவிட்டால், மற்ற பாலிசிகளில் மீதம் உள்ள மாதங்களுக்கு கவரேஜ் இல்லாமல் போய்விடும். ஆனால், இந்த பாலிசியில் மேலும் மூன்று லட்ச ரூபாய் கவரேஜை அளிக்கின்றனர். இந்த பாலிசி எடுத்த முதல் இரண்டு வருடங்களுக்கு க்ளெய்ம் ஏதும் செய்யவில்லை என்றால், பாலிசியின் கவரேஜ் தொகை இரட்டிப்பாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism