சினிமா
Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : சூர்யாநா.கதிர்வேலன், படங்கள் : பொன்.காசிராஜன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''எனக்கு ஆனந்த விகடன்னா... மாஸ். இன்னொரு பார்வையில் அது என் மாஸ்டரும்கூட!

விகடன்னா மனசுக்குள் ஒரு பயம் கலந்த மரியாதை வரும். கல்லூரி கேன்டீனில் புரொஃபஸர் வந்தாலோ, வராண்டாவுல பிரின்சிபாலைப் பார்த்தாலோ பவ்யமா ஒரு வணக்கம் சொல்வோமே... அப்படி ஒரு மரியாதை!

ஒருத்தரை எதிரில் பார்த்தால் புன்னகைப்போம், கை குலுக்குவோம், 'நல்லா இருக்கீங்களா’னு கேட்டுவைப்போம், வணக்கம் சொல்லி 'உங்க ஆசீர்வாதம் வேணும்’னு சொல்றது ஒரு சிலர்கிட்டதான் இல்லையா? என்கிட்ட அப்படியான ஒரு இடத்தில்தான் ஆனந்த விகடன் எப்பவுமே இருக்கு!

விகடனின் ஒவ்வொரு இதழிலும் தீவிரமான உழைப்பு இருக்கும். இருபது வருஷமா விகடன் வாசகன் நான். எனக்கு விகடனில் எழுதும் ஒவ்வொருத்தரின் கை வண்ணமும் தெரியும். சிலரின் முகம் பார்த்திருக்க மாட்டேன். ஆனா, அவங்க அக்கறை புரியும். கிண்டல் தெரியும். ஒரு மேட்டரைப் படிச்சதுமே, அது யார் எழுதியதுனு கணிச்சுச் சொல்லிடுற அளவுக் குப் பழக்கம்.  

நானும் விகடனும்!

விகடன் எல்லா சமயங்களிலும் நியாயமா நடந்துக்கிறாங்க. கரெக்டா சொல்றாங்க. அவங்ககிட்ட இருந்து நிறையத் தெரிஞ்சிக்க முடியும். புரியாததைப் புரிஞ்சுக்க முடியுது. நல்லது பண்ணா, நம் தோள்ல தட்டிக் கொடுத்து அவங்க தோள்ல தூக்கிவெச்சுக் கொண்டாடுவாங்க. அதேசமயம் தப்பு பண்ணாலும் கரெக்டா கண்டுபிடிச்சிடுவாங்க.  

நானும் ஜோவும் முகம் பார்த்து லேசா பேச ஆரம்பிச்சப்பவே,  'க்ளீன் பாய் - குட் கேர்ள்... சம்திங்... சம்திங்’னு விகடன்ல சின்னதா ஒரு நியூஸ் வந்தது. 'நான் உன்னைக் கூப்பிட்டுப் பேசினதில்லையே... எங்கேயும் தனியா சந்திக்கலையே... அப்புறம் எப்படி இப்படி செய்தி வந்துச்சு?’னு நானும் ஜோவும் பேசிக்கிட்டு இருந்தோம்.  

அப்புறம்தான் நானும் ஜோவும் மனசுவிட்டுப் பேச ஆரம்பிச்சோம். அப்போ, அதைக் காதல்னு சொல்ல முடியாது. ஒருவிதமான பிரியம். ஆனா, அடுத்து சடசடனு அன்பு பெருகி, அக்கறை அதிகரிச்சு, காதலில் கலந்தோம்.

அந்தச் செய்தியின் ரகசியத்தை சமீபத்தில்தான் விகடன்ல முக்கியமான ஒரு நண்பர், 'அதை எழுதினதே நான்தான்’னு  ஒரு சந்திப்பில் என்கிட்ட சொன்னார். விகடனுக்கு எங்கெல்லாம் கண், காது இருக்குனு ஆச்சர்யமா இருந்தது எனக்கு. ஆக, எங்க காதலுக்கு முதலில் வெளிச்சம் போட்டது விகடன்தான். அப்படிப் பார்த்தா, விகடனும் என்னோட லைஃப் பார்ட்னர்தான்!

என்னை மாதிரி ஒருத்தருக்கு அல்லது என்னைவிடவும் சமூக அக்கறைகொண்ட ஒருத்தருக்கு ஒரு நல்ல பத்திரிகையை எதிர் காலத்தில் கொண்டுவரணும்னு ஆசை இருக்குன்னு வெச்சுக்கங்க. என்னைக் கேட்டால் அது விகடன் மாதிரிதான் இருக்கணும்னு சொல்வேன். காலேஜ் கேம்பஸ்பத்தி எழுதினால், அது நம்மளை அப்படியே தூக்கி அங்கேயே கொண்டுபோய் விட்டது மாதிரி இருக்கும். காலேஜ் காம்பவுண்ட் கலாட்டாக்களை எழுதறது சும்மா வராது. அவங்களைப் பத்தி நிறையத் தெரிஞ்சி ருக்கணும். அதே கலரில், லாங்குவேஜில் பேசத் தெரியணும். குறும்பு வரணும். அதை அப்படியே விகடன்தான் செய்யும். இந்தத் தாத்தாவுக்கு எப்பவும் இளமைதான்.

விகடனின் இன்னொரு முக்கியமான அம்சம்... அரசியல் பார்வை. அரசியல்பத்தி அவங்க எழுதுறது ரொம்பச் சரியாக இருக்கும். அதில் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் இருக்காது. இது ஒரு நல்ல பண்பு. வேறு எங்கேயும் இதை நான் பார்த்தது இல்லை!  

நானும் விகடனும்!

விகடனின் பெரிய பலம்... நிருபர்கள். அவங்க எல்லார்கிட்டேயும் ஒரு காந்தத்தின் வசீகரம் இருக்கும். சும்மா புத்தகத்தைப் புரட்டிட்டுப் போயிடாம, எல்லா விஷயங்களையும் படிக்கிற மாதிரி அழகா, தெளிவா எழுதுவாங்க.  ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி அடையாளம். ஒருத்தர் சினிமாவில் பின்னினால், இன்னொருத்தர் அரசியலைப் புட்டுப்புட்டு வைப்பார். இன்னொருத்தர் இலங்கைப் பிரச்னையில் மனசு கலங்கி அழும் அளவுக்கு உருக்கமான செய்திகளைத் தொகுத்துத் தருவார். இப்படியான நிருபர்களைத் தொடர்ந்து கைவசம் வெச்சுக்கிட்டு, அவங்களைத் தொடர்ந்து உரிமையோடு, சுதந்திரத்தோடு வேலை செய்ய அனுமதிப்பது விகடனின் நல்ல குணம்.

விகடன் நிருபர்களை நம்பி எதையும் பேசலாம். ஏதோ வீட்டுல மாமா, மச்சான், தம்பி, தங்கச்சிகூடப் பேசுற மாதிரி ஒரு அந்நியோன்யம் இருக்கும். பேட்டியின்போது சமயங்களில் எல்லாத்தையும் காரசாரமாப் பேசிடுவோம். ஆனா, தேவையான சுவாரஸ்யத்தை மட்டுமே வெளியிடுவாங்க. அது ஓர் அழகு. உணர்ச்சிவசப்பட்டு நாம் பேசினதை வெளியிட்டால், அந்த வாரம் ஆயிரக்கணக்கில் சேல்ஸ் எகிறும்னாகூட அதைத் தவிர்த்துடுவாங்க.

நாட்டில் வெள்ளம், போர், சுனாமி போன்ற எந்த நெருக்கடியான சூழலிலும் உதவி செய்ய, விகடன் மக்களிடம் நிதி வசூலிக்க முன்னணியில் நிற்கும். தானே ஒரு பெரும் தொகை கொடுத்து பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சுவெச்சு அந்தத் தேரை இழுக்கத் தொடங்கும். விகடன் வாசகரா இல்லாதவர்கூட அப்போ விகடனிடம் வந்து பணம் கொடுப்பார். காரணம், அந்த நிதி முழுவதும் ஒரு தப்பு இல்லாம, ஒரு பைசா குறையாம சம்பந்தப்பட்டவங்களுக்குப் போய்ச் சேரும்கிற நம்பிக்கை. எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் விகடன்தான் முன் மாதிரி. உதவுறதும் நிதி அளிப்பதும் தவிக்கிறவங்களைக் கை தூக்கிவிடுவதும் திறமையாளர்களை ஊக்குவிப்பதும் விகடனோட கடமையாகவே இருக்குது. வெறும் பொழுதுபோக்கோட நின்னிருந்தா, விகடனுக்கு இவ்வளவு மதிப்பு இருக்காது!

விகடன் என்னை எப்பவும் தாயுள்ளத்தோடு தாங்கி வந்திருக்கு. ஒரு நடிகனா சும்மா பரபரப்பான பேட்டிகளுக்காக மட்டும் விகடன் என்னை அணுகாது. வாசகர்களை நேரில் சந்திக்கும் 'பார்ட்டி பாஸ்’ விழாவாகட்டும், ரசிகையின் கல்யாணத்தில் கலந்துகொண்டு அவங்க ஆசையை நிறைவேற்றுவதாகட்டும், 'விகடன் மேடை’யில் என்னையும் உக்காரவெச்சு வாசகர்களுடன் நேரடியா உரையாட வெச்சு சந்தோஷத்தில் திக்குமுக்காட வைப்பதில்ஆகட்டும்... கிட்டத்தட்ட விகடன் வீட்டு செல்லப்பிள்ளை நான்.

இது எல்லாத்தையும்விட உச்சகட்ட அங்கீகாரமா விகடனின் 'டாப் டென்’ மனிதர்களில் என்னையும் ஒருவனாத் தேர்ந்தெடுத்து அங்கீகரிச்சது விகடன். அது என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான தருணம்!  

என்னை ஆச்சர்யப்படுத்துறாங்க விகடனின் மாணவ நிருபர்கள். இன்னிக்கு விகடனின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அந்தத் திட்டத்தின் வார்ப்புகள்தான். நூற்றாண்டை நெருங்கும் நிறுவனத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் அவர்கள். ஆனா, இப்ப ஒண்ணு சொல்லத் தோணுது. சமீப மூணு நாலு வருஷமா வருகிற மாணவ நிருபர்கள்

என்னைப் பெரிசா கவரலை. ஏதோ ஒண்ணு அவங்ககிட்டே குறையுது. இது சரிபண்ணக்கூடிய விஷயம்தான். நிறை சொல்லும்போது கொஞ்சம் இதையும் சொல்லலாம்னு தோணுச்சு... சொல்லிட் டேன். இனி, அந்தக் கவலையும் எனக்கு இருக்காது. ஏன்னா, விகடன் அதை சரி செஞ்சுடும்.

அப்பா, அம்மா, குடும்பம், தமிழ், சினிமானு என் பிரியத்துக்குரிய பட்டியலில் விகடனுக்கு என்றும் இடம் உண்டு. விகடன் தமிழ் மக்களுக்கான பத்திரிகை. இந்தச் சமூகத்தின் மீது நம்பிக்கையும் அக்கறையும் வெச்சிருக்கிற யாரும் விகடனைத் தவிர்க்க முடியாது. என்னாலும்!''