Published:Updated:

தேவை மக்கள் நடவடிக்கை!

தேவை மக்கள் நடவடிக்கை!

தேவை மக்கள் நடவடிக்கை!

தேவை மக்கள் நடவடிக்கை!

Published:Updated:
தேவை மக்கள் நடவடிக்கை!

ரிகள் நிரம்பி, அணைகள் நிறைந்து, சாலைகளும் வீதிகளும் மழைநீரால் ததும்பி வழிகின்றன. நகரங்களும் கிராமங்களும் நீரால் சூழப்பட்டு, பல நூறு சிறு தீவுகளாகப் பிரிந்து கிடக்கின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிட்டது. குடிநீர், உணவு, வசிப்பிடம், போக்குவரத்து என அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் மக்கள் திண்டாடி நிற்கின்றனர். உடைந்த ஏரிகள், துண்டாடப்பட்ட பாலங்கள், சிதைந்த சாலைகள், அழிந்துபோன விவசாயம், கால்நடைகள்... என இந்தப் பெருமழை ஒரு பேரழிவாக மாறியிருக்கிறது. 

பருவமழையை எதிர்கொள்ளும் எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யாமல், அது நிகழும்போது எதிர்கொள்ளும் திராணியும் இல்லாமல் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப்போயிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. நீண்டகால நீர்நிலை ஆக்கிரமிப்பும், அதைக் கண்டுகொள்ளாத அரசுத் துறைகளின் அலட்சியமுமே இந்தப் பேரழிவுக்கு நேரடிக் காரணம். அதை உடனடியாகச் சரிசெய்யவேண்டிய பெரும் கடமை அரசுக்கு இருப்பதைப்போலவே, ஒரு குடிமகனாக நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரும் பொறுப்பு இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மழைநீரைச் சேகரிக்க வேண்டும்’ என அரசு சொல்வதற்காகக் காத்திருக்கவேண்டியது இல்லை. அது நம் நலனுக்கும் நாட்டு நலனுக்கும் நாம் செய்யவேண்டிய அத்தியாவசியக் கடமை. ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பை முழுமையாகச் செயல்படுத்தி இருந்தால், இந்தப் பெருமழையைப் பயன்படுத்தி நிலத்தடி நீரை அதிகரித்து, மழை வெள்ளத்தின் பாதிப்பையும் குறைத்திருக்க முடியும். இனியேனும் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் உணர்ந்து அனைத்து இடங்களிலும் இதைச் செயல்படுத்த நாம் உறுதியேற்க வேண்டும். அதைப்போலவே, ஓர் அடி மண்கூட வெளியில் தெரியாமல் எங்கும் சிமென்ட் கொட்டி மூடுவது, பூமிக்கு செய்யும் பெருங்கேடு என்பதை உளப்பூர்வமாக உணர்வதற்கான நேரம் இது. மட்காத பிளாஸ்டிக் கழிவுகளை பூமியில் கொட்டி, அதன் குரல்வளையை நெறிக்கும் வன்முறையைக் கைவிடுவதற்கும் இதுதான் பொருத்தமான நேரம்.

இத்தகைய நீராதாரப் பாதுகாப்பு மற்றும் மீட்டெடுப்பு முயற்சிகளில் கல்லூரி மாணவர்களும் இளைஞர் அமைப்புகளும் தங்களை முனைப்புடன் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சாலையிலும், ஒவ்வொரு வீதியிலும் கழிவுநீர் செல்லவும், மழைநீர் வழிந்தோடவும் வாய்க்கால்கள் இருக்கின்றன; இருக்க வேண்டும் என்பது அரசு விதி. அவை இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிப்பதும், இல்லை என்றால் அவற்றை மீட்டு எடுப்பதும், அதற்காக மக்களை ஒன்றிணைத்துப் போராடவேண்டியதும் இளைஞர்களின் கடமை.  

தேவை மக்கள் நடவடிக்கை!

எல்லாவற்றுக்கும் மேலாக, நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பது எங்கோ, யாரோ செய்வது அல்ல. நம் கண் பார்க்கத்தான் அனைத்து அநீதிகளும் நிகழ்கின்றன. நம் ஊரில் ஓடிய வாய்க்காலை இல்லாமல் செய்தது யார்... நம் ஏரியை வீட்டுமனைகளாக்கிக் கூறுபோட்டது யார்... ஏரிக்கரைச் சாலையை மட்டும் விட்டுவைத்து, ஏரியைச் சாகடித்தது யார்? நம்மைச் சுற்றியிருப்பவர்கள்தான் இதைச் செய்கிறார்கள். அந்தத் தருணங்களில் அச்சத்துடன் விலகிச் செல்வதும், அவர்களின் அடாவடி அதிகாரம் கண்டு ஒதுங்கிச் செல்வதும்தான் இவர்களின் பலம். நாம் ஒன்றிணைந்து தட்டிக்கேட்டால் முதல் முயற்சியிலேயே இவர்களை முறியடிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையான மக்கள் நடவடிக்கைதான் இப்போதைய உடனடித் தேவை.

சூழ்ந்திருக்கும் பெருவெள்ளத்தின் துன்பம் துடைக்க... இப்போதே, இந்தக் கணமே களம் இறங்குவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism