Published:Updated:

தண்ணீர் மிரண்டால்... தமிழ்நாடு தாங்காது!

பாரதி தம்பி, ஆ.விஜயானந்த்படங்கள்: சு.குமரேசன், ச.வெங்கடேசன், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன்

தண்ணீர் மிரண்டால்... தமிழ்நாடு தாங்காது!

பாரதி தம்பி, ஆ.விஜயானந்த்படங்கள்: சு.குமரேசன், ச.வெங்கடேசன், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன்

Published:Updated:

கொட்டித் தீர்க்கிறது மழை. மிதக்கிறது தமிழ்நாடு. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மழை என்கிறார்கள். 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு கரைபுரண்டு ஓடுகிறது. கடலூர் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, பரவனாறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்தும் ஒரே நாளில் 40 டி.எம்.சி நீர் கடலில் கலந்ததாகச் சொல்கிறார்கள். சென்னை நகரமோ, நீருக்குள் நீந்துகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், சாலிகிராமம், சூளைமேடு வரை வெள்ளக்காடாக்கியிருக்கிறது. தரைத்தள வீடுகளில் இடுப்பு அளவு தண்ணீர். முதன்மைச் சாலைகளும் முட்டுச்சந்துகளும் சுரங்கப்பாதைகளும் நீரால் நிரம்பி வழிகின்றன. 10 நாட்களுக்கு முன்னர் வரை தண்ணீர்ப்பஞ்சத்தால் தத்தளித்த சென்னை, இப்போது தண்ணீரால் சூழப்பட்டுத் தத்தளிக்கிறது.  

மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து, சிறு வியாபாரிகளின் வர்த்தகம் சீர்குலைந்தது. குடிசைப் பகுதிகளில் வசித்தோருக்கு மழை, நரகத்தை கண் முன்னால் காட்டியிருக்கிறது. வீடற்றோர், ஒழுகாத கூரை தேடி வீதிகளில் அலைந்தனர். கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள். கடலூரில் மட்டும் மழையின் தாக்குதலில் வீடு இடிந்து, மரம் விழுந்து, ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தார்கள். 'தானே’ புயல் சிதைத்துப்போட்ட கடலூர், மறுபடி ஒருமுறை சூறையாடப்பட்டது. கடலூரில் மட்டும் 15 ஆயிரம் மோட்டார்கள், கிணற்று நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளும் வலைகளும் நாசமாகிவிட்டன. ஆடு, மாடுகள் பலி எண்ணிக்கை ஐந்து ஆயிரத்துக்கு மேல். கையிருப்பைக் கரைத்து, கடன் வாங்கி விவசாயம்செய்த அனைத்துப் பயிர்களும் வெள்ள நீரில் மூழ்கிக்கிடக்கின்றன.

தண்ணீர் மிரண்டால்... தமிழ்நாடு தாங்காது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடலூர் பகுதியில் இவ்வளவு அதிக சேதம் ஏற்படக் காரணம், வீராணம் ஏரித் தண்ணீரை, திடீரென அதிக அளவு திறந்துவிட்டதுதான். வீராணம் ஏரியில் 45 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால்தான், சென்னைக்கு மெட்ரோ தண்ணீர் செல்லும். எனவே, 45 அடிக்கும் கீழ் உள்ள  தண்ணீரை எப்போதும் திறக்கவே மாட்டார்கள். திடீரென பெரும் மழை பெய்து ஏரிக்கு அதிகத் தண்ணீர் வந்ததும் ஒரே நேரத்தில் விநாடிக்கு 7,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட்டு விட்டார்கள். இவ்வளவு தண்ணீரை சிதம்பரம் தாலுகா எப்படித் தாங்கும்? படிப்படியாகத் திறந்துவிட்டிருந்தால் வடிகாலில் போயிருக்கும்'' என்கிறார் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன்.  

பலரும் பல காலமாகச் சொல்லிக்கொண்டி ருப்பதைப்போல வீராணம் ஏரியை ஆழப்படுத்தி யிருந்தால், மேலும் ஒரு டி.எம்.சி நீரைத் தேக்கியிருக்க முடியும். 'கொள்ளிடம் ஆற்றில் ஏழு தடுப்பணைகள் கட்ட வேண்டும்’ என்ற ஆய்வாளர்களின் முடிவைச் செயல்படுத்தியிருந்தால், ஒவ்வொரு தடுப்பணையிலும் ஒரு டி.எம்.சி நீரையாவது சேகரித்திருக்கலாம்; அதில் இருந்து மின்சாரமும் தயாரித்திருக்கலாம்.  

தண்ணீர் மிரண்டால்... தமிழ்நாடு தாங்காது!

பெய்யும் மழைநீரில் 16 சதவிகிதம் நிலத்துக்குள்  சென்றால்தான், நிலத்தடி நீர்மட்டம் சரியாகப் பராமரிக்கப்படும். ஆனால், இந்தப் பெருமழையிலும் 8 சதவிகிதம் தண்ணீர்கூட பூமிக்குள் செல்லவில்லை. காரணம், மழைநீர் பூமிக்குள் செல்வதற்கான எந்தவித ஏற்பாடுகளையும் நாம் செய்யவில்லை. மழைநீர் பூமிக்குள் செல்வது ஓர் இயற்கை நிகழ்வு. அதற்கு மனிதனின் வழிகாட்டுதலோ, திறமையோ தேவையற்றது. ஆனால், அப்படி மழைநீர் பூமிக்குள் புகும் அத்தனை வழிகளையும் நாம் வன்முறையாக ஆக்கிரமித்திருக்கிறோம். நிலப்பரப்பே கண்ணுக்குத் தெரியாமல் எங்கும் சிமென்டைக் கொட்டி அடைத்து வைத்திருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் பூமியின் மீது ஒரு நச்சுப்படலம்போல படர்ந்திருக்கிறது. மழைநீர் சேகரமாகி வழிந்தோடவேண்டிய வாய்க்கால்களோ நமது அரசியல்-அதிகார வர்க்கத்தின் லாப வெறிக்குப் பலிகொடுக்கப்பட்டுவிட்டன. பிரமாண்ட ஏரிகளும் குளங்களும் 'வளர்ச்சித் திட்டங்களின்’ பெயர்களால் காவுகொடுக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையை அதன் இயல்பில் இயங்கவிடாமல் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய பாவிகள் நாம். அதன் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தண்ணீர் மிரண்டால்... தமிழ்நாடு தாங்காது!

ஆனால், இந்த மாபெரும் அழிவை நிகழ்த்தியது பெரும்பான்மை மக்கள் அல்ல; சில ஆயிரம் நிறுவனங்களும் முதலாளிகளும்தான் இந்தப் பெருங்கேட்டின் காரணகர்த்தாக்கள். பொதுப்பணித் துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 38,202 ஏரிகள் இருக்க வேண்டும். ஆனால்,

தண்ணீர் மிரண்டால்... தமிழ்நாடு தாங்காது!

பாதிக்கும் மேற்பட்ட ஏரிகள் அழிக்கப்பட்டு, இப்போது சுமார் 18 ஆயிரம் ஏரிகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. தமிழ்நாட்டின் 73 சதவிகித நிலம் பாறைப் பரப்பைக்கொண்டது. எனவே, மழைநீரைத் தேக்கிவைத்துப் பயன்படுத்தவேண்டிய தேவை புவியியல்ரீதியாகவே நமக்கு இருக்கிறது. இதனால்தான் பழங்காலத்தில் ஏராளமான ஏரிகளை ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டு ஏரிகளின் சிறப்பு, அதன் சங்கிலித்தொடர் தன்மைதான். ஓர் ஏரி நிரம்பினால் அதில் இருந்து நீர் வழிந்து இன்னொன்றில் நிரம்பும். அதுவும் நிரம்பினால் அடுத்த ஏரி. இந்தச் சங்கிலி அறுக்கப்பட்டதும், ஏரிகள் அழிக்கப்பட்டதும்தான் பிரச்னையே. இதனால்தான் ஏரியில் நிரம்பவேண்டிய நீர், வீதியில் நிரம்புகிறது. ஏரிகளுக்கு நீரைக் கொண்டுசேர்க்கும், மிகை நீரை வெளியேற்றும் வாய்க்கால்கள் என்னும் உயிர் நரம்பை அறுத்து எறிந்ததால், வீதி வீதியாகப் பாய்கிறது நீர்.

உலகமே பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொண்டுவருகிறது. ஆண்டுதோறும் சீராகப் பெய்துவந்த மழை அளவு மாறிப்போய், வருடத்தின் சில நாட்கள் மட்டும் சேர்த்துவைத்துக் கொட்டித்தீர்க்கிறது மழை. ஓர் ஆண்டுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பெய்த மழை இத்தகையதுதான். இப்போது பெய்வதும் இத்தகைய மழைதான். இதை எதிர்கொள்ள நீர் மேலாண்மையில் நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும்!

தண்ணீர் மிரண்டால்... தமிழ்நாடு தாங்காது!

'வளர்ந்த நாடுகளில், சாலையின் உயரம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. நம் ஊரில் ஆண்டுதோறும் முக்கால் அடிக்கு சாலை உயர்ந்துகொண்டேபோகிறது. ஏற்கெனவே போட்ட சாலையின் மீதே மீண்டும் சாலை போடுகிறார்கள். வீடு கட்டும்போது மூன்று அடி உயரத்துக்கு ஏற்றிக் கட்டுவார்கள். அடுத்த சில வருடங்களில் சாலை உயர்ந்து வீட்டுக்குச் சமமாக வந்துவிடும். வீடுகளுக்குள் தண்ணீர் புக இதுதான் முக்கியக் காரணம்'' என்கிறார் சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடாச்சலம். 

தண்ணீர் மிரண்டால்... தமிழ்நாடு தாங்காது!

வெள்ளத்தின் காரணமாக மக்கள் சந்திக்கும் உடனடிப் பிரச்னை... குடிநீர்த் தட்டுப்பாடு. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவது மழைநீர் மட்டும் அல்ல. அதில் சாக்கடைக் கழிவுகளும் சாலையோரங்களில் தேங்கி நிற்கும் கழிவுகளும் கலந்துள்ளன. அது நேரடியாக மெட்ரோ வாட்டர் இணைப்புகளில் கலக்கிறது. குழாய் வழியாக வீட்டுக்கு வரும் மெட்ரோ தண்ணீரிலும், அடிபம்புகளில் அடித்து எடுக்கவேண்டிய மெட்ரோ தண்ணீரிலும் கழிவுநீர் கலந்துவிட்டது. இதனால் குடிநீருக்கு மெட்ரோ தண்ணீரை நம்பியிருக்கும் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் கேன்தான் இப்போது அனைவருக்கும் எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு. ஆனால், தண்ணீர் கேன் போதுமான அளவுக்கு சப்ளை இல்லை. இதனால் சென்னையில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வேறு வழியின்றி மக்கள் மெட்ரோ தண்ணீரை அருந்தினால், அது நிச்சயம் பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எந்தத் தண்ணீராக இருந்தாலும் குறைந்தபட்சம் அதைக் காய்ச்சிக் குடிப்பதே இப்போதைக்குப் பாதுகாப்பு. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism