Published:Updated:

இந்திய வானம் - 14

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

இந்திய வானம் - 14

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

Published:Updated:

பொய்யின் அலங்காரம் 

ஆக்ராவில் உள்ள பேரரசர் அக்பரின் சமாதிக்குச் சென்றிருந்தேன். 'அக்பர் தனக்குத் தானே இந்த இடத்தைத் தேர்வுசெய்து, தனக்கான சமாதியைக் கட்டத் தொடங்கினார்’ என்கிறார்கள். அவரது மறைவுக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து, ஷஹாங்கீரால் 1613ம் ஆண்டு அந்தச் சமாதி கட்டி முடிக்கப்பட்டது. கம்பீரமான நுழைவாயில். எங்கும் சித்திர வேலைப்பாடுகள்கொண்ட அழகான பளிங்குக்கற்கள். உள்ளே அக்பரின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது.

அங்கே நின்றபோது எனக்குத் தோன்றியது... அக்பர் தன் வாழ்நாளில் எவ்வளவு புகழுரைகளை, பாராட்டுகளைக் கேட்டிருப்பார். அவை வெறும் அலங்கரிக்கப்பட்ட பொய்கள் என அறிந்திருப்பாரா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று அந்த நினைவிடத்தில், அக்பர் என்பது ஒரு பெயர் மட்டுமே. யாரும் அவரது புகழைப் பாடவில்லை. அவரது உருவம் எப்படி இருக்கும் என்றுகூட யாருக்கும் தெரியாது. மாமன்னரே ஆனாலும் உண்மை இதுதான் என, காலம் உணரச் செய்திருக்கிறது. அந்தக் கட்டடத்தின் உள்ளே வரலாறு குரல்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது எத்தனை பேரின் செவிகளுக்குக் கேட்டிருக்கும் எனத் தெரியவில்லை. நான் அந்தக் குரலைக் கேட்டேன்.

'அதிகாரம் கைமாறும்; ஆட்சி மாறும்; பணமும் செல்வமும் வந்து  போகும். ஆனால், நிலையான அறம், நீதி, உண்மை ஆகியவை மட்டுமே நிலைத்து நிற்கும்’ என வரலாற்றின் குரல் சொன்னது.

சுற்றுலாப் பயணிகள், புல்வெளியில் ஓடும் மான்களையும் அலங்கார வேலைப்பாடுகளையும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டினார்கள். வரலாறு என்பது அவர்களுக்கு வெறும் சொல் மட்டுமே. ஆனால், காலம் அந்தக் குரலின் வழியே நம்மை எச்சரிக்கிறது என்பதே நிஜம்.

இந்திய வானம் - 14

நம் காலம் அலங்கரிக்கப்பட்ட பொய்களால் ஆனது. இங்கே உண்மை என்பது, பல்லியின் துண்டிக்கப்பட்ட வால்போல தனியே துடித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய கவலை இல்லாமல், சமூகம் தன்போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.  

விதவிதமான வடிவங்களில், விதங்களில் பொய்யை நாம் அலங்கரித்து உலவவிட்டுக் கொண்டிருக்கிறோம். மிகச் சிறந்த அலங்காரத்துக்கு மிகப் பெரும் வெகுமதி கிடைக்கிறது. பொய்களை அலங்கரிப்பதைத் தொழிலாக மாற்றிவிட்டார்கள். அழகான சொற்களைக்கொண்டும், கவர்ச்சியான பிம்பங்களைக்கொண்டும், தேன் தடவிய இனிமையான குரலால் பொய்கள் சொல்லப் படுகின்றன. அவற்றைக் கேள்வியே இல்லாமல் நாம் ஏற்றுக்கொள்கிறோம்; பரப்பத் தொடங்குகிறோம்.

நம் காலத்தின் மகத்தான வணிகப் பொருள், பொய். அதைக்கொண்டு எதையும் செய்ய முடியும் என இன்றைய உலகம் நிரூபித்திருக்கிறது. 'சத்யமேவ ஷெயதே’ அதாவது 'வாய்மையே வெல்லும்’ என இந்தியாவின் தேசியச் சின்னத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. இது முண்டக உபநிடதத்தின் புகழ்பெற்ற வாக்கியமும்கூட. சாரநாத்தில் உள்ள அசோகத் தூணை அடிப்படையாகக்கொண்டு இந்திய தேசியச் சின்னம் வடிவமைக்கப்பட்டது. புத்தனின் முதல் சொற்பொழிவின் நினைவாக பேரரசர் அசோகர் இந்தத் தூணை உருவாக்கினார். நமது தேசியச் சின்னத்தை வடிவமைத்தவர் மாதவ் சாஹ்னி. அதில் நான்கு சிங்கங்களில், மூன்று மட்டுமே தெரியுமாறு இதை வடிவமைத்துள்ளார். நான்காவது சிங்கம் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்தச் சிங்கம்தான் வாய்மையின் அடையாளமா?

ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் நடைபெறும் அரசியல், சமூக விவாத நிகழ்ச்சிகளைக் காணும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. காரணம், சிலர் வேண்டும் என்றே உண்மையைத் திரித்து அப்பட்டமாகப் பொய் பேசுவதும், பொய்யான வரலாற்றுத் தகவல்களைக் கூச்சமே இல்லாமல் சொல்வதும், அர்த்தம் இல்லாமல் எதை எதையோ ஒப்பிட்டுப் பேசி, எதிர்க்கருத்து உடையவரை இழிவுபடுத்துவதையும் பார்க்கும்போது, இதுதான் அறிவார்ந்த விவாதமா எனக் குழப்பமாக இருக்கிறது.

ஊடகங்களில் உண்மையை எடுத்துச்சொல்ல முற்படும் ஒருசில விவாத அறிஞர்கள் எந்தப் பகட்டும் இல்லாமல் எளிமையாக, நேரடியாக, ஒன்றை விளக்கும்போது அது நேயர்களுக்குப் பலவீனமானதுபோல தோற்றம் தருகிறது. அலங்காரம் இல்லாத எதை நாம் அங்கீகரித் திருக்கிறோம்... உண்மையை ஏற்றுக்கொள்ள?

பபாக் அன்வாரி இயக்கிய 'இரண்டும் இரண்டும் ஐந்து’ என்ற ஈரானியக் குறும்படத்தை இணையத்தில் பார்த்தேன். ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தப் படம் என்னை உலுக்கிவிட்டது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கறாரான பள்ளி ஒன்றின் வகுப்பறைக்கு, கணித ஆசிரியர் வருகிறார். கரும்பலகையில் 'இரண்டும் இரண்டும் ஐந்து’ என எழுதிப்போட்டு 'இரண்டையும் இரண்டையும் கூட்டினால், ஐந்து வரும்’ என்கிறார். இதைக் கேட்டு மாணவர்கள் குழம்புகிறார்கள். ஒருவன் எழுந்து, 'இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்குதானே வரும்... எப்படி ஐந்து?’ எனக் கேட்கிறான்.

'அது அப்படித்தான். இரண்டையும் இரண்டையும் கூட்டினால் ஐந்துதான்’ என ஆசிரியர் உறுதியான குரலில் சொல்கிறார்.

'ஆசிரியர் தவறாகச் சொல்வதை எப்படி ஏற்பது?’ எனப் புரியாமல் மாணவர்கள் தடுமாறுகிறார்கள். ஆசிரியர், கடுமையான முகத்துடன் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களைப் பார்த்து, 'அது சரிதானா?’ எனக் கேட்கிறார். பலரும் குழப்பத்துடன் 'ஆமாம்’ எனத் தலையசைக்கிறார்கள்.

இந்திய வானம் - 14

ஒரு மாணவன் மட்டும் விடாப்பிடியாக அது தவறு. 'விடை நான்குதான்’ என்கிறான். ஆசிரியர் ஆத்திரம் அடைகிறார். வகுப்பறையைவிட்டு வேகமாக வெளியேறுகிறார். மற்ற மாணவர்கள், ஆசிரியர் தங்களைக் கடுமையாகத் தண்டிக்கப் போகிறார் என நினைத்துப் பயப்படுகிறார்கள். ஆனால், ஆசிரியர் அந்தப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் அறிவாளி மாணவர்கள் மூவரை அழைத்துவந்து, 'இரண்டையும் இரண்டையும் கூட்டினால் எத்தனை?’ எனக் கேட்கிறார். அவர்கள் 'ஐந்து’ என்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் 'நான்கு’ எனச் சொன்ன மாணவனை எழுந்து வரச்சொல்லி, கரும்பலகையில் அந்தக் கணக்கைப் போடும்படி சொல்கிறார். அவன் இப்போதும் 'இரண்டும் இரண்டும் நான்கு’ என்றே எழுதுகிறான். அறிவாளி மாணவர்களின் கைகள், அந்தப் பையனை நோக்கி துப்பாக்கிபோல உருமாறுகின்றன. அவன் சுடப்படுகிறான். கரும்பலகையில் ரத்தம் தெறிக்கிறது. முடிவில் 'இரண்டும் இரண்டும் சேர்ந்தால் ஐந்து’ என எழுதிக்கொள்ளும்படி ஆசிரியர் கட்டளையிடுகிறார். மாணவர்கள் அப்படியே எழுதுகிறார்கள். ஆனால், ஒரு மாணவன் மட்டும் 'நான்கு’ என எழுதுவதோடு படம் நிறைவுபெறுகிறது.

இந்தப் படம், கல்விமுறையை மட்டும் விமர்சிக்கவில்லை. மாறாக ஓர் உண்மையை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், ஒரு விஷயம் பொய் எனத் தெரிந்தும் ஏன் ஏற்றுக்கொள்கிறோம், அறிவாளிகள் எதற்காக ஒரு பொய்யை, உண்மை என நம்பவைக்கிறார்கள், உண்மையை வெளிப்படுத்தும் ஒருவன் ஏன் கொல்லப்படுகிறான், 'இரண்டும் இரண்டும் ஐந்து’ என ஏன் அதிகாரம் நம்பவைக்க முயற்சிக்கிறது? - இப்படி பல கேள்விகள் கிளைவிட்டுக்கொண்டேபோகின்றன.

நாம் வீழ்ச்சியின் காலத்தில் வாழ்ந்துகொண்டி ருக்கிறோம். தனிமனித அறமும் சமூக அறமும் வீழ்ச்சியடைந்து, பொய்யும் புரட்டும் சூதும் வாதும் தங்களை அலங்கரித்து, கம்பீரமாக உலாவரத் தொடங்கிவிட்டன. காலம்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த எளிய அறங்கள்கூட இன்று கேலிசெய்யப்படுகின்றன; மறுக்கப்படுகின்றன. இறந்துபோனவர்கள்கூட அவமானத்தில் இருந்து தப்ப முடிவது இல்லை.

'இரண்டும் இரண்டும் சேர்ந்தால் ஐந்து’ என்கிற கருத்துருவாக்கம், ஊடகங்கள் மீதான விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது.

எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய '1984’ என்ற நாவலில் அரசு அதிகாரத்தைக் குறிக்கும்விதமாக இதைக் கேலியாக எழுதியிருக்கிறார்.

1813-ம் ஆண்டில் கவிஞர் பைரன் தனது காதலி ஆனபெலாவுக்கு எழுதிய கடிதத்தில், 'இரண்டும் இரண்டும் நான்கு’ என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால், ஏதோ ஒருவிதத்தில் அது ஐந்தாக உருமாறினால், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்’ எனக் குறிப்பிடுகிறார். அவரே 'இரண்டும் இரண்டும் சேர்ந்தால் ஐந்து’ என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் என்கிறார்கள்!

முந்தைய காலங்களில் ஒரு பொய் பரவும் சுற்றளவு மிகக் குறுகியது. ஆனால்,  தொழில்நுட்பமும் ஊடகங்களும் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய உலகில், ஒரு பொய்யை உலகம் முழுவதும் பரப்ப இரண்டு நிமிடங்கள் போதுமானது. கண்ணுக்குத் தெரியாத வலிமையான ஆயுதமாக

உருவெடுத்திருக்கிறது பொய்!

என்.ஜி.ஓ ஒன்றில் தன்னார்வப் பணியாளராகச் செயல்படும் ஓர் இளம் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார்... 'பொய், எவ்வளவு அபாயகரமானது என்பதை என்னைப் போன்ற மருத்துவர்கள் நன்றாக உணர்வோம். ஆனால், இன்றைய சூழலில் மருத்துவர்கள் நோயாளிகளிடம் பொய் சொல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள். அது மிக மோசமானது. என் பணிக்காலத்தில் அன்றாடம் இந்த நெருக்கடியை எதிர்கொண்டேன். 'பணத்துக்காக இத்தனை பொய்களா?’ என அருவருப்பாக இருந்தது.

ஒருமுறை எங்கள் மருத்துவமனைக்கு, ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தார். குழந்தைக்கு சிறுநீரகத்தில் பிரச்னை. அதற்கு மருந்து கொடுத்து 'பத்து நாட்கள் பரிசோதனை செய்த பிறகு, தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை செய்யலாம்’ என நான் பரிந்துரை எழுதியிருந்தேன்.

எனது சீஃப் டாக்டர் அதை மறுத்து, 'உடனே பெட்டில் சேர்க்கச்சொல்லி நாளையே ஆபரேஷன்

இந்திய வானம் - 14

செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் வேறு மருத்துவமனைக்குப் போய்விடுவார்கள்’ என்றதோடு என்னை அனுப்பி அந்தக் குழந்தையின் தாயிடம், 40 ஆயிரம் ரூபாய் அறுவைசிகிச்சைக்குப் பணம் கட்டும்படி சொல்லச் சொன்னார். கட்டாயத்தின் பேரில் அதைச் சொல்வதற்காகச் சென்றேன். வொயர் கூடை ஒன்றுடன் நின்றிருந்த அவரது ஏழ்மைநிலையைப் பார்த்தபோது, அறுவைசிகிச்சை பற்றி சொல்ல எனக்கு நாக்கு எழவில்லை. ஆனால், தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். சீஃப் டாக்டரின் வார்த்தையை மறுக்க முடியாது என்பதால் தயக்கத்துடன் சொன்னேன். அந்தப் பெண் கண்கலங்கியபடியே 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ எனக் கைகூப்பினார். நான் பதில் சொல்லாமல் வெளியேறி வந்துவிட்டேன். அந்தப் பெண்ணை சீஃப் டாக்டர் வரவழைத்துப் பேசி, அடுத்த நாளே பணம் கட்டவைத்தார். அவர் எப்படியோ கடன் வாங்கிக்கொண்டுவந்து பணம் கட்டினார். அந்த அறுவைசிகிச்சையின்போது முதன்முறையாக எனக்குக் கைகள் நடுங்கின. அன்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. என்னோடு வேலைசெய்யும் இன்னொரு மருத்துவரோடு இதைப் பற்றி  மனம்விட்டுப் பேசினேன். அவர் சொன்னார்...

'யாருக்குத்தான் கஷ்டம் இல்ல. நாம நோயை மட்டும்தான் கவனிக்கணும். நோயாளிகள் மிடில் கிளாஸா... லோயர் கிளாஸா... அவங்க எப்படிக் கடன் வாங்குறாங்க, கஷ்டப்படுறாங்கனு யோசிக்கக் கூடாது’ என்றார்.

'பணத்துக்காக பச்சைப்பொய் சொல்கிறோமே... இது தவறு இல்லையா?’ எனக் கேட்டேன்.

'சும்மா ஒண்ணும் வாங்கலையே. ஆபரேஷன் பண்ணியிருக்கோம்ல... மனசாட்சிங்கிறது  யாரோ ஒரு முட்டாளின் கண்டுபிடிப்பு. பழைய செருப்பைத் தூக்கி வீசுற மாதிரி, அதை எப்பவோ தூக்கி வீசிட்டேன். நீ இன்னும் அதை வெச்சுக்கிட்டுப் புலம்பிக்கிட்டு இருக்கே.’

'பொய் சொல்றது தப்பு. அப்படித்தான் எங்க வீட்டுல சொல்லிக்குடுத்திருக்காங்க... ஆசிரியர்கூட ஸ்கூல்ல சொல்லித்தந்திருக்கார்’ என உறுதியாகச் சொன்னேன்.

'பிரச்னையே அங்கதான் ஆரம்பிக்குது. வீடு, ஸ்கூல் எங்கேயாவது பொய் இல்லாமல் இருக்கா? பொய் சொல்லாமல் இருக்கிறதுங்கிறது ஒரு ஐடியல். அப்படி யாராலும் இருக்க முடியாது. குறைவா பொய் சொல்றவன், நிறையப் பொய் சொல்றவன்னு ரெண்டு விதங்கள்தான் இருக்கு. பொய்யைப் பயன்படுத்தத் தெரிஞ்சவன் புத்திசாலி; பிழைக்கிறதுக்கு அதுதான் ஒரே வழி’ என்றார் அந்த நண்பர்.

என்னால் அவர் சொல்வதுபோல  வாழ முடியாது என அந்த மருத்துவமனையில் இருந்து ரிசைன் பண்ணிவிட்டு, இப்படி ஒரு என்.ஜி.ஓ-வுல வேலைபார்க்கிறேன். குறைவான வருமானம்தான்; ஆனா, நிறைய மனநிம்மதி. பொய் சொல்லி நிறையப் பணம் சேர்த்து வாழுறது எனக்குப் பிடிக்கலை. அப்படி வசதியா நான் வாழ வேண்டியதும் இல்லை...’

அந்த இளம் மருத்துவர் இதை என்னிடம் சொன்னபோது எனக்கு நெகிழ்ந்துபோனது. இப்படி சிலர் மனதில் இன்னமும் உண்மை ஆழமாக வேரூன்றி இருப்பது சந்தோஷமாக இருந்தது.

அவரிடம் நான் சொன்னேன்...

'உங்களைத்தான் இந்த உலகம் அதிகம் கேலி செய்யும்; அவமானப்படுத்தும்; முடிந்தால், ஒடுக்கி ஓரம்கட்டப்பார்க்கும். அதைக் கண்டுகொள்ளா தீர்கள். உண்மையின் பக்கம் நிற்பது என்பது ஒரு சவால். ஒவ்வொரு முறையும் அதை எதிர்கொண்டு தான் ஜெயிக்க வேண்டும்.’

அதைக் கேட்டு அவர் சொன்னார்...

'யாரோ என்னை ஏமாற்றும்போது எனக்கு ஏற்படும் கோபமும் ஆத்திரமும்தானே மற்றவர்களுக்கும் ஏற்படும். எனக்கு நானே உண்மையாக இல்லாமல் எப்படி வாழ்வது?’

இந்த எண்ணம் ஒருவருக்கு உருவாகிவிட்டால் போதும். அவரால் பொய் சொல்லி, ஏமாற்றிப் பிழைக்க முடியாது எனத் தோன்றியது.

நோபல் பரிசுபெற்ற கவிஞர் பாப்லோ நெரூடா, தனது உரை ஒன்றில் உண்மைக்கும் அரசியலுக்கும் கலைக்குமான தொடர்பு குறித்துப் பேசுகிறார்...

'இன்று எது உண்மை, எது பொய் எனப் பிரித்து அடையாளம் கண்டுபிடிக்க முடிவது இல்லை. பல நேரம் ஒன்றே உண்மையாகவும் பொய்யாகவும் இருக்கிறது. ஒரு குடிமகனாக எனது தேசத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டு எது உண்மை, எது பொய் என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். பெரும்பான்மை அரசியல்வாதிகள் உண்மையை விரும்புவது இல்லை. அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற அல்லது காப்பாற்றிக்கொள்ள பொய்யைப் பயன்படுத்துகிறார்கள்; மக்கள் எப்போதுமே அறியாமையில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அறியாமை நிலைக்கும் வரைதான் அதிகாரம் நிலைக்கும். தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றிக்கூட அறிந்துகொள்ளாத அறியாமையில்தான் பொதுமக்கள் மூழ்கிக்கிடக்கிறார்கள். எது உண்மை எனப் பகிரங்கமாகத் தெரிந்தபோதும் அதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. நமக்கு என ஒரு தார்மீகப் பொறுப்புஉணர்ச்சி இருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் இல்லையா... அது இன்று என்ன ஆனது. உண்மையில் தார்மீகப் பொறுப்புஉணர்ச்சி என்பதுதான் என்ன, அப்படி ஒன்று இன்றும் நம்மிடம் இருக்கிறதா, மனசாட்சி என்ற ஒன்றே இன்று இல்லையா... இல்லை அதுதான் இறந்துபோய்விட்டதா?

கலை எப்போதும் உண்மையின் பக்கமே நிற்கிறது. அது உண்மையின் குரலை ஒலிக்கிறது. அதனால்தான் கலைஞர்களின் குரலை அதிகாரத்துக்குப் பிடிப்பதில்லை. அது எதிர்ப்புக் குரலாக ஒலிக்கிறது’ என்கிறார் நெரூடா.

உலகம் எங்கும் உண்மையை உரத்துச் சொன்னதற்காக பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்ட்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூகப் போராளிகள்... எனப் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், எந்த அதிகாரத்தாலும் உண்மையின் குரல்வளையை ஒடுக்கவே முடியாது. உண்மை வென்றே தீரும். இதுதான் அன்றும் இன்றும் வரலாறு காட்டும் உண்மை. இந்த வரலாற்று உண்மையைத் தொட்டுச் சொல்கிறது என்பதே 'இரண்டும் இரண்டும் ஐந்து’ குறும்படத்தின் சிறப்பு. அந்த வகையில் இதுவும் ஒரு சிறந்த அரசியல் படமே!

- சிறகடிக்கலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism