Published:Updated:

உயிர் பிழை - 14

மருத்துவர் கு.சிவராமன்

'குண்டாக இருந்தால் நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்’ என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை  'உயிர் பிழை’ உருவாகும் என்பதும். 'புற்று நோயாளிகளில் 20 பேரில் ஒருவர் குண்டாக இருக்கிறார்’ என்ற புள்ளிவிவரச் செய்தியை இங்கிலாந்து மிகக் கவனத்தோடும் கரிசனத்தோடும் பார்க்கிறது. குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை கூடுதலாகிவரும் இந்தியாவிலும், இது மிகவும் அக்கறையோடு பார்க்கப்படவேண்டிய விஷயம். 'இரண்டு வயதுக்குள் குண்டாக இருக்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் எப்போதுமே குண்டாக இருப்பதற்கும், அதனால், உடலில் எந்தப் பாகத்திலாவது புற்று வருவதற்கும் வாய்ப்புகள் மிக அதிகம்’ என்கின்றன ஆய்வுகள். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்குத்தான் மார்பகம், மலக்குடல், கர்ப்பப்பை போன்ற பாகங்களில் புற்றுகள் அதிகம் பற்றிக்கொள்கின்றன. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், 'அறுவை கீமோ கதிர்வீச்சால்’ குணப்படுத்திவிட முடியும். ஆனால், கணையம், பித்தப்பை, உணவுக்குழல்... போன்ற உடலின் உள்பாகங்களில் உண்டாகும் குணப்படுத்தக் கடினமான புற்றுகள், மற்றவர்களைவிட குண்டான உடல்வாகு கொண்டவர்களையே அதிகம் தீண்டுகின்றன. 

தொப்பை வளர வளர, உடலில் சேரும் கொழுப்பு (Body fat),  டெஸ்டோஸ்டீரான், ஈஸ்ட்ரோஜன் ஆகிய செக்ஸ் ஹார்மோன்களை அதிகம் சுரக்கவைக்கிறது. இந்த இரண்டும் தேவைக்கு அதிகமாக ரத்தத்தில் கலந்து சுற்றிவருவதே பல திடீர் புற்றுகளுக்கு முக்கியக் காரணம். முன்னோர்கள் தங்களின் ஆரோக்கிய வாழ்வின் மூலம் சேட்டை செய்யும் மரபணுவை அடக்கி, ஒடுக்கிவைத்திருந்தனர். ஆனால், தற்போதைய துரிதயுகத்தில், குப்பை உணவுகளையும் கெமிக்கல் பானங்களையும் சாப்பிடத் தொடங்கியதில், சேட்டை செய்யும் மரபணுக்கள் உசுப்பப்பட்டு, 'நல்லா போஷாக்கா இருந்த புள்ளைக்கு எப்படி இப்படி ஆச்சு?’ என்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

உயிர் பிழை - 14

குண்டு உடம்பில் உள்ள கொழுப்பு (Body fat),  ஹார்மோன்களை மட்டும் அல்ல, ரத்தத்தில்  செயல்திறன் அற்ற இன்சுலினையும் கூடுதலாகக் கசியவிடுகிறது. இந்த 'மக்கு’ இன்சுலின் செய்யும் மொக்கைத்தனத்தால், ரத்தத்தில் உறிஞ்சப்படும் குளுக்கோஸ் தேவையான அளவு செல்களுக்குப் போய் செயல்படாதது ஒருபக்கம் எனில், சர்க்கரை நோய் வருவதும் இன்னொரு பக்கம். தவிரவும், மரபணுவில் மண்டிக்கிடக்கும் 'பிழை’யைப் பிழைக்கவைத்து, புற்றுக்கூறுகளைத் தூண்டிவிடுகிறது என்கின்றன நவீன ஆய்வுகள். மொத்தத்தில் சர்க்கரை நோயை மட்டும் அல்ல... உயிர் பிழையை உருவாக்குவதிலும் தொப்பையின் பங்கு அதிகம் என்பதே சமீபத்திய மருத்துவ உண்மை.

'ஆகா... மெள்ள நட மெள்ள நட மேனி என்னாகும்?...’ என எந்த ஒரு காதலனும், 'கன்னம் ரெண்டும் கிள்ளச் சொல்லும் காதல் பேரிக்கா... குழிவிழும் கன்னத்தில் குடித்தனம் வைக்கட்டா?’ என எந்த ஒரு காதலியும் இனி பாடாது இருப்பது நல்லது. ஆமாம்... மெள்ள நடக்க நடக்க இனி பெண்ணின் மேனி அழகாக இருக்காது. நாளடைவில் நொந்துநோகும்; குழிவிழும் புஸுபுஸு கன்னம் குடித்தனம் வைக்காது. பெண்களுக்கு வேக நடையும் உடற்பயிற்சியும் மட்டும்தான் அவர்களின் ரத்தத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜனைக் கட்டுப்பாட்டில் வைத்து, மார்பகத்தைப் புற்றில் இருந்து காப்பாற்றும். கூடவே, குடலில் வெகு நேரம் உணவைத் தங்கவிடாமல், வேகமாக ஜீரணிக்கவும் வேக நடை உதவும். வள்ளுவன் சொல்வதுபோல, 'அருந்தியது அற்றது’ ஆகி, குடலில் இருந்து உணவு ஜீரணமாகி நகர்ந்து, தேவையற்றதை மட்டும் வேகமாக மலக்குடலுக்குள் தள்ளிவிடவும் இந்த வேக நடை உதவும்.  

உணவின் சில நுண்ணிய நச்சுக்கள் தொடர்ந்து குடலின் உட்சுவரில் தங்கி நிற்கும்போது, அவை அங்கு உரசி உரசி உண்டாக்கும் தொடர்ச்சியான அழற்சி (Inflammation)  புற்றுக்கான சிவப்புக் கம்பளமே. இது வேக நடையின் மூலம் தவிர்க்கப்படுவதால், இரைப்பை, மலக்குடல் புற்றுநோய்கள் நிகழாமல் இருக்கும். குறிப்பாக 'மூளை, பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்’ இந்த மூன்றை மட்டுமே வைத்து 'கடினமாக’ உழைக்கும் கன்னியரும் கணினியரும் காலை - மாலை அல்லது அர்த்த ராத்திரியிலாவது வேக நடை நடந்தால் புற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

உடல் எடை குறைத்தல் என்பது கிட்டத்தட்ட தவம். ஆசைப்பட்டால் போதாது; வெறி வேண்டும். தமிழ் சினிமாவில் சக்கரம் சுழன்றதும் குழந்தைப்பருவ ஹீரோவின் கால்கள் நீண்டு, பூட்ஸ் காலுடன் புறப்படுவதுபோல அடுத்த சீனில் மெலிவது சாத்தியம் இல்லை. நிறைய மெனக்கெட வேண்டும்; சங்கடப்பட வேண்டும். 'தொப்பையில் இதைத் தடவினால் மெலியலாம்’, 'இந்தப் பட்டையைக் கட்டினால் அதில் வரும் வியர்வையில் மெலியலாம்’, 'இது அமேசான்  காட்டில் விளைந்த மூலிகையில் தயாரான மாத்திரை’, 'இது உடல் எடை குறைக்கும் அமெரிக்க ஆய்வகப் பானம்’ என விற்கப்படும் பல மெலியவைக்கும் மருந்துகள், நமது பர்ஸைத்தான் மெலியவைக்கும்; சில நேரங்களில் உடல் உள்ளுறுப்புகளை மெலியவைத்துப் பதற வைக்கும்.

இணையம் வழியாக நம் ஊரில் ‘GM Diet’, ‘Paleo Diet’  என்ற மெலியவைக்கும் சில அதிரடி உணவுப் பழக்கங்கள் பிரபலமாகிவருகின்றன. இந்த இரண்டு டயட்கள் மூலமும் தடாலடியாக மெலிந்து நம்மைப் பொறாமைப்பட வைப்பவர்கள் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி என்ன அவை? ‘GM Diet’, என்பது அதிகமான மரக்கறி வழி; ‘Paleo Diet’ அதிகமான புலால் வழி.

‘GM Diet’ கடைப்பிடித்த எட்டாவது நாளில் நம் எடையில் எட்டு கிலோ குறைந்திருக்கும்’ என சூடம் அணைத்துச் சத்தியம் செய்பவர்கள் உண்டு. ‘GM Diet’ என்றதும் ‘Genetically Modified Diet’ எனப் பதற வேண்டாம். இது, ‘General Motors’ கம்பெனிக்காரர்கள் அவர்களின் ஊழியர்களுக்காகச் செதுக்கிய உணவுத்திட்டம்’ என்கிறது இணையம். ‘GM Diet’  முதல் நாள் வாழைப்பழம் தவிர பிற பழங்கள் மட்டும் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இரண்டாம் நாள் உருளைக்கிழங்கு தவிர பிற காய்கறிகள் மட்டும். மூன்றாம் நாள் பழங்களும் காய்கறிகளும். நான்காம் நாள் பாலும் பழமும். ஐந்தாம் நாள் தக்காளி, புலால் மட்டுமே. ஆறாம் நாள் புலாலும் காய்கறியும். ஏழாம் நாள் பழுப்பு அரிசி / சிறுதானியம் மற்றும் காய்கறிகள்... எனப் பட்டியல் தரும் இவர்கள், பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் அளவு விதிக்கவில்லை.  நீர்க்காய்கறிகளான தர்பூசணி, கிர்ணி வகைகளையே அதிகமாக உட்கொள்ளச் சொல்கிறார்கள். கூடவே 'புலாலா... நான் சைவமாச்சே?’ எனப் பதறுவோருக்கு மரக்கறியாக கைக்குத்தல் பழுப்பு அரிசியைச் சாப்பிடச் சொல்கிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க சில பொதுவழிகள்

உயிர் பிழை - 14
உயிர் பிழை - 14

அதேபோல் ஆதி மனிதன் உணவு என ‘Paleo Diet’ முன்னிறுத்தப்படுகிறது. 'வேளாண் சமூகமாக மாறுவதற்கு முன்னர், வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் நாம் இப்போதுபோல தானியங்களைச் சாப்பிடவில்லை. புலாலை அதிகமாகவும் எப்போதாவது கொஞ்சமாக தானியங்களையும் காய்கறிகளையும் சாப்பிட்டோம். அதனால்‘Paleo Diet’ மூலம் கொஞ்ச காலத்துக்கு அதிகமாக இறைச்சி, முழு முட்டை, கொழுப்பு நீக்காத பால், பாதாம், முந்திரி போன்ற விதைகள்... ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டும் மெலிந்து ஆரோக்கியமாக இருக்கலாம். இதுதான் ஆதிமனிதனின் முதல் உணவும் மற்றும் ஆரோக்கிய உணவும்’ என்றுகூட விளக்குகிறார்கள்.

'குறைந்தபட்சம் 65 - 70 தலைமுறைகளாக வேளாண் உணவுப்பிடிக்கு மாறிவிட்ட நாம், மீண்டும் ஆதித் தாத்தாவின் சாப்பாட்டுக்கு அடுத்த மெனுவிலேயே மாறிச்செல்வது எல்லோருக்கும் சரியாக இருக்குமா?’ என்ற கேள்வி வந்தாலும், கொழுப்பு அரசியல் (Cholesterol Politics)  குறித்த அவர்களின் புரிதல் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

'கொலஸ்ட்ரால் பூச்சாண்டியைப் பார்த்துப் பயப்படாதீர்கள். கெட்ட கொழுப்பு என நம்மைப் பயமுறுத்துவதற்காகக் காட்டப்படும் லோ டென்சிட்டி கொலஸ்ட்ரால்தான் ஒவ்வொரு நாளும் ரத்தக் குழாய்க்குள் உண்டாகும் காயத்தை ஆற்றுகிறது. நாம் நினைப்பதுபோல் கொலஸ்ட்ரால் தீவிரவாதி அல்ல; சீர்திருத்தவாதி’ என விளக்கம் தருகிறார்கள். அதேசமயம் 'அதிகமான வெப்பத்தில் எண்ணெயில் வேகவைத்தும் வறுத்தும், பார்பக்யூவில் வேகவைத்தும் செய்யப்படும் புலாலில் உருவாகும் Polycyclic aromatic hydrocarbons and Heterocyclic aromatic amines மூலம் உண்டாகும் உயிர் பிழைக் கேடுகள்,  கெட்ட கொழுப்பின் மூலம் ரத்தக்குழாய் உட்சுவரில் ஏற்கெனவே அதிகமாகப் பூசப்பட்டுள்ள கொழுப்பு அடைப்பின் மீது ( Atherosclerosis)  இறைச்சிக் கொழுப்பாகப் போய்ச் சேராதா?’ எனும் கேள்விக்குத் தெளிவான விளக்கம் இல்லை.

பெரிதும் பிழைபடாத, சற்றே ஆரோக்கியமான உடம்புக்கு, எடை குறைக்க மேலும் நலம் அடைய மட்டுமே மேற்கண்ட டயட்கள் உதவக் கூடும். ஏற்கெனவே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, புற்று முதலான பாரம்பர்ய வாழ்வியல் நோய்களின் பிடியில் உள்ளவர்கள் அல்லது அதற்கான காத்திருப்பு மரபு பட்டியலில் உள்ளவர்கள், குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி இத்தகைய பயிற்சிக்குள் நுழைவதே நலம்.

நேற்று சொன்னதை இன்று மறுப்பதுதான் வளரும் நவீன விஞ்ஞானம். இப்படியான மாற்றத்துக்குத் தொடர்ச்சியாக உலகின் ஒவ்வொரு மூலையில் நடக்கும் அறிவியல் ஆய்வுகள் மட்டும் காரணம் அல்ல; வணிகப் பின்னணி ஆய்வுகளும், அதன்  நிர்பந்தத்தில் வெளியாகும் ஆய்வுமுடிவுகளும்கூட முக்கியக் காரணங்கள். வணிகப் பின்னணியா... அறம் சார்ந்த அறிவியலின் விளைவா... என்றெல்லாம் யோசிக்க முடியாதபடி, உயர உயரப் பறக்கும் அரிசி, பருப்பு விலை, கொட்டித் தீர்க்கும் மழையில் வரப்பு உடைந்து மூழ்கிப்போன விவசாயம்... என, சாமானியனுக்குப் பல அன்றாடப் பிரச்னைகள் இருக்கின்றன. இது குறித்து விளக்கி அரவணைக்கவேண்டிய மருத்துவ உலகம் 'அதெல்லாம் என் வேலை இல்லை. புரிந்துகொள்ளவும் நேரம் இல்லை’ என்ற ஆதிக்கப் பதிலுடன்  விலகி நிற்பதுதான், நம்மைப்போன்ற ஏழை நாடுகளுக்கான பெரிய சவால்.

சாலையோரத்தில் ஒதுங்கி, ஒடுங்கி, ஒட்டிய உடம்புடன் கிடக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்கும், கனத்த மார்புடனும் தொப்பையுடனும் காதில் ஐபோனை மாட்டி கணக்குப் பேசிக்கொண்டே ஜாகிங் போகும் இன்னொரு கூட்டத்துக்கும் இடையே படுவேகமாக விரைந்துவரும் ஸ்டீயரிங், பிரேக் இல்லாத உயிர் பிழை விரைவு வண்டியில் இருந்து, இப்போது அபாய ஒலி  மட்டுமே அதிகமாகக் கேட்கிறது. எச்சரிக்கை அவசியம்!

- உயிர்ப்போம்...

BMI கணக்கிடுவது எப்படி?

நீங்கள் குண்டா... ஒல்லியா... என்பதை அறிய உதவும் அளவுதான் BMI (Body Mass Index). அதைக் கணக்கிடுவதும் எளிதுதான்.

பி.எம்.ஐ = உடல் எடை (கிலோ கிராமில்)  உயரம் (மீட்டர்)2 - இதுதான் அதற்கான ஃபார்முலா.  உதாரணத்துக்கு... 78 கிலோ எடை 164 செ.மீட்டர் உயரம் எனில், உங்கள் பி.எம்.ஐ 78/(1.64)2=29  

உயிர் பிழை - 14

விடை 23-க்கு மேல் இருந்தால் நீங்கள் அதிக உடல் எடையுடன் (Over weight) இருக்கிறீர்கள் என்றும், 30-க்கு அதிகம் இருந்தால் 'குண்டுப் பேர்வழி’ (Obesity) என்றும் பொருள்.

பி.எம்.ஐ பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு 4-வது இடம்.