Published:Updated:

வெல்கம் சூகி!

மருதன்

வெல்கம் சூகி!

மருதன்

Published:Updated:

மியான்மரில் கடந்த 8-ம் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் உலகத்தின் பார்வையில் நிச்சயம் ஓர் அசாதாரண நிகழ்வுதான். முதன்முறையாக 3 கோடியே 20 லட்சம் மக்கள் தங்களை முறைப்படி வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இது மிக இயல்பான நடைமுறை என நமக்குத் தோன்றும். ஆனால், மியான்மருக்கு இது அசாதாரணமானது. ஏன்? காரணத்தை 63 வயது முதியவர் ஒருவர் 'தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையிடம் பகிர்ந்துகொண்டார்... 'நாங்கள் மிக நீண்ட காலம் ராணுவத்தால் ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறோம். நாங்கள் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்வாய்ப்பு.’

ஆம், 1962-ல் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மியான்மரில் ராணுவ ஆட்சிதான். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அங்கு ஜனநாயகம் மலர்ந்திருக்கிறது. நோபல் பரிசு வென்ற, உலகப் புகழ்பெற்ற ஆங் சான் சூகியின் கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. 90-க்கும் அதிகமான கட்சிகள் 6,000-க்கும் அதிகமான வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்றிருந்தாலும், பல ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருந்த ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) தேர்தலில் அடியெடுத்து வைத்தபோதே, முடிவுகள் எழுதப்பட்டுவிட்டன. காரணம், சூகியைவிடவும் அந்த நாடு அதிக காலம் வீட்டுச் சிறையில் இருந்திருக்கிறது.

வெல்கம் சூகி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராணுவ ஆட்சி, மியான்மரின் முகத்தையே மாற்றிவிட்டது. முதலில் 'பர்மா’வை மியான்மர் ஆக்கியது. தலைநகர் ரங்கூனை மாற்றி, அங்கிருந்து 320 கி.மீ தாண்டி புதிய தலைநகரத்தை அமைத்து, அதற்கு 'நைப்பியிதோ’ எனப் பெயரிட்டார்கள். ரங்கூனில் இருந்த அனைத்து அரசுக் கட்டுமானங்களையும் உடைத்து, ஒவ்வொரு செங்கல்லாகப் பிரித்தெடுத்து வந்து புதிய இடத்தை நிர்மாணித்தார்கள்.

ராணுவ ஆட்சி, நாட்டை எந்த வகையிலும் மேல்நோக்கி நகர்த்தவில்லை. நலிவடைந்த பொருளாதாரம், பெருகும் ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம், சிறுபான்மையினரின் அதிருப்தி என எல்லா பக்கங்களில் இருந்தும் நெருக்கடிகள். 'ராணுவ ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டுக்கு உதவ மாட்டோம்’ என பெரும்பாலான உலக நாடுகள் முகத்தைத் திருப்பிக்கொண்டன. கடன் கொடுக்க மட்டும் அல்ல,  சாதாரண வர்த்தக உறவு வைத்துக்கொள்ளக்கூடத் தயங்கின. வேறு வழி இல்லாததால் அரை மனதுடன் தன்னை மாற்றிக்கொள்ள முடிவெடுத்து சின்னச்சின்னச் சீர்திருத்தங்களைச் செய்தது. அதில் ஒன்றுதான் சூகியின் வீட்டுச்சிறை விடுதலை.

மியான்மர் தேசத் தலைவராக இன்றளவும் அறியப்படும் ஆங் சானின் மகள் ஆங் சான் சூகி, தனக்கு ஒரு வலுவான போட்டியாளர் என்பதை உணர்ந்திருந்ததால்தான், அவரை வீட்டுச் சிறையில் தள்ளியது ராணுவம். வெறும் அரசியல் போட்டியாளராக மட்டுமே அவர் இருந்திருந்தால் ஏதோ சாக்கு சொல்லி வாழ்நாள் வரை அவரை அடைத்து வைத்திருக்கலாம். உலகப் புகழ்பெற்றவராகவும் எல்லாம்வல்ல அமெரிக்காவுக்கு வேண்டப்பட்டவராகவும் நோபல் பரிசு பெற்றவராகவும் போய்விட்டதால்,  'சூகியை வெளியில் விடு... சூகியை வெளியில் விடு’ என நாலா பக்கங்களிலும் இருந்து நச்சரிப்புகள் குவியத் தொடங்கின.

வெல்கம் சூகி!
வெல்கம் சூகி!
வெல்கம் சூகி!
வெல்கம் சூகி!
வெல்கம் சூகி!

கொஞ்சம் கொஞ்சம் பிடியைத் தளர்த்தியது ராணுவம். சூகி என்.எல்.டி-யைத் தொடங்கினார். தேர்தலில் நிற்கத் தொடங்கினார். அனைத்தையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டது ராணுவம். உச்சகட்டமாக, 1990-ம் ஆண்டு மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சூகி பெரும் வெற்றிபெற்றார். நியாயப்படி அப்போதே ராணுவம் விலகிக்கொண்டு சூகியிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. பாய்ந்து வந்து அவரை மீண்டும் வீட்டுக் காவலில் போட்டது. 'சூகி வென்றது செல்லாது’ எனச் சொல்லி ஆட்சியை விடாப்பிடியாகத் தொடர்ந்தது ராணுவம்.

விடுதலை, வீட்டுக் காவல், விடுதலை என மாறி மாறி சூகி அலைக்கழிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல். சூகி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த முறை எதிர்க்கட்சித் தலைவர். சூகியின் 15 ஆண்டு கால சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், அவர் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. 'அதிகபட்சம் எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமே அவர் இருக்க முடியும், அதிபர் தேர்தலில் பங்கேற்க முடியாது’ என்றது ராணுவம். இந்தப் பின்னணியில்தான் ராணுவ ஆட்சியின் ஜனாதிபதி தீன் செய்ன் 2015-ம் ஆண்டு தேர்தலை அறிவித்தார்.

தீன் செய்ன், மியான்மரின் குரல்வளையை நெறித்த சில கட்டுப்பாடுகளைச் சற்றே தளர்த்தியதாலேயே, சூகி கட்சியினரால் போட்டியிடவும் பிரசாரம் மேற்கொள்ளவும் வெற்றி பெறவும் முடிந்திருக்கிறது. ஆனால் இந்தச் சீர்திருத்தங்களைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் தீன் செய்ன் இருந்தார் என்பதும் உண்மை.

இறுதியில் சூகிக்கே ஜெயம். 364 இடங்களை சூகியின் என்.எல்.டி கைப்பற்றியிருக்கிறது. அதாவது மியான்மரின் 80 சதவிகித இடங்கள் ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. ஆக, சூகியின் என்.எல்.டி வென்றுவிட்டது.  ஆனால், அவரது மகன்கள் இருவரும் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், சூகியால் சட்டப்படி இப்போதும் அதிபர் ஆக முடியாது. எனினும் அவர் கைகாட்டுபவரே அதிபர் என்பதால், அடுத்து மலரப்போவது மறைமுக சூகி ஆட்சியே.

தன் செல்வாக்கையும் மிதமிஞ்சிய அதிகாரத்தையும் சேர்த்தே இழந்திருக்கிறது மியான்மர் ராணுவம். புதிய தலைநகரில் மொத்தம் உள்ள எட்டு மாவட்டங்களில் ஏழு இப்போது சூகியின் என்.எல்.டி வசம். சூகிக்கு ஆதரவாக வாக்கு அளித்தவர்களில் ஒருவர் மியிண்ட்தான் என்கிற ராணுவ அதிகாரி. 'கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அரசாங்கத்துக்காகப் பணியாற்றிவருகிறேன். ஆனால், எந்த மாற்றமும் நடக்கவில்லை. அதனால் சூகிக்கு வாக்கு அளித்திருக்கிறேன். நான் அப்படிச் செய்யாமல்போயிருந்தால், என் வாழ்நாள் முழுவதும் அதற்காக வருந்தியிருப்பேன்’ என்கிறார்.

இத்தனைக்கும் ஆள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 12 அமெரிக்க டாலருக்கு இணையாக பணம் கொடுத்து, தன் தேர்தல் பேரணிகளில்  கலந்துகொள்ளவைத்தது ராணுவம். பலர் வரிசையில் நின்று பணத்தை வாங்கிக்கொண்டு, 'ராணுவ ஆட்சி ஜிந்தாபாத்!’ எனவும் முழங்கினார்கள். அப்படியும் தோல்வி.

பல்லாண்டுகள் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த ஒரு தேசத்தை மாற்றி அமைக்கவேண்டிய பெரும் சவால் சூகியின் முன்னால் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை முழுக்கத் திருத்தி, ராணுவத்தின் வாடையை முற்றிலும் அகற்றவேண்டும். சிறுபான்மை ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக உலகம் முழுவதும் சுற்றி அலைவது குறித்து, இதுநாள் வரை சூகி வாய் திறக்கவே இல்லை. இனியும் இவ்வாறு இருப்பது சாத்தியம் அல்ல. ரோஹிங்கியாக்கள் உள்பட அனைத்துச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் அவர் உறுதிசெய்ய வேண்டும்.

இப்போதைக்கு சூகி தன் விருப்பப்படி அரசாங்கத்தை அமைக்கலாம். ஆனால், பர்மியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆட்சியை அளிக்க முடியுமா? காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism