Published:Updated:

பாரிஸ் பயங்கரம்... என்ன காரணம்?

மருதன்

பாரிஸ் பயங்கரம்... என்ன காரணம்?

மருதன்

Published:Updated:

பாரிஸில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரற்று வீழ்ந்த தன் குடிமக்களின் சடலங்களை இன்னமும் எண்ணிக்கொண்டிருக்கிறது பிரான்ஸ். அச்சம், அதிர்ச்சி, ஆற்றாமை சூழ உறைந்துகிடக்கிறது உலகம். இதுவரையில் இறப்பு எண்ணிக்கை 129; காயம் அடைந்தவர்கள் 352. இவர்களில் 90 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடம். 'இந்தக் கொடூரத் தாக்குதலை ஏன் செய்தோம்?’ என விளக்க அறிக்கை ஒன்றை பிரெஞ்சு, அரபு மொழிகளிலும் ஆடியோ வடிவிலும் வெளியிட்டிருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு. 

மொத்தம் ஆறு இடங்களில் தாக்குதல் நடந்திருக்கிறது. பிரான்ஸின் புகழ்பெற்ற தேசிய விளையாட்டு அரங்கில் ஜெர்மனியை எதிர்த்து பிரான்ஸ் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது முதல்  தாக்குதல் தொடங்கியது. திரண்டு இருந்த 80 ஆயிரம் பார்வையாளர்களில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயும் ஒருவர். வெளியில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, அவர் அப்புறப்படுத்தப்பட்டார். மூன்று பேர் கொல்லப்பட்டனர். அடுத்து, அருகில் உள்ள ஒரு கஃபேயில் ஏகே-47 துப்பாக்கிகளுடன் நுழைந்த பயங்கரவாதிகள் 19 பேரைச் சுட்டுக் கொன்றார்கள். சற்றே தள்ளி அமைந்துள்ள பட்டாகிளான் இசையரங்கில் 'ஈகிள்ஸ் டெத் மெடல்’ எனும் இசைக் குழுவின் வாத்தியங்கள் அதிர்ந்துகொண்டிருந்தபோதே துப்பாக்கிகளும் சீறி வெடித்தன. அதிகபட்ச உயிரிழப்பு இங்கேதான். 89 பேர்.

பாரிஸ் பயங்கரம்... என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரிஸ் பயங்கரம்... என்ன காரணம்?

தாக்குதல் தொடுத்த எட்டு பேரில், ஏழு பேர் தற்கொலைப் படையினர். மிச்சம் இருந்த ஒருவர், போலீஸால் கொல்லப்பட்டார். இதில் ஒரு பயங்கரவாதி, பிரெஞ்சு நாட்டுக் குடிமகன். அச்சுறுத்தும் ஒரு முக்கியமான செய்தி... இந்த எட்டு தீவிரவாதிகளில் வயதில் மூத்தவனுக்கு 29 வயது. மீதிப் பேருக்கு 15 முதல் 18 வரையே வயது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்ஸில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுதான். ஐ.எஸ்.ஐ.எஸ்., பிரான்ஸைக் குறிவைத்தது ஏன்? இதை அவர்களின் அறிக்கையே தெளிவுபடுத்துகிறது.

'எங்களுக்கு எதிராக சிரியாவில் போர் தொடுத்திருக்கும் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் உதவுகிறது. எங்களை, எங்கள் மக்களைக் கொல்லும் அனைவரும் எங்களுக்கு எதிரிகளே. பிரான்ஸ் மீதான இந்தத் தாக்குதல் ஒரு தொடக்கம் மட்டுமே.’

இந்த லாஜிக்கை நீங்கள் இதற்கு முன்னரும் கேட்டிருப்பீர்கள். அல்-கொய்தாவின் 'செப்டம்பர் - 11 தாக்குத’லுக்குப் பிறகு, உலக அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ரிப்பன் வெட்டிய அமெரிக்காவின் அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ் இதே வார்த்தைகளைச் சொன்னார்... 'எங்கள் எதிரி அல்-கொய்தா மட்டும் அல்ல; அவர்களுக்குத் துணை நிற்கும் அனைத்து நாடுகளும்தான். நீங்கள் ஒன்று எங்களுடன் இருக்கிறீர்கள்; அல்லது எங்கள் எதிரியுடன்.’

பயங்கரவாதிகளும் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்களும் ஒன்றுபோல் செயல்படுவது நம் கால விசித்திரங்களில் ஒன்று. பாரிஸ் தாக்குதலில் நடந்திருப்பதும் அதுதான். 'கருணையற்ற முறையில் எதிரிகள் மீது போர் தொடுக்கப்படும்’ என அறிவித்த அதிபர் ஹாலண்டே, உடனடியாக போரைத் தொடங்கிவிட்டார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைநகரம் என அழைக்கப்படும் சிரியாவின் ரக்கா பகுதியில் பிரான்ஸ் போர் விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்டன.

பாரிஸ் பயங்கரம்... என்ன காரணம்?

ஒருகாலத்தில் ஜிகாதி பயங்கரவாத அமைப்புகள் அனைத்துக்கும் அல்-கொய்தாவே ரோல்மாடல். குறிப்பாக, 'செப்டம்பர் - 11’ தாக்குதலுக்குப் பிறகு தாலிபன் தொடங்கி அனைத்து சிறிய, பெரிய அமைப்புகளுக்கும் அல்-கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் கடவுள். ஆனால், இன்று அல்-கொய்தா ஒரு பெரிய கட்டெறும்பு... அவ்வளவே!

'உலகில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது’ என்றே அமெரிக்காவும் ஐரோப்பாவும் கருதின. 'ஆஃப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், லெபனான், ஏமன் போன்ற நாடுகளில் ஊடுருவி இருந்த பயங்கரவாதத்தின் வேர்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன’ என்றே நினைத்தன. திடீரென சிரியாவில் இருந்து சிலிர்த்து எழுந்தது ஐ.எஸ்.ஐ.எஸ். இதன் பயங்கரவாதச் செயல்களை ஒப்பிடும்போது, 'அல்-கொய்தா எவ்வளவோ பரவாயில்லை’ எனும் அளவுக்கு, அபாய வளர்ச்சியை அடைந்துள்ளது. இப்போது பிரான்ஸ் தொடுத்துள்ள புதிய போர், அந்த அமைப்பை அழித்துவிடுமா?

தெரியாது... ஆனால், சிரியா மேலும் சீரழியப்போவது உறுதி. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஏற்கெனவே பஷார் அல் அசாத் அரசு அங்கே போராடிக்கொண்டிருக்கிறது. அவரின் கரங்களைப் பலப்படுத்தாமல், அவருக்கு எதிரான மற்ற ஆயுதக் குழுக்களுக்கு உதவுகிறது அமெரிக்கா. ஆசாத் அரசுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ள ரஷ்யாவுக்கு சவாலாக இருப்பதுதான் அமெரிக்காவின் முதன்மை நோக்கம். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு போர்க்குழு இனிதான் உருவாகவேண்டும்.

ஆனால், அதற்கு முன்னால் என்னவெல்லாம் நடக்கும்? யூகிப்பது சிரமம் அல்ல. பிரான்ஸின் எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. இனி அகதிகள் உள்ளே வர முடியாது. ஏற்கெனவே பிரான்ஸில் வசிக்கும் ஒவ்வோர் அகதியும் சந்தேகத்துடன் அணுகப்படுகிறார். 'பாரிஸ் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் அகதியாக இருக்கலாம்’ என்ற ஒரு செய்தி ஓடிக்கொண்டிருப்பதால், பிரான்ஸ் மட்டுமின்றி மொத்த ஐரோப்பிய கண்டமும் 'முன்னெச்சரிக்கை’ என்னும் பெயரில் அகதிகளை நெருக்கிப்பிடிக்கும். அகதிகள் பிரச்னை மேலும் தீவிரமடையும்.

அடுத்து, முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவார்கள். ஐரோப்பாவின் தீவிர வலதுசாரிகள், இஸ்லாமியப் பீதியை இன்னும் அதிவேகத்துடன் பரப்புவார்கள். விசாரணை எனும் பெயரில் ஒரு பெரும் திரள் மக்கள் கூட்டம் அச்சுறுத்தப்படும். பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், இன்னும் அதிக நெருக்குதலுக்கு ஆளாவார்கள்.

பாரிஸ் பயங்கரம்... என்ன காரணம்?

இதற்காகத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் காத்துக்கொண்டிருக்கிறது. இனி பாதிக்கப்பட்ட சிரிய மக்களிடமும் பிற இஸ்லாமியர்களிடமும் அவர்களால் ஒரு தார்மீக நியாயத்துடன் உரையாட முடியும். 'உங்களுக்கு இப்படி ஒரு கதி ஏற்படக் காரணம், பிரான்ஸும் அமெரிக்காவும் மற்ற மேலை நாடுகளும்தான்’ எனச் சொல்லி, மேலும் தங்களை வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

உண்மையில் பிரான்ஸ் போரிடவேண்டியது இவற்றுக்கு எல்லாம் எதிராகத்தான். 15 வயது இளைஞனை எப்படி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்க முடிகிறது என்பதை அவர்கள் ஆராய வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்பார்ப்பதுபோல அல்லாமல், இஸ்லாமியர்களை, அகதிகளை, பிற சிறுபான்மையினரை மேலும் அரவணைத்துக் கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பாரிஸை மட்டும் தாக்கவில்லை. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டிலும் தாக்குதல் தொடுத்து அப்பாவிகளைக் கொன்றிருக்கிறது. பாரிஸ் தனது ஆதரவையும் அனுதாபத்தையும் அவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.

'நாங்கள் என்ன தவறு செய்தோம்?’ என்னும் கேள்வியை இன்று பாரிஸ் எழுப்புகிறது. இதே கேள்வியைத்தான் 'செப்டம்பர் - 11’ தாக்குதலின்போது அமெரிக்காவும், மும்பை குண்டுவெடிப்புகளால் குலுங்கியபோது இந்தியாவும் கேட்டன. உண்மை இதுதான். பாரிஸ், மும்பை, பெய்ரூத், அமெரிக்கா எங்கும் இனி நமக்குப் பாதுகாப்பு இல்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப்போல் 'தம் மக்களைப் பாதுகாக்கும் வலிமை இன்று எந்த நாட்டுக்கும் இல்லை. அரசாங்கத்தின் தவறுகள், முடிவுகள்... மக்களின் தவறுகளாகவே இனி பார்க்கப்படும்.’

அப்படியானால் என்னதான் வழி? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்... இந்த முப்பெரும் முழக்கங்களை உலகுக்கு அளித்த தேசம் பிரான்ஸ். உலகம் முழுவதும் இந்த முழக்கங்களைக் கொண்டுசென்று அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமே பாதுகாப்பான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். பிரச்னையைத் தீர்க்க இது ஒரு வழி அல்ல... ஒரே வழி!

ஒரு விளக்கம்...

4.11.15 இதழில் எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் இறுதிக் கேள்விக்கான பதிலில் சில தகவல் பிழைகள் இருப்பதாக வாசகர்கள் சுட்டிக்காட்டினர். இதுகுறித்து பாரதி கிருஷ்ணகுமாரிடமே கேட்டபோது, '' 'ஆல்பெர் காம்யூ, நோபல் பரிசையே வேண்டாம் என நிராகரித்தவர்’ என வந்திருக்கிறது. நோபல் பரிசை மறுத்தவர் காம்யூ அல்ல... அவருடைய நண்பர் ழான் பால் சார்த்தர் (Jean Paul Sartre)  என்பதுதான் சரி. அதேபோல, 'மொத்த இந்திய மக்கள்தொகையில் 60 கோடிப் பேர், 70 கோடிப் பேருக்கு எழுத, படிக்கத் தெரியாது’ என வந்துள்ளது. இலக்கியம் குறித்த கேள்விக்கான பதிலில், இலக்கியத்தை வாசித்து அறியக்கூடிய எழுத்தறிவு பெற்றோரை மனதில்கொண்டே அந்தப் பதிலைக் கூறினேன். இருப்பினும் ஒரு தகவல் என்ற அளவில் இந்திய அளவில் எழுத படிக்கத் தெரியாத மக்கள் 35-40 சதவிகிதம் பேர்தான்.

பாரிஸ் பயங்கரம்... என்ன காரணம்?

இஸ்ரேலில், ஆறு பேர் மட்டுமே நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். 'இந்தியாவில் தாகூருக்குப் பிறகு, சர் சி.வி.ராமனுக்குப் பிறகு ஒருவருமே நோபல் பரிசு வாங்கவில்லையே ஏன்?’ என்று ஒரு வரி இருக்கிறது. இலக்கியம், கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இந்தியாவில் பிறந்து, இங்கேயே படித்து, இங்கேயே வளர்ந்து நோபல் பரிசு பெற்றவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. கைலாஷ் சத்தியார்த்தி, சமீபத்தில் சமூகசேவைக்காக நோபல் பரிசு பெற்றவர். இவர்களைத் தவிர, அன்னை தெரசா, அமர்த்தியா சென், ஹர் கோபிந்த் கொரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட வேறு சிலரும் நோபல் பெற்றிருந்தாலும் இந்தப் பட்டியலில் அடங்க மாட்டார்கள். அன்னை தெரசா, இந்தியாவில் பிறந்தவர் அல்ல. ஹர் கோபிந்த் கொரானா, இந்தோ- அமெரிக்கர். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இந்தோ- அமெரிக்கர். அமர்த்தியா சென் இந்தியராக இருந்தாலும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தன் பணிக்காலத்தை பல காலம் செலவழித்தவர்.

தகவல் பிழைகளைச் சுட்டித் திருத்திய அன்பு வாசகர்களுக்கு நன்றி'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism