Published:Updated:

கொர்ர்ர் கிராமம்

கொர்ர்ர் கிராமம்

‘அப்படியா?’ என புருவம் உயர்த்த வைக்கும் மர்மங்கள் மட்டுமல்ல, ‘பேசாமப் போறியா... இல்ல வாயில கத்தியை விட்டுச் சுத்தவா?’னு வடிவேலு பேசுற மாதிரி, தலையைப் பிச்சுக்க வைக்கும் வினோதங்களும், மர்மங்களும் உலகில் இருக்கின்றன. கஜகஸ்தான் நாட்டில் இருக்கும் கலாச்சி என்ற கிராமம் இதற்கு சிறந்த உதாரணம்.

கொர்ர்ர் கிராமம்
கொர்ர்ர் கிராமம்

நம்ம டி.ஆர் பாணியில் இது விநோதமான கிராமம், விசித்திரமான கிராமம், வித்தியாசமான கிராமம், விளக்கம் கிடைக்காத கிராமம்னு அடுக்கிக்கொண்டே போகலாம். விஷயத்துக்கு வருவோம். ஒருவர் இருவர் அல்ல... கிராமத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் ‘ஐந்தில் ஒருவர்’ என்ற கணக்கீட்டில் கலாச்சி கிராமத்தில் இருப்பவர்கள் திடீர் திடீர் எனத் தூங்கிவிடுகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மர்மத்துக்கு சமீபத்தில்தான் இதனால் இருக்குமோ என்ற ஆறுதலான ஆதாரம் கிடைத்திருக்கிறது.

கொர்ர்ர் கிராமம்
கொர்ர்ர் கிராமம்

2013-ல் கலாச்சி கிராமத்தில் திடீரெனத் தூங்கி, இரண்டு நாள் கழித்து விழிக்கிறார் ஓர் இளைஞர். எழுந்தவருக்கு வாந்தி, மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் வேறு. என்ன ஆச்சு என அக்கம்பக்கத்தினர் விசாரித்து முடிப்பதற்குள், கலாச்சி கிராமத்தில் பலருக்கும் பரவுகிறது தூக்கம். நடக்கும்போது, பஸ், டிரெயினுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, டாய்லெட் போகும்போது என இடம், பொருள் தெரியாமல் தூங்கிவிடுகிறார்கள் மக்கள். தூங்குகிறவர்கள் அனைவருமே பல நாட்கள் கடந்தபிறகுதான் எழுகிறார்கள். மேலே சொன்ன பக்கவிளைவுகளோடு, சிலருக்குப் பக்கவாதம், ஞாபக மறதி போன்றவைகளும் ஆஜராகின்றன. விழித்துக்கொண்ட அரசாங்கம் என்ன ஏதென்று விசாரிக்க இரண்டு மருத்துவர் குழுக்களை அனுப்புகிறார்கள். மக்களின் பழக்க வழக்கங்கள், உணவுமுறை, கலாச்சி கிராமத்தின் நில அமைப்பு என அனைத்தையும் ஆராந்தவர்களுக்குத் தெளிவான காரணம் எதுவும் பிடிபடவில்லை. 2014-ம் ஆண்டில் ஒருநாள், பள்ளிக்கு வந்த மொத்தக் குழந்தைகளும் தூங்கிய சம்பவம் நடக்க ‘அய்யோ, அம்மா அமானுஷ்யம்’ என ஊரில் இருக்கும் பலரும் அலறியடித்து வீட்டைப் பொட்டலம் கட்டிக்கொண்டு பக்கத்து ஊருக்குக் குடியேறியிருக்கிறார்கள். திடீர் திடீரெனத் தூக்கம் வந்துவிடுவதால் வேலை, கல்வி என அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. ‘தூங்கும் வியாதி’ தாக்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட 7,000 பேர் வசித்த கலாச்சி கிராமத்தில், இப்போது இருப்பது வெறும் 700 பேர்தான்.

கொர்ர்ர் கிராமம்

நிலைமை இப்படியே போய்க்கொண்டிருக்க, ‘இந்த ஊர் மக்களுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதைக் கண்டுபிடிக்காமல் தூங்கக் கூடாது என்று களம் இறங்கிய ஆராய்ச்சியாளர்கள், பலப் பல தேடுதல்களுக்குப் பிறகு, கலாச்சி கிராமத்தில் இருக்கும் பழைய யுரேனிய சுரங்கம் ஒன்றுதான் ஊர் மக்களின் திடீர் தூக்கத்துக்குக் காரணம் என்று அறிவித்திருக்கிறார்கள். பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட இந்த யுரேனிய சுரங்கத்தில் இருந்து அதிக அளவு வெளியேறிய கார்பன்-மோனாக்ஸைடு மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் காற்றில் கலந்து, மனித சுவாசத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவைக் குறைத்திருக்கிறது. இதனால்தான், கலாச்சி கிராமத்தில் இருந்தவர்களுக்கு இப்படி ஒரு வினோதமான பாதிப்பு என அறிக்கை கொடுத்த கையோடு, மிச்சம் இருந்த ஊர் மக்களையும் பக்கத்து கிராமத்தில் பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு, இப்போது யுரேனிய சுரங்கத்தை முழுமையாகச் செயலிழக்க வைக்கும் வேலைகளைக் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!

- கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு