Published:Updated:

லீவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை!

லீவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்னிப்புங்கிற வார்த்தையைக் கேட்டா எல்லோருக்கும் எப்படி ‘ரமணா’ ஞாபகத்துக்கு வருவாரோ, அதே மாதிரி மழைங்கிற வார்த்தையைக் கேட்டா ரமணன் ஞாபகம் வருவார். தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டோ கொட்டுனு கொட்ட ரமணனைச் சந்தித்தேன். ராப்பிட் ஃபயர் சுற்று மாதிரி நம்முடைய கேள்விகளுக்கு சடசடவென பதிலளித்தார்.

லீவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை!

‘‘முதல் முதலா டி.வி-யில எப்போ பேட்டி கொடுத்தீங்க?’’

‘‘ 2002-ல் முதல் பேட்டி கொடுத்தேன்.’’

‘‘உங்களுக்கு இந்த அளவு பப்ளிசிட்டி கிடைக்கக் காரணம் என்ன?’’ 

‘‘நான் ரொம்ப சாதாரணமா இருக்கிறதுகூட அதுக்குக் காரணமா இருக்கலாம். தகவல்கள் உடனே மக்களுக்கு போய்ச் சேரணும்கிற என்னோட நோக்கமாவும் இருக்கலாம். நிறையப் பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் பேசுறேன். அப்படி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதால்கூட இருக்கலாம்.’’

‘‘இத்தனை வருட அனுபவத்தில் என்ன கத்துக்கிட்டீங்க?’’

‘‘நான் இன்னும் எதையும் முழுசா கத்துக்கலை. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. ஆனா மக்கள், வானியல் பத்தி நிறையத் தெரிஞ்சு வெச்சிருக்காங்க. புயல் பத்திப் பேசுறாங்க, விவாதிக்கிறாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு.’’

‘‘ஸ்கூல், காலேஜ் பசங்க உங்களை ஹீரோவாக் கொண்டாடுறது உங்களுக்குத் தெரியுமா?’’ 

‘‘ (சிரிக்கிறார்) நானே அதை அனுபவிச்சிருக்கேன். ஒரு பள்ளிக்குப் போனப்போ ஒரு சின்னப் பொண்ணு அவ ஃப்ரெண்டுகிட்டே இவர்தான் ஸ்கூலுக்கு லீவ் விடுறவர்னு என்னைப் பார்த்து சொல்லுச்சு. உண்மை என்னன்னா, அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள்தான் விடுமுறை விடறாங்க. ரோடு கண்டிஷனை பொறுத்து விடுமுறை அறிவிக்கிறாங்க. மத்தபடி அதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.’’

‘‘சமூக வலைதளத்தில் உங்களை வாழ்த்தியும் கலாய்ச்சும் மீம்ஸ் போடுறாங்க. அதைப் பார்க்கிறதுண்டா?’’

‘‘ஆபீஸ்ல என்கூட வேலை பார்க்கிறவங்க அவங்க மொபைல்ல வந்து காட்டுவாங்க. தெய்வமே கடவுளேன்னு ஓவரா பண்றாங்கப்பா இந்தப் பசங்க. என்ன செய்ய முடியும்? பார்த்து சிரிச்சிட்டு விட்டுடுவேன். மத்தபடி இந்த ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எதிலேயும் நான் இல்லை. இங்கே இருக்கிற வேலையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு.’’

‘‘மழை வருமா, வராதானு மக்கள் வானத்தைப் பார்க்கிறாங்களோ இல்லையோ... டி.வி-யில உங்க அறிக்கையைத்தான் ஆர்வமா பார்க்கிறாங்க. ரமணன் சாரே சொல்லிட்டாருனு நம்புறாங்க. நீங்க எதன் அடிப்படையில் வானிலை அறிக்கை சொல்றீங்க?’’

‘‘ரமணன் வெறும் முகம் மட்டும்தான். எங்க டிபார்ட்மென்ட்ல நிறையப் பேர் இருக்காங்க. அவங்களும் சேர்ந்ததுதான் நான். எதன் அடிப்படையில் வானிலை அறிக்கை சொல்றோம்னா அந்தமான் நிக்கோபார், சிங்கப்பூர் நாடுகளில் ஏற்படும் வானிலை மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கிட்டு அதன் தரவுகள் அடிப்படையிலதான் நாங்க ரிப்போர்ட் கொடுக்கிறோம்.’’

‘‘சில நேரத்துல நீங்க மழை வரும்னு சொன்னா, வர மாட்டேங்குது. வராதுனு சொன்னா வெளுத்துக் கட்டுது. ஏன் இப்படி?’’ 

‘‘நான் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்னுதானே சொல்றேன். எல்லார் வீட்டு வாசல்லேயும் பெய்யும்னு சொல்லலியே... கொட்டாம்பட்டிக்கு இவ்வளவு பெய்யும், காரியாப்பட்டிக்கு இவ்வளவு பெய்யும்னு எப்படி கரெக்டா சொல்ல முடியும்? அனேக இடங்களில் தென் மாவட்டங்களில், வட மாவட்டங்களில்னு பொதுவாதான் சொல்ல முடியும். எல்லாம் கணிப்பின் அடிப்படையில் சொல்லப்படுவதுதான்.’’

‘‘சென்னைத் தெருக்களில் போட் விடுற அளவுக்கு மழை பெய்ஞ்சிருக்கு. இதை நீங்க எதிர்பார்த்தீங்களா?’’ 

‘‘கண்டிப்பா... நான் முதல்லேயே சொன்னேனே... கனமழை விடாது பெய்துகொண்டே இருக்கும்னு அதான் நடந்திருக்கு’’ என்றார்.

இவர் சொன்னதும் மழை வந்திருக்கு!

-ஜுல்ஃபி படம்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு